25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 05, 2026

காந்தி ஜெயந்தி தினத்தன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் இயங்கிய 65 கடைகள், உணவு நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் (தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958ன்படி, தேசிய விடுமுறை தினமாகிய காந்தி ஜெயந்தி 03.10.2026 அன்று கடைகள் மற்றும் நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள். மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேற்படி தினத்தில் விடுமுறை அளிக்கப்படாமல் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டுமானால் அவர்களுக்கு வேலையளிப்பவரால் இரட்டிப்பு சம்பளம் அல்லது வேறொருநாளில் மாற்று விடுப்பு அளிக்கப்பட வேண்டும்.அதன்படி, தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த தொழிலாளர்களிடம், கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு VA என்ற படிவத்திலும், உணவு நிறுவனங்களுக்கு IVEE என்ற படிவத்திலும், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களுக்கு XIIA படிவத்திலும் கையொப்பம் பெற்று. அதனை தேசிய பண்டிகை மற்றம் சிறப்பு விடுமுறை தினத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்னர் சம்பந்தப்பட்ட தொழிலாளர் உதவி ஆய்வாளர்களிடம் சமர்ப்பித்திட வேண்டும்.மேற்கண்டவாறு படிவம் அனுப்பாமலும், சட்ட விதிகளை அனுசரிக்காமலும் அவற்றிற்கு முரணாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 34 கடைகள் மற்றும் நிறுவனங்கள், 30 உணவு நிறுவனங்கள் மற்றும் 01 மோட்டார் போக்குவரத்து நிறுவனங்கள் ஆக மொத்தம் 65 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மீது, தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் ( தேசிய பண்டிகை மற்றும் சிறப்பு விடுமுறை தினங்கள்) சட்டம் 1958, தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் மோட்டார் போக்குவரத்துத் தொழிலாளர் சட்டம் 1961 ஆகிய சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், தேசிய விடுமுறை தினமான காந்தி ஜெயந்தி தினத்தன்று பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் அல்லது மூன்று நாட்களுக்குள் மாற்று விடுப்பு சட்டப்படி அனைத்து நிறுவனங்களும் வழங்க வேண்டும். இச்சட்டத்தை மீறுபவர்கள் மீது சம்பளப்பட்டுவாடா சட்டத்தின் கீழ் மதுரை, தொழிலாளர் இணை ஆணையர் நீதிமன்றத்தில் கேட்புமனு தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.காந்தி ஜெயந்தி தினத்தன்று கிராமங்கள் தோறும் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் தொழிலாளர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டு குழந்தை தொழிலாளர் முறை மற்றும் கொத்தடிமை தொழிலாளர் முறை அகற்றுதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு தீpர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 03, 2026

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 158 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 158 ஆவது  பிறந்த தினத்தை முன்னிட்டு,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் இன்று(02.10.2026) அன்னாரது திருவுருவ படத்தினை திறந்து வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, கதர் சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையினை துவக்கி வைத்தார்.அண்ணல் காந்தியடிகளால் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு ஆண்டு முழுவதும் வாழ்வளிக்க வேண்டுமென்ற சீரிய நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது தான் தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம்.கதர் விற்பனை நிலையத்தில் கதர் இரகங்கள், பாலியஸ்டர் இரகங்கள், கண் கவர் பட்டு சேலைகள், பெட்ஷீட்கள், போர்வைகள், மெத்தை, தலையணைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள் மற்றும் துண்டு இரகங்கள் தரமான முறையில் தயார் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன.மேலும் அரசு துறைகளில் பணிபுரியும் அலுவலக உதவியாளர், ஊர்தி ஓட்டுநர்களுக்கு சீருடை வகைகளும் இவை தவிர அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரிய பெருமக்களுக்கு 10 தவணைகளில் திருப்பி செலுத்தும் வகையில் தங்களது மாத ஊதிய அளவிற்கு கதர் இரகங்கள் கடனாகப் பெற்றுக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது.காந்தி ஜெயந்தி மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கதர், பாலியஸ்டர், பட்டுக்கு இரகங்களுக்கு 30 சதவிகிதம் சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.பொது மக்களும், வாடிக்கையாளர்களும், அலுவலக பெருமக்களும், ஆசிரியர்களும், ஊராட்சி மற்றும் நகராட்சி பணியாளர்களும் இந்த அரிய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிக அளவில் கதர் இரகங்கள் வாங்கி பயன்பெறலாம்.விருதுநகர் மாவட்டத்தில் சென்ற ஆண்டு ரூ.16.59 இலட்சம்  மதிப்பிலான கதர் துணிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 2026-ம் ஆண்டிற்கு இம்மாவட்டத்திற்கு ரூ.20 இலட்சம் கதர் விற்பனைக் குறியீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.கிராமப்புற நூற்பாளர்கள் மற்றும் நெசவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை வாய்ப்பு வழங்குவதற்கு அனைவரும் கதர் மற்றும் பட்டு இரகங்களை காதி கிராப்ட்களில் வாங்கி பயன் பெறுவதுடன் தங்கள் நல் ஆதரவையும் தொடர்ந்து வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, விருதுநகர் இரயில் நிலையம் நுழைவு வாயிலில் அமைந்துள்ள அண்ணல் காந்தியடிகளின் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜபூபதி, மாவட்ட குடிசைத்தொழில் ஆய்வாளர்(பொ) திரு.தேவராஜ்,   கதர் வாரிய பணியாளர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Oct 03, 2026

