விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் (19.07.2026) நடைபெற்ற விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.,அவர்கள் மாவட்ட கலை விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகளையும், மாவட்ட கலைப் போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் சிறந்த ஓவிய, சிற்ப படைப்பாளிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளையும் வழங்கினார்.கலை மற்றும் பண்பாடு என்பது ஒரு சமூகத்தின் அடையாளமாகும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நமது பாரம்பரிய கலைகளைப் பாதுகாத்து, இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், கலைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும் நிகழ்ச்சிகளை நடத்திட வேண்டும் என்ற உத்தரவின் அடிப்படையில் இதுபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.இளம் தலைமுறையினர்கள் விளையாட்டு, கலை, ஓவியம், சிற்பம் உள்ளிட்டவைகளில் ஈடுபடும் போது அவர்களின் தனித்திறமைகள் வளர்வதோடு நமது சமுதாயத்தை நல்ல நோக்கத் தோடு கொண்டு செல்வதற்கு ஒரு முக்கிய பங்காற்றுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சிகள் மூலம் மாவட்டத்தில் உள்ள கலைஞர்களை ஊக்குவிப்பதோடு அடுத்த தலைமுறைக்கும் இதனை கடத்துவதற்கான முயற்சிகளை மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து செயல்படுத்தும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் 2025-2026 ஆம் ஆண்டு மாவட்ட கலை விருதுகளில் கலை இளமணி விருது பெற்ற செல்வி பா.காவ்யஸ்ரீ(பரதநாட்டியம்), செல்வி செ.ஸ்ரீநிதி (பரதநாட்டியம்), செல்வி.மு.வேதசாதனா(ஓவியம்) ஆகியோர்களுக்கு தலா ரூ.4000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை வளர்மணி விருது பெற்ற திரு.இர.சுரேஷ்குமார்(நாடகம்), திரு.பொ.விஸ்வநாத்(கரகாட்டம்), திரு.பெ.சிவக்குமார்(நாட்டுப்புறப் பாடல்) ரூ.6000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும்,கலை சுடர்மணி விருது பெற்ற திரு.வே.சுடலைக்கனி(தவில்), திரு.கா.கருப்பசாமி(ஒயிலாட்டம்), திரு.த.தனலெட்சுமி(வில்லிசை பாடகர்) ரூ.10,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை நன்மணி விருது பெற்ற திரு.அ.கந்தவேல்(நாதஸ்வரம்), திரு.ப.மாரிராஜ்(வாய்பாட்டு), திரு.பா.வெங்கடேஸ்வரன்(சிலம்பம்) ரூ.15,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும், கலை முதுமணி விருதுகளுக்கு திருமதி இளவரசி சொக்கர்(ஓவியம்), திரு.எஸ்.கே.கோபால்(நாதஸ்வரம்), திரு.பே.காளியப்பன்(நாடகம்) ரூ.20,000/- பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளையும் என மொத்தம் 15 கலைஞர்களுக்கு ரூ.1.65 இலட்சம் பரிசுத்தொகைகள் மற்றும் விருதுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், மாவட்ட அளவிலான கலைப்போட்டிகளில் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், ஓவியம் உள்ளிட்ட பிரிவுகளில் வெற்றி பெற்ற 21 மாணவர்களுக்கும், ஓவிய, சிற்பக் கண்காட்சியில் வெற்றி பெற்ற 21 நபர்களுக்கும் கேடயங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், மண்டல கலைபண்பாட்டு மைய உதவி இயக்குநர்(திருநெல்வேலி) திரு.து.சிவப்புகழ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.அ.கொ.நாகராஜ பூபதி, அரசு அலுவலர்கள், கலைஞர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் நகராட்சிக்குட்பட்ட வத்தல் மண்டபத்தில் 288 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.90 இலட்சம் மதிப்பீட்டிலான உதவி உபகரணங்களை (17.06.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் வழங்கினார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாத்திடவும், பிறர் துணையின்றி தங்களது தேவையினை தாய்களே பூர்த்தி செய்து கொள்ளவும், சமூகத்தில் தானும் ஓர் அங்கம் என்பதனை உறுதி படுத்திடவும் தன்னம்பிக்கையுடன் வாழவேண்டும் என்பதற்காக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக உலக வங்கி நிதி உதவியுடன் தமிழ்நாடு உரிமைகள் திட்டம் எனும் சிறப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகள் எதிர் கொள்ளும் பல்வேறு தடைகளை நீக்குதல், அனைத்து நிலைகளிலும் சமத்துவமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருதல், எளிதான முறையில் அரசின நலத்திட்டங்களை கிடைக்கச் செய்தல், வாழ்வாதார மேம்பாடு மற்றும் சமூக பங்கேற்பு உறுதி செய்வதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சமாகும்.இத்திட்டத்தின் மூலம் தமிழக அரசால் பல்வேறு துறைகளின் வாயிலாக செயல்படுத்தப்படும் சேவைகள் மற்றும் திட்டங்களை ஒருங்கிணைத்து சேவைகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளின் தனிப்பட்ட தேவைகளை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான சிகிச்சை மற்றும் மறுவாழ்வு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதனடிப்படையில், பிசியோதெரபி சிகிச்சை, ஆக்குபேசனல் தெரபி, பேச்சு மற்றும் மொழிசார் சிகிச்சை, உளவியல் ஆலோசனை, சிறப்புக் கல்வி, கண் பரிசோதனை போன்றவை வழங்கப்படுகின்றன. விருதுநகர் மாவட்டத்தில் 13 இடங்களில் ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தற்போது 6 இடங்களில் வெம்பக்கோட்டை கல்லமநாயக்கன்பட்டி, ஆரம்ப சுகாதார நிலையம், ராஜபாளையம் இளந்தோப்பு, ராமசாமி ராஜா அரசு மருத்துவமனை, நரிக்குடி, மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம், விருதுநகர் கன்னிசேரி புதூர், வட்டார ஆரம்ப சுகாதார நிலையம், காரியாபட்டி காட்டுகுத்தகை கரிசல்குளம், பெண்கள் பிரிவு, அரசு மருத்துவமனை, அருப்புக்கோட்டை பந்தல்குடி, பல் மருத்துவ பிரிவு, நகர்புற சுகாதார மையம் ஆகிய இடங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.மேலும், ஆண்டுதோறும் ALIMCO நிறுவனத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டில் NLC India Limited நிறுவன CSR நிதியின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. இதனை நல்லமுறையில் பயன்படுத்தி வாழ்வினை மேம்படுத்திட வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.இந்நிகழ்வில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவன செயல் இயக்குநர் திரு.மூர்த்தி, மனித வள மேலாண் இயக்குநர் திரு.சமீர் சுவரப், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் வ.செந்தில்வேல் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தில் ஓவிய, சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறையினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.உள்ளூர் படைப்பாளர்களின் படைப்பாற்றலை மேம்படுத்திடவும், அவர்களது தனித்திறன்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் அதற்கான வாய்ப்புத்தளங்களை ஏற்படுத்தித்தரும் பொருட்டு கலை பண்பாட்டுத்துறை சார்பில் விருதுநகர் மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் 17.07.2026 முதல் 19.07.2026 வரை ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நடைபெறுகிறது.இதன் மூலம் தங்களது படைப்புகளை காட்சிப்படுத்த இயலவில்லை என்ற குறைகளை கலைந்திடவும், நல்ல ஓவியம் மற்றும் சிற்பங்களைக் காண வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலைகளை தவிர்த்திடும் பொருட்டு நம் ஊரிலேயே கண்காட்சி நடைபடுத்தப்படுகிறது.இக்குறுகிய கால பயிற்சிகளில் ஓவியம் வரைவதில் உள்ள நுணுக்கங்கள் குறித்த பயிற்சியும், சிற்பங்கள் உருவாக்குவதற்கான சிற்பக்கலைக்கான பயிற்சி பட்டறையும் நடத்தப்படுகிறது.இதனை அனைவரும் நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் மண்டலக் கலை பண்பாட்டு துறை திரு. து.சிவப்புகழ் (உதவி இயக்குநர்) அவர்கள் கலந்துகொண்டார்.
விருதுநகர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் (17.07.2026) ”மக்கள் தொகை கணக்கெடுப்பு தொடக்கம்” சுயமாக தன் விவரங்களை பதிவேற்றும் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார்.2027 ஆம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியானது இரண்டு கட்டமாக நடைபெறவிருக்கிறது. இதில் முதல் கட்டமானது 17.07.2026 முதல் 31.07.2026 வரை சுயகணக்கெடுப்பு முறையிலும், இரண்டாம் கட்டமானது 01.08.2026 முதல் 31.08.2026 வரை கள கணக்கெடுப்பாளர்கள் மூலமும் நடைபெறும். மேலும் இப்பணிக்காக 3000 கள பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மேலும், இந்த சுய கணக்கெடுப்பின் (Self Enumeration) மூலம் பொதுமக்களின் அடிப்படை வசதிகளான கல்வி, வீடு, சாலை மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த திட்டத்தையும் அதன் தேவையினையும் அறிய இந்த சுய கணக்கெடுப்பு விவரங்கள் உதவுகின்றன.எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களின் சுய விவரங்களை https://se.census.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்தவுடன் 11 இலக்க கணக்கெடுப்பு குறிப்பு எண் (Self Enumeration Reference Number (SRN) வழங்கப்படுகிறது. இந்த SRN-ஐ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். பின்னர் கணக்கெடுப்பாளர் (Enumerator) உங்கள் இல்லத்திற்கு வரும்போது, அவரது அடையாள அட்டையை சரிபார்த்து, இந்த சுய கணக்கெடுப்பு குறிப்பு எண்ணை கணக்கெடுப்பாளரிடம் வழங்குவதன் மூலம், இணையத்தில் பதிவு செய்யப்பட்ட விவரங்களை அவர் சரிபார்த்து உறுதி செய்வார் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S., அவர்கள் தெரிவித்துள்ளார் .
தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம், தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம், தமிழ்நாடு புதிரை வண்ணார் நல வாரியம் மற்றும் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியம் ஆகிய வாரியங்களில் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படாமல் உள்ளவர்களை புதிய உறுப்பினர்களாக சேர்ப்பதற்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.இந்த முகாமானது 100 சதவீத உறுப்பினர் சேர்க்கையை உறுதி செய்யும் பொருட்டு மாவட்டந்தோறும் 18.07.2026. 25.07.2026, 01.08.2026, 08.08.2026 மற்றும் 16.08.2026 ஆகிய நாட்களில் கீழ்கண்ட இடங்களில் நடத்தப்பட உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் 18.07.2026 அன்று, வத்திராயிருப்பு வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், அருப்புக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், விருதுநகர் வட்டம் -வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும், 25.07.2026 அன்று, ஸ்ரீவில்லிபுத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், காரியாபட்டி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சிவகாசி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும்,01.08.2026 அன்று, இராஜபாளையம் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், திருச்சுழி வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், சாத்தூர் வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய இடங்களிலும், 08.08.2026அன்று, வெம்பக்கோட்டை வட்டம் - வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இந்த சிறப்பு முகமானது நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா I A S ., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY) 2016-ம் ஆண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு (2026-2027) முதல் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா ஜெனரல் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி லிட். மூலம் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.வேளாண் பயிர்களுக்கு பயிர் காப்பீடு கட்டணமாக ஏக்கருக்கு மக்காச்சோளம் பயிருக்கு ரூ. 466/-, சோளம் பயிருக்கு ரூ. 192/-, பாசிப்பயறு, உளுந்து பயிர்களுக்கு ரூ.370/-, பருத்தி பயிருக்கு ரூ.409/-, நிலக்கடலை பயிருக்கு ரூ.431/- மற்றும் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம் பயிருக்கு ரூ.1591/- மற்றும் வாழை பயிருக்கு ரூ.3997/- என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.