25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Oct 20, 2026

மழைக்காலங்களில் மின்சாதன பயன்பாட்டில் பாதுகாப்பு வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்றிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் தென்மாவட்டங்களில் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மழைக்காலத்தில் மின்விபத்துகள் ஏற்படாமல் தடுக்க பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு அறிவுரைகளை பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.காற்று மற்றும் மழைக்காலங்களில் மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள், மின்பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் செல்ல வேண்டாம். மின்மாற்றிகள், மின்கம்பங்கள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருந்தால் அதன் அருகே செல்லக்கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். மின்கம்பிகள் அறுந்து விழுந்தால் அதன் அருகில் செல்வதோ அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகிலுள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும்வரை வேறு யாரேனும் அந்த மின்கம்பிகளை தொடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.இடி, மின்னலின் போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் அடியிலோ தஞ்சம் புகாதீர்கள். கான்கீரிட் கூரையிலான  கட்டிடங்களில் தஞ்சமடையுங்கள். பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடையுங்கள். இடி, மின்னலின் போது, மின்சாதனங்கள், கைபேசி மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக் கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல் மற்றும் கிரில் அருகில் இருக்கக்கூடாது. மழையின் போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு இருக்குமாயின் அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை அறவே தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளபப்படுகிறது. மேலும் ஈரமான கைகளோடு மின்சாதனங்களை இயக்குவதையும், குழந்தைகள் மின்சுவிட்சுகளுக்கு அருகில் விளையாடுவதையும் தவிர்க்கவும். காற்று மற்றும் மழை காரணமாக மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகளில் விழுந்தால் பொதுமக்கள் தாமாக அவற்றை வெட்டி அப்புறப்படுத்த முயற்சிக்கக் கூடாது. பச்சை மரங்கள் மின்சாரத்தை கடத்தும் தன்மை உடையதால் மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரங்களை வெட்டும் போது மரக்கிளைகள் மின்கம்பியில் பட்டு மரம் வெட்டும் நபருக்கு மின் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மேல்நிலை மின்கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்டுவதற்கு மின்சார வாரிய அலுவலர்களை அணுகவும். மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பத்திற்கு போடப்பட்டுள்ள ஸ்டே வயர்களில் ஆடு, மாடுகளை  கட்டுவதோ, மின்கம்பிகளுக்கு அடியில் கால்நடைகளை கிடை அமர்த்துவதோ, மின்கம்பங்களை பந்தல்களாக பயன்படுத்துவதோ கூடாது. மின்கம்பங்கள், ஸ்டே வயர்கள் மற்றும் சர்வீஸ் பைப்புகளில் கொடிகள் கட்டி துணிகளை காயப்போடுவதோ கூடாது.மின் நுகர்வோர் இருப்பிடத்தில் ஏற்படும் மின் விபத்துக்களை தவிர்க்க அனைத்து மின்இணைப்புகளிலும் மின்கசிவு தடுப்பு கருவியை (RCCB - Residual Current Circuit Breaker) பொருத்த  வேண்டும். மின்கசிவு தடுப்பு கருவியானது மின்இணைப்புகளில் ஏற்படும் மின்கசிவினை கண்டறிந்து உடனடியாக மின்விநியோகத்தை நிறுத்தி மின்விபத்து ஏற்படாமல் தவிர்த்திட ஏதுவாக இருக்கும்.  மேலும், மின்தடை தொடர்பான புகார்களுக்கும், இயற்கை இடர்பாடுகளின் போது அவசரகால உதவிக்கும் மற்றும் மின்விநியோகம் சம்பந்தமானஅனைத்து சேவைகளுக்கும் “மின்னகம்” மின் நுகர்வோர் சேவை மையத்தினை 94987-94987 என்ற எண்ணில்  24 மணி  நேரமும் தொடர்பு கொள்ளலாம்.எனவே, பொதுமக்கள் மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து மின்சார விபத்துக்களை தடுப்பதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 20, 2026

