ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டியில் ஜப்பானை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய இந்திய அணி, தொடர்ந்து மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்தது.பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மற்றும் மொகாலியில் நடைபெற்ற 9-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியது. மொகாலி சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின.விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2023, 2024, 2026 ஆகிய ஆண்டுகளில் தொடர்ந்து மூன்று முறை கோப்பையை கைப்பற்றியது. மேலும், இத்தொடரில் இந்தியா வெல்லும் 6-வது சாம்பியன் பட்டம் இதுவாகும்.
சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மாயா ரேவதி, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.சென்னையில் பெண்களுக்கான டபிள்யூ.டி.ஏ. 250 அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் மாயா ரேவதி, ஸ்ரீவள்ளி ராஷ்மிகா ஜோடி, செக் குடியரசின் அனெடா குக்மோவா, லபவுட்கோவா ஜோடியை எதிர்கொண்டது.இதில் முதல் செட்டை 6-3 என்றும், இரண்டாவது செட்டை 6-2 என்றும் கைப்பற்றிய இந்திய ஜோடி, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. ஒரு மணி நேரம் 10 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய ஜோடி காலிறுதிக்குள் நுழைந்தது.
ஐ.சி.சி. விருதுக்கு தீப்தி சர்மா பரிந்துரை.ஐ.சி.சி. அக்டோபர் மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு இந்திய ஆல்ரவுண்டர் தீப்தி சர்மா, ஆஸ்திரேலியாவின் அனாபெல், வங்கதேசத்தின் சோபனா ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தீப்தி சர்மா சதம் விளாசியது குறிப்பிடத்தக்கது.உலக ஸ்னுக்கர் சாம்பியன்ஷிப்: இந்திய அணியில் நட்சத்திரங்கள்.இந்தூரில் நவம்பர் 12 முதல் 21-ம் தேதி வரை நடைபெறவுள்ள உலக ஸ்னுக்கர் சாம்பியன்ஷிப் தொடருக்கான இந்திய அணியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற அத்வானி, நடப்பு பெண்கள் சாம்பியன் அனுபமா, மனன் சந்திரா, கீர்த்தனா, உமாதேவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
போர்ச்சுகல் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ, சர்வதேச கால்பந்து அரங்கில் தனது பயணத்தை நிறைவு செய்தார்.41 வயதான ரொனால்டோவின் வாழ்க்கைப் பயணம் பலருக்கும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது. குடும்பத்தின் வறுமையான சூழ்நிலையிலும் தனது கால்பந்து திறமையால் உலகப் புகழ்பெற்ற வீரராக உயர்ந்தார். குடும்பத்திற்குப் பெருமை சேர்த்ததுடன், கால்பந்து வரலாற்றிலும் தனக்கென தனி இடத்தைப் பிடித்தார்.234 போட்டிகள் – 146 கோல்கள்!சர்வதேச கால்பந்து அரங்கில் அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதலிடத்தில் உள்ளார். இதுவரை 234 போட்டிகளில் விளையாடி 146 கோல்கள் அடித்துள்ளார். அர்ஜென்டினாவின் லயோனல் மெஸ்ஸி 208 போட்டிகளில் 126 கோல்கள் அடித்து அடுத்த இடத்தில் உள்ளார்.உலகக் கோப்பையில் வரலாற்றுச் சாதனை!ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் ஆறு தொடர்களில் (2006, 2010, 2014, 2018, 2022, 2026) பங்கேற்ற முதல் வீரர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றார். மேலும், ஆறு உலகக் கோப்பை தொடர்களிலும் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.உலகக் கோப்பை போட்டிகளில் அதிக ஆட்டங்களில் (27) விளையாடிய போர்ச்சுகல் வீரர் என்ற சாதனையும், அதிக கோல்கள் (11) அடித்த போர்ச்சுகல் வீரர் என்ற பெருமையும் அவருக்கே சொந்தம்.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர், மொகாலி ஆகிய இடங்களில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரின் 9வது சீசன் நடைபெற்று வருகிறது.நேற்று மொகாலியில் உள்ள சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்திய அணி, தென்கொரியாவை எதிர்கொண்டது.ஆட்டத்தின் 4வது நிமிடத்தில் இந்திய வீரர் ஷிலானந்த் லக்ரா, பீல்டு கோல் அடித்து அணியின் கோல் கணக்கைத் தொடங்கினார். தொடர்ந்து 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி, கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடித்தார்.தொடர்ந்து சிறப்பாக விளையாடிய இந்திய அணி, 6-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. ஆட்ட நேர முடிவில் 8-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணி, ஜப்பானை எதிர்கொள்கிறது.
சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீராங்கனை மாயா ரேவதி முன்னேறினார்.சென்னையில் பெண்களுக்கான டபிள்யூ.டி.ஏ. 250 அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் 3வது சீசன் நடைபெற்று வருகிறது.இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் மாயா ரேவதி, போலந்தின் வெரோனிகா பால்கோவ்ஸ்காவை எதிர்கொண்டார். முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்றிய மாயா, 2வது செட்டையும் 6-3 என வென்றார்.ஒரு மணி நேரம் 33 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில், 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற மாயா, சென்னை ஓபன் தொடரின் காலிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார்.மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவின் ஜானிஸ் டிஜென், சீன தைபேயின் ஜோன்னா கார்லாண்டை எதிர்கொண்டார். இதில் டிஜென் 7-6, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
யூத் ஒலிம்பிக் போட்டியின் 4வது சீசன் செனகலில் நடைபெற்று வருகிறது. இதில் 205 நாடுகளைச் சேர்ந்த 2,654 இளம் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.இந்தியா சார்பில் 6 வீரர்கள், 11 வீராங்கனைகள் என மொத்தம் 17 பேர், 11 விளையாட்டுகளில் களமிறங்கியுள்ளனர்.பெண்களுக்கான பாட்மிண்டன் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தான்வி பத்ரி, தாய்லாந்தின் குங்க யேவை எதிர்கொண்டார்.இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய தான்வி, 21-17, 21-13 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.இதன்மூலம் யூத் ஒலிம்பிக் பாட்மிண்டன் அரையிறுதிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றார். மேலும், இந்தியாவின் பிரனாய், லக்சயா சென் ஆகியோருக்குப் பிறகு அரையிறுதிக்கு முன்னேறிய மூன்றாவது இந்திய வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.அரையிறுதியில் தான்வி, ஜப்பானின் யுஜுனோ வதனபேவை எதிர்கொள்கிறார்.இதுவரை இந்தியா ஒரு வெள்ளி, இரண்டு வெண்கலம் என மொத்தம் மூன்று பதக்கங்களை வென்றுள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இத்தொடரின் முதல் போட்டி நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது.போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியாமல் 40.2 ஓவர்களில் 185 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.மழை காரணமாக ஆட்டம் இரண்டு முறை பாதிக்கப்பட்டது. இதனால் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்திய அணிக்கான வெற்றி இலக்கு 32 ஓவர்களில் 143 ரன்களாக மாற்றியமைக்கப்பட்டது.இலக்கைத் துரத்திய இந்திய அணி, 22.4 ஓவர்களில் 143 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரின் முதல் போட்டியிலேயே இந்திய அணி வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியது.
சென்னையில், பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ. 250 அந்தஸ்து பெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் தொடரின் மூன்றாவது சீசன் நடக்கிறது. 'வைல்டு கார்டு' வாய்ப்பு பெற்ற இந்தியாவின் 21 வயது வீராங்கனை வைஷ்ணவி அத்கர், ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பிரிட்டனின் ஜோடீ புரேஜை எதிர்கொண்டார்.முதல் செட்டை 3-6 என இழந்தார் வைஷ்ணவி. பின் சுதாரித்த இவர், அடுத்த செட்டை 6-3 என கைப்பற்றினார். வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது மற்றும் கடைசி செட் 5-5 என இழுபறியானது.கடைசியில் வைஷ்ணவி 7-5 என செட்டைக் கைப்பற்றினார். 2 மணி நேரம் 44 நிமிடம் நீடித்த இப்போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 3-6, 6-3, 7-5 என்ற கணக்கில் போராடி வெற்றி பெற்றார்.மற்றொரு ஆட்டத்தில் தமிழக வீராங்கனை மாயா ரேவதி, போலந்தின் கேதர்ஜினா காவாவை எதிர்கொண்டார். இருவரும் தலா ஒரு செட்டை வென்ற நிலையில் கடைசி செட்டில் அனல் பறந்தது. இதில் 3-5 என்று பின்தங்கிய மாயா, இறுதியில் 6-4, 2-6, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் வெற்றியைப் பறித்தார். இந்த ஆட்டம் 2 மணி 27 நிமிடங்கள் நீடித்தது.
செக் குடியரசில் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில், உலகின் 48-வது இடத்திலுள்ள இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் (28), இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற ஸ்காட்லாந்தின் கிரெக் லாப்பனை ('நம்பர்-31') எதிர்கொண்டார்.முதல் செட்டில் வேலவன் 6-10 என பின்தங்கியிருந்தார். பின் தொடர்ந்து அசத்திய இவர், 13-11 என போராடி வென்றார்.