25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 31, 2026

சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்கள் வெளிநாட்டில் முதுகலைப் படிப்பு பயில்வதற்கான கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிப்பதற்கு காலம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு 2026-2027 ஆம் ஆண்டில் முஸ்லீம் சிறுபான்மையின மாணவ/மாணவியர்களுக்கு உயர்தர உலகளாவிய கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்கு ஏதுவாக வெளிநாடு சென்று படிக்கும் 10 முஸ்லீம் மாணவர்களுக்கு ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக ரூ.36.00 இலட்சம் வீதம் கல்வி உதவித்தொகையாக வழங்கப்படவுள்ளது. 2026-2027 ஆம் ஆண்டில் வெளிநாட்டில் முதுகலைப்படிப்பு பயில உள்ள சிறுபான்மையின முஸ்லீம் மாணவ-மாணவியர்கள் கல்வி உதவித்தொகை பெற 15.10.2026 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. தற்போது, விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் 09.11.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவ/மாணவியர்கள் 2026-2027ஆம் கல்வியாண்டில் முதுகலை பட்டப்படிப்பு படிக்க உலகளாவிய QS (குவாக்கரெல்லி சைமண்டஸ்) தரவரிசையில் முதல் 250 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்கள்/கல்வி நிறுவனங்களிடமிருந்து நிபந்தனையற்ற சேர்க்கை கடிதம் (Unconditional offer letter) பெற்றிருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.8.00 இலட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும். பட்டப்படிப்பில் 60% அல்லது அதற்கு இணையாக தேர்ச்சி சதவீதம் பெற்றிருக்க வேண்டும். மருத்துவம், பொறியியல், மேலாண்மை, அறிவியல் வணிகவியல் & நிதி, மனிதநேயம் & கலை, வேளாண்மை அறிவியல், சுகாதாரம் பயன்பாட்டு அறிவியல், சர்வதேச வணிகம், பொருளாதாரம், நிதி கணக்கியல், மனித நேய படிப்புகள் (Humanities), சமூக அறிவியல், நுண்கலைகள் மற்றும் சட்டம் போன்ற பாடப்பிரிவுகளை தேர்ந்து எடுத்து  முதுகலைப் பட்டப்படிப்புக்கான சேர்க்கை பெற்றவராக இருத்தல் வேண்டும்.  இத்திட்டத்தில் விண்ணப்பிக்க www.bcmbcmw.tn.gov.in/welfschemes.minorities.htm என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600 005. என்ற முகவரிக்கு 09.11.2026-ஆம் தேதிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 31, 2026

