விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், உப்பத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் (10.12.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின்(தாட்கோ) சார்பில் ஆடு/மாடு வளர்ப்பு தொழில் புரிவதற்கு கடனுதவி பெற்ற 24 பயனாளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் மானியத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு அரசானது, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம்(தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் நலனுக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதோடு, ஆதிதிராவிடர் / பழங்குடியினர் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை / சுய வேலைவாய்ப்புக்காக திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்குதல் மற்றும் அரசாங்கத்தால் ஒப்படைக்கப்பட்ட கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி, தாட்கோ நிறுவனம் மூலம் ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்களுக்கு, நிலம் வாங்கும் திட்டம், சுய உதவி குழுக்களுக்கு பொருளாதார உதவி, திறன் மேம்பாட்டு பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதாரத் திட்டங்கள் மூலம் வங்கி கடனுதவிக்கான மானியங்களையும்,சுகாதாரப் பணியாளர்களுக்கு விபத்துக் காப்பீட்டு, இயற்கை மரணத்திற்கு உதவி, இறுதிச் சடங்குகளுக்கு உதவி, திருமணத்திற்கான உதவி, மகப்பேறு உதவி, கண் கண்ணாடி, முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட நிதியுதவிகளையும் வழங்கி வருகிறது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம், உப்பத்தூர் தமிழ்நாடு கிராம வங்கி கிளையில் (10.12.2025) தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதிமற்றும்மேம்பாட்டுக்கழகத்தின்(தாட்கோ) சார்பில் ஆடு/மாடு வளர்ப்பு தொழில் புரிவதற்கு கடனுதவி பெற்ற 24 பயனாளிக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.12 இலட்சம் மதிப்பிலான மானியத்திற்கான ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், பயனாளிகளிடம் குடும்பத்தின் வாழ்வாதாரம், பொருளாதார மேம்பாடு, குழந்தை கல்வியின் முக்கியத்துவம், அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடினார்.இத்திட்டத்தின் கீழ், பயனடைந்தவர்கள் எங்கள் வாழ்வாதார மேம்பாட்டிற்கான கடனுதவிகளை வழங்கியதோடு, அதற்கான மானியத்தையும் வழங்கிய தமிழ்நாடு அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் தங்களது நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்வில், தாட்கோ மாவட்ட மேலாளர்(பொ) திருமதி அ.மஞ்சுளா, சாத்தூர் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.ரா.பாண்டிச்செல்வன், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதிய வாக்காளர் அடையாள அட்டை/ இறந்த நபரின் பெயரை நீக்கம்/திருத்தம்/பகுதி மாற்றம் செய்தல்/ வாக்காளர் அடையாள அட்டையில் திருத்தம் செய்தல் முறையே படிவம் 6, படிவம் 7 மற்றும் படிவம் 8 ஆகியவற்றை பூர்த்தி செய்து வழங்குவதற்கு அந்தந்த வாக்குச் சாவடி மையங்களில் 10.12.2025 புதன் மற்றும் 11.12.2025 வியாழக்கிழமை ஆகிய இரண்டு தினங்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.மேற்படி முகாமினை பொதுமக்கள் மற்றும் வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், வாக்காளர் பட்டியல் தீவிரத் திருத்தம் தொடர்பாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (04562)-1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான பாடுபடுபவர்களை சிறப்பு செய்வதற்காக "சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது" 1995ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது பெறுவோருக்கு ரூ.5,00,000/-(ரூபாய் ஐந்து இலட்சம் மட்டும்) விருது தொகையும், ஒரு சவரன் தங்கப்பதக்கமும் தகுதியுரையுயம் வழங்கப்படுகிறது. இவ்விருதாளர் முதலமைச்சர் அவர்களால் தேர்வு செய்யப்படுகிறார்.2025ஆம் ஆண்டிற்கான தமிழக அரசின் ‘சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது வழங்குவதற்கு உரிய விருதாளரை தேர்ந்தெடுக்க பரிந்துரைகள் வரவேற்கப்படுகிறது. எனவே, சமூக நீதிக்காக பாடுபட்டு பொது மக்களின் வாழ்க்கைத் தரத்தினை மேம்படுத்திட மேற்கொள்ளப்பட்ட பணிகள் மற்றும் அதன் பொருட்டு எய்திய சாதனைகள் ஆகிய தகுதிகள் உடையவர்கள் தங்களது விண்ணப்பத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கலாம். தங்களது விண்ணப்பம், சுயவிவரம், முழு முகவரி, தொலைபேசி எண் மற்றும் சமூக நீதிக்காக பாடுபட்ட பணிகள் குறித்த விவரம் மற்றும் ஆவணங்கள் உள்ளடக்கியதாக இருத்தல் வேண்டும். 