சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், சாட்சியாபுரம் சி.எஸ்.ஐ. செவித்திறன் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குன்றியோர் பள்ளியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் (09.09.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மேலும், 20 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு தலா ரூ.6000/- மதிப்பில் காதொலி கருவிகளையும், 4 மாற்றுத்திறனாளி மாணாக்கர்களுக்கு தலா ரூ.6500/- மதிப்பில் சக்கர நாற்காலிகளையும், 1 மாற்றுத்திறனாளி மாணவருக்கு ரூ.65,000/- மதிப்பில் மின்கலன் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியையும் என மொத்தம் 25 சிறப்பு பள்ளி மாணாக்கர்களுக்கு ரூ.2.21 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதுடன், அவர்களுக்கு கல்வி, பயிற்சி, பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கிடைப்பதை உறுதி செய்து வருகிறது. அந்த வகையில், சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, அவர்களுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இந்த ஆய்வின்போது, பள்ளியில் செவித்திறன் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குறைபாடுகளுடன் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு கல்வித்திறனை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் கற்பித்தல் முறைகள், தனித்திறன் வளர்ப்புப் பயிற்சிகள், அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான செயல்பாடுகளை மேற்கொள்ளும் வகையில் வழங்கப்படும் பயிற்சிகள், பள்ளியின் வகுப்பறைகள், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மருத்துவம் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி, அவர்களின் கல்வி மற்றும் தனிப்பட்ட தேவைகள் குறித்து கேட்டறிப்பட்டது. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு கல்வியுடன் இணைந்து தன்னம்பிக்கை, சுயசார்பு மற்றும் சமூகத்தில் சம வாய்ப்புடன் வாழ்வதற்குத் தேவையான திறன்களை வளர்ப்பது மிகவும் முக்கியமானது. மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, அவர்களின் தனித்திறன்களை கண்டறிந்து அதற்கேற்ற பயிற்சிகளை வழங்குவதுடன், அவர்களை தன்னம்பிக்கையுடன் சமூகத்தில் முன்னேறச் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் தெரிவித்தார். பின்னர், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், தேசிய ஊட்டச்சத்து மாதம் - 2026 முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சியினை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் பார்வையிட்டார்.இந்த நிகழ்வின் போது, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S., ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் திருமதி ஷீலா, அரசுத்துறை துறை அலுவலர்கள், பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் எப்.எல் -1/ எப்.எல் -2/ எப்.எல் -3/ எப்.எல் -3A/ எப்.எல் -3AA மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, 69 வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள உரிம ஸ்தலங்களை 10.09.2026 (வியாழக்கிழமை) மற்றும் 11.09.2026 (வெள்ளிக்கிழமை) அன்று வழிதடங்களில் உள்ள மதுபானக் கடைகளை தற்காலிகமாக மூடிட உத்தரவிடப்பட்டுள்ளது.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் எப்.எல் -1/ எப்.எல் -2/ எப்.எல் -3/ எப்.எல் -3A/ எப்.எல் -3AA மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981 நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (08.09.2026) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.16 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையிலான தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் சமூக சமநிலையுடன் வாழவும், பிறர் துணையின்றி தங்களது தேவைகளை தாங்களே பூர்த்தி செய்து கொள்ளவும் தன்னம்பிக்கையுடன் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.மாற்றுத்திறனாளிகளின் தேவைகளையும் கோரிக்கைகளையும் நிறைவேற்றித் தந்திடும் வகையில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமை மாற்றுத்திறனாளிகளிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்படுகின்றன. மேலும், அவர்களின் நலன் கருதி கோட்ட அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.இம்முகாமில் மாற்றுத்திறனாளிகளின் அடிப்படைத் தேவைகளான உதவி உபகரணங்கள், சுய தொழில் தொடங்கிட மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் உதவி, மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை, கல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை, மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம் போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு அதற்கான தீர்வு காணப்படும்.மேலும், வருவாய்த்துறை மூலம் செயல்படுத்தக்கூடிய மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம், இலவச வீட்டு மனைப்பட்டா, தாட்கோ, மாவட்ட தொழில் மையம் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவி போன்றவற்றிற்கான மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள் துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.அதனடிப்படையில் இன்று நடைபெற்ற சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 203 மாற்றுத்திறனாளிகளிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. மேலும், ரூ.1.85 இலட்சம் மதிப்பிலான செயற்கைக் கால் 1 மாற்றுத்திறனாளிக்கும், ரூ.26,000 மதிப்பீட்டில் காதொலி கருவிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.2,400 மதிப்பிலான கால் தாங்கிகள் 3 மாற்றுத்திறனாளிகளுக்கும், ரூ.3,000 மதிப்பிலான மடக்கு குச்சிகள் 2 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 9 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2,16,400 மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.மேலும், முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு கண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைப்பதை உறுதி செய்திட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முகாமில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி ப்ரிதௌஸ் பாத்திமா, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலர் திரு.பிரம்ம நாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச் சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் விதமாக மக்கள் தொடர்பு திட்டம் ஒவ்வொரு மாதமும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் 2வது புதன் கிழமை நடத்தப்பட்டு வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், ‘சிவகாசி வட்டம் நாரணாபுரம் கிராமத்தில் அமைந்துள்ள “லலிதா மஹாலில்” வைத்து 09.09.2026ஆம் தேதியன்று நடைபெற இருந்த மக்கள் தொடர்பு திட்ட முகாம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தெரிவிக்கப்படுகிறது. மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படும் தேதி பின்னர் தெரிவிக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான ஆதிதிராவிடர் நலக்குழுவானது 20.06.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள் கலைக்கப்பட வேண்டும். எனவே, நடைமுறையில் உள்ள ஆதிதிராவிடர் நலக்குழுவானது கலைக்கப்படுகிறது.புதிய குழு அமைத்து, அக்குழுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செயல் உறுப்பினராகவும் செயல்படுவார்கள். இக்குழுவில் அதிகாரப்பூர்வமான உறுப்பினர்களாக உதவி ஆட்சியர்/வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர், தாட்கோ மாவட்ட மேலாளர் , அ-நிலை ஆதிதிராவிடர் நல அலுவலர் , பி-நிலை ஆதிதிராவிடர் அதிகாரி , சி-நிலை ஆதிதிராவிடர் அதிகாரி , டி-நிலை ஆதிதிராவிடர் அதிகாரி மற்றும் மாவட்டத்திலுள்ள ஆதிதிராவிடர் சட்டமன்ற உறுப்பினர்களும், ஒன்றியத் தலைவர்களும் நிரந்தர உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.ஆதிதிராவிடர் அரசு அலுவலர்களின் மாவட்ட சங்கத் தலைவர் ஒருவரும், ஆதிதிராவிடர் அமைப்பின் சங்கத் தவைர்கள் மூவரும், பழங்குடியினர் சங்கத் தலைவர் மற்றும் ஆதிதிராவிடர் வழக்குரைஞர், பேராசிரியர், தொழில்அதிபர் என ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம். எனவே, விருப்பமுள்ள தகுதி வாய்ந்த நபர்கள் விருதுநகர் மாவட்ட ஆதிதிராவிடர் நலக் குழு உறுப்பினராக சேர்வதற்கு வருகின்ற 15.09.2026 –க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 59 பயனாளிகளுக்கு இ-பட்டாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S, அவர்கள் (07.09.2026) வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் அருப்புக்கோட்டை வட்டம், பெரியபுளியம்பட்டி கிராமத்தைச் சார்ந்த 22 பயனாளிகளுக்கு கணினி வழி இ-பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் சாத்தூர் வட்டம், சின்னகொல்லப்பட்டி கிராமத்தைச் சார்ந்த 19 பயனாளிகளுக்கும், விருதுநகர் வட்டம், கூரைக்குண்டு கிராமத்தைச் சார்ந்த 18 பயனாளிகளுக்கும் கணினி வழி இ-பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார். தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 566 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி சாந்தி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு.ஜான்சன் தேவசகாயம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்ம நாயகம், பொது மேலாளர் (தாட்கோ) திருமதி இந்திராகாந்தி, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் இல்லா தமிழ்நாட்டை உருவாக்குவதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள்(07.09.2026) வெளியிட்டார்.விருதுநகர் மாவட்டத்தில் போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து பொதுமக்கள்,இளைஞர்கள் மற்றும் மாணவ/மாணவியர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் "போதைப்பொருளுக்கு இல்லை - ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு ஆம்“ என்ற விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதன் ஒரு பகுதியாக, “I AM AGAINST DRUGS SAY NO TO DRUGS, SAY YES TO LIFE” என்ற விழிப்புணர்வு போதைப் பொருள் தொடர்பான புகார்களை தெரிவிக்க பொதுமக்களும், மாணவ, மாணவிகளும் Drug free tamilnadu என்ற செயலியை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம், 10581 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணையும் பயன்படுத்தலாம் என்ற பதாகைகள் வெளியிடப்பட்டது.மேலும், போதைப்பொருள் பயன்பாடு தனிநபரின் உடல்நலம் மற்றும் குடும்ப நலனுக்கு மட்டுமின்றி சமூகத்தின் எதிர்காலத்தையும் பாதிக்கக்கூடியது. எனவே, போதைப்பொருள் இல்லாத சமூகத்தை உருவாக்க அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள், மாணவர்கள்/இளைஞர்கள், பெற்றோர்கள் மற்றும் தன்னார்வலர்கள் முழுமையான அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.