“வெற்றி பயணம்” திட்டத்தின் கீழ் 286 பேருந்துகள் இயக்கம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் விருதுநகர் புதிய பேருந்து நிலையத்தில், வெற்றி பயணம் திட்டத்தினை  (02.10.2026) தொடங்கி வைத்தார்.தமிழ்நாடு அரசின் மகளிர் நலன் சார்ந்த முக்கியத் திட்டங்களில் ஒன்றான வெற்றி பயணம்  தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மண்டலத்தில் விருதுநகர் கிளையில் 49 நகர மற்றும் 7 புறநகர் பேருந்துகளும், சாத்தூர் கிளையில் 37 நகர மற்றும் 9 புறநகர் பேருந்துகளும், அருப்புக்கோட்டை கிளையில் 32 நகர மற்றும் 14 புறநகர் பேருந்துகளும், சிவகாசி கிளையில் 30 நகர மற்றும் 9 புறநகர் பேருந்துகளும், ஸ்ரீவில்லிபுத்தூர்  கிளையில் 29 நகர மற்றும் 3 புறநகர் பேருந்துகளும், இராஜபாளையம்-1 கிளையில் 30 நகர பேருந்துகளும், இராஜபாளையம்-2 கிளையில் 5 புறநகர பேருந்துகளும், காரியாபட்டி கிளையில் 18 நகர மற்றும் 4 புறநகர் பேருந்துகளும், வத்திராயிருப்பு கிளையில் 10 நகர பேருந்துகளும் என மொத்தம் 235 நகர மற்றும் 51 புறநகர் பேருந்துகள் என ஆக மொத்தம் 286 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.ஏற்கனவே மகளிர் பயணத்திட்டத்தின் கீழ் 222 சாதாரணக் கட்டண நகரப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது கூடுதலாக 51 சாதாரணக் கட்டண புறநகர் பேருந்துகள் மற்றும் 13 எக்ஸ்பிரஸ் நகரப் பேருந்துகள் என மொத்தம் 64 பேருந்துகள் வெற்றிப்பயணம் திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் அனைத்து பேருந்து நிலையங்களில் இருந்தும் 368 புறநகர் பேருந்து தனி நடைகள் வெற்றிப்பயணம் திட்டத்தில் கூடுதலாக இயக்கப்படுகிறது.  இதன் மூலம் பெண்கள் மற்றும் திருநங்கைகள் நகர்ப்புற மற்றும் புறநகர் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொள்ளலாம். இத்திட்டம் பெண்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், அன்றாடப் பயணச் செலவைக் குறைப்பதற்கும், கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக எளிதாகப் பயணம் மேற்கொள்வதற்கும் பயனுள்ளதாக அமையும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (செய்தி மக்கள் தொடர்பு துறை) திரு.ச.தங்கவேல், விருதுநகர் மண்டல பொது மேலாளர்(தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம்) திரு.கண்ணன், உதவி மேலாளர்(வணிகம்) திரு.நாகராஜ்,  அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Oct 03, 2026

விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடமலைக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.