எனவே, 2026-27 ம் ஆண்டின் நடப்பு காரீப் பருவத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய நிலக்கடலை பயிருக்கு (31.08.2026), உளுந்து, பாசிப்பயறு, சோளம் மற்றும் பருத்தி வகைகளுக்கு (16.09.2026) மற்றும் மக்காச்சோளம் பயிருக்கு (30.09.2026) வரையிலும், தோட்டக்கலை பயிர்களான வெங்காயம் பயிருக்கு (31.08.2026) மற்றும் வாழை பயிர்களுக்கு (15.09.2026) காப்பீடு செய்ய கடைசி நாளாகும்.ஆகையால், விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் போது முன்மொழிவு விண்ணப்பத்துடன், பதிவு விண்ணப்பம், கிராம நிர்வாக அலுவலர் வழங்கும் அடங்கல்/விதைப்பு அறிக்கை, வங்கிக் கணக்கு புத்தகத்தின் (Bank pass book) முதல் பக்க நகல், ஆதார் அட்டை (Aadhar Card) நகல் ஆகியவற்றை இணைத்து, கட்டணத் தொகையை செலுத்திய பின் அதற்கான இரசீதையும் பொதுச் சேவை மையங்கள்/ தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகளில் பெற்றுக் கொள்ளலாம்.இதன் மூலம், விவசாயிகள் எதிர்பாராமல் ஏற்படும் இயற்கை பேரிடர்களையும், பூச்சி நோய் தாக்குதலால் ஏற்படும் இழப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைக் கருத்தில் கொண்டு தங்களது பயிர்களுக்கான காப்பீடை (crop Insurance) அருகிலுள்ள பொதுச்சேவை மையங்களிலோ (CSC) தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களிலோ (PACCS) அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளிலோ உரிய காப்பீடு கட்டணம் (Premium) செலுத்தி தங்களது பயிர்களை காப்பீடு செய்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டத்தில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ், இரண்டாம் நாளான இன்று (16.07.2026) அரசின் திட்டங்கள் மற்றும் சேவைகள் பொதுமக்களிடம் சென்றடைவது குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் கள ஆய்வு செய்தார்.விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி வட்டார பகுதிகளில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்“ திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேற்று 15.07.2026 காலை 09.00 மணி முதல் 16.07.2026 அன்று காலை 09.00 மணி வரை பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் அரசின் மூலம் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காணும் வகையில் கள ஆய்வு மேற்கொண்டார்.அதன் படி இரண்டாம் நாளான (16.07.2026) அதிகாலை காரியாபட்டி மற்றும் மல்லாங்கிணறு பேரூராட்சிகளுக்கான கூட்டு குடிநீர் திட்ட செயல்பாடுகள் குறித்தும், மல்லாங்கிணறு பேரூராட்சி திம்மன்பட்டி கிராமத்தில் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வரும் பணிகளையும், தூய்மை பணியாளர்கள் மூலம் பொது மக்களிடம் இருந்து திடக்கழிவுகள் தரம் பிரித்து பெறப்பட்டு வரும் பணிகளையும், மல்லாங்கிணறு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், அம்ருத் திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி பணிகளையும், மல்லாங்கிணறு பேரூராட்சி அலுவலகத்தில் பதிவேடுகள், கோப்புகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.அனைத்து ஊராட்சிகளிலும் குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலைப் பணிகள், அரசின் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தினை மேம்படுத்தவும் தொடர்புடைய அரசு அலுவலர்களுக்கு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.இந்நிகழ்வுகளில்அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் திரு.மாரிமுத்து, காரியாபட்டி வட்டாட்சியர் திரு.திருப்பதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் , அனைத்துத் துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடுநாள் விழாவினையொட்டி தமிழ்வளர்ச்சித் துறை சார்பில் விருதுநகர் மாவட்டத்திலுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 14.07.2026 ஆம் நாளன்று விருதுநகர் கே.வி.