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தொகுதி-2/2அ தேர்வில் 18,829 தேர்வர்கள் தேர்வெழுதவுள்ளனர் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 01.11.2026 அன்று  நடைபெறவுள்ள தொகுதி2/2அ தேர்வானது காலை 09.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெறுவுள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் 35 தேர்வு கூடங்களில் 55 தேர்வு மையங்களில் 18,829 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுத உள்ளார்கள். தேர்வு நடைபெறும் மையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள 55 கண்காணிப்பு அலுவலர்கள், 06 ஆய்வு அலுவலர்கள், வட்டாட்சியர் மற்றும் துணை வட்டாட்சியர் நிலையில் 16 மொபைல் பார்டியும், துணை ஆட்சியர் நிலையில் 13 பறக்கும் படை அலுவலர்களும், 55 தேர்வு மையங்கள் மற்றும் 06 மையக்கட்டுப்பாட்டு அறைக்கு தலா 1 ஒளிப்பதிவாளர்கள் வீதம் 61 ஒளிப்பதிவாளர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர். விருதுநகர் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 3,222 தேர்வர்களும், அருப்புக்கோட்டை வட்டத்தில் 12 தேர்வு மையங்களில் 3,257 தேர்வர்களும், இராஜபாளையம் வட்டத்தில் 10 தேர்வு மையங்களில் 3,153 தேர்வர்களும், சாத்தூர் வட்டத்தில் 5 தேர்வு மையங்களில் 1,491 தேர்வர்களும், சிவகாசி வட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 2,884 தேர்வர்களும், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 2,822 தேர்வர்களும் என மொத்தம் 55 தேர்வு மையங்களில் 18,829 தேர்வர்கள் தேர்வு எழுதவுள்ளனர். தேர்வு மையங்களின் முன் தேர்வு எழுதுபவர்களின் பதிவு எண்கள், தேர்வு அறைகளின் எண்கள் ஆகிய விபரங்கள் அடங்கிய அறிவிப்பு பலகைகள் பெரிதாகவும், தெளிவாகவும் வைக்கப்பட வேண்டும்.  தேர்வு எழுதுபவர்கள் தேர்வு அறைக்கு சிரமமின்றி செல்வதற்கு ஏதுவாக வழிகாட்டி பலகைகள் வைக்கப்பட வேண்டும். தேர்வு அறைக்கு முன் அறையினுடைய எண்கள் தெளிவாகவும், பெரிதாகவும் ஒட்டப்பட வேண்டும். தேர்வர்கள் காலை 08.30 மணிக்கு முன்னதாகவே தேர்வு அறைக்கு வந்துவிட வேண்டும். தேர்வர்கள் அறைக்கு வந்த பின்னர் விடைத்தாள்கள் கொடுக்கப்பட வேண்டும். ஒரு தேர்வருக்கு ஒரு விடைத்தாள் மட்டுமே கொடுக்கப்பட வேண்டும். அந்த விடைத்தாள் வேறு ஏதும் சேதமடைந்தாலோ அல்லது எழுத்து பிழை இருந்தாலோ மட்டுமே வேறு விடைத்தாள் கொடுக்கப்பட வேண்டும்.  நுழைவுச் சீட்டு இல்லாமல் வரும் தேர்வர்களை அனுமதிக்கப்பட கூடாது.  தேர்வர்கள் தேர்வு மையங்களில் எந்தவொரு மின்னனு சாதனங்கள் (கால்குலேட்டர், மொபைல் போன்) ஆகியவற்றை தேர்வு மையங்களுக்கு கொண்டு வர அனுமதிக்கக்கூடாது. தேர்வுக்கூட கண்காணிப்பாளர்களும் அலைபேசியை தேர்வறைக்குள் பயன்படுத்தக்கூடாது. தேர்வர்களின் வருகைப் பதிவேட்டை காலை 09.30 க்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 30, 2026

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தினை தொடங்கி வைத்து, 12 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4.28 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை வழங்கினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I  A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தினை தொடங்கி வைத்து, கடன் உதவிகளை (29.10.2026) வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு  ரூ.3.14 கோடி கடனுதவிகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ.33.86 இலட்சம் மானியத் தொகைக்கான  ஆணைகளையும், அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின் கீழ் 1 நபருக்கு ரூ.47.20 இலட்சம் கடனுதவியையும், மகளிர் திட்டம் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.7 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு நிதிகளையும் என மொத்தம் 12 தொழில் முனைவோர்களுக்கு ரூ.4.28 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை  அமைச்சர் அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான அரசு சட்டசபையில் அறிவித்த இந்த திட்டத்தினை நமது மாவட்டம் சிவகாசியில் தொடங்கி வைப்பது பெருமையாக உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் இன்று கூட பெண்கள் சிறு  தொழில்களை வீட்டிலேயே செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளியில் வந்து மிகப்பெரிய தொழில் முனைவராக உருவாக வேண்டும்.வளர்ந்து வரும் நம் நாட்டில் பெரிய நிறுவனங்களின் உற்பத்திக்கு தேவையான பொருட்களை வழங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. இதனை குறு, சிறு  தொழில்கள் மூலம் பெண்கள் பயன்படுத்திக் கொண்டு தங்கள் பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். வெற்றி மகளிர் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10 இலட்சமும் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடனுதவி வழங்கப்படுகிறது. முதல் முறையாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி அல்லது சேவை தொழில் தொடங்குவதற்கான திட்டமிடுதல் தொடர்பாக 15 நாட்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் பயிற்சியும் வழங்கப்படுகிறது.மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீதம் மானியமும், முதல் முறை தொழில் தொடங்கும் மகளிருக்கு 30 சதவீதமும், ரூ.1 கோடி மதிப்பிற்கு கீழ் இயந்திரம் வாங்கும் தொழில் முனைவோர்களுக்கு 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டம் குறித்த சந்தேகங்கள் மற்றும் உதவிகளுக்கு தொடர்புடைய அலுவலர்களை அணுகலாம்.எனவே தமிழ்நாட்டின் பெண்களை தொழில் முனைவோர்களாக உருவாக்க தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டத்தினை பெண்கள் பயன்படுத்திக் கொண்டு தொழில் துறையில் உங்களுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கனவை நினைவாக்கிட வேண்டும் என  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழக பொது மேலாளர் திரு.தே.துரைராஜ், துணை பொது மேலாளர் திரு.பழனிவேல், மண்டல மேலாளர் திரு.ம.பட்சிராஜா, மேலாளர் திருமதி ஜெ.நித்யா, அரசு அலுவலர்கள், மகளிர் தொழில் முனைவோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

