25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Nov 06, 2026

வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், விருதுநகர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை சுய சேவை பிரிவு அங்காடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் 10 வகையான காய்கறிகள் ரூ.100/-க்கு விற்பனை செய்யும் வெற்றி சிறப்பு காய்கறிகள் தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் (05.11.2026) தொடங்கி வைத்தார்.தீபாவளி பண்டிகையைப் பொதுமக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நுகர்வோருக்கு நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 வகையான காய்கறிகள் அடங்கிய "வெற்றி சிறப்பு காய்கறி தொகுப்பு" ஒன்று ரூ.100/- என்ற சலுகை விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகளில் விற்பனை செய்யும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது.இந்த தொகுப்பில் பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), கத்தரிக்காய்  (250 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கோரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400-450 கிராம்) ஆகியவை இதில் அடங்கும். மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு அரசின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே, பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் வாயிலாக குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்டஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில் கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் பணியாளர்களஉட்பட பலர் கலந்துகொண்டனர்.

Nov 06, 2026

எப்.எப்.எஸ். செயலி மூலம் உரங்கள் விநியோகிக்கப்பட உள்ளதால் தங்களது அடையாள எண்ணை பதிவு செய்யாத விவசாயிகள் அனைவரும் கட்டாயமாக பதிவு செய்ய வேண்டும்.

விருதுநகர் மாவட்ட விவசாயிகளுக்கு எப்.எப்.எஸ். செயலி மூலம் உரங்கள் விநியோகிக்கும் நடைமுறை நவம்பர் முதல் வாரத்தில் அமல்படுத்தப்படுகிறது.  நாடு முழுவதும் விவசாயிகளின் பயன்பாட்டிற்கான மானிய விலை உரங்கள் விற்பனையை ஒழுங்குபடுத்தி கண்காணிக்க உர விற்பனைக்கான கட்டமைப்பு என்ற முறையில் மத்திய வேளாண் அமைச்சகம் செயல்படுத்தி உள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் முதற்கட்டமாக சிவகங்கை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் ஆண்ட்ராய்டு கைபேசி வைத்து எப்.எப்.எஸ். செயலியை பிளே ஸ்டோர் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலியின் மூலம் விவசாயிகள் தங்களது ஆதார் எண். ஒடிபி பதிவு செய்ய வேண்டும்.    விருதுநகர் மாவட்டத்தில் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 94,782 ஆகும்.  இதில் 81,593 விவசாயிகள் அடையாள எண் பெற்றுள்ளனர்.  அடையாள எண் வைத்துள்ள விவசாயிகளாக இருந்தால் அவர்கள் விளை நிலங்கள் விவரங்கள் காண்பிக்கப்படும்.  விவசாயிகள் சாகுபடி செய்த பயிர் அதற்குரிய மானிய விலை உரமூட்டைகள் தேர்வு செய்தால் போதும் க்யு.ஆர் கோடு உடனே வந்துவிடும். விவசாய அடையாள எண் இல்லாத விவசாயிகளாக இருந்தால் விளைநிலங்களின் விவரங்களை பதிவிட்டால் தான் க்யு. ஆர். கோடு கிடைக்கும்.  மேலும், இந்த செயலி உரங்கள் இருப்பு மற்றும் விற்பனை நிலையங்களை குறித்து காண்பிக்கும்.  இதன் மூலம் தாங்கள் விரும்பும் விற்பனை நிலையங்களை தேர்வு செய்து நேரில் சென்று, விற்பனை முனைய கருவி மூலம் டோக்கன்களை ஸ்கேன் செய்து உரங்களை பெற்றுக் கொள்ளலாம். விவசாயிகள் நேரில் செல்ல முடியவில்லை என்றால் தாங்கள் பிரதியின் ஆதார் எண்ணை பதிவு செய்து டோக்கன்களை பெற்று உரங்களை பெறலாம்.  இந்த செயலின் மூலம் அரசு நிலம், கோவில் நிலம், குத்தகை சாகுபடியாளர்களும் தங்களது ஆதார் எண், பயிர் மற்றும் விளை நிலங்களின் விவரங்களை உள்ளிட்டு பதிவு மேற்கொண்டு, எப்.எப்.எஸ். செயலியின் மூலம் க்யு.ஆர். கோடு டோக்கனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.    ஆண்ட்ராய்டு மொபைல் இல்லாதவர்கள்  அருகில் உள்ள பொது சேவை மையங்களுக்கு சென்று தங்களது விளை நிலங்களின் விவரங்களை பதிவு செய்து க்யு.ஆர். கோடினை பெற்றுக் கொள்ளலாம்.    விவசாய அடையாள எண் இருக்கும் விவசாயிகள் எளிதில் பதிவு செய்து டோக்கனை பெற முடியும்.   எனவே, இதுவரை அடையாள எண் பெறாதோர் சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொண்டே அல்லது பொது சேவை மையங்களிலோ பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி  I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 06, 2026