அண்ணல் காந்தியடிகள் அவர்களின் 158-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வடமலைக்குறிச்சி கிராமத்தில் (02.10.2026) நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் சிறப்பு பார்வையாளராக பங்கேற்றார்.இக்கூட்டத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 4 கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 2 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பில் கடன் உதவிகளையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு மரக்கன்றுகள் மற்றும் விதைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு இடுபொருட்களையும்  என மொத்தம் 13 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, தமிழக அரசானது அனைத்துத் துறைகளிலும் மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.அரசு என்பது எல்லா மக்களையும் சமமாக பார்த்து அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தரும் ஒரு அமைப்பாகும். இந்த கிராம சபையின் மிக முக்கிய நோக்கம் என்னவென்றால், ஜனநாயக நாட்டில், கிராமத்தில் ஊராட்சி தலைவர்கள், மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், அரசுத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர்கள் இருப்பார்கள். நாங்கள் எல்லாம் மக்களின் பணியாளர்கள். எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அதிகாரம் உங்களிடம் இருந்து பெறப்பட்டது. உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் உள்ளது. அதனடிப்படையில் இந்த கிராமசபை கூட்டத்தின் வாயிலாக இந்த கிராமத்தின் வளர்ச்சிக்கு தேவையான பணிகள் அரசு மூலம் என்னென்ன வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளது, என்னென்ன பணிகள் நடைபெற்று வருகிறது, இன்னும் என்னென்ன தேவைகள் உள்ளது என்பது கிராம மக்கள் வாயிலாக அறிந்து அதை செயல்படுத்துவது தான் இதன் நோக்கம்.கிராமத்திலுள்ள ஒவ்வொருவரும் அக்கறையுடன் திடக்கழிவு மேலாண்மையை முறையாக பின்பற்றி குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதன் மூலம் தூய்மைப் பணியாளர்களின் சுமை குறைவதோடு நமது சுற்றுச்சூழலும் பாதுகாப்பாக அமையும். தற்போது மழைக்காலம் என்பதால் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்கும் வகையில் அனைவரும் வீட்டிலுள்ள தேவையற்ற பொருள்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்வதால்  ஏடிஎஸ் கொசு உற்பத்தி ஆவதை தடுக்க முடியும்.  அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களை அறிந்து பொதுமக்கள் தங்களது கிராமத்தின் அடிப்படைத் தேவைகளையும், வளர்ச்சிக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்த  அரசு உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை ஆய்வு செய்யப்பட்டு பரிசீலனை செய்யப்படும் எனவும், பேருந்து நிறுத்தம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், வாறுகால் சுத்தம் செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.மேலும், பொதுசுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களை பொதுமக்கள் அறிந்து தெரிந்து கொள்ளும் விதமாக விரிவாக எடுத்துரைத்தனர்.அதனை தொடர்ந்து, எய்ட்ஸ் விழிப்புணர்வு தொடர்பான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.இந்த கிராம சபைக் கூட்டத்தில், 01.04.2026 முதல் 30.09.2026 வரையிலான  கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் தூய்மையான  குடிநீர்   விநியோகத்தினை உறுதி செய்வது,   பாரதம்   கிராம  வேலை    உறுதி        மற்றும்  வாழ்வாதார  திட்டம்,  சிறுபாசனங்கள் , குளங்கள்  மற்றும்   ஏரிகள்  புதுப்பித்தல்,   ஜல் ஜீவன்   திட்டம், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மற்றும் இதர பொருட்கள்  குறித்து விவாதிக்கபட்டது.இந்த கிராம சபைக் கூட்டத்தில்,  திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திரு.அ.ஆறுமுகம், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) திரு.முருகானந்தம், மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.கனகராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் (விருதுநகர்) மரு.யசோதாமணி, அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 03, 2026

வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான நபர்கள் மற்றும் இளம்/முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் (Special Drive) மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்திலின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுடையவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி செய்து முதல் முறையாக வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்வது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S.,அவர்கள் தெரிவித்ததாவது ,இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம் (Special Intensive Revision SIR) ஏற்கனவே நிறைவடைந்துள்ள பகுதிகளில், வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம்பெறாமல் விடுபட்டுள்ள தகுதியான நபர்கள் மற்றும் இளம்/முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதற்கான சிறப்பு இயக்கம் (Special Drive) மேற்கொள்ளப்படவுள்ளது.இச்சிறப்பு இயக்கமானது தொடர்ச்சியான வாக்காளர் பட்டியல் புதுப்பித்தல் (Continuous Updation) நடைமுறையின் கீழ் மாவட்ட தேர்தல் அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர்கள் (ERO) மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்படும். அதன்படி வாக்காளர் பட்டியலில் இதுவரை பெயர் இடம்பெறாத தகுதியுடையவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி செய்து முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்ற இளம் வாக்காளர்கள், உரிய நடைமுறையைப் பின்பற்றி தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.மேலும், சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம் நடைபெறும் காலப்பகுதியில் மட்டும் படிவம் 6 உடன் இணைக்கப்பட்ட உறுதிமொழி படிவம் பயன்படுத்தப்படும். சிறப்பு தீவிர சுருக்கத் திருத்தம் அல்லாத காலகட்டங்களில், வாக்காளர் பதிவு விதிகள் 1960-ன் (Registration of Electors Rules 1960) கீழ் பொருந்தக்கூடிய வழக்கமான விண்ணப்பப் படிவங்களே பயன்படுத்தப்படும்.எனவே, இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெறாத தகுதியுடையவர்கள் மற்றும் 18 வயது பூர்த்தி செய்து முதல் முறையாக வாக்களிக்கத் தகுதி பெற்ற இளம் வாக்காளர்கள், தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்து, பெயர் இடம்பெறவில்லை எனில் படிவம் 6 மூலம் உரிய விண்ணப்பத்தை சமர்ப்பித்து வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளலாம் எனவும், கூடுதல் விவரங்களுக்கு, அருகிலுள்ள வாக்காளர் பதிவு அலுவலர் (ERO) அலுவலகத்தை அணுகலாம் எனவும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்கான திருத்தப்பணிகள் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 01, 2026

முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் (30.09.2026) வழங்கப்பட்டது.முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.அதனடிப்படையில், 2026-ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்கான இணையதள முன்பதிவு 06.08.2026 அன்று துவங்கப்பட்டது. இதில் 45,000-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் முன்பதிவு செய்தனர். மாவட்ட, மண்டல மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 வகையான விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு முதல் வில்வித்தை, வுஷூ (Wushu), துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், நீர்விளையாட்டுக்களான கயாக்யிங் (Kayaking) மற்றும் கேனோயிங் (Canoeing) போன்ற புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு மொத்தம் 45 வகையான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன.விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கம் உட்பட மொத்தம் 9 இடங்களில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 30.09.2026 வரை நடத்தப்பட்டது. இந்த விளையாட்டுப் போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளர்கள் என மொத்தம் 20,000-க்கும் மேற்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனர்.மேலும், முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு முதல் பரிசுத்தொகையாக தலா ரூ.3,000/-ம் இரண்டாம் பரிசுத்தொகையாக தலா ரூ.2,000/-ம் மற்றும் மூன்றாம் பரிசுத்தொகையாக தலா -ரூ.1,000/-ம் வழங்கப்பட்டது.விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட்டது. மாவட்ட அளவிலான முதலமமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற வீரர் மற்றும் வீராங்கனைகள் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கு தகுதி பெறுவர்.கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் மாநில அளவில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் 1 தங்கப்பதக்கமும், 3 வெள்ளிப்பதக்கம், 6 வெண்கலப்பதக்கம் என மொத்தம் 10 பதக்கங்களை வென்றுள்ளனர்.இந்த 2026 ஆம் ஆண்டிற்கு மாநில அளவிலான போட்டிக்கு பள்ளிகள் பிரிவில் 308 மாணவர்களும், கல்லூரி பிரிவில் 304 மாணவர்களும், பொதுப்பிரிவில் 148 நபர்களும், அரசு அலுவலர்கள் பிரிவில் 76 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 70 மாற்றுத்திறன் விளையாட்டு வீரர்கள் என மொத்தம் 906 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். வீரர்கள் தங்களது முழுத்திறனை வெளிக்கொணர்ந்து அதிகப்படியான போட்டிகளில் வெற்றி பெற்று உங்களது குடும்பத்திற்கும், நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்திடவேண்டும் என தெரிவிக்கப்பட்டது.நிகழ்ச்சியில், மாவட்ட விளையாட்டு அலுவலர் குமாரபாண்டியன், பயிற்சியாளர்கள், நடுவர்கள் மற்றும் விளையாட்டு வீரர்,வீராங்கனைகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 01, 2026