2025ஆம் ஆண்டிற்கான சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருதிற்கான விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியருக்கு வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.12.2025 என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., எனத் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் டிசம்பர்-2025 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 19.12.2025 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 2026- தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைகளின்படி, தேர்தலுக்கு முன்னதாக, தேர்தலுக்கு பயன்படுத்தப்படும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தையும் சரிபார்க்கும் பணிகள் நிறைவு செய்யப்பட வேண்டுமென்பதால், விருதுநகர் மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம். தளத்தில் (பழைய DRDA அலுவலகம்) வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை கிட்டங்கியில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் 11.12.2025 முதல் முதல்நிலை சரிபார்ப்பு பணி நடைபெறவுள்ளது.மேற்படி, 11.12.2025 முதல் விருதுநகர் மாவட்டம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்தில் (பழைய DRDA அலுவலகம்) வைப்பறை கிட்டங்கி, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் தலைமையில், சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்(LA) மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் கிட்டங்கி திறக்கப்பட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், பெல் நிறுவன பொறியாளர்களால் சரிபார்க்கப்படும்.மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் அல்லது அவர்களால் நியமிக்கப்படும் முகவர்கள் காலை 09.00 மணி முதல் மாலை 07.00 வரை நடைபெறும் வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபார்ப்பு பணிகளை நேரில் பார்வையிடலாம் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர்-விருதுநகர் சாலையை இணைக்கும் எல்.சி எண்: 407 Rly KM: 541/200-300 என்ற எண்ணுள்ள இரயில்வே இருப்பு பாதையில் உள்ள வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட உள்ளது.எனவே, 10.12.2025 அன்று காலை 6.00 மணி முதல் மாலை 6.00 வரை பராமரிப்பு பணிகளுக்காக, அந்த ஒரு வழித்தடத்தை மட்டும் மூடுவதாக இரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.எனவே, பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட வழியை விடுத்து, மாற்று வழியை பயன்படுத்திக் கொள்ளுமாறு இரயில்வே நிர்வாகத்தின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"மீண்டும் மஞ்சப்பை" பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர், 2022-23 நிதியாண்டிற்கான மஞ்சப்பை விருதுகளை சட்டமன்றக் கூட்டத்தில் அறிவித்தார்.அதன்படி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகள் மீதான தடையை திறம்பட செயல்படுத்தி, ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக் (SUP) கை பைகள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றுகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்து, மஞ்சப்பை போன்ற பாரம்பரிய சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுகளின் பயன்பாட்டை மீண்டும் உயிர்ப்பித்து, தங்கள் வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றும் சிறந்த 3 பள்ளிகள், 3 கல்லூரிகள் மற்றும் 3 வணிக நிறுவனங்களுக்கு இது வழங்கப்படும். முதல் பரிசாக ரூ. 10 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ. 5 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசாக ரூ. 3 லட்சம் பரிசு வழங்கப்படும்.இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB), ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கு மாற்றாகப் சுற்றுச் சுழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும், தங்கள் வளாகங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் ஆக்கப்பூர்வமான முயற்சிகள் மூலம் தடையை அமல்படுத்துவதற்கும், வளாகத்தை பிளாஸ்டிக் இல்லாததாக மாற்றுவதற்கும் முன்மாதிரியான பங்களிப்பைச் செய்த பள்ளிகள்/ கல்லூரிகள்/ வணிக நிறுவனங்களுக்கு மஞ்சப்பை விருதுகளை வழங்க முன்மொழிகிறது.விண்ணப்பப் படிவங்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக இணையதளத்திலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.விண்ணப்பங்களின் அனைத்து இணைப்புகளிலும் தனிநபர்/ அமைப்புத் தலைவர் முறையாக கையொப்பமிட வேண்டும். விண்ணப்பங்களின் மென் நகலுடன், இரண்டு அச்சுப் பிரதிகள் (கடின நகல்)களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு 15.01.2026அன்றுக்குள் அனுப்பி வைக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் 03.09.2021 அன்று சட்டமன்றத்தில், 2021-2022 நிதியாண்டு முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்முயற்சியுடன் பங்கேற்று சிறந்த பங்களிப்பைச் செய்யும் தனி நபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு ரூ.1.0 கோடி செலவில் "பசுமை சாம்பியன் விருது" வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டார். ஒவ்வொரு ஆண்டும் விருது பெறும் 100 தனிநபர்கள்/ நிறுவனங்களுக்கு தலா ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.