விருதுநகர் மாவட்டத்தில் தற்பொழுது வடகிழக்கு பருவமழை துவங்கி பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நெல், மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு, பருத்தி மற்றும் சூரியகாந்தி பயிர்கள் சாகுபடி துவங்கப்பட்டுள்ளது. பயிர்களுக்கு தேவையான இரசாயன உரங்கள் யூரியா 3742 மெ.டன், டிஏபி 1628 மெ.டன், பொட்டாஷ் 358 மெ.டன், காம்ப்ளக்ஸ் 1875 மெ.டன் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் 288 மெ.டன் தனியார் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் விற்பனை நிலையங்களிலுள்ள உர இருப்பு விலைப்பட்டியலை தினசரி விலை விவரம் பலகையில் எழுதி விவசாயிகளுக்கு தெளிவாக தெரியும்படி விலை பலகை வைக்க வேண்டும். விவசாயிகளிடம் ஆதார் எண் பெற்று விற்பனை முனையக்கருவி (POS) மூலம் உரிய விலைப்பட்டியலிட்டு உரம் விநியோகம் செய்திட வேண்டும். இராபி பருவம் தொடங்கி உள்ளதால் மாவட்டத்தில் உரத்தினை MRP-ஐ விட கூடுதல் விலைக்கு விற்பனை செய்யக்கூடாது. யூரியா உடன் இணை பொருட்களை இணைத்து வழங்கக்கூடாது. மேற்கண்ட அறிவுரைகளை பின்பற்ற தவறினாலோ அல்லது பராமரிப்பில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ உரக்கட்டுப்பாட்டு ஆணை -1985ன் கீழ் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தங்களது விற்பனை உரிமம் நிரந்தரமாக இரத்து செய்யப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் செல்வி ச.கீர்த்தனா அவர்கள் மற்றும்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் ஆகியோர் முன்னிலையில் 19 புதிய நகரப்பேருந்து சேவைகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு (23.10.2026) தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.பொதுமக்களின் போக்குவரத்து வசதியினை மேம்படுத்திடவும், பாதுகாப்பான போக்குவரத்தினை உறுதி செய்திடவும் அதிக முன்னுரிமை எடுத்து விபத்தில்லா தமிழகம் என்ற நிலையினை எய்திட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். கிராம பொதுமக்கள் பணியின் காரணமாக நகரங்களுக்கும், நகரங்களை கிராமங்களோடு இணைப்பதற்கும் பொது போக்குவரத்துத்துறையின் செயல்பாடுகள் இன்றியமையாததாக உள்ளது.கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்காக அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதனடிப்படையில், இன்று விருதுநகர் கிளையிலிருந்து விருதுநகர் -சிவகாசி/திருமங்கலம், விருதுநகர் – சிவகாசி/அருப்புக்கோட்டை, விருதுநகர் – சிவகாசி/திருமங்கலம், விருதுநகர்-சாத்தூர்/திருமங்கலம், விருதுநகர்-சாத்தூர்/திருமங்கலம் ஆகிய வழித்தடங்களுக்கு 5 பேருந்துகளும், அருப்புக்கோட்டை கிளையிலிருந்து அருப்புக்கோட்டை-விருதுநகர், அருப்புக்கோட்டை-விருதுநகர், அருப்புக்கோட்டை-விருதுநகர்/சாத்தூர், அருப்புக்கோட்டை – நரிக்குடி ஆகிய வழித்தடங்களுக்கு 4 பேருந்துகளும், சாத்தூர் கிளையிலிருந்து சாத்தூர்-சிவகாசி/திருத்தங்கல் வழித்தடத்திற்கு 1 பேருந்தும், சிவகாசி கிளையிலிருந்து சிவகாசி-விருதுநகர், சிவகாசி-திருவில்லிபுத்தூர், சிவகாசி-திருவேங்கடம் ஆகிய வழித்தடங்களுக்கு 3 பேருந்துகளும், திருவில்லிபுத்தூர் கிளையிலிருந்து திருவில்லிபுத்தூர்-சிவகாசி, திருவில்லிபுத்தூர்-சிவகாசி ஆகிய வழித்தடங்களுக்கு 2 பேருந்துகளும், இராஜபாளையம் கிளையிலிருந்து இராஜபாளையம்-சங்கரண்கோவில் வழித்தடத்திற்கு 1 பேருந்தும், காரியாபட்டி கிளையிலிருந்து காரியாபட்டி- பெரியார், காரியாபட்டி-பெரியார்-கம்பிக்குளம், காரியாபட்டி-பெரியார் ஆகிய வழித்தடங்களுக்கு 3 பேருந்துகளும் என ஆக மொத்தம் 19 புதிய நகரப்பேருந்துகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டுள்ளது.மேலும், காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த பேருந்து சேவை பெரிதும் பயனளிக்கும். மாணவர்கள் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், பணியாளர்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும் இந்த பேருந்து சேவை உதவிகரமாக அமையும்.