25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Sep 22, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 25.09.2026 அன்று நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில்  செப்டம்பர்-2026 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 25.09.2026 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர்  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில்  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ளது.மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கலாம். விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள்  தெரவித்துள்ளார்.      

Sep 22, 2026

நான்கு வழிச்சாலைக்காக நிலம் வழங்கி இழப்பீடு பெறாதவர்களுக்கான சிறப்பு முகாம்.

விருதுநகர் மாவட்டம் வடுகபட்டி – தெற்குவெங்காநல்லூர் வரை தேசிய நெடுஞ்சாலை - 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்குரிய நில உடைமைதாரர்களிடமிருந்து ஆவணங்களை பெற்று கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இழப்பீட்டுத்தொகை வழங்கும் பொருட்டு நில உடைமைதாரர்களிடமிருந்து நில ஆவணங்களை பெறுவதற்கான சிறப்பு முகாம் கிராம நிர்வாக அலுவலங்களில் நடைபெற உள்ளது.அதனடிப்படையில், இராஜபாளையம் வட்டத்தில் 23.09.2026 மேலூர்துரைசாமிபுரம் கிராமத்திலும், 25.09.2026 இளந்திரைகொண்டான் கிராமத்திலும், 29.09.2026  புத்தூர்  கிராமத்திலும், 01.10.2026 சமுசிகாபுரம் கிராமத்திலும், 06.10.2026 தெற்குவெங்காநல்லூர் கிராமத்திலும், 08.10.2026 மேலராஜகுலராமன் கிராமத்திலும்,            திருவில்லிபுத்தூர் வட்டத்தில் 23.09.2026 நத்தம்பட்டி கிராமத்திலும், 25.09.2026 அத்திகுளம் செங்குளம் கிராமத்திலும், 29.09.2026 அயன் நாச்சியார்கோவில், நல்லிங்கப்பேரி, தெய்வேந்திரி கிராமத்திலும், 01.10.2026 பூவாணி, முத்துவெங்கட்ராயபுரம் கிராமத்திலும், 06.10.2026 களத்தூர், எஸ்.அம்மாப்பட்டி, வடுகப்பட்டி கிராமத்திலும், 08.10.2026 பிள்ளையார்குளம் கிராமத்திலும், 09.10.2026 குன்னூர் கிராமத்திலும், 12.10.2026 விழுப்பனூர், பாட்டக்குளம் சல்லிப்பட்டி கிராமத்திலும், நடைபெற உள்ளது.           ஆகவே, தேசிய நெடுஞ்சாலை – 744 அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கான உரிமை குறித்த ஆவணங்களை இதுவரை சமர்ப்பிக்காத நிலஉடைமைதாரர்கள் இம்முகாம்களில் கலந்து கொண்டு ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

Sep 21, 2026

பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி சி.இ.நா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை தொடங்கி வைத்தல் மற்றும் செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (19.09.2026) ஆய்வு மேற்கொண்டார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு விரிவாக்கத் திட்டத்தினை 22.09.2026 அன்று தொடங்கி வைக்கவுள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் இத்திட்டங்களை செயல்படுத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.இந்த ஆய்வின்போது, சிவகாசி வட்டம் சி.இ.நா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தினை சிறப்பான முறையில் செயல்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகள், உணவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஏற்பாடுகள், குடிநீர் வசதி, உணவு பரிமாறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதார நடவடிக்கைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு செயல்படுத்தப்படுவதற்குத் தேவையான அனைத்து முன்னேற்பாடு பணிகளையும் உரிய காலக்கெடுவிற்குள் முழுமையாக நிறைவு செய்து, மாணவர்களுக்கு எவ்வித இடையூறும் இன்றி தரமான காலை உணவு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, திட்ட இயக்குநர்(தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

Sep 21, 2026

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களுக்கு விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட கே.வி.எஸ்.பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்  (19.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொழில்நுட்ப பணியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகள் 10 மையங்களில் நடைபெற்றது.இத்தேர்வு மையங்களில் மொத்தம் 2,709 தேர்வர்கள் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 1,492 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்று தேர்வு எழுதினர். 1,217 தேர்வர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை.அதன்படி, விருதுநகர் இந்து நாடார் செந்திகுமார நாடார் கல்லூரியில் அமைக்கப்பட்ட 3 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட 769 தேர்வர்களில் 436 தேர்வர்கள் வருகை புரிந்து, 333 பேர் வருகை புரியவில்லை. க்ஷத்திரியா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மையத்தில் அனுமதிக்கப்பட்ட 300 தேர்வர்களில் 163 தேர்வர்கள் வருகை புரிந்து, 137 பேர் வருகை புரியவில்லை. ஸ்ரீ வித்யா பொறியியல் கல்லூரி மையத்தில் அனுமதிக்கப்பட்ட 300 தேர்வர்களில் 170 தேர்வர்கள் வருகை புரிந்து, 130 பேர் வருகை புரியவில்லை. விருதுநகர் எஸ்.வெள்ளைச்சாமி நாடார் பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்ட 2 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட 560 தேர்வர்களில் 303 தேர்வர்கள் வருகை புரிந்து, 257 பேர் வருகை புரியவில்லை. விருதுநகர் கே.வி.எஸ். மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட 3 தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்ட 780 தேர்வர்களில் 420 தேர்வர்கள் வருகை புரிந்து, 360 பேர் வருகை புரியவில்லை.தேர்வு மையங்களில் தேர்வர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக தேர்வர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்தும் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.

Sep 21, 2026

மக்கள் தொடர்பு திட்ட முகாம் சிவகாசி வட்டம் நாராணாபுரம் ஊராட்சியில் நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண மக்கள் தொடர்பு திட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒவ்வொரு மாதமும் 2 ஆவது புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 09.09.2026 அன்று நடைபெற இருந்த முகாம் நிர்வாக காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டது.தற்போது, விருதுநகர் மாவட்டம், "சிவகாசி வட்டம் நாரணாபுரம் கிராமத்தில்" அமைந்துள்ள "லலிதா மஹாலில்" வைத்து 22.09.2026 தேதியன்று காலை 11.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. இம்முகாமில் அனைத்து துறையினை சேர்ந்த அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.மேற்படி, முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே "சிவகாசி வட்டம் நாரணாபுரம் கிராமத்தில்" உள்ள பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக நேரில் அளித்து குறைகளை நிவர்த்தி செய்துகொள்ளவும் அரசின் திட்டங்களை முழுமையாக பெற்று பயனடையவும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 19, 2026

ஆனைக்குட்டம் அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் உள்ள ஆனைக்குட்டம் அணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்(18.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் கிராமத்தில் அர்ஜீனா நதியின் குறுக்கே 1987-ஆம் ஆண்டு  கட்டப்பட்டுள்ள அணை ஆனைக்குட்டம் அணையாகும். இந்த அணையானது 591 ச.கி.மீ நீர்வரத்துப்பகுதி உடனும், 2,940 மீ நீளத்தில் 9 நீர் வெளியேற்றும் மதகுகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.   இந்த அணையின் மொத்த நீர்பிடிப்பு பரப்பானது 795.26 சதுர கிலோமீட்டர் ஆகும்.  இந்த அணையில் 125.752 மில்லியன் கனஅடி நீர் தேக்கி வைக்க முடியும். இந்த அணையின் மூலம் அதிகபட்சமாக 1,708 க.மீ நீரினை வெளியேற்ற இயலும்.இந்த அணையின் கீழ் பகுதியில் 5.1 கி.மீ நீளத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான கால்வாயின் வாயிலாக சிவகாசி வட்டம், கீழத்திருத்தங்கல் கிராமத்தைச் சேர்ந்த 771.77 ஹெக்டர் விவசாய நிலங்களும், விருதுநகர் வட்டம், முத்துலிங்காபுரத்தில் 356.48 ஹெக்டர் நிலங்களும், வாடி கிராமத்தில் 45.82 ஹெக்டர் நிலங்கள் என 1174.07 ஹெக்டர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இதில் முதல் போகத்திற்கு 1,500 ஏக்கர்  நிலமும், இரண்டாம் போகத்தில் 3,000 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும்.இந்த அணையில் பராமரிக்கப்படும் மதகுகள், நீர்த்தேக்கப்பகுதிகள், பிரதான கால்வாய் பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.ஆய்வின் போது, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் திருமதி மலர்விழி, (வைப்பார் வடி நில கோட்டம்) உதவி செயற்பொறியாளர் திரு.கார்த்திகேயன், உதவி பொறியாளர் திரு.கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 19, 2026