இந்த அறிவிப்பின்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் (TNPCB) 2025 ஆம் ஆண்டிற்கான பசுமை சாம்பியன் விருதுகளை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன் மாதிரியான பங்களிப்பைச் செய்த அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள்/ பள்ளிகள்/ கல்லூரிகள்/ குடியிருப்பு நலச் சங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்பு/ தொழில்துறைகள் போன்றவற்றை கௌரவிக்க முன்மொழிந்துள்ளது. பின்வரும் துறை (பிற சுற்றுச்சூழல் சார்ந்த பணிகள் உட்பட):1. சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி2. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு3. சுற்றுச்சூழல்பாதுகாப்பு4. புதுமையான பசுமை தயாரிப்புகள்/ பசுமை தொழில் நுட்பத்திற்கான ஆராய்ச்சி மற்றும் அறிவியல் ஆய்வுகள்.5. நிலையான வளர்ச்சி6. திடக்கழிவு மேலாண்மை7. நீர் மற்றும் நீர்நிலைகள் பாதுகாப்பு8. காலநிலை மாற்ற தழுவல் மற்றும் தணிப்பு9. உமிழ்வு குறைப்பு10. பிளாஸ்டிக் கழிவுகளை கட்டுப்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி செய்தல்11. சுற்றுச்சூழல் மறு சீரமைப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள்12. கடலோரப் பகுதி பாதுகாப்பு போன்றவை,13. பிற சுற்றுச்சூழல் தொடர்பான திட்டங்கள்தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தலைமையிலான மாவட்ட அளவிலான விருதுக் குழு (DLAC) மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 அமைப்புகள்/ கல்வி நிறுவனங்கள்/ பள்ளிகள்/ கல்லூரிகள்/ குடியிருப்பு நலச் சங்கங்கள்/ தனிநபர்கள்/ உள்ளாட்சி அமைப்புகள்/ தொழிற்சாலைகள் தேர்ந்தெடுக்கும். மேற்கூறிய விருதுக்கு நிரப்ப வேண்டிய வடிவம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய இணையதளத்தில் (www.tnpcb.qov.in) உள்ளது.கூடுதல் தகவலுக்கு, சம்பந்தப்பட்ட மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தை தொடர்பு கொள்ளலாம். பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க 20.01.2026 அன்றே கடைசி தேதியாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், சாத்தூர் நகராட்சி மற்றும்வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டபணிகள் மற்றும் அரசு திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S,. அவர்கள் செய்தியாளர் பயணத்தின் போது நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(03.12.2025) உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் மற்றும் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தங்கபாண்டியன் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில், மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் 361 பயனாளிகளுக்கு ரூ.30.93 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இன்றைக்கு உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசானது மாற்றுத்திறனாளிகளுக்கு என்னென்ன வகையில் உதவியாக இருக்கிறது என்பதையெல்லாம் உணர்வு பூர்வமாக சொல்லக்கூடிய நிகழ்ச்சியாக இத்தினத்தினை சென்னையில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் நமது விருதுநகர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகளை உற்சாகப்படுத்தி வாழ்க்கையில் எவ்வாறெல்லாம் முன்னேற வேண்டும் என்ற உணர்வை உண்டாக்க வேண்டும் என்பதற்காக இந்த நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒரு காலத்தில் மாற்றுத்திறனாளிகளை நம்முடைய வீட்டிலே கூட அலட்சியமாகவும், சுமையாகவும் பார்த்தார்கள். மாற்றுத்திறனாளிகள் ஒரு மூலையிலே முடங்கியிருந்தார்கள்.சராசரியாக இரண்டு கைகள் கால்கள் இருப்பவர்கள் செய்யும் செயல்களை மாற்றுத்திறனாளிகளும் செய்யக் கூடிய அளவிற்கு இயற்கையாகவே அவர்கள் உடம்பில் இருந்து திறன்கள் இருக்கின்றன. எனவே, தான் முன்னாள் முதலமைச்சர் டாக்டர்கலைஞர்அவர்கள்மாற்றுத்திறனாளிகள்எனபெயர்மாற்றம்செய்துஅவர்களைசிறப்புசெய்துள்ளார்.சிந்திப்பதிலும், செயலாற்றுவதிலும் சாதாரண மனிதர்களை விட ஒரு பங்கு அதிகமாக திறன் பெற்றிருக்கக் கூடியவர்கள் மாற்றுத்திறனாளிகள். எனவே, தான் அனைத்து வேலை வாய்ப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமைகள் வழங்கப்பட்டு வருகின்றன.பட்டாசு தொழிற்சாலைகளில் ஏற்படுகின்ற விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு தொகைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்த நிலையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பட்டாசு விபத்துகளில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பராமரிப்பு மற்றும் உதவித்தொகைகளையும் வழங்கி வருகிறார்.