மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளி மாணாக்கர்களுடன் கலந்துரையாடினார்.
விருதுநகர் மாவட்டத்தில், மாணவர்களின் தனித்திறன்கள், சாதனைகள், கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 36 மாணாக்கர்ளுடன் “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துரையாடினார்.
இந்நிகழ்ச்சியில், மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களின் சாதனைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். மேலும், மாணவர்கள் தங்களது போட்டி அனுபவங்கள், வெற்றிக்காக மேற்கொண்ட பயிற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகளை அடைவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, மாணவர்கள் தங்களது கல்வி ஆர்வம், விளையாட்டுத் திறன், கலைத்திறன், அறிவியல் ஆர்வம் மற்றும் எதிர்காலத்தில் அடைய விரும்பும் இலக்குகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவருடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான திறமைகளும் ஆற்றல்களும் உள்ளன. அவற்றை முறையாக அடையாளம் கண்டு, தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் உயர்ந்த இலக்குகளை அடைய முடியும். வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல; அதற்கு தொடர்ச்சியான முயற்சி, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி மிகவும் அவசியமாகும்.
மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவர்களின் சாதனைகள் பாராட்டுக்குரியவை. மாணவர்கள் தங்களது வெற்றியை அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், அவற்றை வெற்றிக்கான அனுபவங்களாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.மேலும், கல்வியுடன் விளையாட்டு, கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நல்ல பொறுப்புமிக்க குடிமக்களாக உருவாகி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
மேலும், மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களின் எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் எதிர்காலக் கனவுகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி, அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியானது மாணவர்கள் தங்களது சாதனைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மாவட்ட நிர்வாகத்தின் தலைவருடன் நேரடியாகக் கலந்துரையாடி ஊக்கம் பெறவும் பயனுள்ள வாய்ப்பாக அமைந்தது.இந்நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply