25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

May 11, 2026

விருதுநகர் மாவட்டத்தின் இரு கண்கள் - கல்விக்கு ‘திசை’..வாழ்விற்கு ‘உயிர்’! திசை’யால் உயரும் கல்வி..‘உயிர்’ பெறும் வாழ்வாதாரம்.

ஒரு சமூகத்தின் உண்மையான வலிமை அதன் விளிம்புநிலை மக்களின் முன்னேற்றத்தில்தான் அடங்கியுள்ளது. அந்த வகையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தி வரும் “திசை” மற்றும் “உயிர்” ஆகிய இரண்டு சிறப்புத் திட்டங்கள், மாவட்டத்தின் பின்தங்கிய நிலையிலுள்ள மக்களின் சமூக மற்றும் பொருளாதார வாழ்வில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகவும், எதிர்கால நம்பிக்கைக்கு வலுசேர்க்கும் அடித்தளமாக அமைந்துள்ளன."விருதுநகர் மாவட்ட ஆட்சியரின் தொலைநோக்கு பார்வையுடன், சமூகப் பொறுப்பு நிதி (CSR) மற்றும் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி(District Mineral Fund) யைப் பயன்படுத்தி இத்திட்டங்கள் மிகச் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திசை: கனவுகளைத் துரத்தும் மாணவர்களுக்கான கலங்கரை விளக்கம்பள்ளிப் படிப்பை இடைநிறுத்திய மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பதே ‘திசை’ திட்டத்தின் பிரதான நோக்கம். கடந்த ஜனவரி 10-ஆம் தேதி தொடங்கப்பட்ட இத்திட்டம், குறுகிய காலத்திலேயே வியக்கத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது கள ஆய்வு மற்றும் மாணவர்களின் புதிய பாதை:   சுமார் 662 மாணவர்களுடன் அதிகாரிகள் நேரில் கலந்துரையாடினர். அதிகாரிகள் நேரடியாகக் களமிறங்கி, மாணவர்களின் சூழலை நேரில் கேட்டறிந்ததோடு, அவர்களது கல்வித் தடைகளை நீக்க ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை வழங்கினர்.    இதன் விளைவாக 78 மாணவர்கள் மீண்டும் பள்ளிகளிலும், 14 பேர் தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் தங்களது கல்விப் பயணத்தைத் தொடர்ந்துள்ளனர்.சிகரம் தொடு: தேசியத் தேர்வுகளுக்கான சிறப்புப் பயிற்சி:       அரசுப் பள்ளி மாணவர்கள் ஐ.ஐ.டி (IIT) போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் நுழைய ஏதுவாக ‘வெற்றிப் பள்ளி’ பயிற்சி முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதில் JEE தேர்வில் 11 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். NEET தேர்விற்காக 407 மாணவர்களின் கட்டணத்தை மாவட்ட நிர்வாகமே ஏற்று, அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சிகளையும் வழங்கியுள்ளது.மேலும், 1,656 மாணவர்கள் ஆண்டு முழுவதும் நடைபெறும் கட்டமைக்கப்பட்ட பயிற்சித் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர்.தொடர் கண்காணிப்பு:   மாணவர்களின் முன்னேற்றத்தை ஓராண்டு முழுவதும் கண்காணிக்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிரத்யேகக் ‘கல்வி கட்டுப்பாட்டு அறை’ அமைக்கப்பட்டு, வழிகாட்டுதல் ஆசிரியர்கள் மூலம் ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.உயிர்: தற்சார்பு வாழ்வாதாரத்திற்கான உன்னத முயற்சி பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி குழந்தைகளைப் பராமரிக்கும் தாய்மார்கள் மற்றும் சட்டத்துடன் முரண்படும் நிலையில் உள்ள (Children in Conflict with Law) இளஞ்சிறார்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் ‘உயிர்’ திட்டம் (தொடக்கம்: ஜனவரி 13) வடிவமைக்கப்பட்டுள்ளது. இளஞ்சிறார்களுக்கான மறுவாழ்வு:கடந்த 2026 மார்ச் 5 மற்றும் 14 ஆகிய தேதிகளில் நடைபெற்ற விழாக்களில், சட்டத்திற்கு முரண்பட்ட இளஞ்சிறார்களின் பொருளாதார முன்னேற்றத்திற்காகத் தையல் இயந்திரங்கள், சமையல் உபகரணங்கள் உள்ளிட்ட தொழில் கருவிகள் வழங்கப்பட்டன.மாவட்ட கனிம அறக்கட்டளை நிதியிலிருந்து (DMFT) ரூ.1,71,315 மதிப்பிலான உபகரணங்கள் இதற்காக ஒதுக்கப்பட்டன.உயிர் துரித உணவகம்:இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு ‘உயிர் துரித உணவகம்’ (UYIR Fast Food) அமைப்பதற்கான நடமாடும் தள்ளுவண்டி உணவகங்கள் வழங்கப்பட்டுள்ளன. இது பாதிக்கப்பட்ட இளைஞர்கள் சுயதொழில் மூலம் கௌரவமான வாழ்வைப் பெற வழிவகை செய்கிறது.திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள்: 100 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு நடத்தப்பட்ட நேர்காணலின் அடிப்படையில், தையல் பயிற்சிக்காக 36 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் 10 பேர் பயிற்சியை முடித்துள்ளனர். பேக்கரி மற்றும் குக்கீஸ் தயாரிப்பு பயிற்சியில் 10 பேர் சொந்தமாகத் தொழில் தொடங்கத் தயாராக உள்ளனர்.