விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் (23.07.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அதன்படி, விருதுநகர் ஊராட்சி ஒன்றியம், எல்லிங்க நாயக்கன்பட்டி ஊராட்சியில் பிரதான் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு நிதியின் கீழ், ரூ.7.45 இலட்சம் மதிப்பில், குமரன்குளம் கண்மாயில் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து, செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை முறைகள், மருந்துகளின் இருப்பு, அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மேலும், மகப்பேறு அடைந்த தாய்மார்களுக்கு தாய்சேய் நலப் பரிசு பெட்டகங்களை வழங்கினார். மேலும் அங்கு சிகிச்சை பெற வந்த புறநோயாளிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கலந்துரையாடினார்.மேலும், குந்தலபட்டி ஊராட்சி நாராயணபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.2.16 இலட்சம் மதிப்பில் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0
Leave a Reply