எனவே, பொதுமக்கள் இப்பேருந்து வசதியினை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் தெரிவித்தனர்.நிகழ்வில், விருதுநகர் மண்டல பொது மேலாளர் திரு.கண்ணன், உதவி மேலாளர் (வணிகம்) திரு.நாகராஜ், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் வட்டம் மேட்டமலை கிராமத்தில் கனமழையில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 இலட்சத்திற்கான நிவாரணத்தொகை ஆணையினை (23.10.2026) வழங்கினார்.சாத்தூர் வட்டம் மேட்டமலை கிராமத்தில் திரு.செல்வம் என்பவரின் வீட்டில் அவர், அவரது மனைவி திருமதி சோலையம்மாள், மகன் செல்வன் ஆதிராஜ், மகள் செல்வி முத்துசெல்வி என மொத்தம் 4 நபர்கள் வசித்து வந்தனர். கடந்த 22.10.2026 அன்று சாத்தூர் வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக அவரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்து அவரது மகள் செல்வி முத்துசெல்வி(16) என்பவர் மரணமடைந்தார். அவரது மனைவி சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் சிகிச்சை பெற்று வரும் மரணமடைந்த செல்வியின் தாயார் திருமதி சோலையம்மாள், தந்தை மற்றும் சகோதரர் ஆகியோரை சந்தித்து அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.மேலும், அவர்களது குடும்பத்திற்கு பேரிடர் நிவாரணத்தொகை ரூ.4 இலட்சத்திற்கான ஆணையினையும் மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில் அரசு மருத்துவர்கள், அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகள் மற்றும் முதியோர் பாதுகாப்பு, போதை பொருட்கள் ஒழிப்பு கிராம அளவிலான கண்காணிப்பு குழு தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம அளவில் பொதுமக்களுடன் நேரடித் தொடர்பில் இருப்பதால், இத்தகைய சமூகப் பிரச்சினைகளைக் கண்டறிவதில் அவர்களின் பங்கு முக்கியமானதாகும். எனவே, கிராம அளவிலான கண்காணிப்புக் குழுவின் நோக்கங்கள், செயல்பாடுகள், பல்வேறு துறைகளுடன் ஒருங்கிணைந்து பணியாற்றும் முறைகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளைப் பெற்றுத் தருவதற்கான வழிமுறைகள் குறித்து அலுவலர்கள் தெளிவான புரிதலைப் பெற்றிருக்க வேண்டும்.மாவட்டத்தில் உள்ள குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியோர் பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையில் குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்கொடுமை, பள்ளி இடைநிற்றல், குழந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பு, பெண்கள், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் பாதுகாப்பு, போதைப் பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் மற்றும் கிராமப்புற மேம்பாடு குறித்து மாவட்டத்தில் பணிபுரியும் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.இப்பயிற்சி வகுப்பில் சாத்தூர் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட விருதுநகர், சாத்தூர், வெம்பக்கோட்டை வட்டங்களில் பணிபுரியும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கான கிராம கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு ( Village Vigilance Committee) மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு ( Village Level Child Protection Committee) கூட்டம் குறித்த திறன் வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது.மேலும், இனிவரும் காலங்களில் ஒவ்வொரு மாதமும் 4-வது புதன் கிழமையன்று கிராம கண்காணிப்பு குழு ( Village Vigilance Committee) மற்றும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு ( Village Level Child Protection Committee) கூட்டம் நடைபெறும். இதில் மேற்கண்ட செயல்பாடுகள் குறித்து விவாதித்து புகார்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்.