தேவர் ஜெயந்தி விழா மற்றும் இதர விழாக்களுக்கும் அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு துறையின்அனுமதி பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.வருகின்ற 30.10.2026 அன்று நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழா மற்றும் இதர விழாக்களுக்கு அன்னதானம் வழங்குபவர்கள் உணவு பாதுகாப்பு துறையின் முன் அனுமதியும், உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும். தவறினால் கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். “இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் 30.10.2026 அன்று நடைபெறவுள்ள தேவர் ஜெயந்தி விழாவிற்கு விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அன்னதானம் வழங்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, அன்னதானம் வழங்கும் பொறுப்பாளர்கள் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும் மற்றும் பின்வரும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டத்தின் முக்கிய நெறிமுறைகளைத் தவறாது பின்பற்ற வேண்டும். அன்னதானங்கள் மற்றும் தற்காலிக உணவுக் கடைகள் உள்ளிட்ட அனைத்து வகையான உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006-ன் கீழ் https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். அன்னதானத்தில் சமைப்பவர்கள், கேட்டரிங்க் ஏஜென்ஸியினர் மேற்கூறிய இணையதளத்தில் விண்ணப்பித்து உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ், உரிமம் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு, உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ், உரிமம் பெற்ற கேட்டரிங்க், சமையல் குழுவினருக்கு மட்டுமே அன்னதானத்தில் உணவு சமைக்க அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் பணி உத்திரவு வழங்க வேண்டும்.இந்தப் பதிவுச் சான்றிதழ் போக, புதிய மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தின் முதல் தளத்தின் அறை எண்: 116 & 118-ல் உள்ள நியமன அலுவலர் அலுவலகத்தில், பின்வரும் விபரங்களுடன் அனுமதி கோரி கடிதம் ஒன்றினை, அன்னதானம் ஏற்பாடு செய்பவர்கள் அன்னதானம் நடப்பதற்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும்.அன்னதானம் ஏற்பாடு செய்பவர்களின் தொடர் முகவரி மற்றும் அலைபேசி, அன்னதானம் நடைபெறும் இடத்தின் முழு முகவரி, அன்னதானத்தில் ஈடுபடவுள்ள சமைப்பவர் குழுஃகேட்டரிங்க் குழுவின் விபரம், அன்னதானத்தில் உணவு சமைக்கவும், நுகர்வோர் அருந்தவும் பயன்படுத்தவுள்ள குடிநீரின் ஆதார நிலை, பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீராக இருந்தால், விநியோகஸ்தர் /உற்பத்தியாளர் விபரம், கிணறு அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து சமைக்கவும், குடிக்கவும் பயன்படுத்துவதாக இருந்தால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதி மற்றும் தண்ணீர் பகுப்பாய்வறிக்கை. ஊராட்சி/நகராட்சி/மாநகராட்சி போன்ற உள்ளாட்சியின் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீரைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதுகுறித்தான அன்னதானம் ஏற்பாடு செய்பவரின் உறுதிமொழி மட்டும் போதுமானது.சமைப்பவர் குழு/கேட்டரிங்க் குழுவினர் தொற்றுநோய்த் தாக்கமற்றவர்கள் என்பதிற்கான மருத்துவச்சான்று. உணவு சமைக்கத் தேவைப்படும் பொட்டலமிடப்பட்ட மூல உணவுப் பொருட்களை முழுமையான லேபிள் விபரங்கள் உள்ளதாக கொள்முதல் செய்யவும், அனைத்து மூல உணவுப் பொருட்களையும் உணவு பாதுகாப்பு பதிவுச் சான்றிதழ்/உரிமம் பெற்ற வணிகரிடத்தில் மட்டும் கொள்முதல் செய்யவும் சுய உறுதிமொழிச் சான்று வழங்க வேண்டும்.அன்னதானத்திற்கு உணவு தயாரித்த 2 ½ மணி நேரத்திற்குள் பரிமாறிவிட வேண்டும். மீதமான உணவைப் பரிமாறாமல் அப்புறப்படுத்திட வேண்டும். பால், மீன், இறைச்சி ஆகியவற்றைப் பயன்படுத்துவதாக இருந்தால், அதனை முறையான வெப்பநிலையில் பராமரித்திடல் வேண்டும். அனைத்து வகையான சமைத்த உணவிலிருந்தும் சராசரியாக 250 கிராம் உணவு மாதிரி எடுத்து, தூய்மையான பாட்டிலில் அடைத்து, குளிர்சாதனப்பெட்டியில் 48 மணி நேரத்திற்குப் பாதுகாத்திடல் வேண்டும். அன்னதானம் வழங்குவோர், தாம் சமையலுக்குப் பயன்படுத்தும் தண்ணீர் மற்றும் நுகர்வோர்களுக்குக் குடிக்க வழங்கும் தண்ணீர் ஆகியவற்றை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அல்லது பொது சுகாதாரத் துறை பகுப்பாய்வுக் கூடங்களில் பகுப்பாய்வு செய்து பகுப்பாய்வறிக்கை வைத்திருக்க வேண்டும். மேலும், முன் அனுமதி இல்லாமல் தனியார் இடங்களில் உள்ள ஆழ்துளை கிணறு போன்ற நீராதாரங்களில் தண்ணீர் எடுத்து சமையலுக்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தக்கூடாது.