விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (14.10.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு அரசின் சார்பில் பொதுமக்களின் நலன் கருதி பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், சாலைப் போக்குவரத்தை எளிதாக்குதல், பாதுகாப்பான குடிநீர் வழங்குதல் மற்றும் அரசின் நலத்திட்டங்கள் தகுதியான பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்தல் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் குலசேகரநல்லூர் கிராமத்தில் ரூ.7 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டு செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையம், சித்தலகுண்டு கிராமத்தில் அரசு மானியத்தில் கட்டப்பட்டுள்ள பயனாளியின் வீடு, பாறைக்குளம் கிராமத்தில் வி.பி.ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.4.66 இலட்சம் மதிப்பில் பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வரும் பணிகள், பி.தொட்டியாங்குளம் கிராமத்தில் ரூ.29.40 இலட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலைப்பணிகள், சென்னிலைக்குடி ஊராட்சியில் வி.பி.ஜி ராம் ஜி திட்டத்தின் கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பில் வரத்துக்கால்வாய் தூர்வாரும் பணிகள், கேத்தநாயக்கன்பட்டி கிராமத்தில் ரூ.30 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சமுதாய கூடம், திருச்சுழி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.1 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் கலையரங்கம் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்தார்.மேலும், நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகள் அனைத்தும் உரிய காலக்கெடுவிற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும். பணிகளை மேற்கொள்ளும்போது நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளைப் பின்பற்றுவதுடன், பணிகளின் தரத்தில் எவ்விதக் குறைபாடுகளும் ஏற்படாத வகையில் தொடர்புடைய அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர், வட்டாட்சியர், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சித் துறையின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் துறைச்சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் (13.10.2026) நடைபெற்றது.ஊரக மக்களின் நலன் கருதியும், கிராமப்புறங்களில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், நகர்ப்புறங்களுக்கு இணையாக அனைத்து வசதிகளை கிராமங்களில் ஏற்படுத்திடும் வகையிலும் ஊரக வளர்ச்சித் துறையின் மூலம் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின்கீழ் நடைபெறும் திட்டப்பணிகள், பிரதம மந்திரி ஆவாஸ் கிராம யோஜனா திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்(விபிஜிராம்ஜி), நபார்டு திட்டம், குழந்தை நேய பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 15வது நிதி குழு மான்யம், தூய்மை பாரத இயக்கத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வாயிலாக கிராம ஊராட்சிகளில் அடிப்படை உட்கட்டமைப்பு தேவைகளான சாலை வசதி, குடிநீர் வசதி, தெரு விளக்கு, பள்ளிக் கட்டடம், அங்கன்வாடி மைய கட்டடம், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, ஃபேவர் பிளாக் மற்றும் தார் சாலை, சுடுகாடு, கழிவுநீர் கால்வாய் வசதி போன்ற அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருதல் மற்றும் மேம்படுத்துதல் தொடர்பாகவும், கிராம ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளுக்கும் தனிநபர் வீட்டு குடிநீர் குழாய் இணைப்புகள் வழங்குதல், திட, திரவ கழிவு மேலாண்மை மற்றும் பொது சுகாதாரப் பணிகள், கிராமப்புற நூலகம் அமைத்தல், பழுதடைந்த அங்கன்வாடி மைய கட்டடங்களை சீரமைத்தல், விளையாட்டு மைதானம் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.ஊரகப்பகுதியில் உள்ள குடிசைகளை மாற்றி, அனைவருக்குமே பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகளை அமைத்து தரும் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா, பிரதம மந்திரி ஜன்மன், தொல்குடி உள்ளிட்ட பல்வேறு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வெவ்வேறு நிலைகளிலுள்ள வீடு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்தும் கேட்டறியப்பட்டது. மேலும் இத்திட்டத்திற்கு அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அளவில் குடியிருப்புகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வேண்டும். கட்டுமானப் பணிகளை துறை சார்ந்த அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து பணிகளை விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து ஊராட்சிகளிலும் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதி செய்யும் வகையில் குளோரினேஷன் செய்யப்பட்ட குடிநீரை விநியோகம் செய்ய வேண்டும். சாலை பணிகள், குடிநீர், தெரு விளக்குகள் உள்ளிட்ட அத்தியவசிய பணிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை மேற்கொள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்தார்.