சட்டம் ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம், ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S.,அவர்கள் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன்  (18.09.2026) ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி இயல்பு நிலையினை தொடர்ந்து செயல்படுத்திட மாதந்தோறும் சட்டம். ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டு தேவையான இடங்களில் கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொது இடங்களில் சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர் செய்தல், நீர்வழித்தடங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், மயானப் பாதையினை மறைத்து ஆக்கிரமிப்பு செய்தல், கோவில் இடங்களில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தி பொது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்துதல், சமூக நல்லிணக்கத்தினை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் தரப்பினர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல், தேவையான இடங்களில் பாதுகாப்பு கருதி உயர்கோபுர மின்விளக்குகள் ஏற்படுத்துதல், பேருந்து நிறுத்தம் தொடர்பாக எழும் கருத்து வேறுபாடுகள், இறைவழிபாட்டு தளங்களில் உருவாகும் பிரச்சனைகளுக்கு இருதரப்பினருக்கும் ஏற்படும் கருத்து வேறுபாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.எவ்வித பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதி செய்திடவும். இடையூறுமின்றி பொதுமக்கள் தங்களின் இயல்பு நிலையினை மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொதுமக்களின் பாதுகாப்பான சாலை போக்குவரத்தினை உறுதி செய்திடவும், நகரின் முக்கிய வீதிகளில் இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்களுக்கு எவ்வித இடையூறுமின்றி நிறுத்துவதற்கும், சரியான நிறுத்தங்களில் பேருந்துகளை நிறுத்தி பொதுமக்களை ஏற்றி செல்லவேண்டும்.சாலைகளில் வேகத்தடைகள், வாகனத் தடுப்புகள் இருப்பது வாகன ஓட்டிகளுக்கு எளிதில் தெரியும் வகையில் ஒளிரும் பட்டைகள் அமைத்திட வேண்டும். வாகன விபத்தினை தடுத்திடும் வகையில் ஒளிரும் ஒட்டு வில்லைகளை முக்கிய இடங்களில் அமைத்திடவும், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வண்ணம் போக்குவரத்தினை சீர்படுத்திட துறை அலுவலர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., உதவி ஆணையர் (கலால்) திரு.சோமசுந்தர சீனிவாசன், சிவகாசி மாநகராட்சி ஆணையாளர் திரு.கண்ணன், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Sep 18, 2026

e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 19.09.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது .

 தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் e-KYC பதிவு மேற்கொள்ளாத அனைத்து குடும்ப அட்டை பயனாளிகளுக்கும் 19.09.2026 அன்று  அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் விற்பனை முனைய இயந்திரம் மூலமாக விரல் ரேகை/ கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் e-KYC பதிவு மேற்கொள்ள தமிழ்நாடு அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.  அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு 19.09.2026 அன்று அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. எனவே, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள e-KYC பதிவு மேற்கொள்ளாத குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு 19.09.2026  அன்று நேரில் சென்று e-KYC பதிவு செய்யமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.   மேலும் குடும்ப அட்டையில் உள்ள உறுப்பினர்களில் e-KYC பதிவு செய்யாத எவரேனும் பணிநிமித்தமாக தமிழ்நாட்டின் வேறு பகுதிகளில் தற்காலிகமாக வசிப்பவர் எனில், அவர்களும் தற்போது வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளுக்கு தமது குடும்ப அட்டை விபரத்துடன் சென்று e-KYC பதிவு செய்யலாம். எனவே, e-KYC பதிவு செய்யாமல் உள்ள குடும்ப அட்டை உறுப்பினர்கள் அனைவரும் 19.09.2026 அன்று நடைபெறும் சிறப்பு முகாமில் அவசியம் e-KYC பதிவு மேற்கொண்டு விருதுநகர் மாவட்டத்தில் e-KYC பதிவு செய்யும் பணி 100% நிறைவு பெற்றிடுவதற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Sep 18, 2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 22.09.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 22.09.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு, அந்த மனு மீதான நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

Sep 18, 2026

தனியார் பாட்டாசு தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செங்கமலப்பட்டி ஊராட்சி, கீழத்திருத்தங்கல் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் பட்டாசு தொழிற்சாலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்,  (17.09.2026)  பார்வையிட்டு ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் பட்டாசு தொழில்களில் தமிழகத்தில் முன்னனி மாவட்டமாகவும், பட்டாசு தொழிலானது அதிகப்படியான நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க கூடிய தொழிலாகவும், அதிகமானோர் பட்டாசுத் தொழிலை சார்ந்துள்ள மாவட்டமாகவும் விருதுநகர் உள்ளது. இதில் பல்வேறு சூழ்நிலையில் எதிர்பாராத காரணங்களாலும், இயற்கை சூழ்நிலைகளின் மாறுபாட்டாலும் எதிர்பாராத நிலையில் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது.பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்களை பாதுகாத்திடவும், விபத்தில்லாத தொழிலாக பட்டாசு உற்பத்தியினை உருவாக்கிடும் வகையில் தொழில்நுட்ப வல்லுநர் குழு மூலம் ஆராய்ந்து, தகுந்த வழிமுறைகளையும், விதிமுறைகளையும் உருவாக்கி இத்தொழிலை மேம்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், கீழத்திருத்தங்கலில் இயங்கும் தனியார் தொழிற்சாலையில் பட்டாசு தொழிலுக்கு தேவையான மூலப்பொருட்களை கலக்கும் விதம், நிர்ணயிக்கப்பட்ட அளவு, பணியாளர்கள் பணியாற்றிட தேவையான இட அளவு, பாதுகாப்பான சூழ்நிலை குறித்தும், பட்டாசு தொழிற்சாலையில் கடைபிடிக்கப்படும் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 157 158

AD's



More News