சாப்பாடு, வடை, பஜ்ஜி போன்ற உடனே உண்ணக்கூடிய உணவுப் பொருட்களை சமைத்து விற்பவர்கள் அல்லது உணவுப் பொருட்களை விற்பனை மட்டும் செய்பவர்கள், உணவு பாதுகாப்பு உரிமம் பெற்ற தரமான மூலப்பொருட்களைக் கொண்டு, ஈக்கள் மற்றும் அசுத்தம் இல்லாத சுகாதரமான சூழலில் அவற்றை தயாரித்து, பாதுகாப்பாக விற்பனை செய்ய வேண்டும். அனுமதிக்கப்படாத செயற்கை நிறமிகளை உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது. சமையல் எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்திடல் வேண்டும். பயன்படுத்தி மீதமான ஆறிய நிலையில் உள்ள எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக்கூடாது.பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களில் அதன் தயாரிப்பு நாள், காலாவதி நாள், உணவு பாதுகாப்பு உரிமம் எண் உள்ளிட்ட அனைத்து லேபிள் விபரங்களை அவசியம் அச்சிட்டிருக்க வேண்டும். உணவு தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபடும் அனைத்துப் பணியாளர்களும் டைபாய்டு மற்றும் மஞ்சள்காமாலைக்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொண்டு, “தொற்றுநோய்த் தாக்கமற்றவர்களாக” இருக்க வேண்டும் என்பதுடன், அவர்கள் கையுறை, முடிக் கவசம் போன்ற பாதுகாப்பு கவசங்களை அணிந்திருக்க வேண்டும்.காலாவதியான பிஸ்கட், குளிர்பானங்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் உள்ளிட் எந்தவகை பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களையும் விற்பனை செய்யக்கூடாது. மேலும், கெட்டுப்போன அல்லது பழைய உணவுகளை விற்பனை செய்யக்கூடாது. டைனிங் டேபிள் மற்றும் வளாகத்தினை சுத்தம் செய்யும் நபர்கள் சாப்பாடு பரிமாறக்கூடாது. நீயூஸ் பேப்பர் போன்ற அச்சிட்ட செய்தித்தாள்இ தடைசெய்யப்பட்ட ப்ளாஸ்டிக் ஆகியவற்றில் உணவுப் பொருட்களை பொட்டலமிடவோ அல்லது விநியோகிக்கவோ கூடாது.பாதுகாப்பான முறையில் அன்னதானம் வழங்கிட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி ,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட 450 கிராம ஊராட்சிகளில் உள்ளாட்சிகள் தினமான 01.11.2026 அன்று கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் குறித்தும் (01.04.2026 முதல் 31.10.2026 வரை), கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை குறித்தும், ஊரப்பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும், தமிழ்நாடு கிராம மேம்பாடு மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு, குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் முறையைத் தடுத்தல், தமிழ்நாடு பல்லுயிர் வாரியம் -பல்லுயிர் மேலாண்மைக்குழு குறித்தும், இழிவு தரும் சாதிப்பெயர்களை மாற்றம் செய்தல், வளர்ப்பு பிராணிகளுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துதல், தெருநாய்களுக்கு கருத்தடை மற்றும் தடுப்பூசி செலுத்துதல், சபாசார் வலைத்தளம் உள்ளாட்சிகள் தின கிராம சபைக்கூட்டம் குறிப்பு(2026), தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் கிராம சபா கூட்டப்பொருள் மற்றும் இதர கூட்டப் பொருள்கள் குறித்து விவாதிக்கப்படவுள்ளது.எனவே, 01.11.2026 அன்று நடைபெறவுள்ள கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பட்டியல் இன மக்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்காகவும், அவர்களின் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் ஒட்டுமொத்த முன்னேற்றத்திற்காகவும் பலர் அறிய தொண்டாற்றி வருகின்றனர். பட்டியல் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தங்களை முழுமையாக இணைத்துக்கொண்டு, சிறப்பான மற்றும் பாராட்டத்தக்க வகையில் ஆற்றிவரும் அறிய தொண்டினை கருத்தில் கொண்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தன்று “டாக்டர் அம்பேத்கர் விருது" தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு சிறப்பிக்கப்படுகிறது. அந்த வகையில், 2026-ஆம் ஆண்டிற்கான டாக்டர் அம்பேத்கர் விருது 2027 ஜனவரி மாதம் திருவள்ளுவர் தினத்தன்று வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை தமிழ்நாடு அரசின் www.tn.gov.in இணையதளத்தில் https://www.tn.gov.in/form_view.php? dep_id=MQ== என்ற இணைப்பை (Link) கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது ஆதிதிராவிடர் நல இயக்குநரக அலுவலகம், சேப்பாக்கம் சென்னை-600 005-ல் நேரில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும் விண்ணப்பப் படிவத்தைப் பெற்றுக்கொள்ளலாம்.