உயிர் டிப் டீ:  சதுரகிரி மலைப்பகுதி பழங்குடியின மக்கள் தயாரிக்கும் தேயிலைப் பொருட்களை “உயிர் டிப் டீ” என்ற பெயரில் சந்தைப்படுத்தும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 30 பேர் இதில் பயிற்சி பெற்றுள்ளனர்.புதிய வாய்ப்புகள்:  ஆட்டோ ஓட்டுநர் பயிற்சியின் மூலம் ஓட்டுநர் உரிமம் பெற்றுத் தரப்பட்டுள்ளது. தற்போது மானிய விலையில் ஆட்டோ வழங்குவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் ஒரு இளைஞரும், ஒரு ஆதரவற்ற இளம் பெண்ணும் முதற்கட்டப் பயனாளிகளாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.தேசிய அளவில் அங்கீகாரம்:        விருதுநகர் மாவட்டத்தின் இந்தத் தற்சார்பு மற்றும் கல்வி மேம்பாட்டுத் திட்டங்கள் அண்மையில் புதுடெல்லியில் நடைபெற்ற தேசியக் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டு, பலரது பாராட்டுகளையும் பெற்றுள்ளன.மாவட்ட நிர்வாகத்தின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதால், கடந்த நான்கு மாதங்களில் ‘திசை’ மற்றும் ‘உயிர்’ திட்டங்கள் விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் நம்பிக்கையை விதைத்துள்ளன.  இத்திட்டங்கள் வெறும் அரசுத் திட்டங்களாக மட்டுமல்லாமல், சமூகத்தின் அடித்தட்டு மக்களின் தன்னம்பிக்கையை மீட்டெடுத்து, அவர்களைத் தற்சார்புப் பாதையில் அழைத்துச் செல்லும் ஒரு உந்துசக்தியாகத் திகழ்கிறது.மாவட்ட முதன்மை நீதிபதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினால், இத்திட்டங்கள் விளிம்புநிலை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது.குறிப்பாக இளஞ்சிறார்கள் மற்றும் பெண்களின் மறுவாழ்விற்கு ஒரு புதிய பாதையை அமைத்துக் கொடுத்துள்ளன. இத்தகைய ஒருங்கிணைந்த அணுகுமுறை சமூக மாற்றத்திற்கான ஒரு வலிமையான பங்களிப்பை வழங்குகிறது. "தனிமனித முன்னேற்றமே சமூகத்தின் முன்னேற்றம் என்ற கோட்பாட்டிற்கு வலுசேர்க்கும் இத்திட்டங்கள், வரும் காலங்களில் இன்னும் பல எளிய மக்களின் வாழ்வில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கித் தரும்.”உயிர் திட்டத்தின் கீழ் பயன் பெற்ற பயனாளி தெரிவிக்கையில் எனது பெயர் மாரீஸ்வரன். நான் விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை ராம் நகரில் பழங்குடியினர் குடியிருப்பில் வசித்து வருகிறேன்.  முன்னதாக நான் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தேன். தற்போது மாவட்ட நிர்வாகத்தின் உயிர் திட்டத்தின் கீழ் எனக்கு பேட்ச் ஓட்டுநர் உரிமை இலவசமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. மேலும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எனக்கு புதிய ஆட்டோவினை வழங்க இருக்கிறார்கள்.   இந்த ஆட்டோ மூலம் என் வாழ்வாதாரத்தை நான் உயர்த்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. இதற்காக மாவட்ட நிர்வாகத்திற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.கைப்பேசி எண்: 88381 01609திசை திட்டத்தின் கீழ் உயர்கல்வி போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் தெரிவிக்கையில்:          நாங்கள் 12 ஆம் வகுப்பு முடித்துவிட்டு, அருகில் உள்ள ஏதாவது ஒரு கல்லூரிக்கு சென்று பயிலாம் என்று நினைத்திருந்தோம்.மேலும் மதுரை, சென்னை ஆகிய நகரங்களில் உள்ள அரசு கல்லூரிகளில் பயில்வதற்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் பயில்வதற்கும் மிகவும் சிரமம் என்றும், அதற்காக செலவு நிறைய ஆகும் என்றும் ஒரு எண்ணம் இருந்தது.         ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் திசை என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் எங்களுக்கு நீட் மற்றும் ஜே.இ.இ தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன. இதில் நீட் நுழைவுத் தேர்வுக்கு சுமார் 310 மாணவர்கள் நீட் நுழைவுத் தேர்வை எழுதியுள்ளனர்.         ஜே.இ.இ நுழைவுத் தேர்வுக்கு 79 மாணவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு, முதன்மை தேர்வில் 11 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தற்போது தனியார் போட்டித்தேர்வு மையத்தில் மேல்நிலைத் தேர்வுக்காக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்கான செலவுகள் அனைத்தையும் மாவட்ட நிர்வாகமே வழங்கி வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் எங்களுக்கு இலவசமாக வழிகாட்டுதல் மற்றும் தொடர்ச்சியான பயிற்சிகள் வழங்கி வரும் மாவட்ட நிர்வாகத்திற்கு எங்கள் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம் என தெரிவித்தனர்.

