25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 12, 2026

திருவில்லிபுத்தூர் வட்டாரத்தில் “உங்களை தேடி உங்கள் ஊரில்”முகாமானது நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களை தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற புதிய திட்டம் முகாமானது 19.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 20.08.2026  அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது.19.08.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும், சேவைகளும் தங்கு தடையின்றி  சென்றடைவதை ஆய்வு செய்ய உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக, 19.08.2026 மாலை 03.00 மணி முதல் 04.00 மணி வரை திருவில்லிபுத்தூர், நகராட்சி ஆணையாளர் அலுவலகத்தில் உள்ள நகர் மன்ற கூட்டரங்கில் வைத்து மக்களை சந்தித்து குறைகள் கேட்பதும், மாலை 04.00 மணி முதல் முதல்நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.         எனவே, திருவில்லிபுத்தூர் வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை அரசு அலுவலர்களிடம்  நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட வழிவகை செய்யும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 11, 2026

தேசிய குடற்புழு நீக்க நாள் முன்னிட்டு,பெண்கள் மற்றும் மாணாக்கர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை வட்டம் சூலக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் "தேசிய குடற்புழு நீக்க நாள்" முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் (10.08.2026) குடற்புழு நீக்க மாத்திரைகளை மாணவர்களுக்கு வழங்கினார்.பின்னர், "தேசிய குடற்புழு நீக்க நாள்" முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் சார்பாக குழந்தைகளுக்கு குடற்புழு நீக்கும் திட்டத்தின்கீழ் "தேசிய குடற்புழு நீக்க நாள்" இன்று(10.08.2026) அனுசரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் 1 வயது முதல் 19 வயது வரை உள்ள சுமார் 5,78,289 குழந்தைகள் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் என மொத்தம் 7,11,405 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்படுகிறது. குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கும் முகாமானது 292 கிராம சுகாதார செவிலியர்கள், 1504 அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் 3280 பள்ளி ஆசிரியர்கள் மூலம் நடத்தப்படுகிறது. மேலும் இம்முகாமில் 11 நடமாடும் மருத்துவக் குழுக்கள், 22 ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியகரம் (Rashtriya Bal Swasthya Karyakram - RBSK) குழுக்களும் மற்றும் 11 வட்டார மருத்துவ அலுவலர்கள் மற்றும் இரண்டாம் நிலை அலுவலர்கள் இம்முகாமில் பார்வையாளராக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது. எனவே. திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும் இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 17.08.2026 அன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட சுகாதார அலுவலர்(விருதுநகர்) மரு.வே.யசோதாமணி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திரு.கு.அரவிந்தன், மருத்துவ அலுவலர்கள், தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.

Aug 11, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்  (10.08.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.4.62 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்கவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தி விரைந்து தீர்வு காணவேண்டும் என  உத்தரவிட்டார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 641 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.இக்கூட்டத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் பணியின் போது உயிர்நீந்தவரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்மேலும், இக்கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4.38 இலட்சம் மதிப்பிலான நவீன செயற்கை கால்களையும், 1 மாற்றுத்திறானிகளின் உபயோகத்திற்காக ரூ.24,000/- மதிப்பீட்டிலான நான்கு சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ.4.62 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா,ஆதி திராவிடர் நலத்துறை அலுவலர் திருமதி சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் திரு.தேவசகாயம், மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 11, 2026

2026-27 ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையினை வெளியிட்டு ரூ.37,959.06 கோடி வங்கிக் கடன் வழங்கிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது .

விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(10.08.2026) வங்கிகளுக்கான கடன் திட்ட அறிக்கையினை மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் வெளியிட்டார்.மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட வங்கிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பாக விருதுநகர் மாவட்டத்தின் 2026-27 ஆண்டுக்கான கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில், வங்கிகள் மூலமாக ரூ. 37,959.06  கோடி கடன் 2026-27 ஆண்டில் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  மேலும், மாவட்டத்தின் முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, நபார்ட் வங்கியுடன் இணைந்து இந்த கடன் திட்ட அறிக்கையை வடிவமைத்துள்ளது. மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை அடிப்படையாக கொண்டு, பல்வேறு துறைகளில் வங்கிகள் கடன் வழங்கிட இத்திட்ட அறிக்கையில் வழி வகைகள் செய்யப்பட்டுள்ளன.கடன் திட்ட அறிக்கையில் முன்னுரிமை கடன்காளான வேளாண்மைக்கடனாக ரூ.16,648 கோடியும், சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனக் கடனாக ரூ.7,850 கோடியும், ஏற்றுமதி தொழில் சார்ந்த கடனாக ரூ.7.0 கோடியும், கல்வி கடனாக ரூ.41.0 கோடியும், வீடுகளுக்கான கடனாக ரூ.319.0 கோடியும், சமூக கட்டமைப்பிற்கான  கடனாக ரூ.4.0 கோடியும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கடனாக ரூ.5.0 கோடியும் மற்றும் இதர கடனாக ரூ.482.0 கோடியும் என ஆக மொத்தம் ரூ.25,356 கோடியும் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற கடன்களான நகைக்கடன், தனிநபர் கடன், வாகனக் கடன் போன்றவற்றிற்கு ரூ.12,603 கோடியும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஆக மொத்தம் 2026-27 ஆம் ஆண்டிற்கான வங்கிகள் மூலமாக ரூ.37,959.06 கோடி கடன் வழங்கிட திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 2025-26 ஆம் ஆண்டில் ரூ.32,19 கோடி நிர்ணயிக்பட்டது. அதனை விட இவ்வாண்டு 18.54% கூடுதலாகும். வங்கிகள் பொதுமக்களின் தேவைகளையும், வளர்ச்சியினையும் கருத்தில் கொண்டு கடனுதவி வழங்கிட வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் திரு.பாலசுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.அமர்நாத், உட்பட  பலர் கலந்து கொண்டனர்.

Aug 11, 2026

சதுரகிரி ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 11.08.2026 மற்றும் 12.08.2026 ஆகிய இரண்டு தினங்களுக்கு மட்டும் 6 மதுபான கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தில், டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  (F.L -1), F.L -2  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,  1981-ன்படி சுந்தர மகாலிங்கம் திருக்கோவில், ஆடி அமாவாசை திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, 11.08.2026  மற்றும் 12.08.2026  ஆகிய இரண்டு தினங்களில் வத்திராயிருப்பில் உள்ள மதுபானக் கடை எண் 11872, மகாராஜாபுரம் கடை எண் 12022, வத்திராயிருப்பு ஹர்சினி ரெக்ரேசன் கிளப் மற்றும் ஜெயம் ரெக்ரேசன் கிளப், மகாராஜாபுரம் குயின் ரெக்ரேசன் கிளப் மற்றும் கூமாபட்டியில் உள்ள அயோத்தி ரெக்ரேசன் கிளப் ஆகிய 6 அரசு மதுபான கடைகள் மற்றும் ரெக்ரேசன் கிளப் ஆகிய கடைகளை தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தவிட்டுள்ளார்.மேலும், உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள், (F.L -1), F.L -2  ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,  1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் உத்தவிட்டுள்ளார்.

Aug 11, 2026

மக்கள் தொடர்பு திட்ட முகாம் 12.08.2026 அன்று மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.

மக்கள் தொடர்பு திட்ட முகாம் 12.08.2026 அன்று இராஜபாளையம் வட்டம், புதுப்பாளையம் வருவாய் கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது.ஒவ்வொரு மாதமும் 2-ஆவது புதன்கிழமை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், வருகின்ற 12.08.2026 அன்று இராஜபாளையம் வட்டம், புதுப்பாளையம் வருவாய்  கிராமத்தில் உள்ள கலையரங்கத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் பல்வேறு துறைசார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டு பொது மக்களுக்கு அரசின் திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளன. பொதுமக்கள் மனுக்கள் வழங்கி தீர்வு பெறலாம். ஏற்கனவே,  பெறப்பட்ட மனுவின் மீது தீர்வு காணப்பட்டு, தகுதியுள்ள மனுதாரர்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படவுள்ளது.