எனவே விருதினை பெற விரும்புவோர், தங்களைப் பற்றிய முழுவிவரங்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இன மக்களின் முன்னேற்றத்திற்காக தாங்கள் ஆற்றியுள்ள அரிய தொண்டுகள், சாதனைகள் மற்றும் அதற்கான உரிய ஆவணங்கள்/சான்றுகள் ஆகியவற்றை இணைத்து பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்துடன் சமர்ப்பிக்க வேண்டும், இவ்விருதிற்கு விண்ணப்பித்திட 30.11.2026 அன்ற கடைசி நாளாகும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில்(26.10.2025) அனைத்துத்துறை அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர்.நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஊழலற்ற சமுதாயத்தினை உருவாக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் கடைசி வாரத்தில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஆண்டு 26.10.2026 முதல் 01.11.2026 வரை கடைபிடிக்கப்படுகிறது.“நமது நாட்டின் பொருளாதாரம், அரசியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு ஊழல் ஒரு முக்கிய தடையாக உள்ளதாக நான் நம்புகிறேன். அரசு, குடிமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் ஆகியவை ஊழலை ஒழிப்பதற்கு ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என நான் நம்புகிறேன். நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் எப்போதும் உயர்ந்த நோக்குடன் விழிப்புணர்வு, நேர்மை மற்றும் கண்ணியம் ஆகியவற்றுடன் ஊழலை ஒழிப்பதில் உறுதுணையாக விளங்க வேண்டும் என்பதை நான் நன்கறிவேன்.எனவே, நான் அனைத்து செயல்களிலும் நேர்மையாகவும், சட்ட விதிகளையும் பின்பற்றுவேன் என்றும், இலஞ்சம் வாங்கவோ அல்லது கொடுக்கவோ மாட்டேன் என்றும், அனைத்து செயல்களையும் நேர்மை மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல்படுத்துவேன் என்றும், பொதுமக்களின் நலனுக்காக பணியாற்றுவேன் என்றும், தனிப்பட்ட நடத்தையில் நேர்மையை வெளிப்படுத்துவதில் ஒரு முன்னுதாரணமாக செயல்படுவேன் என்றும், ஊழல் தொடர்பான நிகழ்வினை உரிய அதிகார அமைப்பிற்குத் தெரியப்படுத்துவேன்“ என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சோமசுந்தர சீனிவாசன், தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் தலைமையில் (26.10.2026) நடைபெற்றது.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், 5 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டையினையும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 2 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.பொதுமக்களிடமிருந்து 507 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.முன்னதாக மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி வழங்கிடும் வகையில் சுயதொழில் வழிகாட்டு மையத்தினை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (நிலம்) திரு.சையது முகமது, தனித்துணை ஆட்சியர் (ச.பா.தி) திருமதி மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் திரு.பிரம்ம நாயகம், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் REACT தொண்டு நிறுவனத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு பயிற்சி மற்றும் ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் (26.10.2026) குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சி வழங்குதல், தனியார்துறையில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தருதல் மற்றும் அரசின் சார்பில் வழங்கக்கூடிய வங்கிக் கடன்களுக்கு வழிகாட்டுவதற்காக இம்மையம் துவக்கப்பட்டுள்ளது. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய வழிகாட்டுதல்கள் வழங்கப்படும். திறன் வாய்ந்த மாற்றுத்திறனாளிகள் ஒருவரும் விடுபடாமல் இம்மையத்தின் வாயிலாக பயனடைய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மாற்றுத்திறனாளிகள் பிறர் துணையின்றி தன்னிச்சையாக செயல்படும் வகையிலும் தங்களது பணிகளை தாங்களே மேற்கொள்ளும் வகையில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,73,880 மதிப்பில் செயலிகளுடன் கூடிய திறன்பேசி, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38,400 மதிப்பிலான காதொலி கருவிகள் மற்றும் ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.65,000 மதிப்பிலான செயற்கை கால் என மொத்தம் 19 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2.77 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது.எனவே, அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும் இம்மையத்தினை பயன்படுத்தி தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.மேலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மற்றும் REACT தெண்டு நிறுவன இயக்குனர் ஆகியோருக்கிடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.இந்நிகழ்வில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் திரு.பிரம்ம நாயகம், REACT தொண்டு நிறுவன இயக்குனர் திரு.ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கல்லூரி மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கில், 28.10.2026 அன்று காலை 10.00 மணிக்கு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நான்காம் தளத்தில் கல்விக் கடன் முகாம் நடைபெற உள்ளது.நடப்பு நிதியாண்டில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3,000 மாணவர்களுக்கு மொத்தம் ரூ.75 கோடி கல்விக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மாணவர்கள் கொண்டு வர வேண்டிய ஆவணங்கள் 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், கல்லூரி சேர்க்கை ஆணை மற்றும் கலந்தாய்வு ஒதுக்கீட்டு ஆணை (பொருந்துமிடத்து), கல்லூரியில் பெற்ற சான்றிதழ்களின் உண்மைத்தன்மைச் சான்று (தேவைப்படின்), கல்லூரிக் கல்விக் கட்டண விவரம், மாணவரின் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு (இருந்தால்), மாணவரின் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.மாணவர்கள் கொண்டு வர வேண்டிய பெற்றோர்களின் விவரங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டு (இருந்தால்), வருமானச் சான்றிதழ், கடந்த ஆறு மாதங்களுக்கான வங்கிக் கணக்கு விவர அறிக்கை, குடும்ப அட்டை (ரேஷன் கார்டு), சாதிச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்.மேலும் விவரங்களுக்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நான்காம் தளத்தில் செயல்பட்டு வரும் கல்வி உதவி மையக் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.எனவே, கல்விக் கடன் தேவைப்படும் கல்லூரி மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரிக்கும் பொருட்டு, 27.10.2026-ஆம் தேதியன்று சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் மாமன்னர்கள் மருதுபாண்டியர் நினைவு தினத்தன்று டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் எப்எல்-1, எப்எல் -2, மற்றும் எப்எல் -3 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் (எப்எல் -1) எப்எல் -2 மற்றும் எப்எல் -3 மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், கட்டனூர் கண்மாயில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு, கண்மாயைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதை, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.செல்வம் அவர்கள் முன்னிலையில், (24.10.2026)அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழிகாட்டுதலின்படி மாவட்டத்தில் உள்ள நீர்நிலைகளை பாதுகாத்து நீர்த்தேக்க திறனை மேம்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.முக்கியமாக பருவ மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யும் திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டாரத்தில் உள்ள கண்மாய்கள் மற்றும் வரத்து கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கட்டனூர் கண்மாய்க்கு கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கட்டனூர் அணைக்கட்டின் பிரதான கால்வாயின் மூலம் பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.இந்த கட்டனூர் கண்மாயில் கரை 6200 மீட்டர் நீளத்திற்கு பலப்படுத்தும் பணிகள்,வரத்துக்கால்வாய் 5400 மீட்டர் நீளத்திற்கு தூர்வாரும் பணிகள்,கட்டனூர் அணைக்கட்டு மேம்படுத்தும் பணிகள், 7 மடைகள் மறுகட்டுமான பணிகள், கலுங்கு சீரமைக்கும் பணிகள் என மொத்தம் ரூ.2.86 கோடி மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதன் மூலம் 177 மில்லியன் கன அடி நீர் தேக்கப்பட்டு,1335 ஹெக்டேர் (3300 ஏக்கர்) பாசனப்பரப்பு பயன்பெறும்.