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில்  நடைபெற்று வரும் டெங்கு ஒழிப்பு, கட்டுப்படுத்தும் பணிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (30.09.2025)  நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுத்திடவும், காய்ச்சல் கண்டறியப்படும் பகுதிகளில் கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள் வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் பாலவநத்தம் ஊராட்சியில் டெங்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில், வாரத்திற்கு ஒருமுறை “தேடுதல் – அகற்றுதல் – அழித்தல்” என்ற முறையில் வீடு மற்றும் சுற்றுப்புறங்களை ஆய்வு செய்து, தேவையற்ற தண்ணீர் தேங்கும் பொருட்களை அகற்றுதல், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள், பாட்டில்கள், உணவுப் பொருள் டப்பாக்கள், பயன்படுத்தப்படாத பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குடிநீர் தொட்டிகள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து, அவற்றை எப்போதும் மூடி வைத்திருக்க வேண்டும். வீட்டின் குளியலறை, மொட்டைமாடி, பூந்தொட்டிகள் மற்றும் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதா என்பதை தொடர்ந்து கண்காணித்து அகற்ற வேண்டும். பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மட்டுமின்றி, தெருக்கள், பொது இடங்கள், பள்ளிகள் மற்றும் சுற்றுப்புறங்களிலும் தூய்மையை பேணுவதில் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.மேலும், காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படும் பகுதிகளில் காய்ச்சல் கண்காணிப்பு, வீடு வீடாக காய்ச்சல் பரிசோதனை, கொசுப்புழு ஒழிப்பு, புகைமருந்து/கொசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துமாறு சுகாதாரத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுத்தப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து, விலையேற்றத்தினை கட்டுப்படுத்திடவும், அனைவருக்கும் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதனை உறுதி செய்திடவும், தரமான பொருட்கள் சரியான அளவுகளில் பொதுமக்களுக்கு பொருட்கள் கிடைப்பதனை உறுதி செய்வதற்காக நியாய விலைக்கடைகள் மூலம் குடிமைப்பொருட்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. அதனை உறுதி செய்திடும் வகையில் பொருட்களின் இருப்பு, தரம், பதிவேடு, விநியோகிக்கப்படும் அளவு போன்றவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.பின்னர், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், டி.மீனாட்சிபுரம் கிராமத்தில் ரூ.35.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூடக் கட்டடத்தினையும், பெரியநாயகிபுரம் ஊராட்சியில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரூ.60.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கலையரங்கத்தினையும், ஒவ்வொரு சட்டமன்றத்திற்கும் 1  மினி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி, செட்டிகுறிச்சி ஊராட்சியில் ரூ.3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மினி விளையாட்டு மைதானத்தின் பணிகள் குறித்தும், செட்டிக்குறிச்சி ஊராட்சியில் உள்ள குழந்தைகள் நல மையத்தினையும், அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.தமிழகத்தின் பசுமைப் போர்வை அளவினை அதிகரித்திடவும், சுற்றுச்சூழலை பாதுகாத்திடவும், பிராணவாயு வெளியேற்றத்திற்கான நல்ல சூழ்நிலையினை ஏற்படுத்தி தந்திடும் வகையில் அரசு அலுவலகங்கள், சாலை ஓரங்கள், பொது இடங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டு பராமரிக்கப்படுகிறது. அதனடிப்படையில், பாலவநத்தம் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.9.00 இலட்சம் மதிப்பில் அரசு புறம்போக்கு நிலத்தில் 2000-ம் மரக்கன்றுகள் நட்டு வைத்து பராமரிக்கப்படுகின்றன. அதனை சிறப்பான முறையில் பராமரித்திட துறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கபட்டுள்ளன என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கா.வானதி, மாவட்ட சுகாதார அலுவலர் மரு.யசோதாமணி, வட்டார மருத்துவ அலுவலர் மரு.கணேஷ், வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 01, 2026

காந்தி ஜெயந்தி தினமான 02.10.2026 முன்னிட்டு டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில்  செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் எப்எல்-1/ எப்எல்-2 / எப்எல்-3 / எப்எல்-3A / எப்எல்-3AA / எப்எல் -4A மற்றும் எப்எல்-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, காந்தி ஜெயந்தி தினமான 02.10.2026 அன்று (ஒரு நாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் எப்எல்-1/ எப்எல்-2 / எப்எல்-3 / எப்எல்-3A / எப்எல்-3AA / எப்எல் -4A மற்றும் எப்எல்-11 ஆகிய மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 30, 2026

அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள தகுதிவாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்கலாம்.