வத்திராயிருப்பு வட்டாரத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாமானது 21.10.2026 மற்றும் 22.10.2026 அன்று நடைபெறவுள்ளது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது 21.10.2026 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 22.10.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது. 21.10.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி  சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.  அதன் ஒரு பகுதியாக, 21.10.2026 மதியம் 02.30 மணிக்கு வத்திராயிருப்பு வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 04.00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.         எனவே, வத்திராயிருப்பு வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அரசு அலுவலர்களிடம்  நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட வழிவகை செய்யும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 17, 2026

செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சி.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சத்திரப்பட்டி ஊராட்சியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பாக வைக்கப்பட்ட தமிழக அரசின் சாதனைகள் விளக்க புகைப்பட கண்காட்சிகளை பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Oct 17, 2026

முன் மாதிரியான சேவை விருதிற்கு குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் .

குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறையின் கீழ் இளைஞர் நீதிச்சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015-ன்கீழ் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பதிவு பெற்று செயல்படும் இல்லங்களுக்கு, குழந்தைகளின் நலனை பேணிக்காப்பதில் திறம்பட செயல்பட்டு வரும் நிறுவனங்கள்/இல்லங்களை அங்கீகரிப்பதற்காகவும், ஊக்குவிப்பதற்காகவும் ஆண்டு தோறும் “முன் மாதிரியான சேவை விருது“- வழங்கப்பட்டு வருகிறது.  அதன்படி, அரசு குழந்தைகள் இல்லங்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1,00,000/-ம்,தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1,00,000/-ம், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்களுக்கு பரிசுத் தொகையாக ரூ.1,00,000/-ம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகுகளுக்கு பரிசுத் தொகையாக ரூ.1,00,000/-ம், என ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.சிறப்பாக பணியாற்றிய ஒரு குழந்தைகள் பராமரிப்பு நிறுவனத்தினை தேர்வு செய்து மாநில அளவிலான ஆய்வுக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்படும். மாநில அளவிலான தேர்வுக்குழுவினரால் சிறந்த அரசு குழந்தைகள் இல்லங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கீழ் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள், சட்டத்திற்கு முரணாக செயல்பட்டதாக கருதப்படும் குழந்தைகளுக்கான இல்லங்கள் என மூன்று வகையில் சிறந்த இல்லங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.இவ்விருதிற்கு விண்ணப்பிப்பதற்கு இளைஞர் நீதிச்சட்டம் (பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகள்) 2015-ன்கீழ் குழந்தைகள் பராமரிப்பு நிறுவனங்கள் பதிவு செய்திருக்க வேண்டும். தொடர்ந்து ஐந்து வருட காலம் செயல்பாட்டில் இயங்கி இருக்க வேண்டும். குழந்தை பராமரிப்பு நிறுவனம் மற்றும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளர்கள் மீதும் எந்தவொரு உரிமையியல் மற்றும் குற்றவியல் தொடர்பான வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கக்கூடாது.விருதுநகர் மாவட்டத்தில் “முன் மாதிரியான சேவை விருது”–க்கு மேற்குறிப்பிட்ட தகுதிகளின் அடிப்படையில் உரிய சான்றுகளின் ஒளிநகல்களுடன் ”மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அறை எண். 503, 5-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர் - 626002 என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ 22.10.2026 அன்று மாலை 5.30 மணிக்குள் சேரும் வகையில் அனுப்படவேண்டும். மேற்குறிப்பிட்ட தேதிக்கு பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Oct 17, 2026

சீர்மரபினர் நலவாரிய இணையத்தில் பதிவேற்றம் செய்யாத உறுப்பினர்கள், உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் சீர்மரபினர் நல அலுவலகத்தினை தொடர்புகொள்ளலாம்.

