25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Aug 14, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் அவர்கள் தளவாய்புரத்தில் கூட்டுறவு சங்கங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், தளவாய்புரத்தில் செயல்பட்டு வரும் அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் மற்றும் இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் ஆகியவைகளின் செயல்பாடுகள் குறித்து (13.08.2026)  பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.தமிழ்நாடு அரசு சமூக நலத்துறையின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.விருதுநகர் மாவட்ட சமூக நல அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் மொத்தம் 6 மகளிர் தையல் தொழில் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இச்சங்கங்கள் மூலம் இலவச சீருடை திட்டம் 2026 2027 ஆம் ஆண்டில் விருதுநகர் மற்றும் சிவகாசி கல்வி மாவட்டங்களில்   11 வட்டார கல்வி அலுவலகங்களின் கீழ் பயிலும் 52,334 மாணவர்கள், 53,242  மாணவிகள் என மொத்தம் 1,05,576 மாணாக்கர்கள் பயன்பெறுகின்றனர்.அதனடிப்படையில், தளவாய்புரத்தில் உள்ள அன்னை சத்யா பெண்கள் தையல் தொழிலாளர்கள் தொழிற்கூட்டுறவு சங்கம் மூலம் 2026-2027ஆம் கல்வியாண்டிற்கான இலவச சீருடைத் திட்டத்தின் கீழ், இராஜபாளையம் வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கீழ் 153 பள்ளிகளில் 9,306 மாணவ, மாணவியர்களுக்கும், சிவகாசி வட்டாரக் கல்வி அலுவலகத்தின் கீழ் 118 பள்ளிகளில் 11,259 மாணவ, மாணவியர்களுக்கும் எனமொத்தம் 271 அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 20,565 மாணவ, மாணவியர்களுக்கு சீருடைகள் தயாரித்து வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.சங்கத்தின் மூலம் தையல் பணியில் ஈடுபடும் உறுப்பினர்களுக்கு அவர்களின் பணியின் அடிப்படையில் குறைந்தபட்சமாக ரூ.5,000 முதல் அதிகபட்சமாக ரூ.35,000 வரை வருமானம் கிடைத்து வருகிறது. இந்த சங்கம் மூலம், சீருடைகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள பெண் தையல் தொழிலாளர்களை  நேரில் சந்தித்து, அவர்களின் பணிகள், பணிச்சூழல் மற்றும் தொழிற்கூட்டுறவு சங்கத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், இணை உணவு தயாரிக்கும் மகளிர் மேம்பாட்டு தொழிற் கூட்டுறவு சங்கம் மூலம்  கர்ப்பிணித் தாய்மார்கள் மற்றும் வளர் இளம் பெண்களுக்கு வழங்கப்படும் இணை உணவு சத்து மாவு தயாரிக்கப்பட்டு வருகிறது. இதில், கோதுமை 42 சதவீதம், மூலப்பொருட்களான வெல்லம், சோயா, கடலை, உளுத்தம் பருப்பு, கேழ்வரகு, வேர்க்கடலை, தாது உப்புகள் மற்றும் வைட்டமின்கள் அடங்கியவை 58 சதவீதம் என்ற விகிதத்தில்  தயாரிக்கப்படுகிறது.மேலும், இங்கு தயாரிக்கப்படும் பிஸ்கெட்டுகள் விருதுநகர் மற்றும் ஈரோடு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் இணை உணவு சத்துமாவுகள்  விருதுநகர் மாவட்டத்தில் 25,191 வளரிளம் பெண்கள் மற்றும் 14,888 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களும்  நாளொன்றுக்கு தலா 150 கிராம் பெற்று பயனடைந்து வருகின்றனர்.அதன்படி, சத்து மாவு தயாரிப்பிற்காக பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் பெறப்படும் முறை, அவற்றை தரம் பிரித்தல், சுத்தம் செய்தல், உலர்த்துதல், அரைத்தல், தேவையான அளவில் கலவை செய்தல் உள்ளிட்ட பல்வேறு நிலைகளை குறித்தும்,  சத்து மாவு தயாரிப்பின்போது கடைப்பிடிக்கப்படும் தரக்கட்டுப்பாட்டு நடைமுறைகள், சுகாதார நடவடிக்கைகள், பாதுகாப்பான சேமிப்பு மற்றும் பொட்டலமிடும் முறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.மகளிர் கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார வாய்ப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பெண்கள் தங்களது திறன்களை மேம்படுத்திக்கொண்டு பொருளாதார ரீதியாக முன்னேறுவதற்கு கூட்டுறவு சங்கங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன என தெரிவித்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட சமூக நல அலுவலர் திருமதி திலகம், கூட்டுறவுத்துறை அலுவலர்கள், மகளிர் மேம்பாட்டு கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Aug 14, 2026

சுதந்திர தினத்தை முன்னிட்டு 15.082026 அன்று ஒரு நாள் மட்டும் எப்.எல் -1 / எப்.எல் -2 / எப்.எல் -3 / எப்.எல் -3A / எப்.எல் -3AA / மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது .

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள்  எப்.எல் -1/ எப்.எல் -2/ எப்.எல் -3/ எப்.எல் -3A/ எப்.எல் -3AA மற்றும் எப்.எல் -11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, எதிர்வரும் சுதந்திர தினமான 15.08.2026 (சனி கிழமை) அன்று (ஒரு நாள் மட்டும்) தற்காலிகமாக மூடிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் எப்.எல் -1/ எப்.எல் -2/ எப்.எல் -3/ எப்.எல் -3A/ எப்.எல் -3AA மற்றும் எப்.எல் -11    ஆகிய மதுபான ஸ்தலங்களின்  உரிமதாரர்களின் மீது   Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 14, 2026

இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 14.08.2026 அன்று மட்டும் நென்மேனி கிராமத்தில் இயங்கும் மதுபான கடையை மூடுவதற்கு உத்தரவிடப்படுகிறது.

 விருதுநகர் மாவட்டம், சாத்தூர் வட்டம் இருக்கண்குடி அருள்மிகு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற உள்ளது. இதன்காரணமக நென்மேனி கிராமத்தில் இயங்கிவரும் டாஸ்மாக் கடை எண் 11978 -யை மட்டும் 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று (ஒருநாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்து.மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் பணியாளர்கள் மீது   Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981  நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 13, 2026

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 169 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், புதுப்பாளையத்தில் , மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில்,  மக்கள் தொடர்பு திட்ட முகாம்  (12.08.2026) நடைபெற்றது.  இம்முகாமில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 28 பயனாளிகளுக்கு ரூ.13.82 இலட்சம் மதிப்பில் இலவச வீட்டு மனை பட்டாக்களையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 75 பயனாளிகளுக்கு ரூ.76.51 இலட்சம் மதிப்பில் இணைய வழி பட்டாக்களையும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.18.56 இலட்சம் மதிப்பில் இணைய வழிபட்டாக்களையும், 2 பயனாளிகளுக்கு புதிய மின்னணு குடும்ப அட்டைகளையும், 5 பயனாளிகளுக்கு பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களையும், 8 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் ஆணைகளையும், வேளாண்மைத்துறை சார்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.58200/- மதிப்பில் தெளிப்பு நீர் பாசனம், விதைகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும், கால்நடை துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.2500/- மதிப்பில் தாது உப்பு கலவை மற்றும் புல்கரணைகளையும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.11827/- மதிப்பில் விலையில்லா தையல் இயந்திரம் மற்றும் தேய்ப்பு பெட்டிகளையும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மூலம் 5 பயனாளிகளுக்கு ரூ.10,000/- மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டங்களையும், தோட்டக்கலை துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு ரூ.2.49  இலட்சம் மதிப்பில் நுண்ணீர் பாசன மானியம் மற்றும் விதைகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 11 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.13.50 இலட்சம் மதிப்பில் கடனுதவிகளையும் என மொத்தம் 169 பயனாளிகளுக்கு ரூ.1.26 கோடி மதிப்பிலான அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ. சுகபுத்ரா I A S , அவர்கள் வழங்கினார். தமிழ்நாடு அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து திட்டங்கள் பற்றியும் அதற்கான தகுதிகள் பற்றியும் அனைத்து பொதுமக்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இம்முகாம் நடத்தப்படுகிறது. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, அனைத்து திட்டங்களையும் கடைக்கோடி கிராமங்களில் வாழும் ஏழை, எளிய மக்களும் அறிந்து தெரிந்து கொண்டு எவ்வித சிரமமின்றி அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் தகுதியான மக்கள் பெற்று பயன்பெற வேண்டும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு மாதமும் ஒரு கிராமத்தை தேர்வு செய்து, மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடத்தப்படுகிறது.மேலும் இந்த மக்கள் தொடர்பு முகாமில் அரசினுடைய திட்டங்களை மக்கள் அறிந்து கொள்கிற வகையில் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டும், துறை சார்ந்த அரசு அலுவலர்கள் மூலம் பொது மக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.          எனவே, பொதுமக்கள் இதுபோன்று பல்வேறு துறைகள் மூலம் அரசு செயல்படுத்தும் திட்டங்களை அறிந்து கொண்டு, பயன்பெற வேண்டுமெனவும், மற்றவர்களுக்கும் அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். முன்னதாக இந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பல்வேறு அரசு துறைகள் மூலமாக அமைக்கப்பட்ட அரசு திட்டங்கள் சார்ந்த அரங்குகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், திட்ட இயக்குநர் (தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்) திரு.இலக்குவன், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான் I A S., வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் திரு ஜான்சன் தேவசகாயம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ.,) திருமதி அ.அம்சவேணி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் திரு.கண்ணன், தோட்டக்கலைத்துறை  துணை இயக்குநர் திரு.ஆறுமுகம், தாட்கோ மேலாளர் திருமதி இந்திரா காந்தி, இராஜபாளையம் வட்டாட்சியர் திரு.ராஜீவ்காந்தி, அரசு அலுவலர்கள்,  பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2026

கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையத்திற்கு புதிய பேருந்து சேவை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள் தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை வட்டம், கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையம் வழித்தடத்திற்கான புதிய பேருந்து சேவையினை மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் திருமதி கு. ஜெகதீஸ்வரி அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  (13.08.2026) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கிராமப்புறங்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளுக்காக அருகிலுள்ள நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்வதற்கு போதிய போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திட தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக, விருதுநகர் மாவட்டம் கொருக்காம்பட்டி கிராமத்திலிருந்து இராஜபாளையம் செல்லும் வகையில் புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.இந்த புதிய பேருந்து சேவை மூலம் கொருக்காம்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் இராஜபாளையம் மற்றும் வழித்தடத்தில் உள்ள பகுதிகளுக்கு எளிதாகவும், பாதுகாப்பாகவும் பயணம் மேற்கொள்ளும் வசதி ஏற்பட்டுள்ளது.குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியர்களுக்கும், பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் இந்த பேருந்து சேவை பெரிதும் பயனளிக்கும். மாணவர்கள் உரிய நேரத்தில் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லவும், பணியாளர்கள் தங்களது பணியிடங்களுக்கு சென்று வரவும் இந்த பேருந்து சேவை உதவிகரமாக அமையும்.மேலும், மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளுக்காக இராஜபாளையம் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளுக்குச் செல்லும் பொதுமக்களுக்கு பயண நேரத்தையும் சிரமத்தையும் குறைத்து, எளிதான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தும்.புதிய பேருந்து சேவை தொடங்கப்பட்டதன் மூலம் கொருக்காம்பட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களின் நீண்டநாள் போக்குவரத்து தேவைக்கு தீர்வு காணப்பட்டுள்ளதுடன், கிராமப்புற மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இச்சேவை உறுதுணையாக அமையும். மேலும் இந்த பேருந்து சேவை மூலம் இப்பகுதியில்  அரசுப்பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரிக்க வழிவகை செய்யும்.எனவே, இந்த புதிய பேருந்து சேவையினை இப்பகுதி பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக்  கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.இந்த  பேருந்து சேவை வழங்கிய தமிழக அரசுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் இப்பகுதி மக்கள் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள்,  மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Aug 13, 2026

