விருதுநகர் மாவட்டத்தில் தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது 23.06.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. குழுவானது மூன்று வருடத்திற்குள் கலைக்கப்பட வேண்டும். எனவே நடைமுறையில் உள்ள தூய்மை பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது தற்போது கலைக்கப்படுகிறது. புதிய குழு அமைத்து அக்குழுவிற்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைவராகவும், மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செயல் உறுப்பினராகவும் செயல்படுவார்கள். இக்குழுவில் நிரந்தர உறுப்பினராக, காவல் கண்காணிப்பாளர் , உதவி இயக்குநர் பேரூராட்சிகள், அனைத்து மாநகராட்சி ஆணையர் மற்றும் நகராட்சி ஆணையர்கள் மாவட்டத்தில் இரயில்வே துறையினைச் சேர்ந்த ஒரு பொறுப்பாளர் கெஜட் அதிகாரி மாவட்ட அளவிலான வங்கி குழுவின் ஒரு பொறுப்பாளர் ஆகியோர்கள் நிரந்தர உறுப்பினராக செயல்படுவார்கள்.மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் .அல்லது மாநில அரசால் பரிந்துரை செய்யப்படும் விருதுநகர் மாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டுக்கும் மிகாத நபர்கள் உறுப்பினராக இருத்தல் வேண்டும். மனித கழிவுகளை அகற்றும் தொழில் செய்வதை தடுத்தல் மற்றும் மறு வாழ்விற்காக பணி மேற்கொள்ள எண்ணிக்கையில் 4 பேருக்கு மேற்படாத சமூக ஆர்வலர்கள் (மாவட்ட ஆட்சியரால் முடிவு செய்யப்பட்டவர்கள்) அதிகாரப் பூர்வமற்ற உறுப்பினராக 4 சமுக ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம்.தகுதி வாய்ந்த நபர்கள் விருதுநகர் மாவட்ட தூய்மைப் பணியாளர்கள் மறுவாழ்வு குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக வருகின்ற 30.07.2026 –க்குள் விண்ணப்பிக்குமாறு, மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S.. அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (13.07.2026) நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ரூ.14.25 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் வழங்கினார்.இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.இக்கூட்டத்தில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில், திறன் வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு மற்றும் கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும்,மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு திட்டமான உயிர் திட்டத்தின் கீழ் ஒரு பயனாளிக்கு தேநீர் கடை வைப்பதற்காக ரூ.1,00,654/- மதிப்பில் உதவித்தொகையையும், கோவிட் தொற்றால் தாய் தந்தையை இழந்த 4 நபர்களுக்கு போட்டித்தேர்வுக்கான பாடக் குறிப்பேடுகளையும்,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தீண்டாமையை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்தோடு வாழும் கிராமமாக தேர்வு செய்யப்பட்ட சாத்தூர் வட்டம், நள்ளி ஊராட்சிக்கு கிராம வளர்ச்சிக்காக ரூ.10 இலட்சம் பரிசுத்தொகைக்கான காசோலையினையும், பணியின்பொழுது மரணமடைந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினையும்,மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.1,08,000/- வீதம் மொத்தம் ரூ.3.24 இலட்சம் மதிப்பிலான மின்கல மூன்று சக்கர நாற்காலிகளையும் என ஆக மொத்தம் ரூ.14.25 இலட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.தொடர்ந்து, பொதுமக்களிடமிருந்து 694 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உரிய நடவடிக்கை எடுக்க ஒப்படைக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) திருமதி கு.மோகனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசுத் துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சீமைக் கருவேலம் (Prosopis juliflora) என்பது வெளிநாட்டிலிருந்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்பு தாவர இனமாகும். இதன் கட்டுப்பாடற்ற பரவல் காரணமாக பூர்வீக தாவர இனங்கள் அழிவடைவதுடன், உயிரினப் பன்முகத்தன்மை பாதிக்கப்படுகிறது. மேலும், நிலத்தின் இயற்கை வளம் மற்றும் உற்பத்தித்திறன் குறைவதோடு, மேய்ச்சல் நிலங்கள், விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்படுவதுடன், நில மீட்பு மற்றும் பசுமை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது.இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் W.P.