சீர்மரபினர் நலவாரியத்தில், பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு முதல், விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித் தொகையாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரையிலும், இயற்கை மரணத்திற்கான உதவித்தொகையாக ரூ.30 ஆயிரம் வரையிலும், ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகையாக ரூ.5,000 வரையிலும், கல்வி உதவித்தொகையாக ரூ.1,000 முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும், திருமண உதவித்தொகையாக ரூ.3 ஆயிரம் அல்லது ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகையாக ரூ.6 ஆயிரம், மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடுசெய்தல் ரூ.750, முதியோர் ஓய்வூதியமாக மாதம் ரூ.1,200 என்ற வகையின்படி வழங்கப்படுகிறது.நலத்திட்ட உதவிகள் பெற, சீர்மரபினர் இனத்தைச் சார்ந்தவர்கள் 18 வயது முதல் 60 வயது நிறைவு பெறாதவர்கள், அமைப்புசாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்புசாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடல் உழைப்பு தொழிலில் ஈடு பட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து, நலத்திட்ட உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர். மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், புதுப்பித்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் www.dncwb.tn.gov.in என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.சீர்மரபினர் நலவாரியத்தில், ஏற்கனவே உறுப்பினராக பதிவு பெற்றவர்களின் விவரம், இணையதளத்தில் பதிவேற்றம் செய்திட வேண்டியுள்ளதால், தங்களின் சுய விவரங்களான உறுப்பினர் அடையாள அட்டை நகல், உறுப்பினர் ஆதார் நகல் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் நகல், மொபைல் எண், குடும்ப அட்டை நகல் விவரங்களை, விருதுநகர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் அறை எண்-505-ல் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார். 