எஸ் ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றன. அரசு, தனியார் / அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 73 மாணவர்கள் பேச்சுப் போட்டியிலும், 69 மாணவர்கள் கட்டுரைப் போட்டியிலும் பங்கேற்றனர். இப்போட்டிகளில் 6 மாணவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.பேச்சுப்போட்டியில் சத்திரிய மகளிர் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி சி.சவிதா முதல் பரிசாக ரூ 10000/-மும், ஆவுடையாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி கூ.பிரதீபா இரண்டாம் பரிசாக ரூ.7000/-மும், திருத்தங்கல் எஸ்.என்.ஜி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி வ.லோகபிரியா மூன்றாம் பரிசாக ரூ.5000/-மும் வென்றனர்.அதேபோல், கட்டுரைப்போட்டியில், மம்சாபுரம், பசும்பொன் தேவர் மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி அ.வைதேகிலட்சுமி முதல் பரிசாக ரூ.10000/- மும், தோனூகால் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவி இரா.சங்கீதா இரண்டாம் பரிசாக ரூ.7000/-மும், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவி மா.யோக சந்திரிகா மூன்றாம் பரிசாக ரூ.5000/-மும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பெற உள்ளன என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் ஜீலை -2026 மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 24.07.2026 அன்று காலை 11.00 மணியளவில் விருதுநகர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக மக்கள் கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. மேற்படி கூட்டத்தில் விவசாய பெருமக்கள் கலந்து கொள்வதுடன் விவசாயம் தொடர்பான பொதுவான கோரிக்கைகளை மட்டும் மனு மூலம் அளிக்கவும், விவசாயிகள் வட்டாரத்திற்கு இருவர் வாரியாக பொதுவான கோரிக்கைகள் மட்டும் விவாதிக்கவும், சிறந்த முறையில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தினை நடத்திட முழு ஒத்துழைப்பு தருமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா .I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இளைஞர் நீதிக் குழுமத்தின் வழிகாட்டுதலின்படி, இளைஞர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் உயிர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள தேநீர் கடை மற்றும் சிறுதானிய உணவகத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (15.07.2026) திறந்து வைத்தார். மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டமானது சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் சமூகத்தில் சுயமரியாதையுடனும், தன்னம்பிக்கையுடனும் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொண்டு மறுவாழ்வு பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், அருப்புக்கோட்டை ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவருக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில் (EDII-TN) சுயதொழில் பயிற்சி வழங்கப்பட்டது. மேலும், சுயதொழில் தொடங்குவதற்கான முதலீட்டிற்கு வங்கியின் மூலம் ரூ.1,00,654/- கடனுதவியும், அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் இடமும் வழங்கப்பட்டுள்ளது. இதில் தேநீர் கடை மற்றும் சிறுதானிய உணவகம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த முயற்சியின் மூலம், சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகள் தங்களது வாழ்க்கையை சீரமைத்து, சுயதொழில் வாயிலாக பொருளாதார ரீதியாக முன்னேறி, சமூகத்தில் மதிப்புமிக்க குடிமக்களாக மறுவாழ்வு பெறுவதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், இதுபோன்ற மறுவாழ்வு நடவடிக்கைகள் மூலம் சட்டத்துடன் முரண்பட்ட குழந்தைகளை சமூகத்துடன் இணைத்து, அவர்களின் எதிர்காலத்தை வளப்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.இந்நிகழ்வில், ஊராட்சிகள் உதவி இயக்குநர்(பயிற்சி) திருமதி கீதா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி, மாவட்ட திட்ட மேலாளர்(தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம்) திரு.பிலிப் மில்டன் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.