(MD) Nos. 16485 & 14699 of 2015 மற்றும் W.P. No. 3075 of 2017 ஆகிய வழக்குகளில் வழங்கியுள்ள உத்தரவுகள் மற்றும் தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு ஆக்கிரமிப்பு தாவரங்கள் அகற்றுதல் மற்றும் சுற்றுச்சூழல் மறுசீரமைப்புக் கொள்கை (TNPIPER) ஆகியவற்றின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட நிர்வாகம் "விருதுநகர் செழுமை கருவூலம்" என்ற சிறப்பு முன்முயற்சியின் கீழ், அரசு நிலங்கள் மற்றும் வளாகங்களில் சீமைக் கருவேல மரங்களை வேருடன் முழுமையாக அகற்றி, பூர்வீக மர இனங்களை நடவு செய்து சுற்றுச்சூழலை மீட்டெடுக்கும் பணிகளை பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்புடன் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. "விருதுநகர் செழுமை கருவூலம்" அரசு நடவடிக்கையாக மட்டுமல்லாமல், மக்கள் இயக்கமாக மாற வேண்டும் என்பதே மாவட்ட நிர்வாகத்தின் நோக்கமாகும். எனவே, விவசாயிகள், நில உரிமையாளர்கள், தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் தங்களது சொந்த நிலங்கள் மற்றும் வளாகங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை வேருடன் அகற்றி, அதற்குப் பதிலாக பூர்வீக மர இனங்களை நடவு செய்யும் பணிகள் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளான 15.07.2026 அன்று நடைபெறவுள்ளது. இம்முயற்சியில் தன்னார்வத்துடன் அனைவரும் பங்கேற்று பெருமளவு சீமைக் கருவேல மரங்களை அகற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேற்கொள்ளப்படும் பணிகளின் அகற்றுதலுக்கு முன் மற்றும் பின் (Before & After) புகைப்படங்கள், இட விவரங்கள், அகற்றப்பட்ட பரப்பளவு, நடப்பட்ட பூர்வீக மர இனங்கள் மற்றும் மரக்கன்றுகளின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை selumaikaruvoolamvnr@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. சிறப்பாக செயல்படுத்தப்படும் தனிநபர்கள், விவசாயிகள், நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பங்களிப்புகள் மாவட்ட நிர்வாகத்தால் பாராட்டப்பட்டு, மாவட்ட அளவில் முன்மாதிரிகளாக எடுத்துக்காட்டப்படும். "சீமைக் கருவேலம் இல்லா விருதுநகர் – பசுமை நிறைந்த விருதுநகர்" என்ற உயரிய இலக்கை அடைய அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனக்கென்று வாழாமல் பிறருக்காகவே வாழ்ந்து, நாட்டுமக்கள் உள்ளத்தில் நிரந்தர இடத்தைப் பெற்றவர். விருதுபட்டி என்னும் விருதுநகரில் குமாரசாமி நாடார் சிவகாமி அம்மாள் தம்பதிக்கு 1903 ஜீலை 15 அன்று மகனாகப் பிறந்தார்.எளிய குடும்பத்தில் பிறந்தவர். ஆறு வயதுச் சிறுவனாக இருந்தபோதே தந்தையை இழந்தவர். ஆறாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே பள்ளி செல்வதை நிறுத்த வேண்டிய சூழ்நிலைமைக்கு ஆளானவர். தன் முழு நேரத்தையும் நாட்டுப் பணிக்கு அர்ப்பணிப்பதற்காகத் திருமணம் செய்து கொள்ளவும் மறுத்தவர்.எளிய தொண்டனாக அரசியல் வாழ்க்கையைத் துவக்கி, உண்மையான உழைப்பால், அடக்கமான எளிய வாழ்க்கையால், உயர்ந்த பதவிகளைப் பெற்று, வரலாற்றுப் புகழை அடைந்தார். பல்கலைக்கழகப் படிப்போ, பட்டமோ பெறாதிருந்தும், தனிப்பட்ட முறையில் ஏராளமான நூல்களைப் படித்து உலக அறிவை வளர்த்துக் கொண்டார்.தமிழ்நாட்டின் முதலமைச்சராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1954 முதல் 1963 வரை முதலமைச்சராக இருந்தார். பள்ளிகளில் இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அனைவருக்கும் 11-ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி அளித்தார். பதவியைச் சேவை செய்வதற்கான வாய்ப்பாகவே கருதினார். சேவையில் முழுநேரம் ஈடுபடுவதற்காகப் பதவியைத் துறக்கவும் அவர் தயங்கியதில்லை.ஏழை எளிய மக்களை வாழ வைக்க வேண்டும் என்ற இலட்சியப் பிடிப்போடு பாடுபட்டு, இந்தியாவில் தமிழ்நாட்டிற்குத் தனிப் பெருமை தேடித் தந்தார். ஜவகர்லால்நேரு மறைந்த போது இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் தனிப் பெருந்தலைவராக காமராஜர் திகழ்ந்தார். இத்தகைய பெருமைக்குறிய பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் விருதுநகர் வீடு நினைவு இல்லமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவு இல்லத்தில், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பயன்படுத்திய பொருட்கள், வாழ்க்கை நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறும் புகைப்படங்கள், படித்த நூல்கள் ஆகியவை நிரந்தரமாக வைக்கப்பட்டுள்ளன. மேலும், பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் பிறந்த தினம் அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருதுநகரில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் 124-வது பிறந்தநாள் விழா செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில், 15.07.2026 அன்று சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.