May 09, 2026

கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களை வெப்பத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க விவசாயிகள் உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் அறிவுறுத்தல்.

விருதுநகர் மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், பயிர்களை வெப்பத்தின் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது குறித்து விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.மாவட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெல், மக்காச்சோளம் பயறு வகைள், எள், நிலக்கடலை, காய்கறிகள், மலர்கள் மற்றும் பழப்பயிர்களில் கோடை வெப்பம் காரணமாக மலர் உதிர்தல், காய் பிடிப்பு குறைதல் மற்றும் கருகல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க விவசாயிகள் கீழ்க்கண்ட மேலாண்மை முறைகளைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.நீர் மேலாண்மை:பயிர்களுக்குச் சொட்டு நீர்ப்பாசனம் அல்லது தெளிப்பு நீர்ப்பாசன முறையைப் பயன்படுத்த வேண்டும். நீர் ஆவியாவதைத் தவிர்க்க அதிகாலை அல்லது மாலை வேளைகளில் மட்டுமே நீர் பாசனம் செய்தல் வேண்டும்.பண்ணைப் பணிகள்:அதிக வெப்பம் நிலவும் நேரங்களான காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை பண்ணை வேலைகளையும், புதிய நாற்று நடும் பணிகள் மேற்கொள்வதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும்.கோடை உழவு:கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் நிலத்தில் உள்ள பூச்சியின முட்டைகளை அழிக்கவும், மழைநீரைச் சேமித்து, மண்ணின் ஈரப்பதம் பாதுகாக்கப்படும்.நிழல் வலை மற்றும் மூடாக்கு:நாற்றங்கால் மற்றும் காய்கறிப் பயிர்களைப் பாதுகாக்க நிழல் வலைக் கூடாரங்களை அமைக்கலாம். செடிகளின் அடிப்பகுதிகளில் காய்ந்த இலைகள், தென்னை நார்க்கழிவு அல்லது பாலித்தீன் தாள்களைக் கொண்டு மூடாக்கு அமைப்பதன் மூலம் மண் ஈரப்பதம் காக்கப்படும். இலைவழித் தெளிப்பு:வெப்ப அழுத்தத்தைக் குறைக்க 1 சதவீத பொட்டாசியம் குளோரைடு (KCL) கரைசலை இலைகளின் மேல் தெளிப்பதன் மூலம் நீர் ஆவியாதலைக் குறைத்து பயிர்களை பாதுகாக்கலாம்.இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கோடை வெயிலினால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தவிர்த்து, நிலையான மகசூலைப் பெற முடியும் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 09, 2026

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2026-2027 கல்வியாண்டுக்கான 6, 7 மற்றும் 8 வகுப்பு பயிலும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள்.

பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் விளையாட்டுத் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன.இதனடிப்படையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக 2026-2027 கல்வியாண்டுக்கான 6, 7 மற்றும் 8 வகுப்பு பயிலும் பள்ளி, மாணவ, மாணவியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பங்கள் வெளியிடப்பட்டுள்ளன.விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ / மாணவியர்கள் முதன்மை நிலை விளையாட்டு மைய சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தை 08.04.2026 -ஆம் தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.விளையாட்டு விடுதிக்கான ஆன்லைன் வாயிலான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க கடைசி நாள் 11.05.2026 அன்று மாலை 6.00 மணி ஆகும். முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர்வதற்கான நேரடி மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகின்ற 12.05.2026 அன்று காலை 7.00 மணியளவில் நடைபெற உள்ளது.மாணவியர்களுக்கான டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கத்திலும், மாணவ மாணவியர்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ் AGB நீச்சல் குள வளாகம், வேளச்சேரியிலும், மாணவ மாணவியர்களுக்கான வில்வித்தை, சைக்கிளிங், இறகுப்பந்து, மேசைப்பந்து மற்றும் கனோயிங் (மாணவர்கள் மட்டும்), கையாக்கிங் (மாணவர்கள் மட்டும்) தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், செங்கல்பட்டிலும் 12.05.2026 அன்று காலை 7.00 மணி முதல் நடைபெற உள்ளது.  நேரடி மாநில அளவிலான தேர்வில் சிறப்பாக செயல்பட்டவர்கள் விவரம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in எனும் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மற்ற விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஆகவே பள்ளி மாணவ மாணவியர்கள் முதன்மை நிலை விளையாட்டு மைய தேர்வு போட்டிகளில் கலந்து கொண்டு பயனடையுமாறு என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 09, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் 11.05.2026 முதல் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியர் அவர்கள் தகவல்.