தீபாவளி பண்டிகையினை விபத்து, ஒலி மற்றும் மாசற்ற பண்டிகையாகக் கொண்டாடும் பொருட்டு பொதுமக்கள் உரிய வழிமுறைகளை பின்பற்றுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தல்.

தீபாவளித் திருநாள் மக்களால் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படும் திருநாளாகும்.  இத்திருநாளில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசுகளை வெடித்து மகிழ்ச்சியைவெளிப்படுத்துவார்கள்.  அதேவேளையில், பட்டாசுகளை வெடிப்பதால் நம்மை சுற்றியுள்ள நிலம், நீர், காற்று உள்ளிட்டவை பெருமளவில் மாசுபடுகின்றன. பட்டாசு வெடிப்பதால்  எழும் அதிகப்படியான  ஒலி மற்றும் காற்று மாசினால்  சிறுகுழந்தைகள், வயதான பெரியோர்கள் மற்றும் நோய்வாய்பட்டுள்ள வயோதிகர்கள் உடல் அளவிலும் மனதளவிலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.  பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கோரி  உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொது நல வழக்கில்  உச்ச நீதிமன்றம் தனது 23.10.2018 ஆம் நாளிட்ட ஆணையில், சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப்பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் எனவும், வருங்காலத்தில் பசுமைப் பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகளை விதித்தது. மேலும், உச்ச நீதிமன்றம் தனது ஆணையில், பட்டாசுகளை வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், திறந்தவெளியில் குறிப்பிடப்பட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசுகள் வலியுறுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு 2018 ஆம் ஆண்டிலிருந்து தீபாவளி பண்டிகையன்று  காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது.  இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று,  கடந்த ஆண்டைப் போலவே   காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.மேலும், பட்டாசுகளை வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடு குறித்தும் உடல் நலனில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சுற்றுச்சூழலை பாதிப்பு இல்லாமல் பேணிக் காப்பது நம் ஒவ்வொருவரின் கடமையும் பொறுப்பும் ஆகும். இதனை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுத்தும் தன்மையும் கொண்ட பசுமைபட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும்.மாவட்ட நிர்வாகம் / உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன், பொதுமக்கள் திறந்த வெளியில் ஒன்று கூடி கூட்டாக பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்கவேண்டும்.அதிக ஒலி எழுப்பும் மற்றும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்கவேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும். குடிசை பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக் கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.ஆகவே, பொதுமக்கள் சுற்றுச்சூழலுக்கு அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை அரசு அனுமதித்துள்ள நேரத்தில் உரிய இடங்களில் கூட்டாக வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 05, 2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் 770 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.84.51 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்புகளை வழங்கினார்.