Oct 16, 2026

119- வது தேவர் ஜெயந்தி மற்றும் 64-வது தேவர் குருபூஜை மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் தொடர்பானஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக  கூட்டரங்கில், 119-வது தேவர் ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜை விழா மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து, தொடர்புடைய அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில்(15.10.2026) நடைபெற்றது.  119-வது தேவர் ஜெயந்தி மற்றும் 64 -வது குருபூஜை விழா மற்றும் மருது சகோதரர்கள் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தில் BNSS பிரிவு-163(1) ன் கீழ் தடை உத்தரவு அமுலில் உள்ள நிலையில் விழாவிற்கு செல்பவர்கள், பொது மக்களின் நலன் கருதி அரசு அறிவித்துள்ள அனைத்து வழிகாட்டுதல்களையும் அனைவரும் தவறாது கடைபிடிக்க வேண்டும்.  மரியாதை செலுத்த செல்ல விரும்பும் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி தலைவர்கள்/ பிரதிநிதிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் / பிரதிநிதிகள் (5 நபர்களுக்கு மிகாமல்) இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன் அனுமதி மற்றும் வாகனத்திற்கான முன் அனுமதியை 23.10.2026 தேதிக்குள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன் அனுமதி பெற விண்ணப்பிக்க வேண்டும்.அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் செல்லும் பொழுது உடன் 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும்,  மேலும் தலைவர்களுக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.  மரியாதை செலுத்த செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடத்திற்கு சென்று திரும்ப வேண்டும். சட்டம் ஒழுங்கை கருத்திற்கொண்டு காவல்துறையினர் ஏற்படுத்திய சோதனைச் சாவடிகளில் வாகனங்களை சோதனைக்குட்படுத்தி காவல்துறையினரின் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும். சொந்த வாகனங்கள் மூலம் (கார், வேன் மற்றும் பிற இலகு வாகனங்கள் மட்டும்) வருகை தருபவர்கள் வாகன எண், வாகனத்தில் பயணம் செய்வோர் விபரங்களை 23.10.2024 ஆம் தேதிக்கு முன்பாக காவல்துறை மூலமாக வாகன அனுமதி சீட்டு (Vehicle Pass) பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகனத்தில் முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும். வாகன அனுமதிச் சீட்டு இல்லாத வாகனங்கள் பரமக்குடி செல்வதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது.    சொந்த வாகனத்தை வாடகைக்கு விடக்கூடாது. வாகன தணிக்கையின் போது வாகனத்தில் வாகன உரிமையாளர் இருக்க வேண்டும், அசல் ஒட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.வாடகை வாகனங்கள்(T.Board) மற்றும் திறந்த வெளி வாகனங்களில்(Open type)  செல்ல அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், டிராக்டர், டாடா ஏஸ் (TATA ACE) வேன், சைக்கிள் போன்ற வாகனங்களில் செல்லஅனுமதி இல்லை. வாகனத்தின்(பேருந்துக்கள் உட்பட) மேற்கூரை மற்றும் படிக்கட்டுகளில் பயணம் செய்யக் கூடாது. வாகனத்தில் (பேருந்துக்கள் உட்பட) ஆயுதங்கள் ஏதும் எடுத்து செல்லக் கூடாது. அஞ்சலி செலுத்த செல்லும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலிபெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனத்தில்(பேருந்துக்கள் உட்பட)  ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் மேளதாளம் அடித்துச் செல்லக்கூடாது.  வாகனங்களில் செல்பவர்கள் சட்டம் ஒழுங்கு பிரச்சினையில் ஈடுபடும் பட்சத்தில் அவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படுவதுடன் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.  அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் 29.10.2026 மற்றும் 30.10.2026-ம் தேதிகளில் கமுதிக்கு கூடுதல் பேருந்து வசதி செய்து தரப்படும். பசும்பொன் செல்ல கூடுதல் பேருந்து தேவைப்படும் கிராமத்தினர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் பரிந்துரை பெற்று அரசு போக்குவரத்து கழகத்திடம் மனு அளித்திட வேண்டும். அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களிலிருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களிலிருந்து காலை 08.00 மணிக்குள் புறப்பட வேண்டும். வாகனங்களில் (பேருந்துகள் உட்பட) பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடிகள் மற்றும் ஒலிபெருக்கி  ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.  