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026, இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டு தேர்தல் நடவடிக்கைகள் முடிந்து தற்போது தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதைத் தொடந்து 11.05.2026 முதல் பிரதி வாரம் திங்கட்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் முகாம் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கில் நடைபெறும்.பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அளித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 09, 2026

தமிழ்நாட்டில் 97.17 விழுக்காடு பெற்று இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தில் ஒன்பதாவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் மார்ச் - ஏப்ரல் 2026ல் நடைபெற்ற மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்தேர்வுகள், விருதுநகர் வருவாய் மாவட்டத்தில் 219 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் 99 தேர்வு மையங்களில் 9,731 மாணவர்களும், 11,599 மாணவியர்களுமாக மொத்தம் 21,330 மாணவர்கள் தேர்வு எழுதினார்கள்.அதில் 08.05.2026 அன்று வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் 9,297 மாணவர்களும், 11,430 மாணவியர்களும் என மொத்தம் 20,727 மாணவர்கள் தேர்ச்சி பெற்று, தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட 0.53 விழுக்காடு கூடுதலாக பெற்று 97.17 விழுக்காடு பெற்று இந்தாண்டு தேர்ச்சி சதவீதத்தில் ஒன்பதாவது மாவட்டமாக இடம் பெற்றுள்ளது.மேலும் அரசுப்பள்ளிகளில் 20. அரசு உதவிபெறும் பள்ளிகளில் 23 பதின்மப் பள்ளிகளில் 37 மொத்தமாக 80 பள்ளிகள் 100 விழுக்காடு தேர்ச்சியை பெற்றுள்ளது.வேதியியல் பாடத்தில் 10 மாணவர்கள், கணித பாடத்தில் 14 மாணவர்கள், கணினி அறிவியல் பாடத்தில் 170 மாணவர்கள், உயிரியல் பாடத்தில் 07 மாணவர்கள், தாவரவியல் பாடத்தில் 02 மாணவர்கள்,கணினி பயன்பாடுகள் பாடத்தில் 80 மாணவர்கள், கணக்குப் பதிவியல் பாடத்தில் 52 மாணவர்கள், வணிகவியல் பாடத்தில் 23 மாணவர்கள், வரலாறு பாடத்தில் 40 மாணவர்கள், பொருளியல் பாடத்தில் 07 மாணவர்கள், வணிக கணிதம் பாடத்தில் 11 மாணவர்கள், பிரெஞ்ச் பாடத்தில் 07 மாணவர்கள், என மொத்தம் 423 மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்கள் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 02, 2026

விருதுநகர் மாவட்டத்தில் 7 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் தீவிரம்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 23.04.2026  அன்று நடைபெற்று, பதிவான வாக்குகள் அனைத்தும் 04.05.2026 அன்று விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரி (VSVNPC) மையத்தில் எண்ணப்பட உள்ளன.இதற்கான முன்னேற்பாடு பணிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் / மாவட்ட தேர்தல் அலுவலர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா, இ.கா.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (01.05.2026) நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 202-ராஜபாளையம், 203-ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி), 204-சாத்தூர், 205-சிவகாசி, 206-விருதுநகர், 207-அருப்புக்கோட்டை மற்றும் 208-திருச்சுழி ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணி விருதுநகர் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற உள்ளது.வாக்கு எண்ணும் மையத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக ஒதுக்கப்பட்ட அறைகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM) வைக்கப்பட்டுள்ள 'காப்பு அறைகள்' (Strong Rooms) முதல் வாக்கு எண்ணும் மேஜைகள் வரை அனைத்தும் *சிசிடிவி (CCTV)* கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். தடையற்ற மின்சாரத்தை உறுதி செய்ய தேவையான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, வாக்கு எண்ணும் மையத்தில் சுற்றி மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 4 அடுக்குப் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.வாக்கு எண்ணும் மையத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படும் முகவர்களுக்கு இந்த ஆண்டு முதன்முறையாக QR கோடுடன் கூடிய  பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. உரிய அடையாள அட்டை இல்லாத எவரும் மையத்திற்குள் நுழைய அனுமதி இல்லை. வாக்கு எண்ணும் மையத்திற்குள் செல்போன்கள், ஐபேட், லேப்டாப், தீப்பெட்டி, எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை எடுத்துச் செல்ல வேட்பாளர்களுக்கும், முகவர்களுக்கும் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு தலா 14 மேஜைகள் வீதம் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு மேஜைக்கும் வேட்பாளரால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முகவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார். முகவர்கள் காலை 6:00 மணிக்கே மையத்திற்கு வருகை தந்து தங்களின் வருகையைப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.கல்லூரியைச் சுற்றியுள்ள 100 மீட்டர் பகுதி நடைபாதை மண்டலமாக (Pedestrian Zone) மாற்றப்பட்டுள்ளது. இப்பகுதிக்குள் வாகனங்கள் நுழைய அனுமதி இல்லை. கோடை வெப்பத்தைக் கருத்தில் கொண்டு, முகவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு போதிய குடிநீர், நிழற்கூடங்கள், கழிவறை வசதிகள் மற்றும் அவசர கால மருத்துவக் குழுக்கள் ஆம்புலன்ஸ் வசதியுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.ஊடகவியலாளர்கள் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள தனி ஊடக மையம் (Media Centre) அமைக்கப்பட்டுள்ளது. மேலும், செய்தியாளர்கள் தடையின்றிப் பணியாற்றத் தேவையான வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் முடிவுகள் உடனுக்குடன் பதிவேற்றம் செய்யப்படும்.ஒவ்வொரு தொகுதிக்கும் தனித்தனியாக வாக்குகள் எண்ணப்படும் அறைகள் (Counting Halls) தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை பணியை எவ்வித புகார்களுக்கும் இடமின்றி, அமைதியான முறையிலும் ஜனநாயக ரீதியிலும் நடத்தி முடிக்க அனைத்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S, அவர்கள் கேட்டுக்கொண்டார்.இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) திரு.சோமசுந்தர சீனிவாசன், தேர்தல் வட்டாட்சியர் திரு.சீனிவாசன், மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