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி  I A S., அவர்கள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் 770 மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு ரூ.84.51 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் இணைப்புகளை (04.11.2026) வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் முன்னேற்றத்தினையே முக்கியக் குறிக்கோளாக கொண்டு பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மகளிர்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்திடவும், சுய சார்புடன் வருவாய் ஈட்டும் திறன் பெற்றவர்களாக உருவாக்கிடவும், தொழில் முனைவோர்களாக உயர்ந்து தங்களது பொருளாதார நிலையினையும், தங்களை சுற்றியுள்ள நபர்களின் பொருளாதார நிலையினை மேம்படுத்திட வேண்டும் என்பதற்காகவும், வாழ்வாதார மேம்பாட்டிற்கு பொருளாதார நிதி தேவை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு வங்கிக் கடன் இணைப்புகள் மூலம் குழு உறுப்பினர்களுக்கு முதலீட்டு நிதி வழங்கப்பட்டு வருகிறது.தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் மூலம் மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் கடன் வழங்குவதுடன் அவர்களுக்கு சுய தொழில் புரிவதற்கான பயிற்சியும், தொழில் நெறி வழிகாட்டுதலும் வழங்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து குழு உறுப்பினர்கள் உற்பத்தி செய்த பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாக ஒரே மாதிரியான பொருட்களை உற்பத்தி செய்யும் குழுக்களை ஒருங்கிணைத்து விற்பனை செய்வதற்கான வாய்ப்புகளையும், சந்தைப்படுத்துவதற்கான முறைகளையும் உருவாக்கி தரப்பட்டு வருகிறது.விருதுநகர் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 10,593 மகளிர் சுய உதவிக்குழுக்களும், நகர்ப்புர பகுதிகளில் 3,950 மகளிர் சுய உதவிக்குழுக்கள் என மொத்தம் 14,543 மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 03.11.2026 அன்று பெருந்துறையில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,310 கோடி வங்கிக் கடன் இணைப்பு வழங்கும் பணியினை தொடங்கி வைத்துள்ளார்கள்.அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்ட ஊரகப்பகுதிகளான அருப்புக்கோட்டையில் 37 குழுவினர்களுக்கு ரூ.3.42 இலட்சமும், காரியாபட்டியில் 39 குழுவினர்களுக்கு ரூ.4.22 இலட்சமும், நரிக்குடியில் 63 குழுவினர்களுக்கு ரூ.6.42 இலட்சமும், இராஜபாளையத்தில் 52 குழுவினர்களுக்கு ரூ.6.42 இலட்சமும், சாத்தூரில் 55 குழுவினர்களுக்கு ரூ.5.83 இலட்சமும், சிவகாசியில் 53 குழுவினர்களுக்கு ரூ.5.80 இலட்சமும், திருவில்லிபுத்தூரில் 52 குழுவினர்களுக்கு ரூ.5.54 இலட்சமும், திருச்சுழியில் 39 குழுவினர்களுக்கு ரூ.3.70 இலட்சமும், வெம்பக்கோட்டையில் 57 குழுவினர்களுக்கு ரூ.6.88 இலட்சமும், விருதுநகரில் 56 குழுவினர்களுக்கு ரூ.6.59 இலட்சமும், வத்திராயிருப்பில் 45 குழுவினர்களுக்கு ரூ.4.61 இலட்சம் என மொத்தம் 548 குழுக்களுக்கு ரூ.59.43 கோடியும்,நகர்ப்புரப்பகுதிகளான அருப்புக்கோட்டையில் 15 குழுவினர்களுக்கு ரூ.2.50 இலட்சமும், செட்டியார்பட்டியில் 8 குழுவினர்களுக்கு ரூ.0.75 இலட்சமும், காரியாபட்டியில் 4 குழுவினர்களுக்கு ரூ.0.79 இலட்சமும், மல்லாங்கிணரில் 4 குழுவினர்களுக்கு ரூ.0.48 இலட்சமும், மம்சாபுரத்தில் 2 குழுவினர்களுக்கு ரூ.0.14 இலட்சமும், இராஜபாளையத்தில் 51 குழுவினர்களுக்கு ரூ.4.75 இலட்சமும், எஸ்.கொடிக்குளத்தில் 20 குழுவினர்களுக்கு ரூ.1.74 இலட்சமும், சாத்தூரில் 2 குழுவினர்களுக்கு ரூ.0.15 இலட்சமும், சேத்தூரில் 17 குழுவினர்களுக்கு ரூ.1.54 இலட்சமும், சிவகாசியில் 7 குழுவினர்களுக்கு ரூ.0.48 இலட்சமும், திருவில்லிபுத்தூரில் 44 குழுவினர்களுக்கு ரூ.7.50 இலட்சமும், திருத்தங்கலில் 38 குழுவினர்களுக்கு ரூ.3.42 இலட்சமும், விருதுநகரில் 4 குழுவினர்களுக்கு ரூ.0.38 இலட்சமும், வத்திராயிருப்பில் 6 குழுவினர்களுக்கு ரூ.0.46 இலட்சம் என மொத்தம் 222 குழுக்களுக்கு ரூ.25.08 கோடி என ஆக மொத்தம் 770 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.84.51 கோடி மதிப்பீட்டிலான வங்கிக் கடன் உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்து மகளிர் சுய உதவிக்குழுக்களும் சிறப்பாக செயல்பட்டு இந்திய அளவில் வழங்கப்படும் Icons of India என்ற விருதை பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சசிகலா, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குநர் திரு.இலக்குவன், உதவி திட்ட அலுவலர்கள் திரு.குபேந்திரன், திருமதி அன்னச்செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Nov 05, 2026