கூட்டத்தின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, செயற்பொறியாளர் (ஊரக வளர்ச்சித்துறை) பாலகிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி செயற்பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 16.10.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 03.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், சாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ எஸ்.ராமசாமி நாயுடு நினைவு கல்லூரியில் நடைபெறவுள்ளது.இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் அடையார் ஆனந்த பவன், அபிஸ் ஃபுட்ஸ் அண்ட் புரோட்டின்ஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்ரீ ராம் மோட்டார்ஸ், பெஸ்ட் மணி கோல்ட் பிரைவேட் லிமிடெட், ஃப்ளேர்மேக்செல் போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 16.10.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in (தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம்) என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ், அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது 9360171161 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வசித்து வரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தைச் சார்ந்தவர்களின் வாழ்வாதாரம் முன்னேற்றம் அடைவதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் தொழில் முனைவோர் திட்டங்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது.லோடு ஆட்டோ, கார், பயணிகள் ஆட்டோ, ஜெராக்ஸ் கடை, வெல்டிங், சென்ட்ரிங், டிபார்மென்ட் ஸ்டோர், கார்மென்ட்ஸ், அரிசிகடை, ஆவின் பாலகம், எலெக்ட்ரிக்கல்ஸ், பிரவுசிங் சென்டர், பியூட்டி பார்லர் மற்றும் பிற தொழில்கள் இதுபோன்ற வெற்றி தொழில் முனைவோர் திட்டத்தில் திட்ட மதிப்பு தொகையில் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கி கடன் வழங்கப்படும்.மேலும், ஆதிதிராவிடர்களுக்கான முன்னேற்ற திட்டத்தில் (PM-AJAY) ஆடு மற்றும் மாடு வளர்ப்பதற்கு திட்ட மதிப்பு தொகையில் 50% அல்லது ரூ.50,000/- இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் வழங்கப்படும்.இதற்கான தகுதிகள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.இத்திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% வட்டி மானியமாக வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தில் தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள் தாட்கோ இணையதள முகவரியில் (https://newscheme.tahdco.com) விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி.ச.கீர்த்தனா அவர்கள் தலைமையில் இன்று (12.10.2026) விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் Social Media Influencer ஆகியோருடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் ரூ.1.89 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம் மற்றும் பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.70.68 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம் ஆகியவற்றை (12.10.2026) பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் பயன்பாட்டிற்காகத் திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசு, பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கும், அரசு அலுவலகங்களின் கட்டமைப்பு வசதிகளை நவீனப்படுத்துவதற்கும், மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், சிவகாசி சார்பதிவாளர் அலுவலக கட்டிடம் ரூபாய் 1.89 கோடி மதிப்பில் அலுவலக அறை, கணினி அறை, பொது கழிப்பறை, மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை, சாய்வு தளம், ஆவண காப்பக அறை, சேமிப்பு அறை, எழுதுபொருட்கள் வைப்பறை, உணவு மருந்தும் அறை உள்ளிட்ட வசதிகளுடன் இரண்டு தளங்களுடன் சுமார் 408.31 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.