May 01, 2026

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களாக இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு அரசு நிறுவனமான தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET), பாரத்நெட் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களுக்கு உயர்தர இணைய சேவைகளை வழங்கும் நோக்கில் மாவட்ட அளவிலான தொழில் பங்கீட்டாளர்களை (District Level Franchisee Partners- DLFP) தேர்வு செய்யும் பணிகளை முன்னெடுத்து வருகிறது.இதற்காக 01.01.2026 அன்று வெளியிடப்பட்டிருந்த அறிவிப்பின் அடிப்படையில் பல்வேறு பகுதிகளிலிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, அதிகமான விண்ணப்பதாரர்கள் பங்கேற்கும் வகையில் நிதி தகுதி விதிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.முன்னதாக விண்ணப்பதாரர்களுக்கு கடந்த மூன்று நிதியாண்டுகளின் சராசரி ஆண்டு வருவாய் ₹50 லட்சம் மற்றும் அதற்கு மேல் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்த நிலையில், தற்போது அது ₹20 லட்சம் மற்றும் அதற்கு மேல் என தளர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் பாரத்நெட் திட்டப் பணிகள் தற்போது சுமார் 96% வரை நிறைவடைந்துள்ளன. மாநிலத்தின் 37 மாவட்டங்களிலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது இரண்டு தொழில் பங்கீட்டாளர்களை தேர்வு செய்து, கிராமப்புறங்களில் தடையில்லா இணைய சேவைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒவ்வொரு மாவட்டமும் வருவாய் உட்கோட்டம் (Revenue Division) அடிப்படையில் 2 முதல் 6 வட்டாரங்களை கொண்ட துணைப் பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, அந்தந்த துணைப் பிரிவுகளுக்கு தொழில் பங்கீட்டாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.ஒரு விண்ணப்பதாரர் அதிகபட்சம் இரண்டு மாவட்டங்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார். அந்த மாவட்டங்கள், விண்ணப்பிக்கும் நிறுவனம் அல்லது தனிநபர் செயல்படும் மாவட்டம் மற்றும்/அல்லது அவர்களின் முகவரி அமைந்துள்ள மாவட்டமாக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்படும் தொழில் பங்கீட்டாளர்களின் முக்கிய பொறுப்புகளில் Optical Fibre Cable (OFC) மற்றும் Optical Network Terminal (ONT), பராமரிப்பு தடையில்லா இணைய சேவை வழங்குதல், சேவை தடைகளை விரைவாக சரிசெய்தல், Service Level Agreement (SLA) விதிமுறைகளை பின்பற்றுதல் மற்றும் சேவை தரத்தை பராமரித்தல் ஆகியவை அடங்கும்.விண்ணப்ப பதிவு நடைமுறை TANFINET இணையதள போர்டல் (https://tanfinet.tn.gov.in) மூலம் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அறிவிப்பு மற்றும் தொடர்புடைய ஆவணங்களைப் பதிவிறக்கம் செய்து, தேவையான ஆவணங்களை பதிவேற்றம் செய்து, தாங்கள் செயல்பட விரும்பும் துணைப் பிரிவை (Division) தேர்வு செய்ய வேண்டும்.ஒவ்வொரு துணைப் பிரிவுக்கும் ₹25,000/- (திரும்பப்பெறக்கூடிய, வட்டியில்லா) விண்ணப்ப பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். தேர்வு செய்யப்படும் பங்கீட்டாளர்கள், ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ₹2,00,000/- பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்திய பின்னர் TANFINET தலைமையகத்தால் பணி ஆணை (Work Order) வழங்கப்படும்.மேலும், ஏற்கனவே விண்ணப்பித்து கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் அதே வருவாய் உட்கோட்டத்திற்கு மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. அவர்களின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளன. ஆனால் அவர்கள் அதே மாவட்டத்தில் உள்ள பிற துணைப் பிரிவுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.இந்த விண்ணப்பங்களுக்கான TANFINET இணையதள போர்டல் 10.03.2026 முதல் 04.05.2026 வரை மீண்டும் செயல்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு 044- 24965595 என்கிற உதவி மைய எண்ணை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 29, 2026