அன்றைய தினம், விருதுநகர்-மதுரை சாலையில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராசர் நூற்றாண்டு நினைவு மணிமண்டபத்தில் உள்ள அன்னாரது திருவுருவ சிலைக்கு மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முக்கிய பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்கள்.மேலும், பொதுமக்கள் அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள சிலைக்கு மரியாதை செலுத்தவும், இல்லத்தை பார்வையிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நாடார் நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசுப்பள்ளி மாணவர்கள் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில தயார் செய்யும் வகையில் வெற்றிப்பள்ளி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (11.07.2026) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனை பாதுகாத்திடவும், அதிகப்படியான மாணவர்கள் சிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில வேண்டும் என்பதற்காக வெற்றிப்பள்ளிகள் திட்டம் பள்ளிக்கல்வித்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு சிறந்த பயிற்றுனர்களைக் கொண்டு பாடங்கள் நடத்தப்படுகின்றன. மாணவர்களுக்கு தேவையான வழிகாட்டி புத்தகங்களும், எழுதுப்பொருட்களும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் தனியார் நிறுவனங்களில் கட்டணம் செலுத்தி பயிற்சி பெறும் சூழ்நிலை தவிர்க்கப்படுவதோடு, அனைத்து மாணவர்களும் விருப்பத்தின் பேரில் பயிற்சி பெறும் சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் விருதுநகர் த.பெ.நா நகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி, பாலவநத்தம் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகாசி அ.உ.நகராட்சி மேல்நிலைப்பள்ளி, திருவில்லிபுத்தூர் திரு.வி.க. நகராட்சி மேல்நிலைப்பள்ளி, எம்.ரெட்டியபட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளி, இராஜபாளையம் சேத்தூர் சேவக பாண்டியாஅரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி என 7 பள்ளிகளில் 1209 மாணவ, மாணவிகளுக்கு நீட், ஜே.இ.இ மற்றும் க்யூட் ஆகிய பயிற்சிகள் வழங்கப்படுகிறது.இதன் மூலம் அனைத்து அரசுப்பள்ளி மாணவர்களும் உயர் கல்வி பயில வேண்டும் என்ற மாணவர்களின் கல்விக்கனவு நிறைவேற்றப்படுகிறது. ஆசிரியர்களை மாணவர்களிடம் கனிவாகவும், புரியும் வண்ணமும் பாடங்கள் நடத்தியும், தொடர்ந்து தேர்வுகள் நடத்தியும் அவர்களின் கற்கும் திறனை மேம்படுத்திட அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. இதனை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.முன்னதாக, பள்ளிப்படிப்பில் இடைநிற்றல் மாணவர்களை கண்டறிந்து, 3 மாணவர்களின் வீடுகளுக்கு சென்று அவர்களின் பெற்றோர்களுக்கு அறிவுரைகள் வழங்கி மீண்டும் கல்வி தொடர அறிவுறுத்தினார் .ஆய்வின் போது, மாவட்ட கல்வி அலுவலர் திருமதி சாந்தி , மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் திருமதி மீனாட்சி உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் மக்களைத் தேடிச்சென்று குறைகளைக் கேட்டறியவும், பல்வேறு துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள், செயல்பாடுகளை விரைவுபடுத்தவும் மற்றும் வழங்கப்படும் சேவைகளின் தரத்தை மேம்படுத்தவும், மக்களை நாடி மக்கள் குறைகளைக் கேட்டு, உடனுக்குடன் தீர்வு காண அரசு இயந்திரம் களத்திற்கே சென்று ஆய்வு செய்திட ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.அதன்படி, விருதுநகர் மாவட்டம், ‘காரியாபட்டி வட்டத்தில்“ உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டமானது 15.07.2026 அன்று காலை 09.00 மணி முதல் மறுநாள் 16.07.2026 அன்று காலை 09.00 மணி வரை நடைபெறவுள்ளது. மேலும் 15.07.2026 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 04.30 மணி வரை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான அனைத்து மாவட்ட நிலை அலுவலர்களும் கள ஆய்வில் ஈடுபட்டு, காரியாபட்டி வட்டத்தில் உள்ள மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அரசின் அனைத்து நலத்திட்டங்களும் மற்றும் சேவைகளும், தங்கு தடையின்றி மக்களைச் சென்று அடைவதை ஆய்வு செய்ய உள்ளனர். அதன் ஒரு பகுதியாக, 15.07.2026 அன்று மாலை 03.00 மணி முதல் 06.00 மணி வரை காரியாபட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து மக்களை சந்தித்து குறைகளைக்; கேட்பதும், மாலை 06.00 மணி முதல் மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலர்களுடன் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்து இரவில் தங்கி பணியாற்றவும் உள்ளனர்.