பழைய சார் பதிவாளர் அலுவலகக் கட்டடத்திற்குப் பதிலாகப் புதிய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளதன் மூலம், பொதுமக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளுடன் கூடிய நவீன அலுவலகச் சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், முக்கியமான சொத்து ஆவணங்களைப் பாதுகாப்பாகப் பராமரிக்கவும், அலுவலகப் பணிகளைத் திறம்பட மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விரைவான மற்றும் தரமான சேவைகளை வழங்கவும் புதிய கட்டடம் உதவியாக இருக்கும்.மேலும், பூவநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.70.68 இலட்சம் மதிப்பில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் என மொத்தம் 279.04 ச.மீ பரப்பளவில் கட்டப்பட்டுள்ள 3 கூடுதல் வகுப்பறைக் கட்டடம், மாணவர்களுக்குத் தேவையான வகுப்பறை வசதிகளை மேம்படுத்துவதுடன், கல்வி கற்கும் சூழலை மேம்படுத்தவும் உதவுகிறது. மாணவர்கள் எவ்வித இடையூறுமின்றி கல்வி பயில்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவது தான் அரசின் முக்கிய நோக்கமாகும். கல்வித்துறையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் மாணவர்களின் கல்வித்தரம் உயர்வதற்கும், அவர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்கும்.எனவே, பொதுமக்களுக்கான அரசுச் சேவைகளை மேம்படுத்துவதிலும், மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அரசு தொடர்ந்து முனைப்புடன் செயல்பட்டு வருகிறது என தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., மாவட்ட பத்திர பதிவாளர் திரு.கந்தப்பன், முதன்மைக் கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், சார் பதிவாளர் திரு.இளங்கோவன், அரசு அலுவலர்கள், பள்ளித் தலைமையாசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவையினை(12.10.2026) கொடியசைத்து தொடங்கி வைத்து மாணவர்களுடன் அரசுப்பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பயின்று வருகின்றனர்.இக்கல்லூரிக்கு வரும் மாணவ/மாணவிகள் அரசு பேருந்துகளில் சிவகாசி – ஸ்ரீவில்லிபுத்தூர் பிரதான சாலையில் உள்ள ரிசர்வ் லயன் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சுமார் 1 கி.மீ கல்லூரிக்கு நடந்து சென்று வந்தனர். இதன் காரணமாக கல்லூரிக்கு காலதாமதமாக செல்லும் நிலை ஏற்பட்டு வந்தது. ஆகையால், கல்லூரிக்கு சென்று வர ஏதுவாக கல்லூரியிலிருந்து சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையம் வரை அரசுப் பேருந்து வழித்தட சேவை செய்ய வேண்டும் என கல்லூரி நிர்வாகம், பெற்றோர் மற்றும் மாணவ/மாணவிகள் கோரிக்கை வைத்தனர்.அந்த கோரிக்கையினை ஏற்று கல்லூரியில் பயிலும் மாணவ/மாணவிகள் பயன்பெறும் வகையில், கல்லூரி நேரங்களான காலை 08.10 மணிக்கு சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு கல்லூரிக்கும் மற்றும் மாலை 03.10 மணிக்கு கல்லூரியில் இருந்து புறப்பட்டு சிவகாசி என்.ஆர்.கே.ராஜரத்தினம் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு சென்றடையும் வகையில் புதிய வழித்தட பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது என மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவ/மாணவிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் தலைமையில் (12.10.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,07,200/- மதிப்பிலான நவீன செயற்கை கால்களையும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் புதிரை வண்ணார் நல வாரியம் மூலம் 26 பயனாளிகளுக்கு ரூ.2,70,000/- மதிப்பிலான நலத்திட்ட உதவிகளுக்கான காசேலையினையையும், மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் பணியின் போது பணியிடை மரணம் அடைந்தவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும்,மேலும், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் விருதுநகர் வட்டத்தைச் சேர்ந்த 58 பயனாளிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் அருப்புக்கோட்டை வட்டத்தைச் சேர்ந்த 66 பயனாளிகள் என மொத்தம் 124 பயனாளிகளுக்கு இ-பட்டாக்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பின்னர், நரிக்குடி, திருச்சுழி வட்டாரங்களில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தின் கீழ் குழந்தைகள் நல மையங்களில் பயன்பெறும் பயனாளிகளில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடுள்ள (0-6 மாதம் முதல் 6 வயது வரை) 338 குழந்தைகளுக்கு அவர்களின் ஊட்டச்சத்து நிலையின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு வளமிகு வட்டார வள மையத்தின் மூலம் முன் அடையாளமாக 10 குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகத்தினை வழங்கி இத்திட்டத்தை துவக்கி வைத்தார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 678 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.