Oct 30, 2026

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தம் செய்தல் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, 01.01.2027-ஐ தகுதி நாளாகக் கொண்டு நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தம் 2027-ன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளும் பணிகளுக்கான சிறப்பு முகாம்கள் அனைத்து வாக்குச்சாவடிகளிலும், 21.11.2026, 22.11.2026 மற்றும் 28.11.2026, 29.11.2026 ஆகிய நாட்களில்  நடைபெற உள்ளது. எனவே விருதுநகர் மாவட்டத்திற்குட்பட்ட 18 வயது பூர்த்தியடைந்த இளம் வாக்காளர்கள்/முதல் முறை வாக்காளர்கள் மற்றும் வாக்காளர்களாக பதிவு செய்ய விடுபட்டவர்கள் (Left Out Voters) பெயர் சேர்க்க விண்ணப்பங்கள் அளித்து பயன் பெறலாம். ஏற்கனவே வாக்காளர்களாக பதிவு செய்தோர் விண்ணப்பங்கள் அளித்து முகவரி மாற்றம், புகைப்பட மாற்றம் செய்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 30, 2026

2027-ஆம் ஆண்டிற்கான தொழிற்சாலைகள் உரிமத்தினை 31.10.2026-க்குள் தவறாமல் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

 விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, வெம்பக்கோட்டை, சாத்தூர், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி ஆகிய தாலுகாக்களில் இயங்கிவரும் தொழிற்சாலைகள், 2027-ஆம் ஆண்டிற்கு தொழிற்சாலைகள் சட்டத்தின்படியான உரிமத்தினை இணையதள மூலம் வரும் 31.10.2026-க்குள் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். உரிமம் புதுப்பித்தலுக்காக அலுவலகத்திற்கு நேரில் வர தேவையில்லை. 2027-ம் ஆண்டிற்கான உரிமம் புதுப்பித்தலை www.dish.tn.gov.in  என்ற இணையதளம் மூலம் மட்டுமே உரிய கட்டணம் செலுத்தி புதுப்பிக்க வேண்டும்.  விண்ணப்பித்தவுடனே புதுப்பிக்கப்பட்டதற்கான உரிமத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்காக தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்திற்கு வரவேண்டிய அவசியம் இல்லை.  உரிமத் திருத்தம், உரிமம் மாற்றம் ஆகியவற்றிற்கு இணையதள வழி மூலமே உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.  அக்டோபர் 31-ந் தேதிக்கு பின்னர் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மீது ஏற்கனவே நடைமுறையில் உள்ள தாமத கட்டணம் செலுத்த நேரிடும்.  உரிய உரிமம் இன்றி செயல்படும் தொழிற்சாலைகள் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்பட்டவையாகும்.  எனவே கடைசி நேர நெருக்கடி மற்றும் இணையதள வழி சிக்கல்களை தவிர்க்க தொழிற்சாலை நிர்வாகங்கள் முன்கூட்டியே விண்ணப்பிக்குமாறு கோரப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளுக்கு PESO மற்றும் DM உரிமம் பெற்ற பட்டாசு தொழிற்சாலைகளின் வரைபடத்தில் அனுமதிக்கப்பட்ட தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கு (தொழிற்சாலைகள் சட்டம் விதி-4, G.O. Ms. No. 50, Labour welfare and Skill Development (M2), 27 th May 2025) ஏற்ப  மட்டுமே  உரிமம்  புதுப்பிக்கப்படும். இதேபோல் ஒப்பந்த தொழிலாளர் (முறைப்படுத்துதல் மற்றும் நீக்குதல்) சட்டம் 1970 மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் விதிகள் 1975 மற்றும் மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயரும் தொழிலாளர்கள் சட்டம் 