மேலும் ஜோதி தொடர்பான உபகரணங்களை   பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிளக்ஸ் போர்டுகள் வைத்திட அனுமதி இல்லை. மேலும் மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் இருபுறமும் கொடிகள் மற்றும் பிளக்ஸ் பேனர்கள், தோரண வளைவுகள் வைக்க அனுமதி இல்லை. அலங்கார ஊர்தி அணிவகுப்பு, மாட்டு வண்டியில் செல்லுதல், தலைவர்களின்  வேடமணிந்து செல்லுதல், நடைபயணமாக செல்லுதல் ஆகியவற்றிற்கும் அனுமதி இல்லை. வாகனங்களில் சாதி, மத உணர்வுகளைத் தூண்டும் வாசகங்கள் அடங்கிய பேனர்களைக் கட்டி செல்லவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. வாகனங்களில் செல்லும் பொழுது வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நினைத்த இடங்களில் நிறுத்தக் கூடாது. கிராமங்களில் தேவர் ஜெயந்தி விழாவினை முன்னிட்டு நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு சம்மந்தப்பட்ட காவல் நிலையங்கள் / உட்கோட்ட காவல் அலுவலகங்களில் முறையான அனுமதி பெற்று, உள்ளுர் நிலைமைக்கு ஏற்ப காவல் துறையினர் (ம) வருவாய்த்துறையினர் சார்பில் தெரிவிக்கப்படும் நிபந்தனைகளை கடைபிடித்து விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.  மேற்படி நிகழ்ச்சி தொடர்பாக பேனர் மற்றும் கட்அவுட்கள் வைக்கக் காவல் துறையினர் மற்றும் சம்மந்தப்பட்ட துறையினரிடம் முன்அனுமதி பெற்ற பின்னரே  வைக்க வேண்டும்.   அவ்வாறு அனுமதி பெறாமல் வைக்கப்படும் கட்அவுட்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி அகற்றப்படும். மேலும் சுவரொட்டிகள் மற்றும் சுவர் விளம்பரம் செய்வதற்கு அனுமதி இல்லை. மேற்படி விழாவினை முன்னிட்டு அன்னதானக்கூடம் அமைப்பவர்கள் காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரிடம் முறையான முன் அனுமதி பெற்று, பின்பு மேற்படி அன்னதானகூடம் அமையவுள்ள இடமானது புலத்தணிக்கை செய்த பின்னரே அன்னதாகக்கூடம் அமைக்கப்பட வேண்டும். அன்னதானக் கூடத்தில் வழங்கப்படும் உணவுகளை, உணவு கட்டுப்பாட்டு துறையினர் மூலம் பரிசோதனை செய்த பின்னரே பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும். அன்னதானக்கூடத்திற்கு அமைக்கப்படும் பந்தல்களுக்கு உறுதித்தன்மை சான்றிதழ் பொதுப்பணித்துறையினரிடமிருந்தும், மின்சாரத்துறையினயிடமிருந்து மின்னழுத்த நிலைத்தன்மை சான்றிதழ் பெறப்பட வேண்டும். மேலும் அன்னதானப்பந்தல்கள் அமையவுள்ள இடத்திற்கு முன்பாக வாகனங்கள் நிறுத்துவதற்கு முறையான இடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும்.மேற்கூறிய விதிமுறைகளை மீறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட நபர்களின் மீதும், அமைப்புகள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.பசும்பொன் தேவர் நினைவிடத்திற்கு செல்பவர்கள் காவல்துறையால் அனுமதிக்கப்பட்ட கீழ்கண்ட வழித்தடங்களில் மட்டுமே செல்லவேண்டும்.1. இராஜபாளையம் -திருவில்லிபுத்தூர்- சிவகாசி - சாத்தூர்- விருதுநகர் - தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் திருநெல்வேலி ஆகிய பகுதிகளிலிருந்து புறப்படும் பசும்பொன் செல்லும் வாகனங்கள் (அருப்புக்கோட்டை - காந்தி நகர் - இராமலிங்கா மில் - கல்லூரணி - எம்.ரெட்டியபட்டி - மண்டபசாலை - கமுதி விலக்கு (கானாவிலக்கு) - கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே  மீண்டும் திரும்ப வேண்டும்.)2. ஆவியூர், காரியாபட்டி, மல்லாங்கிணறு, கல்குறிச்சி பகுதியிலிருந்து வரும் வாகனங்கள் கல்குறிச்சி - பாலையம்பட்டி பை-பாஸ் - காந்தி நகர்-  இராமலிங்கா மில், கல்லூரணி - எம்.ரெட்டியபட்டி - மண்டபசாலை - கமுதி விலக்கு (கானாவிலக்கு)  - கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே  மீண்டும் திரும்ப வேண்டும்.  3. திருச்சுழியிலிருந்து வரும் வாகனங்கள் இராமலிங்கா மில், கல்லூரணி, கமுதி விலக்கு (கானாவிலக்கு), கமுதி வழியாக பசும்பொன் சென்று அந்த வழியே  மீண்டும் திரும்ப வேண்டும்.4. நரிக்குடியிலிருந்து வரும் வாகனங்கள் வீரசோழன் விலக்கு, பிடாரிசேரி, பார்த்திபனூர், அபிராமம் வழியாக பசும்பொன் சென்றடைய வேண்டும். பின்னர் மீண்டும் திரும்பும்பொழுது, பசும்பொன் - கோட்டைமேடு - நகரத்தார்குறிச்சி -அபிராமம் வழியாக பார்த்திபனூர் - பிடாரிசேரி - வீரசோழன் விலக்கு வழியாக வரவேண்டும்.மேற்படி விழாவிற்கு செல்லும் வாகனங்கள் கண்டிப்பாக முத்துராமலிங்கபுரம்-புதூர், மண்டலமாணிக்கம் வழியாக செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.எனவே, இவ்விழாவினை அமைதியான முறையில் நடத்திட அனைவரும் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல் இ.கா.ப., மாவட்ட வருவாய் அலுவலர் திரு.ஆனந்தி, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)(பொருப்பு) திரு.சோமசுந்தர சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர்கள், காவல் துணை கண்காணிப்பாளர்கள், வட்டாட்சியர்கள், அரசு அலுவலர்கள், சமுதாய தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 16, 2026

தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டுமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இரத்ததானம் முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேசிய தன்னார்வ இரத்ததான தினத்தினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் இரத்ததானம் முகாம் அமைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை (15.10.2026) வழங்கினார்.ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1-ஆம் நாள் தேசிய தன்னார்வ இரத்ததான தினமாக கொண்டாடப்படுகிறது. மனித நேயத்திற்காக ஒரு துளி குருதியைக் கொடுத்து மனித உயிர்களை காப்பாற்றுவோம் என்பதனை மையக்கருப்பொருளாகக் கொண்டு இவ்வாண்டு கொண்டாடப்படுகிறது. தமிழகம் இந்திய அளவில் குருதிக்கொடையில் 99% பங்களிப்புடன் முதலிடம் வகிக்கின்றது.விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, சிவகாசி தலைமை மருத்துவமனை, அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை, ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை, இராஜபாளையம் அரசு மருத்துவமனை ஆகியன இரத்த சேமிப்பு மையங்களாக செயல்பட்டு வருகிறது.கடந்த 2025-2026 ஆம் நிதியாண்டில் அரசு மருத்துவமனைகள் மூலமாக 4,709 யூனிட் இரத்தமும், 227 இரத்ததான முகாம்களின் வாயிலாக 14,354 யூனிட் இரத்தம் என 19,063 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது. இதில் 227 இரத்ததான முகாமினை ஏற்பாடு செய்த 106 முகாம் அமைப்பாளர்கள், 19 இளம் இரத்தகொடையாளர்கள் என மொத்தம் 125 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.முகாம் அமைப்பாளர்கள் குருதிக் கொடையாளர்களுக்கு வழிகாட்டியாவும், ஊக்கப்படுத்தியும் எவ்வித எதிர்பார்ப்புமின்றி செயல்பட்டு வருகின்றனர். இளம் கொடையாளர்கள் வருங்கால இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும், முன்மாதிரியாகவும் செயல்படுவதனால் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.இரத்தகொடையாளர்களிடமிருந்து தானமாக பெறப்படும் இரத்தமானது பேறுகால சிகிச்சைகளுக்கும், விபத்தினால் ஏற்படும் இரத்த இழப்பினை ஈடுசெய்யவும், பல்வேறு வகையான அறுவை சிகிச்சைகளுக்கும் மற்றும் நோய் பாதிக்கப்பட்டவருக்கு இரத்த தட்டணுக்கள் வழங்கி உயிர் காக்க பயன்படுத்தப்படுகிறது. தற்போது ஒருவரிடமிருந்து பெறப்படும் இரத்தமானது 4 உயிர்களை காப்பாற்ற உதவுகிறது. குருதிப் பகுப்பாய்வின் மூலம் இரத்தக்கூறுகள் பிரிக்கப்பட்டு பல்வேறு மருத்துவ சிகிச்சைக்கு பயன்படுத்தப்படுகிறது.மேலும், பேறுகாலத்தின் போது தாய் மற்றும் சேய் இழப்பினை தடுக்கும் பொருட்டு அனைத்து மேம்படுத்தப்பட்ட மற்றும் வட்டார தலைமை மருத்துவமனைகளில் இரத்த சேமிப்பு மையங்கள் 12 இடங்களில் செயல்படுகிறது. மாவட்டத்தில் ஒவ்வொரு கல்லூரியிலும் செயல்படும் செஞ்சுருள் சங்கத்தின் மூலம் இரத்தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இளைஞர்கள் ஊக்குவிக்கப்படுகின்றன. இ-ரக்டோஸ் (E-Raktkosh) இணையதளத்தில் தன்னார்வ இரத்ததான கொடையளர்களின் விவரங்களை பதிவு செய்து இந்திய நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே தளம் என்ற கொள்கையை கொண்டு இரத்த வளங்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.நிகழ்ச்சியில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் இரா.அமுதாராணி, இணை இயக்குநர்(மருத்துவ நலப்பணிகள்) ஆ.காளிராஜ், மருத்துவமணை துணைக் கண்காணிப்பாளர் திரு. அரவிந்த்பாபு, அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் வைஷ்ணவி, மாவட்ட குருதி பரிமாற்று அலுவலர் ஆனந்தீஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 16, 2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் வருவாய் கோட்டங்களில் 27.10.2026 அன்று முற்பகல் 11.00 மணி அளவில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் உதவி ஆட்சியர் சிவகாசி, வருவாய் கோட்டாட்சியர் அருப்புக்கோட்டை மற்றும் சாத்தூர் அவர்களின் தலைமையில் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. கோட்ட அளவிலான கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன், விவசாயம் மற்றும் தனி நபர் தொடர்பான மனுக்களை வருவாய் கோட்டாட்சியர்களிடம் நேரடியாக அளித்து தீர்வு காணவும், வட்டார அளவிலான விவசாயம் மற்றும் விவசாயம் சாராத மனுக்களுக்கு விரைந்து தீர்வு காணப்பட்டு, அந்த மனு மீதான நடவடிக்கை விபரத்தினை மனுதாரருக்கு தெரிவித்திடவும் அனைத்து துறை அலுவலர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.