இப்பயிற்சியின் மூலம் கிராம நிர்வாக அலுவலர்களின் செயல்திறனை மேம்படுத்தி, குழந்தைகள் மற்றும் முதியோர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, போதைப்பொருட்கள் இல்லாத பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) (பொறுப்பு) திரு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் திருமதி மீனாட்சி, திட்ட இயக்குநர் (ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள்) திருமதி ஷீலா சுந்தரி, கிராம நிர்வாக அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்த கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாக்காளர் பட்டியல் சிறப்புத்திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்,மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S, அவர்கள் தலைமையில் (23.10.2026) நடைபெற்றது.இந்திய தேர்தல் ஆணையம் 01.01.2027 தேதியினை தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களைத் திருத்தம் செய்வதற்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகளை (SSR) மேற்கொள்ளும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் கட்டமாக இளம் வாக்காளர்கள் /முதல்முறை வாக்காளர்கள் சேர்த்தல் மற்றும் வாக்குச்சாவடிகளை மறுசீரமைத்தல் செய்வதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் எந்தவொரு வாக்குச்சாவடியிலும் 1200 வாக்காளர்களுக்கு மேற்படாமல் இருக்க வேண்டும் என ஆணையம் வலியுறுத்தி வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஏழு சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு அலுவலர்கள் சட்டமன்றத் தொகுதிக்கான வாக்குச்சாவடிகள் மறுசீரமைப்பு தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி, அது குறித்த பரிந்துரைகளை வழங்கி உள்ளனர்.விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 7 சட்டமன்றத் தொகுதிகளில் இதுவரை 2001 வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், தற்போது மறுசீரமைப்பு செய்ய உத்தேசித்துள்ளதன் அடிப்படையில் கூடுதலாக 17 வாக்குச்சாவடிகள் உருவாக்கம் செய்யப்பட உள்ளது.தேசிய அளவில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் பணி 02.11.2026க்குள் முடிக்க வேண்டும் என்றும், ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியலை 12.11.2026 அன்று வெளியிடபடும் எனவும், திருத்தம் தொடர்பான விண்ணப்பங்களை (சேர்த்தல், நீக்கல், திருத்தம்) 12.11.2026 முதல் 11.12.2026 க்குள் பெற்று 28.12.2026 க்குள் தீர்வு காணப்படும் என்றும், 04.01.2027 அன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் எந்தவொரு தகுதியான வாக்காளரும் விடுபடாமலும், தகுதியற்ற ஒருவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெறாத வகையில் இப்பணிகள் நடைபெற உள்ளது.வாக்குச்சாவடி முகவர்களை நியமிக்காத அரசியல் கட்சியினர்கள் வாக்குச்சாவடி முகவர்களை விரைவாக நியமனம் செய்திட வேண்டும். வாக்குச்சாவடி முகவர்களில் மாற்றம் இருப்பின் திருத்தம் செய்து வழங்கிட வேண்டும்.வாக்காளர் பட்டியலில் திருத்தப் பணிகளை தரமாகவும் சரியான முறையிலும் மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் தகுந்த ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சோமசுந்தர சீனிவாசன், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், வருவாய் வட்டாட்சியர்கள், மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பாரதி நடராஜன் அரங்கில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி மற்றும் விற்பனையினை கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை அரசு செயலர் திருமதி ஆர்.லில்லி I A S., அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் (22.10.2026) குத்து விளக்கேற்றி முதல் விற்பனையினை தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி கைத்தறி துணி வகைகளின் விற்பனையை அதிகரிக்கும் பொருட்டு விருதுநகர் சரக கைத்தறி துறையால் தமிழ்நாடு அரசு கைத்தறித் துறை மற்றும் மத்திய அரசு ஜவுளித்துறை கைத்தறி வளர்ச்சி ஆணையம் மூலமாக மாநில கைத்தறிக் கண்காட்சி நடைபெறுகிறது. இக்கண்காட்சியில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களிலுள்ள 80 கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள்/அமைப்புகள் பங்கு பெற்றுள்ளன.இங்கு 60 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ரூ.4.00 கோடி அளவிலான கைத்தறித் துணி இரகங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கண்காட்சியில் ரூ.1.50 கோடி அளவிலான விற்பனை இலக்கு எட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இக்கண்காட்சியில், உலக புகழ் பெற்ற காஞ்சிபுரம் அசல் பட்டு சேலைகள், திருப்புவனம் பட்டு சேலைகள், கோவை கோரா காட்டன், நெகமம் காட்டன் மற்றும் மென்பட்டு சேலைகள், திண்டுக்கல் காட்டன் சேலைகள், பரமக்குடி பம்பர் காட்டன் சேலைகள், சேலம் வெண்பட்டு வேஷ்டிகள், ஈரோடு மற்றும் கரூர் பெட்சீட்டுகள், ஜமுக்காளம், போர்வைகள், தலையணை உறைகள், மெத்தை விரிப்புகள், ஸ்கிரீன் துணிகள், மதுரை சுங்குடி காட்டன் புடவைகள், குறிஞ்சிப்பாடி லுங்கிகள், நாகர்கோவில் வடசேரி கைத்தறி வேட்டிகள், லுங்கிகள், துண்டுகள் போன்ற ஏராளமான இரகங்களுடன் அழகிய காஷ்மீர் சால்வைகள், ஆந்திரா மங்களகிரி சேலைகள், உத்திரகாண்ட் சில்க் புடவைகள், ஹரியானா பெட்ஷீட்கள், மணிப்பூர் சேலைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களால் தயார் செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் ஆகியவை காட்சிப்படுத்தி விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் பருத்தி இரகங்களுக்கு 30% (அதிகபட்சம் ரூ.150/- வரை), பட்டு இரகங்களுக்கு ரூ.300/-ம் அரசு தள்ளுபடியாக வழங்கப்படுகிறது.இக்கண்காட்சியானது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பாரதி நடராஜன் அரங்கத்தில் 22.10.2026 முதல் 05.11.2026 முடிய 14 நாட்கள் தினமும் காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நடைபெற உள்ளது. இக்கண்காட்சியில் பொது மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும் நெசவாளர்களின் தொழில்களைப் பாதுகாத்திடவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றிடவும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என கைத்தறி, கைத்திறன், துணி நூல் மற்றும் கதர் துறை அரசு செயலர் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில் விருதுநகர் சரக உதவி இயக்குநர் திரு.வே.சேரன் அவர்கள் மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், அரசு அலுவலர்கள், நெசவாளர் கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் நோயாளிகள் நலச்சங்க கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தலைமையில் (22.10.2026) நடைபெற்றது.அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்தவும், மருத்துவமனையின் சேவைகளின் தரத்தை உயர்த்திட அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச்சங்கம் செயல்படுகிறது. இதன் முக்கிய நோக்கம், அரசிடமிருந்து ஒதுக்கப்பட்ட நிதி செலவினங்கள் குறித்தும், மருத்துவமனைக்கு தேவையான வசதிகள், உபகரணங்கள் உள்ளிட்ட மருத்துவமனையின் தேவைகளைக் கண்டறிந்து அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வதாகும்.இன்று நடைபெற்ற கூட்டத்தில் நோயாளிகள் நலச்சங்கத்தின் வாயிலாக மருத்துவமனையின் தேவைகளைக் கண்டறிந்து, நோயாளிகளின் நலன் மற்றும் மருத்துவச் சேவைகளின் மேம்பாட்டிற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது.அதன்படி மருத்துவமனைக்குத் தேவையான இதய செயல்திறன் பரிசோதனைக்கருவி, பிரேதங்களைப் பாதுகாக்கும் குளிர்சாதனப்பெட்டி, அறுவை சிகிச்சைக்கு தேவையான உபகரணங்கள், உள் நோயாளிகளுக்கு உணவு வழங்கிட ஏதுவாக மாவு அரைக்கும் இயந்திரம், இசிஜி இயந்திரம், கர்ப்பிணி தாய்மார்கள் பரிசோதனைக் கருவி (Fetal Doppler), பல் சிகிச்சை இருக்கை, சலவை இயந்திரம், கண்புரை நோய் அறுவை சிகிச்சை கருவி, குளிரூட்டும் பெட்டிகள், நோயாளிகள் பரிசோதனை மேஜை, மயக்க மருந்து பணி நிலையம் (Anesthesia work station), இரத்த பரிசோதனை கருவி, மின் தூக்கி பழுது சரிசெய்தல், நோயாளிகளுக்கான கட்டில்கள், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை கருவி, அவசரகால படிக்கட்டு கட்டுதல், புதிய கட்டிடங்களுக்கு ஆக்ஸிஜன் வசதிகளை ஏற்படுத்துதல், குடிநீர் தொட்டி, கண்காணிப்பு கேமரா, அறிவிப்பு பலகை நிறுவுதல், பிணவறையை மாற்றுதல் உள்ளிட்ட 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்களின் மருத்துவ சேவைகள் சிறப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. விதிமுறைகளுக்கு உட்பட்டு கிடைக்கும் நிதியைப் பயன்படுத்தி நோயாளிகளுக்குத் தேவையான வசதிகளை மேம்படுத்துதல், ஒவ்வொரு மருத்துவமனைக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் சில உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து பட்டியலிடப்பட்டு, சமூக பொறுப்புணர்வு நிதி மூலம் முன்னுரிமை அடிப்படையில் செய்து தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பிரிவுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களிடம் கலந்துரையாடினார்.இந்நிகழ்வில், இணை இயக்குநர்(மருத்துவப்பணிகள்) மரு.காளிராஜ், மருத்துவத்துறை அலுவலர்கள் மற்றும் நோயாளிகள் நலச்சங்க ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் (21.10.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதனடிப்படையில், (21.10.2026) விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதன்படி, பசுமை பரப்பை அதிகரிக்கும் நோக்கில் குன்னூர் ஊராட்சியில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் வளர்க்கப்பட்டு வருவதையும், ரெங்கப்ப நாயக்கன்பட்டி ஊராட்சியில் பெருமளவு மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பிளவக்கல் பெரியாறு அணையின் நீர் இருப்பு, வரத்து மற்றும் மதகுகளின் பராமரிப்பு செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகள் முறையே 13.90 சதுர மைல் 9.57 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதி கொண்டவை. பிளவுக்கல் பெரியாறு அணையின் முழுக்கொள்ளளவு 192.00 மில்லியன் கனஅடியும், பிளவுக்கல் கோவிலாறு அணையின் முழுக்கொள்ளளவு 133 மில்லியன் கனஅடியும் ஆகும். இத்திட்டத்தின் கீழ் நேரடி கால்வாய் மற்றும் 40 கண்மாய்களுக்கு பாசனத்திற்கு நீர் வழங்கப்பட்டு இதன் வாயிலாக 8531.17 ஏக்கர் நிலத்திற்கு பாசன வசதி கிடைக்கும். பெரியாறு அணையில் தற்பொழுது 50.85 மில்லியன் கனஅடி நீரும், கோவிலாறு அணையில் தற்பொழுது 8.02 மில்லியன் கன அடி நீரும் இருப்பில் உள்ளது. மேலும் பெரியாறு அணைக்கு வினாடிக்கு 14.43 கனஅடி நீரும், கோவிலாறு அணைக்கு 0.08 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.மேலும், ரூ.10 கோடி மதிப்பில் பிளவக்கல் பூங்கா புணரமைக்கப்பட்டு வரும் பணிகள் குறித்தும், மீன்வளர்ப்பு பண்ணையின் மூலம் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகள் மற்றும் பிற மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவது குறித்தும், அதன் செயல்பாடுகள் மற்றும் விற்பனை இலக்குகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.மாவட்டத்தில் நரிக்குடி, வத்திராயிருப்பு, திருவல்லிபுத்தூர், சிவகாசி, திருச்சுழி, விருதுநகர், இராஜபாளையம், காரியாபட்டி, வெம்பக்கோட்டை, சாத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை ஆகிய 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 601 கிராமங்களில் 6,63,595 புல உட்பிரிவுகளில் உள்ள நிலங்களில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 5,60,371 புல எண்கள் கணக்கெடுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,03,224 புல எண்கள் கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் உள்ள 23 கிராமங்களில் உள்ள 64,932 புல உட்பிரிவுகளில் உள்ள நிலங்களில் கணக்கீடு பணிகள் நடைபெற்று வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.