1979 மற்றும் தமிழ்நாடு விதிகள் 1983-ன் கீழான உரிமத்தையும் ஒப்பந்ததாரர்கள் இணையவழி மூலம் உரிய கட்டணம் செலுத்தி உரிமத்தை புதுப்பித்துக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு No. 112    முதல்  தளம்,  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், விருதுநகர், என்ற முகவரியில் உள்ள தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு   கொள்ளலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி  I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Oct 29, 2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட இரத்தப் பரிமாற்றக் குழுக் கூட்டம் (DBTC) நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட இரத்தப் பரிமாற்றக் குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் 27.10.2026 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் இரத்த வங்கிகளின் செயல்பாடுகள் மற்றும் 10 முக்கிய செயல்திறன் குறியீடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.முக்கிய செயல்திறன் குறியீட்டு மதிப்பீடு என்பது தனிப்பட்ட இரத்த வங்கியின் செயல்பாடாக மட்டும் இல்லாமல் அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகளின் ஒட்டுமொத்த செயல்திறன்கள் தான் மாவட்டத்தின் மதிப்பெண்ணாகக் கணக்கிடப்படுகிறது. எனவே, அனைத்து இரத்த வங்கிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் அனைத்து முக்கிய செயல்திறன் குறியீட்டு இலக்குகளையும் அடைய வேண்டும்.தேசிய இரத்த பரிமாற்றுக் குழுக்கள் இரத்த சேகரிப்பை அதிகரிக்க தன்னார்வ இரத்ததான முகாம்களை அதிக அளவில் நடத்திட வேண்டும். தர உறுதிப்பாட்டு திட்டத்தில் இன்னும் இணையாத தனியார் இரத்த வங்கிகள் உடனடியாகப் பதிவு செய்து, முறையான அறிக்கைகள் மற்றும் ஆவணங்களைப் பராமரித்திட வேண்டும். இரத்தக் கூறுகளை தேவையான இடங்களுக்கு பிரித்து அனுப்புவதற்கு தற்போதுள்ள மையங்கள் மற்றும் கிளைகள்(Hub-and-Spoke)  மூலம் பிரித்து அனுப்பும் முறையைத் தொடர்ந்து செயல்படுத்திடவும், கூடுதல் இரத்தக் கூறுப் பிரிப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.பாரத் டிஜிட்டல் மிஷன்(ADMS) மற்றும் இரத்த வங்கி மேலாண்மை அமைப்புகளில்(BBMS) ஆதார் அடிப்படையிலான இரத்ததானப் பதிவு உள்ளிட்ட டிஜிட்டல் நடைமுறைகளை முழுமையாகச் செயல்படுத்திட தேவையான பயோமெட்ரிக் சாதனங்களை ஏற்பாடு செய்திட வேண்டும்.கல்வி நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து அதிக அளவில் இரத்ததான முகாம்களை நடத்திடவும், பிற மாவட்ட இரத்த வங்கிகள் நடத்தும் முகாம்களுக்கும் முன்கூட்டியே மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் அல்லது மாவட்ட நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்து, முறையான ஒருங்கிணைப்பை உறுதிசெய்திட வேண்டும். இரத்த வங்கி உரிமம் காலாவதியாகும் தேதிக்கு குறைந்தது 3 மாதங்களுக்கு முன்பே புதுப்பித்தல் வேண்டும். இ-ரத்தகோஷ் (e-RaktKosh)-இல் தினசரி இரத்த இருப்பைப் பதிவு செய்திட வேண்டும்.