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பள்ளி மாணாக்கர்களுடன் கலந்துரையாடினார்.

விருதுநகர் மாவட்டத்தில், மாணவர்களின் தனித்திறன்கள், சாதனைகள், கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளை ஊக்குவிக்கும் வகையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 36 மாணாக்கர்ளுடன் “காபி வித் கலெக்டர்” கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துரையாடினார்.இந்நிகழ்ச்சியில், மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களின் சாதனைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார். மேலும், மாணவர்கள் தங்களது போட்டி அனுபவங்கள், வெற்றிக்காக மேற்கொண்ட பயிற்சிகள், எதிர்கொண்ட சவால்கள் மற்றும் சாதனைகளை அடைவதற்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் பங்களிப்புகள் குறித்தும் கேட்டறிந்தார்.தொடர்ந்து, மாணவர்கள் தங்களது கல்வி ஆர்வம், விளையாட்டுத் திறன், கலைத்திறன், அறிவியல் ஆர்வம் மற்றும் எதிர்காலத்தில் அடைய விரும்பும் இலக்குகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவருடன் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.மாணவர்கள் ஒவ்வொருவரிடமும் தனித்துவமான திறமைகளும் ஆற்றல்களும் உள்ளன. அவற்றை முறையாக அடையாளம் கண்டு, தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டு, தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் உயர்ந்த இலக்குகளை அடைய முடியும். வெற்றி என்பது ஒரே நாளில் கிடைப்பதல்ல; அதற்கு தொடர்ச்சியான முயற்சி, கடின உழைப்பு, ஒழுக்கம் மற்றும் விடாமுயற்சி மிகவும் அவசியமாகும்.மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவர்களின் சாதனைகள் பாராட்டுக்குரியவை. மாணவர்கள் தங்களது வெற்றியை அடுத்தடுத்த நிலைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டும். தோல்விகளைக் கண்டு துவண்டுவிடாமல், அவற்றை வெற்றிக்கான அனுபவங்களாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும்.மேலும், கல்வியுடன் விளையாட்டு, கலை, அறிவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளிலும் மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் நல்ல பொறுப்புமிக்க குடிமக்களாக உருவாகி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள வகையில் தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.மேலும், மாணவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடி அவர்களின் எண்ணங்கள், விருப்பங்கள் மற்றும் எதிர்காலக் கனவுகளைக் கேட்டறிந்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாணவர்களின் சாதனைகளைப் பாராட்டி, அவர்களின் எதிர்கால முயற்சிகள் அனைத்தும் வெற்றியடைய தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியானது மாணவர்கள் தங்களது சாதனைகள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், மாவட்ட நிர்வாகத்தின் தலைவருடன் நேரடியாகக் கலந்துரையாடி ஊக்கம் பெறவும் பயனுள்ள வாய்ப்பாக அமைந்தது.இந்நிகழ்வில் முதன்மைக்கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன் உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Nov 05, 2026

விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷ்ரண்யா அறி I A S., அவர்கள் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று(04.11.2026) குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் பட்டாசுகளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.குழந்தைகள் அனைவரும் நன்றாகக் கல்வி கற்று, தங்களது தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு, வாழ்வில் உயர்ந்த இலக்குகளை நிர்ணயித்து, அதனை அடைய தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். வாழ்க்கையின் எந்த ஒரு பிரச்சனைக்கும் கல்வியால் சிறந்த தீர்வை காண முடியும். குழந்தைகள் தங்களுக்குள் அன்பு, ஒற்றுமை, சகோதரத்துவம் மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையை இழக்காமல், தங்களது எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகள் அனைவரும் நல்ல பழக்கவழக்கங்களைப் பின்பற்றி, ஒழுக்கத்துடன் வாழ்ந்து, சமூகத்தில் சிறந்த மனிதர்களாக உருவாக வேண்டும்.எதிர்காலம் மட்டுமே நம் கைகளில் உள்ளது. எனவே, கடந்த காலங்களைப் பற்றி கவலைப்படாமல் எதிர்காலத்தில் நல்ல நிலைமைக்கு வருவதற்கான இலக்கை நிர்ணயித்து குறிக்கோளோடு செயல்பட வேண்டும். குழந்தைகள் அனைவரும் தீப ஒளியைப் போன்று தங்களது வாழ்க்கையிலும் கல்வி, அறிவு, திறமை மற்றும் நற்பண்புகளால் பிரகாசிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட குழந்தை நல அலுவலர் திருமதி மீனாட்சி, ஆசிரியர்கள், காப்பாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Nov 04, 2026