இதில் 40,521 புல எண்கள் கணக்கீடு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 24,411 புல எண்களில் உள்ள பயிர்கள் இணையவழி கணக்கீடு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.வத்திராயிருப்பு கிளை நூலகத்தில் கூடுதல் கட்டிடத்தில் ரூ.9.70 இலட்சம் மதிப்பில் மேற்கூரை அமைக்கப்பட்டு வரும் பணிகள், வத்திராயிருப்பு பேரூராட்சி, ஆகாசம்பட்டி அங்கன்வாடி மையத்தில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஊட்டச்சத்து உணவுகள், குழந்தைகளின் வயதுக்கேற்ற உயரம் மற்றும் எடை, வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள், மதிய உணவுத்திட்டம், மாணவர்களுக்கு கற்றல், கற்பித்தல் செயல்பாடுகள் குறித்தும், வத்திராயிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடையினை பார்வையிட்டு பொருள்களின் தரம் மற்றும் இருப்பு, பயன்பெறும் குடும்ப அட்டைதாரர்களின் எண்ணிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து வத்திராயிருப்பு கால்நடை மருந்தகம் ஆய்வு செய்யப்பட்டது. இப்பகுதிகளில் 23,120 மாடுகள், 28,580 செம்மறியாடுகள், 32,300 வெள்ளாடுகள் என மொத்தம் 84,000 கால்நடைகள் உள்ளன. மேலும், 16,600 கோழிகளும், 430 வளர்ப்பு நாய்களும் உள்ளன. இப்பகுதியில் அதிக எண்ணிக்கையில் கால்நடைகள் வளர்க்கப்படுவதைக் கருத்தில் கொண்டு, கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் மருத்துவச் சிகிச்சை வழங்குதல், நோய்கள் பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல், தேவையான தடுப்பூசிகளைச் செலுத்துதல் மற்றும் கால்நடை வளர்ப்போருக்கு உரிய மருத்துவ ஆலோசனைகளை வழங்குதல் ஆகியவற்றின் முக்கியத்துவம் குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், வத்திராயிருப்பு அரசு போக்குவரத்து பணிமனை ஆய்வு செய்யப்பட்டது. இந்த பணிமனையிலிருந்து 7 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் பேருந்து பராமரிப்பு, எரிபொருள் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.எனவே, அரசின் பல்வேறு துறைகள் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகளை எந்த ஒரு தொய்வின்றி பயனாளிகள் மற்றும் பொதுமக்களை சென்றடைவது உறுதி செய்ய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.பின்னர், நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அனைத்து ஊராட்சிகளில் மேற்கொள்ள வேண்டிய குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் உரிய பயனாளிகளை சென்றடைவதை உறுதி செய்வது குறித்து அனைத்து அரசு அலுவலர்களுடன் கலந்துரையாடி அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ஆனந்தி, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) திருமதி மோகனா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அனைத்து அரசுத்துறை உயர் அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் விருதுநகர் கூட்டுறவு அங்காடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.செல்வம் அவர்கள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு கூட்டுறவு அமுதம் அங்காடிகள் மூலம் கிலோ ரூ.30-க்கு சன்னரக அரிசி விற்பனை செய்யும் திட்டத்தினை (19.10.2026) தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அரிசி விலை உயர்வை கட்டுபடுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான அரிசி கிடைப்பதை உறுதிபடுத்தும் வகையிலும் விலை நிலைப்படுத்தும் திட்டத்தின் கீழ் “ஏ” தர சன்னரக அரிசியை கூட்டுறவு பண்டக சாலை வாயிலாக பொதுமக்களின் தேவைக்கேற்ப அதிகபட்சமாக குடும்பம் ஒன்றுக்கு 5 கிலோ வீதம் 1 கிலோ ரூ.30 என்ற விலையில் வழங்கிட ஆணை பிறப்பித்துள்ளார்கள். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இன்றையதினம் முதல் இத்திட்டத்தினை விரிவுபடுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெங்காயம் விலை அதிகரித்த நிலையில் தமிழக அரசின் சார்பில் நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை தொடங்கி வைக்கப்பட்டது. அந்த வகையில் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் குறைவான விலையில் கிடைக்கும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் கிலோ ரூ.30 என்ற விலையில் சன்னரக அரிசி விற்பனை இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும், நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைகள் மற்றும் தொடக்க கூட்டுறவு பண்டக சாலைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்களான புழுங்கல் பொன்னி அரிசி ஒரு கிலோ ரூ.60, துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.130, உளுத்தம் பருப்பு ஒரு கிலோ ரூ.140, பூண்டு ஒரு கிலோ ரூ.240, மல்லி (தனியா) ஒரு கிலோ ரூ.240, மிளகாய் ஒரு கிலோ ரூ.330 என்ற குறைவான விலையில் வெளிச்சந்தையை விட விலை குறைப்பு செய்யப்பட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்கள் தொடர்ந்து கிடைப்பதற்கு அரசின் சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.எனவே பொதுமக்கள் அனைவரும் கூட்டுறவு சிறப்பு அங்காடிகள் வாயிலாக குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை பெற்று பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் திரு. திருப்பதி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகபொது மேலாளர் திரு.பால் பாண்டி உட்பட பலர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் முதல் இராஜபாளையம் வரையிலான பழைய தேசிய நெடுஞ்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்பு மற்றும் பாதுகாப்புப் பணிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முதல் சூலக்கரை வரை நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி, I A S., அவர்கள் (17.10.2026) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான தேசிய நெடுஞ்சாலை எண் 744-இல் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், விருதுநகர் மாவட்டத்தில் அழகாபுரி முதல் இராஜபாளையம் வரையிலான சாலைப் பணிகள் விரைவில் நிறைவடைய உள்ளன.இதன் தொடர்ச்சியாக, வழிவிடு முருகன் கோவில், மூவரைவென்றான் பகுதிகளில் கைவிடப்பட்ட பழைய சாலைகள், கிருஷ்ணன்கோவில் முதல் இராஜபாளையம் வரையிலான சுமார் 26.685 கிலோமீட்டர் நீளமுள்ள பழைய சாலைகள் மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட உள்ளன.இதனைக் கருத்தில் கொண்டு, ஒப்படைக்கப்படவுள்ள பழைய சாலைகளின் தற்போதைய நிலை குறித்து நேரில் ஆய்வு செய்யப்பட்டது. குறிப்பாக, சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சீரமைப்புப் பணிகள், சாலைப் பாதுகாப்பு வசதிகள் மற்றும் பொதுமக்கள் தடையின்றிப் பாதுகாப்பாகப் பயணிப்பதற்குத் தேவையான வசதிகள் குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள் மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்களுடன் விரிவாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பணிகளை தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.மேலும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் சூலக்கரையில் நடைபெற்று வரும் மேம்பாலப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டு, பணிகளை சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி குறித்த காலத்திற்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நெடுஞ்சாலையோரப் பகுதிகளில் சிலர் குப்பைகள் மற்றும் கழிவுநீரைக் கொட்டுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், பொதுமக்களுக்கும் சுகாதாரப் பாதிப்புகள் ஏற்படுவதால், இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க ஏதுவாக, தேவையான இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.