மேலும், இரத்தப் பாதுகாப்பு கண்காணிப்பு திட்டத்தில்(HvPI) பதிவு செய்தல்,  FFP மற்றும் Cryoprecipitate தரப் பரிசோதனைகளை வலுப்படுத்திடவும், CLIA, Leukodepletion மற்றும் Irradiation வசதிகளைச் தேவையான இடங்களில் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அனைத்து அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகளும் தங்களுக்குரிய குறைபாடுகளைச் சரிசெய்து, மாவட்ட குருதி பரிமாற்ற அலுவலர் உடன் தொடர்ந்து ஒருங்கிணைந்து செயல்பட்டு மாவட்டத்தின் ஒட்டுமொத்த முக்கிய குறியீட்டு  மதிப்பெண்ணை 100/100 ஆக உயர்த்துவதே அனைவரின் பொதுவான இலக்காக இருக்க வேண்டும்.எனவே, அனைத்து இரத்த வங்கிகளும் மேற்கண்ட நடவடிக்கைகளை முன்னுரிமையுடன் செயல்படுத்துவது மட்டுமின்றி அதன் முன்னேற்றத்தையும் தொடர்ந்து கண்காணித்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.கூட்டத்தில் அரசு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதாராணி, இணை இயக்குநர் (மருத்துவப் பணிகள்)) திரு.காளிராஜ், மாவட்ட இரத்தப் பரிமாற்றக் குழு அலுவலர்  மரு ப.ஆனந்தீஷ்வரி, மூத்த மருந்து ஆய்வாளர் திரு.அய்யப்ப தாஸ், இரத்ததான முகாம் அமைப்பாளர்கள், விருதுநகர் மற்றும் சிவகாசி மாவட்ட சுகாதார அலுவலர்கள் , அரசு மற்றும் தனியார் இரத்த வங்கிகளின் மருத்துவ அலுவலர்கள், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் பிரதிநிதிகள் மற்றும் இதர முக்கிய மருத்துவ அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Oct 29, 2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கல்விக்கடன் மற்றும் தொழில் கடன்களை பயனாளிகளுக்கு வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 17 மாணவர்களுக்கு ரூ.1.54 கோடி கல்விக்கடன் மற்றும் 49 பயனாளிகளுக்கு ரூ.6.45 கோடி தொழில் கடன்களை (28.10.2026) வழங்கினார்.தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்டத்தில் கல்வி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்குப் பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, தகுதியுள்ள மாணவர்களுக்கு வங்கிகள் மூலம் கல்விக்கடனுதவிகளும், இளைஞர்கள் மற்றும் தொழில் முனைவோர் சுயதொழில் தொடங்குவதற்கும், ஏற்கனவே மேற்கொண்டு வரும் தொழில்களை விரிவுபடுத்துவதற்கும் தொழில் கடனுதவிகள் வழங்கப்படுகின்றன.அதன் ஒரு பகுதியாக இன்று கல்வி மற்றும் தொழில் கடன் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமில் 17 மாணவர்களுக்கு ரூ.1.54 கோடி கல்விக்கடன் மற்றும் 49 பயனாளிகளுக்கு ரூ.6.45 கோடி சிறு மற்றும் குறு தொழில் புரிவதற்கான கடனுதவிகள் வழங்கப்பட்டது.மாவட்டத்தில் 2026-2027 நடப்பு நிதியாண்டில் பல்வேறு வங்கிகள் மூலம் இதுவரை 155 மாணவர்களுக்கு ரூ.13.67 கோடி கல்விக் கடன்களும், 18,200 பயனாளிகளுக்கு ரூ.5,397 கோடி சிறு, குறு தொழில் கடனுதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.எனவே, அரசு வழங்கும் கடனுதவிகள் மற்றும் நலத்திட்டங்களை பயனாளிகள் உரிய முறையில் பயன்படுத்தி, தங்களது கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மதுரை மண்டல மேலாளர் திரு.சம்பகேஸ்வர் பிரதான், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், பொது மேலாளர்(மாவட்ட தொழில் மையம்) திரு.கண்ணன், துணை இயக்குநர்(மாவட்ட தொழில் மையம்) திரு.சரவண கணேஷ், வங்கி கிளை மேலாளர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 29, 2026

முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி தினமான 30.10.2026 முன்னிட்டு டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் இரண்டு நாட்கள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது.

எதிர்வரும் 30.10.2026 அன்று இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத்தேவர் நினைவு தினத்தன்று, விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு இணைப்பில் கண்ட டாஸ்மாக் மதுபான கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள், எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 ஆகிய மதுபான உரிமஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor  (Licence and permit) Rules,  1981-ன்படி 29.10.2026 மற்றும் 30.10.2026 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும்  தற்காலிகமாக  மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேற்படி, உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் எப்.எல்-1, எப்.எல்-2, மற்றும் எப்.எல்-3 மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது  The Tamil Nadu Liquor  (Licence and permit) Rules,  1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 28, 2026

வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் முன்னிலையில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (27.10.2026) நடைபெற்றது.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடகிழக்கு பருவமழையினால் பொதுமக்கள் பாதிப்படையாமல் பாதுகாத்திடவும், பருவ நிலை மாற்றம் காரணமாக நோய் தொற்று ஏற்படாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும், மழை நீரினை நீர் நிலைகளில் சேமித்து நிலத்தடி நீர்மட்டத்தினை உயத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள்.மழைக்காலங்களில் கழிவுநீர் கால்வாய்களில் இருந்து வெளியேறும் மழைநீர் குடிநீர் இணைப்புகளில் கலந்து விடாமல் கண்காணித்திட வேண்டும். வரத்து வாய்க்கால்களை சுத்தம் செய்து மழைநீர் எளிதில் வெளியேறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழையின் காரணமாக மழை நீரினால் டெங்கு கொசு உற்பத்தியாகாமல் மழை நீரினை வெளியேற்றிட வேண்டும். கால்நடைகளுக்கு மழையின் காரணமாக நோய் தொற்று ஏற்படாமலும், சாலைகளில் திரியும் கால்நடைகளை தொழுவத்தில் கொண்டு வைத்து  பாதுகாத்திட வேண்டும். மழைநீரினை முறையாக சேமித்து குடிநீர் ஆதாரமாக பயன்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.   தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களை எவ்வித் இயற்கை இடர்பாடுகளும் பாதித்திடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தாமும் மேற்கொண்டு மாவட்ட அளவில் பொறுப்பு அலுவலர்களை நியமித்து கண்காணித்திட உத்தரவிட்டுள்ளார்கள்.விருதுநகர் மாவட்டத்தில் மழையினை கண்காணித்திட 12 இடங்களில் மழை மானி நிலையங்களும், 43 இடங்களில் தானியங்கி மழை மானியங்களும், 11 இடங்களில் தானியங்கி வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் 9 இடங்கள் மழையினால் பாதிப்படையும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளது. தகவல் பரிமாற்றத்திற்காக 1,540 நபர்கள் முதல் தகவல் அளிப்பதற்காகவும், 16 வாக்கி டாக்கிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.பொதுப்பணித்துறையின் கீழ் 8 கண்மாய்களும், 225 நீர்தேக்கங்களும், ஊரக வளர்ச்சித்துறையின் கீழ் 712 கண்மாய்களும் உள்ளன. மழை நீர் உடைப்பு ஏற்படாமல் தடுத்திட பொதுப்பணித்துறையின் மூலம் 4,850 மணல் மூட்டைகளும், ஊரக வளர்ச்சித்துறையின் மூலம் 19,000 மணல் மூட்டைகள் என மொத்தம் 23,850 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. குடிநீரில் குளோரின் கலந்து வழங்குவதற்காக 3,500 மூட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.மழையினால் பாதிக்கப்படும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்திட 17 பள்ளிகள், 2 அங்கன்வாடி மையங்கள், 6 திருமண மண்டபம், 12 சமுதாயக்கூடம், 2 இ-சேவை மையக்கட்டடங்கள் என 39 இடங்களில் நிவாரண முகாம்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.மழை காலங்களில் தடையின்றி மின்சாரம் வழங்குவதற்கு ஏதுவாக 4,200 மின்கம்பங்களும், 218 மின்மாற்றிகளும், 140 கி.மீ நீளத்திற்கு மின்கம்பி வடங்களும் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மூலம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்களை நோய்தொற்றிலிருந்து பாதுகாத்திட 3 அரசு தலைமை மருத்துவமனைகள், 15 வட்டார தலைமை மருத்துவமனைகள், 53 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 39 துணை சுகாதார நிலையம், 7 நகர்புற சுகாதார நிலையங்களில் சிகிச்சை வழங்கிட தயார் நிலையில் சிகிச்சை வழங்க தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.பயிர் சேதத்தினை கண்டறிந்து உரிய இழப்பீடு தரும் பொருட்டு 156 அலுவலர்கள் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த சாகுபடி பரப்பு 1,27,693 ஹெக்டர் நிலங்களில் தற்போது 51,660 ஹெக்டர் நிலங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள 11,37,671 கால்நடைகளை பாதுகாத்திட 86 கால்நடை அரசு மருத்துவர்கள் மூலம் 198 சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட திட்டமிடப்பட்டு 107 முகாம்கள் நடைபெற்றுள்ளது. மீதமுள்ள முகாம்கள் நடைபெற்று வருகிறது.மழைநீரினை நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதியில் அகற்றிட 25 மின் மோட்டார்களும், 30 நீரை வெளியேற்றும் பம்புகளும், 16 ஜெனரேட்டர்களும், 22 மரம் அறுக்கும் கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.மழைக்காலங்களில் சீரான உணவு பொருட்கள் வழங்குவதை உறுதி செய்திடும் வகையில் 17,701 மெ.டன் அரிசியும், 475 மெ.டன் பருப்பும், 2,33,894 லிட்டர் பாமாயிலும், 730 மெ.டன் சீனியும், 683 மெ.டன் கோதுமையும் தயார் நிலையில் உள்ளது.தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையின் சார்பில் இயற்கை இடர்பாடுகளில் இருந்து பொதுமக்களை பாதுகாத்திட 5 இரப்பர் படகுகள், 142 உயிர் காக்கும் உடையும், 55 டார்ச்லைட்டும், 130 தனிநபர் உயிர் காக்கும் உபகரணங்களும், 20 மரம் அறுக்கும் கருவிகளும் மற்றும் தானியங்கி இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அலுவலர்களும் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்திலிருந்து பொதுமக்களை பாதுகாத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு, தீயணைப்பு மற்றும் மீட்பு துறைகள் சார்பில் நடைபெற்ற பேரிடர் மீட்பு ஒத்திகையினை  அமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்கள்.நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கா.வானதி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சோமசுந்தர சீனிவாசன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 28, 2026

வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.5.0 கோடி வரை மானியத்துடன் கடனுதவி பெறும் திட்டத்தினை தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் அவர்கள் தொடங்கி வைக்கவுள்ளார்.

பெண் தொழில் முனைவோர்களால் தொடங்கப்படும் தனியுரிமை நிறுவனங்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள், ஒரு நபர் நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட நிறுவனங்களில் பெண் தொழில் முனைவோர் நிறுவனத்தின்யுரிமை அல்லது பங்குகளில் குறைந்தபட்சம் 51% பங்குடன் நிர்வாகக் கட்டுப்பாடு உள்ள நிறுவனங்களை தொடங்கிட வெற்றி மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டுத்திட்டம் தொடங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூ.10 இலட்சமும் அதிகபட்சம் ரூ.5.0 கோடி வரை கடனுதவி வழங்கப்படும். முதல் முறையாக தொழில் தொடங்கும் தொழில் முனைவோர்களுக்கு உற்பத்தி அல்லது சேவை தொழில் தொடங்குவதற்கான திட்டமிடுதல் தொடர்பாக 15 நாட்கள் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில் பயிற்சி வழங்கப்படும்.தொழில் திட்டத்தின் மொத்த செலவில் தொழில் முனைவோர் தங்களது பங்காக புதிய தொழில் நிறுவனங்களுக்கு 20 சதவீதமும், ஏற்கெனவே செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்கள் 15 சதவீதமும் செலுத்த வேண்டும். மகளிர் தொழில் முனைவோர்களுக்கு 25 சதவீதம் மானியமும், முதல் முறை தொழில் தொடங்கும் மகளிருக்கு 30 சதவீதமும், ரூ. 1.0 கோடி மதிப்பிற்கு கீழ் இயந்திரம் வாங்கும் தொழில் முனைவோர்களுக்கு 40 சதவீதம் வரை மானியம் வழங்கப்படவுள்ளது.விருதுநகர் தொழில் சார்ந்த மாவட்டம் என்பதால் பெண் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டம் மிகுந்த பயனுள்ளதாக அமையும். எனவே இத்திட்டத்தினை  தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் வருகின்ற 29.10.2026 அன்று மாலை 4 மணி அளவில் சிவகாசி ICAI பவன், வேலாயுதம் சாலை, சிவகாசியில்  தொடங்கி வைக்கவுள்ளார். தொழில் முனைவோர்களாக ஆர்வமுள்ள விருப்பமுள்ள மகளிர்கள் இத்திட்டத்தினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

1 2 3 4 5 6 7 8 9 10 ... 157 158

AD's



More News