தீபாவளி விற்பனை களைகட்டியது: ராஜபாளையம் பஜாரில் அலைமோதிய மக்கள் கூட்டம்!
தீபாவளி பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், ராஜபாளையம் நகரின் முக்கிய கடைவீதிகளில் தீபாவளி விற்பனை களைகட்டியுள்ளது. புத்தாடைகள், பட்டாசுகள் மற்றும் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் பஜார் பகுதிகளில் குவிந்தனர்.
ராஜபாளையத்தைச் சுற்றி 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளதால், தீபாவளி மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைக் காலங்களில் அப்பகுதி மக்கள் பொருட்கள் வாங்க ராஜபாளையம் நகருக்கே அதிகளவில் வருகின்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக மதுரை ரோடு, மெயின் பஜார், காந்தி சிலை, முடங்கியார் ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது. சாலையோரங்களில் ஏராளமான தற்காலிகக் கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
நேற்று மதியம் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் வழக்கத்தைவிட அதிகமாகக் காணப்பட்டது. இதனால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.
எனவே, தீபாவளிக்கு முந்தைய இரண்டு நாட்களாவது முக்கிய பஜார் பகுதிகளில் இருசக்கர வாகனங்கள் மட்டும் வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றங்களை ஏற்படுத்தி, நெரிசலைக் கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0
Leave a Reply