2027 ஆம் ஆண்டு ஜீலை மாதத்தில் கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின் கீழ் மத்திய திறன் பயிற்சி இயக்குனரகத்தால் (DGT) நடத்தப்படும் அகில இந்திய தொழிற்தேர்வில் தனித்தேர்வர்களாக (Private Candidates) கலந்து கொள்ள உரிய முன் அனுபவச் சான்றிதழ்கள்/வங்கி பாஸ்புக்/ஆதார் கார்டு ஆகியவை உள்ள தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.தனித்தேர்வராக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள், விண்ணப்பப் படிவம், முழு விவரங்கள் அடங்கிய விளக்கக் குறிப்பேடு (Prospectus) மற்றும் தேர்வு கட்டணம் செலுத்துவதற்கான வழிகாட்டுதல் ஆகியவற்றை www.skilltraining.tn.gov.in  என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.தேர்வுக்கட்டடணத்தை (ரூ.200/- ரூபாய் இருநூறு மட்டும்) www.karuvoolam.tn.gov.in  என்ற இணையதளத்தின் வழியாக e-Chellan மூலம் செலுத்தி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் விளக்கக் குறிப்பில் குறிப்பிட்டுள்ள மாவட்ட அரசினர் தொழிற்பயிற்சி நிலைய (Nodal Govt. ITI) முதல்வரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.  தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு, முதனிலைத் தேர்வுக்கான எழுத்துத்தேர்வு (Theory) 26.11.2026 அன்று, கிண்டி, அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நடத்தப்படும்.  எழுத்துத்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு மட்டும் செய்முறை தேர்வு 27.11.2026 அன்று நடைபெறும்.இதற்கான முழு வழிகாட்டுதல்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.  தனித்தேர்வராக தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி 09.10.2026.  அதற்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. மேலும், விவரங்களுக்கு தொடர்பு கெள்ள வேண்டிய தொலைபேசி எண்:9499055818. இந்த பயிற்சிக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாத உதவித்தொகையாக ரூ.1750/- பயிற்சி காலத்தில் வழங்கப்படும். எனவே, தகுதியுள்ள நபர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 30, 2026

பட்டாசு வெடிபொருள் தொழிற்சாலைகளில் நிலையான கட்டுப்பாட்டு விதிமுறைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன .

விருதுநகர் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டு அலுவலர்கள் தலைமையில், மாவட்ட நிருவாகம் மூலம் நியமனம் செய்யப்படும் அலுவலர்கள் இணைந்து பட்டாசு வெடிபொருள் தொழிற்சாலைகளில் 28.09.2026 முதல் 16.10.2026 வரை ஆய்வுகள் மேற்கொள்ள ஒன்றிய அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.   அதன்பேரில், மாவட்ட நிருவாகத்தால் வருவாய்த் துறை, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை மற்றும் காவல் துறை ஆகிய துறைகளிலிருந்து அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.  மேற்படி துறை அலுவலர்களை உள்ளடக்கிய பெட்ரோலியம் மற்றும் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை அலுவலர்கள் தலைமையிலான குழுவினரால், பட்டாசு தொழிற்சாலை உரிமங்களுக்கு வகுக்கப்பட்டுள்ள விதிகள் மற்றும் தொழிற்சாலைகள் இயக்கங்களுக்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (SOP) -இன்படி தொழிற்சாலைகள் இயக்கப்படுவதை ஆய்வு செய்து, தொழிற்சாலை நிருவாகத்தினருக்கு உரிய வழிகாட்டுதல்கள் மற்றும் அறிவுரைகள் வழங்கப்படும்.மேலும், தொழிற்சாலைகளில் விதிமீறல்கள் ஏதும் நடைபெறுவது பொதுமக்களுக்கு தெரிய வந்தால், அது குறித்து உடனடியாக விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண். 04562 252017 மற்றும் 1077 ஆகிய தொலைபேசி எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 7 8 9 10 11 12 13 ... 157 158

AD's



More News