ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் 23வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி வண்ணமயமான துவக்க விழாவுடன் தொடங்கியது. பசுமை சூழ்ந்த அரங்கில் இசை, நடனம், கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற விழாவில், இந்திய தேசியக் கொடியை மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைன் ஏந்தி அணிவகுத்தனர்.இந்தியாவிலிருந்து ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா உள்ளிட்ட 123 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். போட்டியை பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.மாற்றுத் திறனாளிகளுக்கான பவர் லிப்டிங் போட்டியில் இங்கிலாந்தின் மார்க் ஸ்வான் 153.9 புள்ளிகளுடன் முதல் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். நைஜீரியாவின் ரோலண்ட் வெள்ளியும், மலேசியாவின் கஸ்டின் வெண்கலமும் வென்றனர்.பெண்கள் பிரிவில் இந்தியாவின் ஜஸ்பிரீத் கவுர் 'பி' பிரிவில் 100 கிலோ எடையை தூக்கி 96.4 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடம் பிடித்தார். 'ஏ' பிரிவில் விளையாடிய சுமன் தேவி 100 கிலோ தூக்கி 88.4 புள்ளிகளுடன் 6வது இடத்தைப் பெற்றார். ஒட்டுமொத்த தரவரிசையில் ஜஸ்பிரீத் 6வது இடமும், சுமன் 7வது இடமும் பிடித்தனர்.இதேவேளை, நைஜீரியாவின் எஸ்தர் 123 கிலோ எடையை தூக்கி 119.0 புள்ளிகளுடன் புதிய காமன்வெல்த் சாதனை படைத்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தில் உள்ள இந்திய அணி, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டத்தில் வெற்றியுடன் தொடங்கியது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் இலக்கை விரட்டிய இந்தியா, 13.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
கனடாவில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் அனாஹத் சிங் காலிறுதிக்குத் தகுதி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு 'ரவுண்ட்-16' ஆட்டத்தில் மலேசியாவின் டாய்ஸ் யே சான் லீயை 11-4, 11-8, 11-3 என்ற நேர் செட்களில் 3-0 என வீழ்த்திய முதல் நிலை வீராங்கனையான அனாஹத், அடுத்த சுற்றில் எகிப்தின் ஹபிபா ரிஸ்கை சந்திக்கிறார். ஆண்கள் பிரிவில் இந்தியாவின் ஆர்யவீர் தேவன், அமெரிக்காவின் யாசீன் ஷலாபியிடம் 0-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீராங்கனை லவ்லினா போர்கோஹெய்ன் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். பெண்களுக்கான 75 கிலோ எடைப்பிரிவில் ஐந்து வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்றதால், லவ்லினாவுக்கு முதல் சுற்றில் 'பை' வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் நேரடியாக அரையிறுதிக்குத் தகுதி பெற்று குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளார். இந்தியா சார்பில் மொத்தம் 14 குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்கின்றனர்.
சீனாவில் நடைபெற்று வரும் சீன ஓபன் சூப்பர் 1000 பாட்மின்டன் தொடரில் இந்தியாவின் பி.வி. சிந்து இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.முதல் சுற்றில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடாவை எதிர்கொண்ட சிந்து, 21-14, 9-21, 21-10 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 56 நிமிடங்கள் நீடித்த இந்தப் போட்டியில், தீர்மானிக்கும் செட்டில் ஆதிக்கம் செலுத்திய சிந்து வெற்றியை உறுதி செய்தார்.
கனடாவில் நடைபெறும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.பெண்கள் பிரிவு 'ரவுண்டு-32' போட்டியில் அனாஹத் சிங், ஹாங்காங்கின் புய்யின் சோலேலோவை 11-3, 11-1, 11-3 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.ஆண்கள் பிரிவில் ஆர்யவீர் தேவன், தென் ஆப்ரிக்காவின் ஜோசப் பியஸ்டை 11-4, 11-3, 11-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி 'ரவுண்டு-16' சுற்றுக்கு தகுதி பெற்றார்.
