விலை போகும் விளை நிலங்கள் .
விலை போகும் விளை நிலங்கள் .காரணம்? விவசாயத்தில் தான் காலம் முழுவதிலும் உழைத்தாலும், கிடைக்காத வருமானம், ஒரு சில தினங்களில், விளை நிலங்களை விற்பதால் கிடைக்கிறது.மழை வர வில்லையே என்று வானத்தைப் பார்க்கத் தேவையில்லை. அப்படியே பயிர் வைத்தும் மழை பெய்தாலும், நோய் அண்டக் கூடாது. யாரும் திருடி விடக் கூடாது. வேலை ஆட்களின் அதீத கூலி , சுநாமி, புயலோ கூடாது. அதைவிட பயிரை அறுவடை செய்யும் பொழுது பயிரின் காய்கறி, தேங்காய், மாங்காய் விலை குறைந்து விடக் கூடாது.
இத்தனை, டென்சனுடன் இமாலயக் கஷ்டம் கரும்பை விளைவித்துக் கொடுத்துவிட்டு சர்க்கரைஆலையிலோ, வியாபாரியிடமோ, கையேந்தி அலைந்து பணம் வாங்குவதற்குள் விவசாயியின்மனம் வெந்து உடல் நொந்து இந்த விவசாயம் தேவையா? என்ற விரக்தி, கட்டாயமாக எந்தவொரு விவசாயிக்கும் உண்டு.
நிலச் சுவான்தாரர்களின் பிள்ளைகள் வெளிநாடுகளில் இருந்தால் நிலங்களை குத்தகைக்கு விடுகின்றனர். குத்தகைகாரர்கள் லாபம் என்றால் கமுக்கமாகவும், நஷ்டம் என்றால் குத்தகைப் பணத்தைத் திருப்பிக் கேட்பதும், ஆக இருக்கிறார்கள். இது ஏன் வம்பு நிலத்தை விற்ற பணத்திலிருந்து வரும் வட்டியே போதும், நிம்மதி என்று விற்று விடுகின்றனர்.
நிலத்தை வாங்கியவர்கள் விவசாயமா பார்க்கிறார்கள். இல்லவே இல்லை. அவர்கள் விவசாயிகளைப் போல காலம் பூராவும் ஏமாந்து நம்பிக்கையுடன் வாழ்வதற்கு! உடனே ப்ளாட் இல்லாவிட்டால் காலேஜ் பள்ளிக்கூடம் என்று கட்டி விடுகின்றனர். அந்த இடமெல்லாம் பஸ்வசதி பள்ளிக்கூடம் என்று மாறி விடுகிறது. 5 பசுமை நிறைந்தநெற்பயிர்கள் தவழ்ந்து ஆடும். நிலங்களில் எல்லாம் குட்டி வீடுகள், 10 மாடி கட்டிடங்கள் கார், பஸ், வந்து போகுதல் என்று அந்த இடத்தைப் பிரட்டி போட்டு விடுகின்றனர்.
இப்படியே எல்லோரும் செய்கின்றனர். கூலி வேலைக்கு ஆட்கள் கிடைப்பது. சிம்ம சொப்பனமாக இருக்கிறது. யாருக்குமே வயலில் இறங்கி வேலை செய்யப் பிடிக்கவில்லை. இதைவிட சோம்பேறிகள் ஆகிவிட்டனர் என்றே சொல்லலாம்.
கூலிவேலைக்கு செல்பவர்கள் ஒரு குடும்பத்தில் நான்குபேர் இருந்தாலே போதும் மாதம் குறைந்தது 25000/- ரூபாய் சம்பாதித்து விடலாம். இவர்களுக்கு குறைந்த விலையில் ரேஷன் அரிசி, விலையில்லா மிக்சி, கிரைண்டர் பேன், டிவி என்றுஅரசாங்கம் நம்மிடமுள்ள வரிப் பணத்தை வாரி இறைக்கின்றனர். பின் எப்படி ஐயாஅவர்கள் வேலை செய்வார்கள்.
அவர்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்த அரசாங்கம் கொடுக்கிறது. சரிதான்.ஆனால் வாங்குபவர்களில் எத்தனைபேர் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துகின்றனர் என்றால் பெரிய கேள்விக் குறிதான் .'டாஸ்மாக்' கடைகளிலும் காதுகுத்து, சடங்கு, மைக்செட், கோவில் திருவிழா, திருமணம் என்ற விழாக்களை அடாவடியாகசெலவழித்துக், கரைக்கின்றனர். தங்கள் வருமானத்தை தேவையில்லாமல் விழாக்களைக் கொண்டாடி காசுகளை கரைக்கின்றனர்.
அரசாங்கம் உண்மையான விவசாயிகளை கவனிக்கின்றதா? இல்லையோ! பழைய மனிதர்கள் விவசாயத்தில் அசாத்திய நம்பிக்கை உள்ளவர்கள் தான் விவசாயம் பார்க்கின்றனர். இன்றைய இளைய சமுதாயத்தினர் 2% பேர் விவசாயத்தின் மீது பற்று கொண்டு மிகப் பிரமாதமாக விவசாயம் செய்கின்றனர். இது போதுமா?
என்னதான் பணம் கொட்டிக் கிடந்தாலும் சாப்பாட்டிற்குத் தேவையான பயிர்கள் உற்பத்தியாகும் விளை நிலங்கள் விலை போய் விட்டால், நம்முடைய சாப்பாட்டிற்கு நாம் என்ன செய்ய முடியும்? இன்னும் சில காலங்களில் விளைநிலங்கள் இல்லாமல் கடும் பஞ்சம் வர வாய்ப்பு உள்ளது.
அப்போதுதான் அவசர அவசரமாக விவசாயிகளைப் பற்றி யோசிக்கும் நமது அரசாங்கம். தம்முடைய அரசாங்கமே கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்தானே. தற்போது உள்ள அரசாங்கம் பரந்தூரில் விமான நிலையங்கள் வருவதை தவிர்த்துள்ளனர். நெற்பயிர்கள் விளைவிக்கும் நிலங்கள்பல ஏரிகள் உள்ள இடத்தில் விமான நிலையம் வருவதை விரும்பவில்லை. இது ஒரு ஆரோக்யமான அரசாங்கத்தை உருவாக்கி வருகிறது. இதற்கு பரந்தூர் மக்களிடையே வரவேற்பு பலமாக உள்ளது.
எதற்கும் ஒரு மாற்றம் உண்டு. ஆகவே - பிற்காலத்தில் விலை சென்ற விளை நிலங்கள் மறுபடியும் விவசாயத்திற்கு மாறும் அல்லவா! மாறத்தான் வேண்டும் வேறுவழி? வியாபாரிக்கு கிடைக்கும் பணம் விவசாயிக்குக் கிடைத்தாலே போதும், விளைநிலங்களை விலை போகாது. அரசாங்கம் நினைத்தால் முடியும்.
என்னதான் வீட்டுத் தோட்டங்கள் அமைந்தாலும் விளை நிலங்களை விலை போக விடக்கூடாது.
0
Leave a Reply