பிரம்ம நாயகம், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண மக்கள் தொடர்பு திட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் 2வது புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது.தற்போது, விருதுநகர் மாவட்டம், ‘திருச்சுழி வட்டம், பி.புதுப்பட்டி கிராமத்தில்” உள்ள “சமுதாயகூடத்தில்” வைத்து 14.10.2026ஆம் தேதியன்று காலை 10.00 மணி அளவில் மாவட்ட ஆட்சியரின் தலைமையில் நடைபெற உள்ளது. மேலும் 14.10.2026ஆம் தேதியன்று காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் திருச்சுழி வட்டத்தில் உள்ள பி.புதுப்பட்டி கிராமத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து, அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களை சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர். மேலும், அன்றைய தினம் நடைபெறும் முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எனவே “திருச்சுழி வட்டம் பி.புதுப்பட்டி கிராமத்தில்” உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் அளித்து குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும், அரசின் திட்டங்கள் முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஒன்றிய அரசால் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபினர் மாணவ/மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் (PM YASASVI- Top Class education in schools for OBC, EBC & DNT Students) செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி, 2026-27 ஆம் ஆண்டிற்கான தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (National Scholarship Portal) அறிவிக்கப்பட்டுள்ளது. (Top class School) சிறந்த செயல்பாடு கல்வி நிறுவனம் (100% தேர்ச்சி பெற்றுள்ள) பள்ளிகளில் நடப்பாண்டில் 9 ஆம் வகுப்பு முதல் – 12 வகுப்பு வரை பயிலும் தமிழகத்தைச் சார்ந்த தகுதியான மாணவ/மாணவியர்கள் கல்வி உதவித்தொகை திட்டத்தில் புதுப்பித்தல் மற்றும் புதியதாக விண்ணப்பிப்பதற்கு தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் (https://scholarship.gov.in) விண்ணப்பிக்கலாம்.இத்திட்டத்தில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயில்பவருக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணமாக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.75,000/-, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயில்பவருக்கு ரூ.1,25,000/- வரை உதவித்தொகையாக ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பயன்பெற 30% மாணவியர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இத்திட்டத்தில் பயன்பெற மாணவ/மாணவியர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC), பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினர் (EBC) அல்லது சீர்மரபினர் (DNT) பிரிவைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். குடும்பத்தின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். 2025-26 ஆம் கல்வியாண்டில் 100% தேர்ச்சி பெற்று தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள பள்ளிகளில் பயில்பவராக இருத்தல் வேண்டும்.இத்திட்டத்தில் கடந்த நிதியாண்டில் 2025-26 கல்வி உதவித்தொகை பெற்று பயனடைந்த மாணவ/மாணவியர்கள் நடப்பாண்டில் (2026-27) 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு விண்ணப்பத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் உறுதிசெய்து (National Scholarship Portal - (https://scholarship.gov.in) கல்வி உதவித்தொகை படிவத்தை புதுப்பித்தல் (Renewal) செய்து இணைப்பில் பூர்த்தி செய்து 31.10.2026க்குள் விண்ணப்பித்திட வேண்டும். இணையதளத்தில் பூர்த்தி செய்யப்பட்டுள்ள மாணவ/மாணவிகளின் விண்ணப்பங்களை தத்தம் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சரிபார்ப்பதற்கான (புதுப்பித்தல் - for Renewal) கடைசி நாள்: 15.11.2026.மேலும், இத்திட்டத்திற்கு 2026-27-ஆம் ஆண்டிற்கு புதிதாக விண்ணப்பிக்க விரும்பும் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் பயிலும் தகுதியுள்ள மாணவ/மாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கான தேதி NSP இணையத்தில் அறிவிக்கப்படும்.மேலும், இத்திட்டம் தொடர்பான கூடுதல் விபரங்கள் அறிந்திட National Scholarship portal (https://scholarship.gov.in) மற்றும் மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைதளத்தில் (https://socialjustice.gov.in) அறிந்துக் கொள்ளலாம். தகுதியான மாணவ/மாணவியர்கள் இத்திட்டத்தில் விண்ணப்பித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.