Aug 11, 2026

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் சமூக, பொருளாதார தகவல்கள் குறித்து 81-ஆவது தேசிய மாதிரி ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையின் மூலம் 81-ஆவது தேசிய மாதிரி பொதுமக்களின் இடம்பெயர்வு ஆய்வு (Migration survey), அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு, குடும்பங்களின் நிலம்,கால்நடை உடைமை மற்றும் கிராமப்புற வேளாண்குடும்பங்களின் நிலை குறித்த மதிப்பீடு ஆய்வானது  3 நிலைகளாக மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த ஆய்வில், குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள், கல்வி, வேலைவாய்ப்பு, இடம் பெயரலுக்கான காரணங்கள், கடன் மற்றும் முதலீட்டு விவரங்கள், வரவு, செலவு விவரங்கள், நிலம் மற்றும் கால்நடை தகவல், வேளாண் நடவடிக்கைகள் உள்ளிட்ட சமூக மற்றும் பொருளாதார தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளது. இடம் பெயர்வு குறித்து பாம்பாட்டி, துலுக்கன்குறிச்சி, தெற்கு வெங்காநல்லூர், திருச்சுழி, ஆயர் தர்மம், மேல கல்லான்குளம், சம்மந்தபுரம், தாயில்பட்டி, தொப்பலாக்கரை, வடபட்டி, பூலாங்கல், மாரனேரி, சொக்கம்பட்டி, குரன்டி, செவல்பட்டி, மேலராஜகுலராமன் (பகுதி), குறிஞ்சாகுளம், முத்தனேந்தல் ஆகிய 18 கிராம ஊராட்சிகளிலும், சிவகாசி(3 மாதிரிகள்), திருத்தங்கல், அருப்புக்கோட்டை, வத்திராயிருப்பு, திருவில்லிபுத்தூர் (2 மாதிரிகள்), சம்மசிகாபுரம், எஸ்.கொடிக்குளம், சித்துராஜபுரம், கூரைக்குண்டு, இராஜபாளையம், விருதுநகர், மம்சாபுரம் (2 மாதிரிகள்) ஆகிய 16 நகர்ப்புற பகுதிகளில் தகவல்கள் சேகரிக்கப்படவுள்ளன.அகில இந்திய கடன் மற்றும் முதலீட்டு ஆய்வு மற்றும் குடும்பங்களின் நிலம், கால்நடை உடைமை மற்றும் கிராமப்புற வேளாண் குடும்பங்களின் நிலை குறித்து மானங்காத்தான், நல்லூர், மீசலூர், புதுக்கோட்டை, சம்மந்தபுரம், சொக்கனாதபுத்தூர், தில்லாகுளம், காளையார்குறிச்சி, பெரியகொள்ளபட்டி, அப்பனாயக்கன்பட்டி, தெற்கு வேங்கநல்லூர், திருச்சுழி, ஆலங்குளம், ஆதிகுளம் ஆகிய 14 கிராமப்புற மாதிரிகளிலும், சுந்தரபாண்டியம், திருத்தங்கல், சேத்தூர், மம்சாபுரம், இராஜபாளையம், விருதுநகர், எஸ்.கொடிகுளம், கூரைக்குண்டு, வாடி, காரியாபட்டி, விஸ்வநத்தம், காரியாபட்டி ஆகிய 12 நகர்புற மாதிரிகளிலும் ஆய்வு நடத்தப்பட உள்ளது.ஆய்விற்காக அலுவலர்கள் பொதுமக்களின் இல்லங்களுக்கு வரும் பொழுது உண்மையான புள்ளி விவரங்களை அளித்திட வேண்டும். மக்களால் தெரிவிக்கப்படும் புள்ளி விவரங்கள் பாதுகாக்கப்படும். இதன் மூலம் சேகரிக்கப்படும் தகவல்களின் மூலம்  மத்திய, மாநில அரசுகளால் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்த உதவும். இப்பணிக்கு  பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்தார்.

Aug 08, 2026

12-ஆவது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறப்பு கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து 20 நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