கோடை காலங்களில் திரவ உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.

 “தற்பொழுது கோடை காலம் துவங்கிவிட்டதால் பொதுமக்களுக்கு பதநீர், இளநீர், கம்மங்கூல், பழரசம், சர்பத், கரும்பு ஜுஸ், கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) மில்க் மோர் மற்றும் இவை போன்ற பல திரவ ஆகாரங்களின் தேவைகள் அதிகமாகும். மேலும் இவற்றின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுப்புது உணவு வணிகர்கள் உருவாக வாய்ப்புகள் அதிகம் உள்ளது.மேலும் திரவ ஆகாரங்கள் பெரும்பாலும் தண்ணீர் அடிப்படையிலானது என்பதினால் தொற்றுநோய்களின் தாக்கத்திற்கு சிறிது வாய்ப்பு உள்ளது. எனவே மேற்கூறிய திரவ ஆகாரங்களை மிகவும் பாதுகாப்பாக உற்பத்தி செய்து, அவற்றை பாதுகாப்பான சூழலில் நுகர்வோர்களுக்கு விற்பனை செய்ய வேண்டிய கடமை உணவு வணிகர்களுக்கு உள்ளது.எனவே, கோடை கால உணவினை உற்பத்தி செய்து விற்பனை செய்யும் வணிகர்கள் பின்வரும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.வணிகர்களின் கவனத்திற்கு:1. அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழை (https://foscos.fssai.gov.in) என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழைப் பெற்ற பின்னரே உணவு வணிகம் ஆரம்பிக்க வேண்டும்.2. பழரசம், சர்பத், கம்மங்கூல் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவம் நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தினை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத் துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது NABL அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.3. உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும்.4. திரவ ஆகாரங்களைத் தயாரித்து, அதற்கேற்ற வெப்பநிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும், கரும்பு ஜுஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களைத் தயாரித்த பின்னர் 2 ½ மணி நேரத்திற்கும் மேலாக இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூல் போன்ற உணவுப் பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதமானால், அவற்றை அப்புறப்படுத்திடல் வேண்டும்.5. திரவ ஆகாரங்களைத் திறந்த நிலையில் ஈக்கள் மற்றும் பூச்சிகள் மொய்க்கும் வகையில் விற்பனை செய்யக்கூடாது. 6. திரவ ஆகாரங்களை குளிரூட்ட உணவுத் தர “ஐஸ் கட்டியைப்” பயன்படுத்த வேண்டும். உணவுத் தர ஐஸ் கட்டி செயற்கை வண்ணம் கலக்காமலும், உணவுத் தரமில்லாத ஐஸ் கட்டி “நீல நிறத்திலும்” இருக்கும். 7. ஐஸ் பெட்டிகள் கழுவி சுத்தமாக இருக்கிறதா என உறுதி செய்து ஐஸ்கட்டிகள் சுகாதாரமான முறையில் கையாளப்படுகிறதா என்பதை உரிமையாளர் கவனிக்க வேண்டும்.8. ஐஸ் கட்டிகளை வைக்கோல் சணல் பை போன்றவை கொண்டு சுகாதாரமற்ற முறையில் மூடி வைத்திருத்தல் கூடாது.9. பழரசம் தயாரிக்கப் பயன்படும் பழங்கள் புதியதாகவும் தரமானதாகவும் இருத்தல் வேண்டும். அழுகிய பழங்களை பழரசம் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடாது. 10. ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயற்கை நிறமி கலந்த சர்பத், கூல்டிரிங்ஸ்(Carbonated Drinks)  போன்றவை தவிர உடனுக்குடன் பரிமாறும் வகையில் தயாரிக்கப்படும் எந்த திரவ உணவுப் பொருளிலும் செயற்கை வண்ணங்களைக் கலக்கக்கூடாது. 11. திரவ ஆகாரங்களைத் தயாரிப்பில் ஈடுபடும் பணியாளர்கள் மற்றும் கையாளும் பணியாளர்கள் அனைவரும் தன்சுத்தம் பேணி கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்திருக்க வேண்டும். அவர்கள் “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்” என்பதிற்கு மருத்துவச் சான்று வைத்திருக்க வேண்டும்.12. பதநீரைக் கொள்முதல் செய்து அது கெட்டுப்போகும் முன்னர் விற்பனை செய்திடல் வேண்டும். குறிப்பாக பதநீர் இறக்கிய 6-7 மணி நேரத்திற்குள் விற்பனை செய்திடல் வேண்டும்.13. சுத்திகரிக்கப்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் பாட்டில்களை வெயில் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.14. கடையும் அதன் சுற்றுப்புறமும் ஈக்கள், பூச்சிகள் இல்லாமலும் குப்பைகள் இல்லாமலும் சுகாதாரமாக