மக்கள் குறைந்த விலையில் அத்தியாவசிய மளிகைப் பொருட்களை வாங்கி பயன்பெற ஏதுவாக கூட்டுறவு அங்காடிகளில் 10 பொருட்கள் அடங்கிய சிறப்பு மளிகைத் தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் நுகர்வோருக்கு அன்றாடத் தேவையான அத்தியாவசிய மளிகைப் பொருள்களை நியாயமான விலையில் கிடைக்கச் செய்யும் நோக்கில், 10 மளிகைப் பொருள்கள் அடங்கிய ஒருங்கிணைந்த “சிறப்பு மளிகைத் தொகுப்பு” ரூ. 200 என்ற விலையில், கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், தொடக்கக் கூட்டுறவுப் பண்டகசாலைகள் மற்றும் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின்  விற்பனை நிலையங்கள் மூலம் நுகர்வோருக்கு கூட்டுறவுத் துறையால் 31.10.2026 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இத்தொகுப்பில், 10 வகையான மளிகைப் பொருட்களான கடலைப் பருப்பு -250 கிராம், பாசிப் பருப்பு 250 கிராம், மிளகாய் -100 கிராம், தனியா -150 கிராம், பூண்டு 150 கிராம், புளி 250 கிராம், கடுகு -100 கிராம், உடைத்த உறுத்தம் பருப்பு -100 கிராம், சீரகம் -50 கிராம் மற்றும் சோம்பு-50 கிராம் என மொத்தம் 1,450 கிராம் எடையளவிலான பொருட்கள் மொத்தம் 9 அங்காடிகள் மூலம் வழங்கப்படுகிறது.அதன்படி, மாவட்டத்தில் விருதுநகர் மாவட்ட கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் விருதுநகர் அங்காடி மூலம் 40 தொகுப்புகளும்,  மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அங்காடி மூலம் 40 தொகுப்புகளும்,  இராஜபாளையம் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை மூலம் 60 தொகுப்புகளும், அருப்புக்கோட்டை புளியம்பட்டி கூட்டுறவு பண்டக சாலை மூலம் 10 தொகுப்புகளும்,வத்திராயிருப்பு கூட்டுறவு பண்டகசாலையின் கீழ் வத்திராயிருப்பு அங்காடி மூலம் 17 தொகுப்புகளும், ரெங்கப்பநாயக்கன்பட்டி அங்காடி மூலம் 12 தொகுப்புகளும், சத்திரப்பட்டி தொடக்க கூட்டுறவு பண்டகசாலை மூலம் 10 தொகுப்புகளும், பந்தல்குடி கூட்டுறவு பண்டகசாலை மூலம் 10 தொகுப்புகளும், தளவாய்புரம் கூட்டுறவு பண்டகசாலை மூலம் 3 தொகுப்புகளும் என மொத்தம் 202 தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.எனவே, மாவட்டத்தில் 9 அங்காடிகள் மூலம் இத்திட்டத்தின் கீழ் ரூ.200/- க்கு விற்பனை செய்யப்படும் தரமான 10 வகையான மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை பெற்று பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.இந்த சிறப்பு மளிகைத் தொகுப்பினை வாங்கிய பொதுமக்கள் தெரிவிக்கையில் எனது பெயர் வாணி, விருதுநகரில் வசிக்கிறேன். தமிழக அரசின் மூலம் சிறப்பு மளிகைத் தொகுப்பில், ரூ.200 மதிப்பில் 10 பொருட்கள் கொடுக்கிறார்கள். இந்த தொகுப்பின் மதிப்பு வெளியில் சுமார் ரூ.300/- இருக்கும். வருகின்ற தீபாவளி பண்டிகை காலங்களில் இந்த குறைந்த விலையிலான பொருட்களை வழங்குவது உதவியாக உள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.எனது பெயர் காமாட்சி, கூட்டுறவு அங்காடிகள் மூலம் கடலைப் பருப்பு, பாசிப் பருப்பு, மிளகாய், தனியா, பூண்டு, புளி, கடுகு, உடைத்த உறுத்தம் பருப்பு,  சீரகம், சோம்பு என 10 பொருட்கள் ரூ.200 க்கு விற்பனை செய்கிறார்கள். எங்களைப் போன்ற நடுத்தர குடும்பங்களுக்கு இந்த குறைந்த விலையிலான தொகுப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த தொகுப்பினை கூட்டுறவு அங்காடி மூலம் வாங்குவதால் ரூ.100 வரை சேமிக்க முடிகிறது. இதுபோன்ற ஏழை எளிய மக்களின் அன்றாட தேவைகளிலும் கவனம் செலுத்தும் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி என தெரிவித்தார்.

Nov 04, 2026

மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது, விருப்பமுள்ள தேர்வர்கள் பங்கேற்கலாம்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்  மூலம் இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளுக்கான 6,574 காலிப்பணியிடங்கள் TNPSC Group-IV தேர்விற்கான அறிவிக்கை 06.10.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 05.11.2026 ஆகும். விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் இலவச பயிற்சி வகுப்பு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.மேலும், இந்திய வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நடத்தும் பிராந்திய கிராமப்புற வங்கி அலுவலர் I, II & III (IBPS REGIONAL RURAL BANK OFFICERS SCALE – I, II, & III) மற்றும்  Office Assistant – Multipurpose  தேர்விற்கு 13,745 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இப்போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது.இப்பயிற்சி வகுப்புகளில் திறன் வாய்ந்த பயிற்றுநர்களைக் கொண்டு, தேர்வின் பாடத்திட்டத்திற்கு ஏற்ப பாடவாரியான பயிற்சிகள், தேர்வு நுணுக்கங்கள் மற்றும் வினா அணுகுமுறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும், தேர்வர்களின் தொடர் பயிற்சிக்கு உதவும் வகையில் போட்டித் தேர்வுக்கான அனைத்து புத்தகங்கள் அடங்கிய நூலகம் மற்றும் இலவச Wi-Fi வசதியுடன் கூடிய கணினி ஆய்வகம் அலுவலகத்தில் உள்ளது.இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் studycirclevnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக பதிவு செய்யலாம்.இவ்வாய்ப்பை பயன்படுத்தி, TNPSC Group – IV மற்றும் IBPS Regional Rural Bank தேர்வுக்குத் தயாராகும் விருதுநகர் மாவட்டத் தேர்வர்கள், இந்த இலவச பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 04, 2026