எனவே, போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருந்து, சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகள் குறித்து மேற்கண்ட செயலி மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்ணிற்க்கு உரிய தகவல் தெரிவிக்க வேண்டும் புகார் அளிக்கும் நபர்கள் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, உதவி ஆணையர்(கலால்) திரு.சு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி ப்ரிதௌஸ் பாத்திமா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது.அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 11.09.2026 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம், அருப்புக்கோட்டை மெயின் ரோடு, பாலவநத்தத்தில் அமைந்துள்ள ஜெய்சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.இத்தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் எலிவேட் டிஜி டெக்னாலஜி, அடையார் ஆனந்தபவன், டிவிஎஸ் சுந்தரம், செபாஸ் மெடிகல், தேவேந்திரன் பிளாஸ்டிக்ஸ், பீமா ஜூவல்லரி போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு, தொழிற்படிப்பு, டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலை நாடுநர்கள் 11.09.2026 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in (தனியார்துறை வேலைவாய்ப்பு இணையம்) என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு சுய விவரச் சான்றிதழ், அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது 9360171161 என்ற தொலைபேசி வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஒலிம்பிக்ஸ் என்று அழைக்கப்படும் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசுப்பணியாளர்கள் பங்கேற்கும் வகையில் ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகின்றது.அதனடிப்படையில் விருதுநகர் மாவட்ட விளையாட்டரங்கத்தின் சார்பாக 2026 ஆம் ஆண்டிற்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 09.09.2026 முதல் 30.09.2026 வரை மாவட்ட விளையாட்டரங்கம் உட்பட மொத்தம் 10 இடங்களில் நடைபெற உள்ளது.அனைத்துப் பிரிவுகளிலும் மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்களுக்கு முதற்பரிசாக ரூ.3,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.2,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.1,000/-மும், பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறுவர்களுக்கு அரசின் உயரிய பரிசுத் தொகையான முதல் பரிசாக ரூ.1,00,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.75,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.50,000/-மும், குழுப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதற்பரிசாக ரூ.75,000/-மும், இரண்டாம் பரிசாக ரூ.50,000/-மும், மூன்றாம் பரிசாக ரூ.25,000/-மும், தனித்தனியாக வழங்கப்படவுள்ளது.விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் பள்ளி மற்றும் கல்லுாரி மாணவ மாணவியர்கள், தலைமையாசிரியர்கள் அல்லது கல்லுாரி முதல்வர் அவர்களால் வழங்கப்பட்ட உறுதி சான்றிதழ் (Bonafide Certificate) (அ) அடையாள அட்டை (Id Card) கண்டிப்பாக எடுத்து வரவேண்டும். அரசுப்பணியாளர்கள் பிரிவில் பங்கேற்கும் வீரர் மற்றும் வீராங்கனைகள் தங்களது அடையாள அட்டையினை (Id Card) தவறாது சமர்பிக்க வேண்டும்.மேலும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் அனைத்துப் பிரிவினரும் தங்களது புகைப்பட நகல், ஆதார் கார்டு நகல் மற்றும் வங்கிப்புத்தகத்தின் முதல் பக்க நகலினை தவறாது சமர்பிக்க வேண்டும். சிலம்பம், சதுரங்கம், கேரம், இறகுபந்து, ஸ்கேட்டிங், யோகா, கிரிக்கெட், துப்பாக்கி சுடுதல், மேசைபந்து ஆகிய விளையாட்டு போட்டியில் பங்குபெறும் மாணவ, மாணவிகள் அதற்கான விளையாட்டு உபகரணங்களை தாங்களே கொண்டு வரவேண்டும். ஆன்லைன் மூலம் பதிவு செய்த மாணவ, மாணவிகள் மட்டுமே விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள இயலும். பள்ளியிலிருந்து வரும் மாணவ, மாணவிகளை அதற்கென பொறுப்பு ஆசிரியர்களை நியமித்து அனுப்பி வைத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.மாணவ, மாணவியர்கள் காலை மற்றும் மதிய உணவுகளை தாங்களே கொண்டு வரவேண்டும். அனைத்துப் போட்டிகளும் காலை 8 மணிக்கு ஆரம்பமாகும். முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளுக்கு முன்பதிவு செய்துள்ள வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கான, விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் தேதி மற்றும் இடம் குறித்த விவரங்களை https://tncmtrophy.sdat.in/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S .,அவர்கள் தெரிவித்துள்ளார்.
2026-2027 ஆம் ஆண்டிற்கான தேசிய மற்றும் சர்வதேச அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்கும் வகையில் உலகத்தரம் வாய்ந்த திறமையான இளைஞர்களைக் கண்டறிந்து அவர்களின் திறனை மேம்படுத்தும் விதமாக திறன் போட்டிகள் நடை பெறவிருக்கிறது. விருப்பமுள்ள மாணவ, மாணவியர் https://www.skillindiadigital.gov.in/account/register?returnUrl=%2Findia-skills-%20competition என்ற இணையதளம் வாயிலாக வரும் 15-09-2026 வரை பதிவு செய்யலாம்.ஐடிஐ, பாலிடெக்னிக், இன்சினீயரிங் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி மாணவ மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்கலாம். கடந்த 2025-2026 ஆம் ஆண்டு தெற்கு மண்டல போட்டிகளில் தமிழகம் முதலிடம் பிடித்து, 30 தங்கம், 32 வெள்ளி, 29 வெண்கலம் மற்றும் 17 சிறப்பு பதக்கங்கள் என மொத்தம் 108 பதக்கங்களை வென்றது குறிப்பிடத்தக்கது.எனவே, சர்வதேச திறன் போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.