பராமரிக்கப்பட்டிருக்க வேண்டும்.15. கூழ் மோர், பால், தண்ணீர் போன்றவை துருப்பிடிக்காத சுத்தமான பாத்திரங்களில் வைத்திருக்கப்பட வேண்டும்.16. பழங்கள் சூரியஒளி/வெப்பம் படும் வகையில் இருந்தால் தரமும் சுவையும் மாறுபட்டு சீக்கிரம் அழுகிவிடும் தன்மையுடையவை என்பதால் பழங்களை சூரிய ஒளிஃவெப்பம் படாதவாறு, குளிர் பெட்டி (Chill box)) அல்லது குளிர்சாதன பெட்டியில் வைத்திருக்கவேண்டும்.17. பழரசம் குளிர்பானங்களில் உபயோகப்படுத்தப்படும் சர்க்கரை சர்க்கரை பாகு முதலியவை தண்ணீர் மற்றும் தூசி படாதவாறு மூடி வைத்து தனியான தேக்கரண்டி கொண்டு சுகாதாரமான முறையில் கையாளப்படவேண்டும்.18. சாறு எடுக்க பயன்படுத்தும் மிக்ஸி, ஜுசர், வடிகட்டி போன்றவை துருபிடிக்காமலும் தூய்மையாகவும் இருக்கவேண்டும்.19. பழரசம் குளிர்பானம் மோர் போன்றவற்றை பாத்திரங்களிலிருந்து கைப்படாத வண்ணம் எடுக்க, நீளமான கரண்டி உபபோகப்படுத்துவதை உறுதி செய்து கொள்ளவும்.20. பழச்சாறு, குளிர்பானங்களை பருக பயன்படுத்தும் ஸ்டராக்கள் (Straw) உணவுத் தரம் வாயந்ததாகவும் தூசி படாமலும் ஈக்கள் மொய்க்காமலும் மூடி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.21. திரவ ஆகாரங்களை உணவு தரமற்ற மற்றும் மறுசுழற்சி (Recycled)  செய்யப்பட்ட மற்றும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்களிலும், பைகளிலும் வழங்கக்கூடாது. 22. குப்பைகளை போட மூடியுடன் கூடிய குப்பை தொட்டிகளை உபயோகிக்க வேண்டும்.நுகர்வோர்களின் கவனத்திற்கு:1. கடையில் உணவு பாதுகாப்பு உரிமம் உள்ளதா என்பதை உறுதி செய்யவும். அவ்வாறு உணவு பாதுகாப்பு உரிமம் இல்லையெனில், அக்கடையில் எவ்வித உணவுப் பொருளையும் வாங்கக்கூடாது.2. பழரசம்/ப்ரூட் சாலட் செய்ய பயன்படுத்தும் பழங்கள் அழுகும் நிலையில் இருந்தால் அவைகளை தவிர்க்கவும்.3. சர்பத் மற்றும் குளிர்பானங்களில் அங்கீகரிக்கப்படாத நிறங்கள் சேர்க்கபட்டிருந்தால், அதனை வாங்குவதை தவிர்க்கவும்.4. குளிர் பானங்கள் பழரசங்கள் நேரடியாக குளிர்பெட்டியிலிருந்து பெறுவது நல்லது.  உணவு வணிகர் ஐஸ்கட்டிகள் போட்டு தரும் குளிர்பானங்களையும், பழச்சாறுகளையும் வாங்கும் முன்னர் ஐஸ்கட்டிகள் உணவுத் தரம் வாய்ந்தவையா என்பதை உறுதி செய்துகொள்ளவும். 5. திறந்த நிலையில் உள்ள எந்த வகை திரவ ஆகாரங்களையும் நுகர்வோர் தவிர்க்க வேண்டும்.6. நுகர்வோர்கள் கோடை காலத்தில் அதிக அளவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் மற்றும் பாதுகாப்பான திரவ ஆகாரங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். 7. தங்களது கலோரியின் தேவைக்குட்பட்டு பாட்டிலில் அடைக்கப்பட்ட கார்பனேற்றம் செய்யப்பட்ட கூல்டிரிங்ஸ் (Carbonated Drinks) போன்றவற்றை மிகவும் குறைவான அளவுடன் எடுத்துக்கொண்டு பழரசம் இளநீர் பதநீர் கரும்பு ஜுஸ் கூழ் வகைகள் போன்ற இயற்கை திரவ ஆகாரங்களை அதிகளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 8. பொட்டலமிடப்பட்ட திரவ ஆகாரங்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்புத் தேதி காலாவதி நாள் உள்ளிட் அனைத்து லேபிள் விபரங்களும் உள்ளதா என்பதை கவனித்து வாங்க வேண்டும்.9. காரம் மிகுந்த மற்றும் அதிகம் சூடான உணவு வகைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது.10. நுகர்வோர் வாங்கும் திரவ உணவுப் பொருட்களின் தரத்தில் குறைபாடோ அல்லது அவற்றை விற்பனை செய்யும் கடையில் சுகாதாரக் குறைபாடோ காணப்பட்டால், 94440-42322 என்ற உணவு பாதுகாப்புத் துறையின் வாட்ஸ்அப் புகார் சேவை எண்ணிற்கு புகார் அளிக்கலாம் எனவே, கோடை காலத்தில் திரவ ஆகாரங்கள் உற்பத்தி அல்லது விற்பனை செய்யும் உணவு வணிகர்கள் உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைத் தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றும், தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நுகர்வோர்களும் திரவ ஆகாரங்களை கவனித்து வாங்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S,.அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 29, 2026

டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் தொழிலாளர் தினமான 01.05.2026 அன்று ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (FL1) மற்றும் FL2/FL3/FL3A/FL3AA  மற்றும்   FL 11   ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules,1981-ன்படி, தொழிலாளர்  தினமான 01.05.2026 (வெள்ளிக்கிழமை) அன்று  தற்காலிகமாக  மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் ;  (FL1) மற்றும் FL2/FL3/ FL3A/FL3AA  மற்றும் FL11  மதுபான உரிம ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது  The Tamil Nadu Liquor (Licence and Permit)  Rules, 1981-ன்படி  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I  A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Apr 25, 2026

சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 நிறைவடைந்ததை முன்னிட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் 4 அடுக்கு பாதுகாப்புகளுடன் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம், தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல்-2026 (23.04.2026) அன்று நிறைவடைந்ததை முன்னிட்டு, மாவட்டத்தின் 7-சட்டமன்றத் தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் (BU), கட்டுப்பாட்டு இயந்திரங்கள்(CU), விவிபேட் இயந்திரங்களை (VVPAT) பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ச.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர்கள் மற்றும் அனைத்துக் கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் வைக்கப்பட்டு சீல் செய்யப்பட்டது.அதன்படி, இராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் 269 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 538 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 269 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 269 விவிபேட் இயந்திரங்களும், திருவில்லிபுத்தூர் சட்டமன்ற தொகுதியில் 308 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 309 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 309 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 315 விவிபேட் இயந்திரங்களும்,  சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் 291 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 584 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 294 விவிபேட் இயந்திரங்களும்,சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 292 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 292 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 296 விவிபேட் இயந்திரங்களும், விருதுநகர் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 281 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 281 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 281 விவிபேட் இயந்திரங்களும்,  அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 270 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 542 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 271 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 272 விவிபேட் இயந்திரங்களும், திருச்சுழி சட்டமன்ற தொகுதியில் 292 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 586 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 293 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 297 விவிபேட் இயந்திரங்களும், என மொத்தம் 2,001 வாக்குச்சாவடிகளில், வாக்குப்பதிவிற்கு பயன்படுத்தப்பட்ட 3,132 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 2,007 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,024 விவிபேட் இயந்திரங்கள் சட்டமன்றத் தொகுதி வாரியாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு வைப்பறையில் வைத்து சீல் செய்யப்பட்டு, பலத்த காவல்துறை பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது.மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மத்திய பாதுகாப்பு படை, தமிழ்நாடு அரசின் சிறப்பு காவல் படை, ஆயுதப்படை மற்றும் சட்டம் ஒழுங்கு காவலர்கள் என 4 அடுக்குப் பாதுகாப்பு வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.மேலும், இந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும், இதற்கு பாதுகாப்பாக மத்திய பாதுகாப்பு படையினர் 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். வேட்பாளர்கள், வேட்பாளர்களின் முகவர்கள் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையை சிசிடிவி உடன் இணைக்கப்பட்டுள்ள தொலைக்காட்சி பெட்டி வாயிலாக அவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள அறையில் 24 மணிநேரமும் கண்காணித்து கொள்ளலாம்.மேலும், மாவட்ட நிர்வாகம் சார்பில் வாக்கு எண்ணிக்கை மையங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளை 24 மணிநேரமும் கண்காணிக்க உயர் நிலையான அலுவலர்களை ஒருங்கிணைத்து கண்காணிப்பு குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது என மாவட்டத் தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்துள்ளார். 

1 2 ... 5 6 7 8 9 10 11 ... 129 130

AD's



More News