விவசாயிகள் 100% மானியத்தில் பண்ணைக்குட்டைகள் அமைக்க விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில் மழையின் அளவு குறைவாக காணப்படுவதால்   வறண்டு காணப்படுகிறது.  அதனால்  பொருளாதாரத்திலும்   பின்தங்கி காணப்படுகிறது.எனவே,  மழை பொழிகின்ற பொழுது  நிலத்தில்  வழிந்தோடுகின்ற  மழைநீரை  வீடுகளில் உள்ள மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அல்லது பண்ணைக்குட்டைகளில் மழைநீரை சேகரித்து வைப்பதன் மூலம் நிலத்தடி நீரின் அளவு உயர்வதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் சேமிக்கப்படும் மழைநீர்கள் பயிர்கள் நீரில்லாமல்  வறட்சியால் வாடும் நிலை ஏற்படும் பொழுது  பயிர்களுக்கு  தக்க நேரத்தில்  உயிர் நீர் பாசனம் மற்றும் துணை பாசனம்  அளித்து பயிர்கள் காக்கப்பட்டு  உரிய மகசூல் பெற வழி வகை செய்வதற்கு இந்த பண்ணைக்குட்டைகள் பயன்படுகின்றன.  விருதுநகர் மாவட்டத்திற்கு  தேசிய பேரிடர் தணிப்பு நிதியின் கீழ் வறட்சி பாதிப்பு குறைப்பிற்கான ஊக்குவிப்பு உதவி திட்டத்தின் கீழ்  2026-27 ஆம் ஆண்டிற்கு   40 எண்கள் பண்ணைக்குட்டைகள்  ரூ.56.00 இலட்சம் மதிப்பீட்டில்  அமைக்கப்பட உள்ளது.  எனவே, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற   விருதுநகர் வட்டாரம் வளையபட்டி, இ.குமாரலிங்கபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், அருப்புக்கோட்டை வட்டாரம் கோபாலபுரம், டி.கொப்புசித்தம்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளும், காரியாபட்டி வட்டாரம் பாம்பாட்டி, அழகியநல்லூர் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், திருச்சுழி வட்டாரம் மயிலி, கீழ்குடி, வடக்குநத்தம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், நரிக்குடி வட்டாரம் நத்தைக்குளம், சொட்டமுறி, ஆணைக்குளம், அகத்தாக்குளம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், திருவில்லிப்புத்தூர் வட்டாரம் கீழராஜகுலராமன், அயன்நாச்சியார்கோவில் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், வத்ராப் வட்டாரம் குன்னூர், சுந்தரபாண்டியம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், இராஜபாளையம் வட்டாரம் கோபாலபுரம், குறிச்சியார்பட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளும், வெம்பக்கோட்டை வட்டாரம் வெம்பக்கோட்டை, சுப்பிரமணியபுரம் கிராமத்தில் உள்ள விவசாயிகளும், சாத்தூர் வட்டாரம் போத்திரெட்டியபட்டி, பெத்துரெட்டியபட்டி கிராமத்தில் உள்ள விவசாயிகளும், சிவகாசி வட்டாரம் வெள்ளுர், எரிச்சநத்தம் ஆகிய கிராமங்களில் ஆர்வம்  உள்ள அனைத்து விவசாயிகளும் தங்களுடைய நில ஆவணங்களுடன்  கீழ்க்கண்ட  அலுவலகத்தினையோ அல்லது  வட்டார பொறியாளர்களையோ தொடர்பு கொண்டு விண்ணப்பத்தினை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.    மேலும் விபரங்களுக்கு விருதுநகர், காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி மற்றும் நரிக்குடி வட்டார விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள வேளாண்மைப் பொறியியல் துறை,  உதவி  செயற் பொறியாளர் (வே.பொ) அலுவலகத்தையும் (9786390851), திருவில்லிப்புத்தூர், இராஜபாளையம், வத்திராயிருப்பு, சிவகாசி, வெம்பக்கோட்டை மற்றும்  சாத்தூர் வட்டார விவசாயிகள்  திருவில்லிபுத்தூர், வேளாண்மைப் பொறியியல் துறை,  உதவி செயற்பொறியாளர்(வே.பொ) அலுவலகத்தையும் (9080084339) தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தெரிவித்துள்ளார்.

Aug 12, 2026

போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு - 2026 போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கல்லூரி மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

 தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை மாநிலக் கல்லூரியில் "போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு" மாநிலம் தழுவிய போதைபொருள் எதிர்ப்பு பெருந்திரள் உறுதிமொழி ஏற்பு நிகழ்வினை காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.அதன் தொடர்ச்சியாக விருதுநகர் மாவட்டம், விருதுநகர் செந்தில் குமார நாடார்  கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் (11.08.2026) மாணவ, மாணவியர்கள் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.அதன்படி, போதைப்பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப்பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணை நிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்;விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார கூறுகின்றேன் என்ற உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக்கொண்டனர்.பின்னர், மாவட்டத்தில் 2025-2026 ஆம் ஆண்டு சிறந்த போதைப்பொருள் எதிர்ப்பு குழுக்களாக செயல்பட்டு கல்லூரி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த விருதுநகர் வே.வெ.வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி, சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரி மற்றும் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி,பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த விருதுநகர் சரஸ்வதி அம்மாள் லயன்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தோணுகால் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையம் பி.ஏ.சி.எம் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளி, கல்லூரிகளுக்கு ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம் மற்றும் ரூ.5 ஆயிரம் பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்,பள்ளிகள் அளவில் நாட்டு நலப்பணித் திட்டம் (National Service Scheme) மற்றும் தேசிய மாணவர் படை(NCC) உள்ளடக்கிய சிறந்த தன்னார்வலர்கள் குழுக்களாக செயல்பட்டு, முதலிடம் பிடித்த செம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் இராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு பள்ளி, இரண்டாமிடம் பிடித்த குல்லூர்சந்தை ஸ்ரீவீரப்பா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எஸ்.எச்.என்.எட்வர்டு மேல்நிலைப்பள்ளி, மூன்றாமிடம் பிடித்த மல்லாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் முத்துராமலிங்கபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்கு தலா ரூ.7,500/-, ரூ.5000/- மற்றும் ரூ.2500/- பரிசுத்தொகைக்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களையும்,என ஆக மொத்தம் 9 பள்ளிகள் மற்றும் 3 கல்லூரிகளுக்கு ரூ.90,000/- மதிப்பிலான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், காவல் கண்காணிப்பாளர் திரு.கௌதம் கோயல் இ.கா.ப., உதவி ஆணையர்(கலால்) திரு.சு.சோமசுந்தர சீனிவாசன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி இல.மீனாட்சி,  கல்லூரி முதல்வர், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Aug 12, 2026

 பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் கிராமம், சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலில் அமைந்துள்ள சதுரகிரி மலை ஒதுக்கப்பட்ட வனத்தில் நேற்று 10.08.2026 காட்டுத் தீ ஏற்பட்டது. அதனை வனத்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்ட நிலையில்,  11.08.2026 சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு அனுமதி இல்லை என பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து  11.08.2026 காட்டுத் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டு விட்டதாக வனத்துறையினரிடமிருந்து தகவல் வரப்பெற்றதால் சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு நாளை 12.08.2026 தாணிப்பாறை வழியாக மட்டும் செல்வதற்கு அனுமதி வழங்கி இன்று 11.08.2026 பத்திரிக்கைச் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 11.08.2026 இரவு சுமார் 07.00 மணியளவில் காட்டுத் தீ மீண்டும் பரவியுள்ளதாக விருதுநகர் மற்றும் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர்களிடமிருந்து தகவல் வரப்பெற்றது. மேலும் காட்டுத்தீயை கட்டுப்படுத்த வனத்துறை மற்றும் காவல்துறையினர் உரிய நடவடிக்கைகள் எடுத்து வருவதாகவும், நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு நலன் கருதி நாளை 12.08.2026 அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்களை அனுமதிக்க வேண்டாம் எனவும் காவல்துறை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் காட்டுத்தீயினால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கு ஏற்படக்கூடிய அபாயத்தை கருத்தில் கொண்டு, இயல்பு நிலைமை திரும்பும் வரை நாளை 12.08.2026 சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி இல்லை என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. நிலைமை சீரான பிறகு பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோவிலுக்கு செல்வதற்கு அனுமதி குறித்து அறிவிக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aug 12, 2026

சதுரகிரி அருள்மிகு சுந்தர மகாலிங்கம் திருக்கோவிலுக்கு தாணிப்பாறை பாதை வழியாக மட்டுமே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கம் திருக்கோவிலில் நடைபெற்று வரும் ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட தாணிப்பாறை பீட் மலைப்பகுதியில் 10.08.2026 அன்று காட்டுத்தீ பரவியது. தற்போது அந்தத் தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டது என வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே 12.08.2026 மற்றும் 13.08.2026 ஆகிய இரண்டு நாட்கள் ஆடி அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு சதுரகிரி அருள்மிகு சுந்தரமகாலிங்கசுவாமி திருக்கோயில் செல்வதற்கு தாணிப்பாறை பாதை வழியாக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S.,அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 

Aug 12, 2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் 21.08.2026 அன்று நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டத்தில்  ஆகஸ்ட் -2026 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.08.2026 அன்று காலை 11.00 மணியளவில், விருதுநகர்  புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில்  நடைபெறவுள்ளது.  எனவே, விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் மட்டுமல்லாமல்   விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகளை மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 19 20 21 22 23 24 25 ... 157 158

AD's



More News