மேலும், கண்மாயின் முழுகொள்ளளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு, கட்டனூர் கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து, கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பூர்த்தியடைந்து, இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளும் பூர்த்தி செய்ய வழிவகை செய்யப்படும்.மேலும், கண்மாயில் மேற்கொள்ளப்படும் புனரமைப்புப் பணிகளைத் தரமாகவும், திட்டமிட்ட காலத்திற்குள்ளும் முடிப்பதற்குத் தொடர்புடைய அலுவலர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கண்மாய்க்கு மழைக்காலங்களில் கிடைக்கும் நீரைச் சேமிக்கும் வகையில் நீர்வரத்துப் பாதைகளை முறையாகப் பராமரிக்க வேண்டும். நீர்நிலைகளைப் பாதுகாப்பதில் பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, அவற்றைத் தொடர்ந்து பராமரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, பொதுப்பணித்துறை அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் பலர் இருந்தனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள் முன்னிலையில் ரூ.12.98 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை(24.10.2026) திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கிராமப்புற பகுதி மக்களின் வாழ்க்கைத்தரத்தினை மேம்படுத்திடவும், அனைத்து பகுதிகளும் சரிசமமான வளர்ச்சியினை பெற்றிட வேண்டும் என்பதற்காக ஊரக வளர்ச்சித்துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, பள்ளிக்கல்வித்துறை போன்றவற்றின் மூலமாக பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறது.கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை, எளிய பொதுமக்கள் தங்கள் வீட்டு விழாக்களுக்கு தனியார் மண்டபங்களுக்காக அதிக பொருட்செலவு செய்வதனை தடுத்திடவும், குறைந்த கட்டணத்தில் தங்களது பகுதிகளிலேயே விழாக்களை நடத்திக் கொள்வதற்காகவும் சமுதாயக்கூடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உயர்ந்த தரத்திலான கல்வியினை வழங்கிடவும், பல்வேறு போட்டிகளுக்கு மாணவர்களை தயார் படுத்திடவும், பாதுகாப்பான சூழலில் கூடுதலான இட வசதிகளுடன் மாணவர்களின் மனதிற்கு பிடித்த சூழ்நிலையில் கல்வியினை கற்கச் செய்திட வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித்துறையின் மூலம் ஏராளமான உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.குழந்தைகளின் முன்பருவக் கல்வியினை உறுதிப்படுத்திடவும், ஊட்டச்சத்து குறைபாடற்ற ஆரோக்கியமான இளைய தலைமுறையினை உருவாக்கிட வேண்டும் என்பதற்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் வாயிலாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.அதனடிப்படையில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி கண்மாய்பட்டியில் ரூ.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமுதாயக் கூடமும், விருதுநகர் நகராட்சியில் ரூ.4.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வணிக வரித்துறை அலுவலகக் கட்டடம், குல்லூர் சந்தையில் ரூ.20 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையக் கட்டடம், கல்லூரணியில் ரூ.66.30 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கிளை நூலகக் கட்டடம், நடையனேரி, வெள்ளையாபுரம், செட்டிக்குறிச்சி, வீரசோழன், சாலை மறைக்குளம் மற்றம் நாலூரில் ரூ.7.2 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 26 கூடுதல் வகுப்பறைக் கட்டடம் இன்று பொதுமக்கள், மாணவர்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.அரசின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்களை அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி மேம்படுத்திட வேண்டும் என சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் இணை ஆணையர் (வணிக வரித்துறை) திருமதி கீதா, முதன்மை கல்வி அலுவலர் திரு.அரவிந்தன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.சண்முகம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் திருமதி ஷீலா சுந்தரி, மாவட்ட நூலக அலுவலர் திரு.செல்வ சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.