சென்னையில் நடைபெற்ற 4-வது கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.கடைசி சுற்றில் பிரான்சின் அலிரேசாவுடன் மோதிய அர்ஜுனின் ஆட்டம் டிராவில் முடிந்தது. அதேபோல் குகேஷ்-நைமான் மற்றும் நிகால் சரின்-பிரனேஷ் மோதல்களும் சமநிலையில் நிறைவடைந்தன.இறுதியில் 4.5 புள்ளிகளுடன் அலிரேசா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். டிமிட்ரி 2-வது இடத்தையும், அர்ஜுன் 3-வது இடத்தையும் பிடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய உலக சாம்பியன் குகேஷ் 8-வது இடத்தில் நிறைவு செய்தார்.
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெறும் 23-வது காமன்வெல்த் விளையாட்டு விழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது.74 நாடுகளைச் சேர்ந்த 3,000-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் இதில் பங்கேற்கின்றனர். தடகளம், நீச்சல், பளுதூக்குதல், குத்துச்சண்டை, ஜூடோ, ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 10 விளையாட்டுகள் நடைபெற உள்ளன. அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கான 6 பாரா விளையாட்டுகளும் இடம்பெற்றுள்ளன.இந்தியா சார்பில் 125 பேர் கொண்ட அணி பங்கேற்கிறது. தொடக்க விழாவில் இந்திய தேசியக் கொடியை ஒலிம்பிக் பதக்க வீராங்கனைகளான மீராபாய் சானு மற்றும் லவ்லினா போர்கோஹைன் ஏந்திச் செல்ல உள்ளனர்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஒவ்வொரு முறையும் போட்டியை நடத்தும் நாடு தனித்துவமான லோகோவை அறிமுகப்படுத்துவது வழக்கம். ஆனால், கிளாஸ்கோ 2026 தொடங்கி அனைத்து காமன்வெல்த் போட்டிகளுக்கும் பயன்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த புதிய '3V' லோகோ வெளியிடப்பட்டுள்ளது.இந்த லோகோவில் ஆங்கில எழுத்தான 'V' மூன்று முறை இணைக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெற்றி (Victory), சமத்துவம் (Equality), மனிதநேயம் (Humanity), ஆற்றல் (Energy) ஆகிய மதிப்புகளை பிரதிபலிக்கிறது.லோகோவின் மேற்பகுதியில் உள்ள ஆறு பிரிவுகள், ஆப்ரிக்கா, ஆசியா, அமெரிக்கா, கரீபியன், ஐரோப்பா மற்றும் ஓசியானியா ஆகிய காமன்வெல்த் நாடுகள் அமைந்துள்ள கண்டங்களை குறிக்கின்றன. இனி நடைபெறும் அனைத்து காமன்வெல்த் போட்டிகளிலும் இந்த லோகோ பொதுவான அடையாளமாக பயன்படுத்தப்படும்.
2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை குஜராத்தின் ஆமதாபாத் நகரம் நடத்தவுள்ளது. இதையொட்டி, இந்திய வீரர்கள் கிளாஸ்கோ தொடரில் சிறப்பாக செயல்பட்டு அடுத்த தொடருக்கான நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.இதற்கிடையில், மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மான்சுக் மாண்டவியா, குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மாநில விளையாட்டுத் துறை அதிகாரிகள் அடங்கிய குழு கிளாஸ்கோவுக்கு பயணம் மேற்கொள்கிறது.அங்கு போட்டி ஏற்பாடுகள், விளையாட்டு அரங்குகள், வீரர்களுக்கான வசதிகள் உள்ளிட்ட அம்சங்களை நேரில் ஆய்வு செய்து, அதனை முன்மாதிரியாகக் கொண்டு ஆமதாபாத்தில் உலகத் தரத்திலான விளையாட்டு உள்கட்டமைப்பை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.