ஆதிதிராவிட விவசாயிகள் வளமிகு வேளாண்மை உதவித் திட்டத்தின் கீழ் தட்கல் மின் இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் .

வளமிகு வேளாண்மை உதவித்திட்டத்தின் மூலம் ஆதிதிராவிட விவசாயிகள் பாசன வசதிகளை மேம்படுத்தி, வேளாண் உற்பத்தியைப் பெருக்கவும், விவசாய வருமானத்தை உயர்த்தவும் வழிவகை செய்யப்படுகிறது. விவசாய உற்பத்திக்குத் தேவையான மின் மோட்டார் குதிரைத்திறனுக்கேற்ப மின் இணைப்பு பெறுவதற்கான செலவில் 90 சதவீதம் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திடம் தாட்கோ மானியமாக வழங்கும்.அதன்படி, 5 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.50 இலட்சம் எனில், பயனாளி ரூ.25,000/- மட்டும் பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.25 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 7.5 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.2.75 இலட்சம் எனில், பயனாளி ரூ.27,500/- செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.48 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும்.அதேபோன்று, 10 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.3.00 இலட்சம் எனில், பயனாளி ரூ.30,000/- மட்டுமே செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.2.70 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். 15 HP மின் மோட்டாருக்கான மின் இணைப்பு கட்டணம் ரூ.4.00 இலட்சம் எனில், பயனாளி ரூ.40,000/- பங்குத்தொகையாக செலுத்த வேண்டும். மீதமுள்ள ரூ.3.60 இலட்சம் தாட்கோ மூலம் மானியமாக வழங்கப்படும். இத்தொகைகள் தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்திற்கு செலுத்தப்பட்டு, விரைவு மின் இணைப்பு வழங்க பரிந்துரைக்கப்படும்.இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆதிதிராவிட இனத்தைச் சார்ந்தவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்கு மிகாமலும் இருக்க வேண்டும். மேலும், விவசாய நிலம் விண்ணப்பதாரரின் பெயரில் சொந்தமாக இருப்பதுடன் அதற்கான பட்டாவும் இருக்க வேண்டும். அந்நிலத்தில் கிணறு அல்லது ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டிருக்க வேண்டும். தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தில் மின் இணைப்பு கோரி பதிவு செய்திருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் ஏற்கனவே தாட்கோ திட்டங்களின் கீழ் பயன் அடைந்தவராக இருக்கக்கூடாது.மேற்கண்ட தகுதிகளுடைய ஆதிதிராவிட விவசாயிகள் https://tahdco.com/ என்ற தாட்கோ இணையதளத்தின் மூலம் விண்ணப்பித்து இத்திட்டத்தில் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Nov 03, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.74,995 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் (02.11.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 74,995 மதிப்பில் செயலிகளுடன் கூடிய திறன்பேசியினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 569 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கிடும் வகையில் சுயதொழில் வழிகாட்டு மையத்தினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி சசிகலா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.ஜான்சன் தேவசகாயம்,  மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.பிரம்ம நாயகம், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 157 158

AD's



More News