12-ஆவது தேசிய கைத்தறி தின விழாவினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில்  மாவட்ட ஆட்சித் தலைவர்   மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S.,அவர்கள், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் (SADP) திட்ட இயக்குநர் செல்வி.சங்கீதா. I A S., ,அவர்கள் முன்னிலையில்   (07.08.2026) சிறப்பு கைத்தறி கண்காட்சியினை துவக்கி வைத்து 20 நெசவாளர்களுக்கு ரூ.11.57 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார் . இந்தியாவின் கைத்தறி தொழிலை முன்னிலைப்படுத்தும் விதமாகவும், நாடு முழுவதும் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வரும் கைத்தறி தொழிலாளர்களை கௌரவப்படுத்துவதற்காகவும், அவர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்காகவும் 1905 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் நாள் தொடங்கப்பட்ட சுதேசி இயக்கத்தினை நினைவு கூறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 7ஆம் தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த நாளில் கைத்தறி தொழிலின் முக்கியத்துவம், தனித்தன்மை,  நாட்டின் சமூக பொருளாதார வளர்ச்சியில் கைத்தறி துறையின் பங்களிப்பு மற்றும் கைத்தறி தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை ஊக்கப்படுத்துதல் தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது. கைத்தறி தொழிலில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களின் நலனை பாதுகாத்திடவும், அவர்களின் குடும்ப சூழ்நிலையை மேம்படுத்திடவும் சேமிப்பு மட்டும் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் அரசு பங்களிப்புடன் சேமிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 10 நெசவாளர்களுக்கு ரூ.6,57,369/- மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளும், புதிய தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்திடும் வகையில் முத்ரா திட்டத்தின் கீழ் 10 நெசவாளர்களுக்கு தலா 50,000 வீதம் 5 லட்சத்திற்கான நிதி உதவியும் வழங்கப்படுகிறது.கைத்தறி தொழிலில் ஈடுபட்டு ஓய்வு பெற்ற நெசவாளர்களின் குடும்பத்தினை பாதுகாத்திடும் வகையில் குடும்ப ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அதன் அடிப்படையில் 5 பயனாளிகளுக்கு ஓய்வூதியத்திற்கான ஆணை இன்று (07.08.2026) வழங்கப்பட்டது. நெசவாளர்களின் சுகாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் இன்று சிறப்பு மருத்துவ முகாம் நடத்திட முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அருப்புக்கோட்டையில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. மருத்துவ முகாமில் நெசவாளர்களுக்கான பொது மருத்துவம், மகளிர் மருத்துவம், பல் மருத்துவம், கண், எலும்பு மற்றும் மூட்டு, ரத்த சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் இசிசி பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள ஏராளமான நெசவாளர்கள் பயன்பெறுவார்கள்.  பொதுமக்கள், அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் என அனைவரும்  நெசவாளர்களின் தொழில்களைப்  பாதுகாத்திடவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை முன்னேற்றிடவும் கைத்தறி துணிகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிரிதௌஸ் பாத்திமா, கைத்தறித்துறை உதவி இயக்குநர் திரு.பழனி குமார், கைத்தறி அலுவலர்   திரு.வி.விஸ்வேஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர் .

Aug 08, 2026

திருவில்லிபுத்தூர் வட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நடைபெற்றுள்ள பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தலைமையில், சிறப்புப் பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் செல்வி கே.சங்கீதா .I A S., அவர்கள் (07.08.2026) ஆய்வு செய்தார்.    தமிழ்நாடு அரசு சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்டம் (Special Area Development Programme) மேற்கு தொடர்ச்சி மலை திட்டப்பகுதிகளான உதகமண்டலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல்,   மதுரை, தேனி, விருதுநகர்,  திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி  உள்ளிட்ட மாவட்டங்களின் செயல்படுத்தப்படுகிறது.இத்திட்டத்தின் மூலம் மலைப்பாங்கான மற்றும் குறிப்பிட்ட பின்தங்கிய பகுதிகளில் மண் அரிப்பைத் தடுத்தல் மற்றும் நீர் வளத்தைப் பெருக்குதல், முழுமையான நீர் மேலாண்மை மற்றும் பாதுகாப்புப் பணிகள், மலைப் பகுதிகள் மற்றும் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளித்தல் மற்றும் பொதுமக்களின் வாழ்விட மேம்பாட்டிற்கான சமுதாயக் கூடங்கள், அங்கன்வாடி மையங்கள் மற்றும் பிற பொதுக் கட்டிடங்கள் கட்டுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், திருவில்லிபுத்தூர் மற்றும் வத்திராயிருப்பு வட்டாரப் பகுதிகளில் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2023- 24 இன் கீழ் ரூ.1.51 கோடியில் 3 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மேலும், சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் 2024- 25 இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.7.22 கோடி மதிப்பிலான  34  பணிகளில் 29 பணிகளும், 2025- 26  இன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.2.65  கோடி மதிப்பிலான  3 பணிகளில் 2 பணிகளும் முடிக்கப்பட்டுள்ளன.ஆக மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.11.38 கோடி மதிப்பிலான 40 திட்டப்பணிகளில், ரூ.8.16 கோடி மதிப்பிலான 34 திட்டப்பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள பணிகள் விரைந்து முடித்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திருவில்லிபுத்தூர் வட்டார பகுதி விழுப்பனூர் ஊராட்சியில் ரூ.37.83 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகள், அத்திக்குளம்-செங்குளம் கிராமத்தில் ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது என தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, பணிகள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தரமான முறையில் மேற்கொள்ளப்படுகிறதா என்பது குறித்தும், பணிகள் அனைத்தும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் தரத்துடன் நிறைவு செய்யப்பட வேண்டும் எனவும், பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு, திட்டத்தின் முழுப் பயனும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் பணிகளை விரைந்து முடித்திட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது, திட்ட இயக்குநர்(மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திருமதி வானதி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர்(சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம், மதுரை) திரு.ரமேஷ்குமார், திருவில்லிபுத்தூர் வட்டாட்சியர் திரு.அருளானந்தம், தொடர்புடைய அரசுத்துறை அலுவலர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 08, 2026

பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) ஓய்வூதியத்திட்டத்திற்கு தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்கள் பதிவு செய்யலாம் .

மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம், சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரியும் தகுதியுடைய அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) என்ற  ஓய்வூதியத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் அவர்களின் சமூகப்பாதுகாப்பும், பொருளாதார நிலைத்தன்மையும் உறுதி செய்யப்படுகிறது.பிரதம மந்திரி ஷ்ரம் யோகி மாந்தன் (Pradhan MantriShram Yogi Maandhan – PM-SYM) திட்டம் என்பது  18 முதல் 40 வயது வரையிலான அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான இந்திய அரசின் பங்களிப்பு அடிப்படையிலான ஓய்வூதியத்திட்டமாகும். இத்திட்டத்தில் மேற்கண்ட தகுதியுடைய பயனாளிகள் மாதந்தோறும் நிர்ணயிக்கப்பட்ட தொகையை முறையாக செலுத்தி வந்தால், இந்திய அரசும் அதே அளவு இணைப்பங்களிப்பை வழங்கும். இதன் மூலம், 60 வயதை அடைந்த பின்னர் மாதந்தோறும் ரூ.3,000/- உறுதியான ஓய்வூதியம் பெறும் வசதி வழங்கப்படுகிறது.சுற்றுலா வழிகாட்டிகள்(Tourist Guides), சுற்றுலா ஒருங்கிணைப்பாளர்கள் (Facilitators), சுற்றுலா வாகனஓட்டுநர்கள் (Tourist Transport Operators) மற்றும் போக்குவரத்து சேவை வழங்குநர்கள், விடுதி மற்றும் விருந்தோம்பல்துறை பணியாளர்கள் (Hospitality Workers), துப்புரவுப் பணியாளர்கள் (House Keeping Staffs), கைவினைக் கலைஞர்கள் (Artisans), தெருவோர வியாபாரிகள் (Street Vendors),  உணவக மற்றும் உணவுச் சேவை வழங்குநர்கள் (Hotel Workers). மேலும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய பிறசேவை வழங்குநர்கள் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் பயனடையத் தகுதியுடையவர்களாவர்.எனவே, விருதுநகர் மாவட்டத்திலுள்ள சுற்றுலா சங்கங்கள், விடுதி உரிமையாளர்கள், பயண முகவர்கள், சுற்றுலா ஏற்பாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய அனைத்து பங்குதாரர்களும், இத்திட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தகுதியுடைய தொழிலாளர்கள் பதிவு செய்வதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்கிடவும்,தகுதியுடைய அனைத்து தொழிலாளர்களும் தங்களது ஆதார் அட்டை, சேமிப்பு வங்கி கணக்குப் புத்தகம் (Bank Passbook) மற்றும் கைப்பேசி எண்ணுடன், அருகிலுள்ள பொது சேவை மையத்தை (Common Service Centre - CSC) அணுகி, இத்திட்டத்தில் பதிவு செய்து பயன் பெறலாம்.மேலும், விபரங்களுக்கு சுற்றுலா அலுவலர், சுற்றுலா அலுவலகம், அறை எண்.522, 5-வது தளம், புதிய மாவட்ட ஆட்சியரகம், அல்லது  7397715688 என்ற கைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 20 21 22 23 24 25 26 ... 157 158

AD's



More News