Oct 15, 2026

அருப்புக்கோட்டை ஆத்திபட்டியில் விழுதுகள் அருகாமை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் திறந்து வைத்தார்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஆத்திபட்டியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விழுதுகள் அருகாமை சேவை மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (14.10.2026) திறந்து வைத்தார்.தமிழ்நாடு அரசு, மாற்றுத்திறனாளிகளின் நலன் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விழுதுகள் அருகாமை சேவை மையங்கள் மாவட்டத்தில் மொத்தம் 39 இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது. அதில் முதற்கட்டமாக அருப்புக்கோட்டை ஒன்றியத்தில் ஆத்திப்பட்டி, பாளையம்பட்டி மற்றும் திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மேலையூர் ஆகிய 3 இடங்களில் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு என்ன தேவை என்பதை அவர்களை தேடிச் சென்று வழங்குவதே இதன் நோக்கமாகும். இந்த மையங்களில் மாற்றுத்திறனாளிகளின் தேவைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் மற்றும் சேவைகளை ஒருங்கிணைத்து வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும், தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டம் 13 வட்டாரங்களாக பிரிக்கப்பட்டு, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, நரிக்குடி, திருச்சுழி, விருதுநகர்- கன்னிசேரிபுதூர், இராஜபாளையம், வெம்பக்கோட்டை-கல்லமநாயக்கன்பட்டி, சிவகாசி(நகரம்) ஆகிய 8 இடங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.எனவே, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இம்மையத்தின் சேவைகளைப் பயன்படுத்திக்கொண்டு, அரசின் நலத்திட்ட உதவிகளைப் பெற்று தங்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாற்றுத்திறனாளி நல அலுவலர் திரு.பிரம்மநாயகம், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Oct 15, 2026

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ.18.66 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், பே.புதுப்பட்டி கிராமத்தில்,  மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள்  தலைமையில்,  மக்கள் தொடர்பு திட்ட முகாம் (15.10.2026) நடைபெற்றது.தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.இம்முகாமில், சமூகப்பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 34 பயனாளிகளுக்கு ரூ.3.14 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள், 5 பயனாளிகளுக்கு உழவர் அட்டைகள், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 29 பயனாளிகளுக்கு ரூ.10.30 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்கள், 20 பயனாளிகளுக்கு நத்தம் பட்டாக்கள், 5 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகள், 50 பயனாளிகளுக்கு மின்னணு குடும்ப அட்டைகள், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 33 பயனாளிகளுக்கு   இணைய வழி பட்டாக்கள், ஒரு பயனாளிக்கு ரூ.5207 மதிப்பில் இலவச தையல் இயந்திரம், வேளாண்மைத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.16,200/- மதிப்பிலான இடுபொருட்கள், தோட்டக்கலைத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4700/- மதிப்பில் மரக்கன்றுகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1.91 இலட்சம் மதிப்பில் பவர் டிரில்லர்கள், சுகாதாரத்துறை சார்பில் 3 கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.6000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகங்கள், 15 பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டைகள், 2 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.3 இலட்சம் மதிப்பில் சமுதாய முதலீட்டு கடனுதவிகள் என மொத்தம் 204 பயனாளிகளுக்கு ரூ.18.66 இலட்சம் மதிப்பிலான  அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.     மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டும், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து பயன்பெற வேண்டும். மேலும் மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து,  மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஜான்சன் தேவசகாயம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ.,) திருமதி அ.அம்சவேணி, தோட்டக்கலைத்துறை  துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், தாட்கோ மேலாளர் திருமதி இந்திரா காந்தி, திருச்சுழி வட்டாட்சியர் திரு.கருப்பசாமி, அரசு அலுவலர்கள்,  பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 2 3 4 5 6 7 8 9 10 ... 157 158

AD's



More News