வீட்டில் தாய்மார்களின் பனிச்சுமை காரணமாக குழந்தைகள் பல நேரங்களில் காலை உணவை எடுக்காமலேயே பள்ளிக்கு சென்று வருகின்றார்கள் என்பதை கருத்தில் கொண்டு, முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டு வருகிறது.வயதானவர்கள் நியாய விலைக் கடைக்கு சென்று பொருட்களை சுமந்து கொண்டு வரும் சிரமத்தை அறிந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் வீடு தேடி பொருட்கள் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் யாருக்கு எதை செய்யலாம், எப்படி செய்யலாம் என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய அரசானது, நிதிச்சுமைக்கு ஏற்றார் போல் தான் திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு அதிகமான நிதிகளை ஒதுக்கி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஒரு காலத்தில் பட்டதாரி முடித்தவர்களின் எண்ணிக்கை மிக சொற்பமாகவே இருந்த நிலை மாறி இன்று வீட்டுக்கு ஒரு பட்டதாரியும் தெருவுக்கு மூன்று மருத்துவம் படித்த மாணவர்களும் இருக்கிறார்கள். படித்த இளைஞர்களிடையே போட்டிகள் அதிகமாக உள்ள சூழ்நிலையில் அவர்களுக்கான திறமையை வளர்ப்பதன் மூலமும், திறன்களை வளர்ப்பதன் மூலமும் வேலை வாய்ப்பு கிடைப்பதற்கான முயற்சிகளைய அரசு எடுத்து அவர்களுக்கான திறன் வகுப்பு பயிற்சிகளையும் அளித்து வருகிறது. பட்டாசு தொழிற்சாலையில் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகளுக்கு பள்ளி மற்றும் கல்லூரி படிப்பிற்கான உதவித்தொகை மற்றும் பராமரிப்புத் தொகைகளை வழங்குவதோடு அவர்கள் பிற்காலத்தில் வேலை வாய்ப்பை பெரும் வகையில் அவர்களுக்கான திறன் பயிற்சிகளையும் தமிழக அரசு வழங்கி வருகிறது.அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, இன்று மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில், 100 நபர்களுக்கு தலா ரூ.14,500/- வீதம் ரூ.1,45,000/- மதிப்பில் ஸ்மார்ட் போன்களும், 125 நபர்களுக்கு தலா ரூ.6,500/- வீதம் ரூ.8,12,500/- மதிப்பில் தையல் இயந்திரங்களும், 4 நபர்களுக்கு தலா ரூ.15,750/- வீதம் ரூ.63,000/- மதிப்பில் சக்கர நாற்காலிகளும், 7 நபர்களுக்கு தலா ரூ.2,000/- வீதம் ரூ.14,000 மதிப்பில் பிரெய்லி கடிகாரங்களும், 50 நபர்களுக்கு தலா ரூ.3,300/- வீதம் ரூ.1,65,000/- மதிப்பில் காதொலிக் கருவிகளும் என மொத்தம் 286 பயனாளிகளுக்கு ரூ.25.04 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளும், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் சார்பில், பட்டாசுத் தொழிற்சாலைகளில் விபத்துகளில் மரணமடைந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு மாதாந்திர பராமரிப்பு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், ஏற்கனவே 102 குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது, 27 குழந்தைகளுக்கு (வெளிமாவட்டத்தைச் சார்ந்த 8-குழந்தைகள் உட்பட) ரூ.5,18,000/- மதிப்பில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும், 10 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.4,000/- வீதம் ரூ.8,000/- மும், 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற 2 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தலா ரூ.6,000/- வீதம் ரூ.12,000/- மும், கல்லூரி பயிலும் 1 மாணவருக்கு கல்லூரிக் கட்டணம் ரூ.313/- மும், என மொத்தம் 32 மாணவர்களுக்கு ரூ.5.38 இலட்சத்திற்கான ஆணைகளும், மேலும், பள்ளிக்கல்வித்துறை சார்பில், அன்புக்கரங்கள் திட்டத்தின் கீழ், பெற்றோரை இழந்த 39 கல்லூரி மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினிகளும் வழங்கப்பட்டுள்ளன.மேலும், சிறந்து விளங்கிய மூன்று பள்ளிகளுக்கு, தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட்ட சிறந்த பள்ளிகளுக்கான விருதுகள் மற்றும் சுழல் கோப்பைகளும், தமிழ் இலக்கியத் திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.இதுபோன்று, எண்ணற்ற திட்டங்கள் மூலம் நலத்திட்ட உதவிகள் மாவட்டத்தில் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்த அரசின் திட்டங்களை அனைவரும் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், அரசுப் பள்ளியில் பயின்று நான் முதல்வன் - உயர்வுக்குப்படி திட்டத்தின் மூலம் பயன்பெற்று மும்பை ஐஐடி-யில் பயன்று வரும் செல்வி.யோகேஸ்வரி என்ற மாற்றுத்திறனாளி மாணவியை மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டி வாழ்த்தினார்.மேலும், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குடிமைப்பணிக்கான முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்று, முதன்மைத் தேர்வுக்கு தயாராகி வரும் மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000 ஊக்கத்தொகைக்கான காசோலையினைவருவாய் மற்றும் பேரிடர் மற்றும் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் வழங்கினார்.