மேலும், அன்றைய தினம் நடைபெறும் முகாமில் பொது மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. எனவே காரியாபட்டி வட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்களது பகுதிகளில் உள்ள குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் நேரில் தெரிவித்து, அரசின் திட்டங்கள் அனைத்தும் தங்கள் பகுதிக்கு முழுமையாக கிடைத்திட இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
விருதுநகர் மாவட்டத்தில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது 29.03.2023 அன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேற்படி குழுவானது மூன்று வருடத்திற்குள் கலைக்கப்பட வேண்டும். எனவே நடைமுறையில் உள்ள பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுவானது தற்போது கலைக்கப்படுகிறது. புதிய குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இக்குழுவில் மாவட்ட ஆட்சியர் தலைவராகவும், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செயல் உறுப்பினராகவும், உறுப்பினர்களாக நாடாளுமன்றம் அல்லது மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் (பட்டியலினத்தைச் சேர்ந்தவராக இருத்தல் வேண்டும் அல்லது மாநில அரசால் பரிந்துரை செய்யப்படும் விருதுநகர் மாவட்டத்தினைச் சேர்ந்த இரண்டுக்கும் மிகாத நபர்கள்), காவல் கண்காணிப்பாளர், அதிகாரப்பூர்வமான உறுப்பினர் (Gazatted Officers), அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்கள்(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த சமுக ஆர்வலர்கள் மற்றும் கல்வியாளர்கள்) ஆகியோர் இருப்பார்கள்.எனவே, தகுதி வாய்ந்த நபர்கள் விருதுநகர் மாவட்ட பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் நல்வாழ்வு குறித்த மாவட்ட அளவிலான வன்கொடுமை தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு உறுப்பினராக வருகின்ற 15.07.2026 –க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் (11.07.2026) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் உலக மக்கள்தொகை தினம்-2026 முன்னிட்டு, விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.உலக அளவில் மக்கள்தொகை பெருக்கம் என்பது நாடுகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய இடையூறாக திகழ்கின்றது . மக்கள் தொகை பெருக்கும் குறிக்கும் அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 11 அன்று உலக மக்கள் தொகை தினமாக அனுசரிக்கப்படுகிறது. அது குறித்த உறுதிமொழி ஏற்றல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் பேரணி நடத்தப்படுகிறது இந்த ஆண்டு உலக மக்கள் தொகை தினம் தாய் மற்றும் குழந்தையின் நலனுக்காகவும் திட்டமிடப்படாத கர்ப்பங்களை தடுப்பதற்காகவும் கர்ப்பங்களுக்கிடையே ஆரோக்கியமான கால இடைவெளியினை பேணுவோம் என்ற கருப்பொருளின் அடிப்படையில் அனுசரிக்கப்படுகிறது.அதன்படி, உலக மக்கள் தொகை தினம்-2026 முன்னிட்டு விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் இருந்து செவிலியர் மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.மக்கள்தொகை பெருக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம், ஊரக வளர்ச்சித்துறை, நகர வளர்ச்சித்துறை, உணவு மற்றும் பொ து விநியோகம், போக்குவரத்துத்துறை, கல்வித்துறை ஒருங்கிணைந்து செயலாற்றிட வேண்டும்.போதிய கர்ப்ப இடைவெளியினால், தாயின் சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து மேம்படும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் இரண்டு ஆண்டுகள் வரை கொடுப்பதால் தாய் மற்றும் சேய் நலம் மேம்படுவதுடன், ஆரோக்கியம் மற்றும் சுகாதாரமான எடை அதிகரிக்கிறது. இதனால் பிரசவ காலங்களில் ஏற்படும் இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதம் குறைகிறது. தாய் மற்றும் குழந்தையின் நல்வாழ்வுக்கு 20 வயதிற்கு பிறகு முதல் கர்ப்பம் ஆவது சிறந்தது. இரண்டு பிறப்புகளுக்கு இடையில் குறைந்தது 3 வருட இடைவெளி மற்றும் கருக்கலைப்புக்குப் பிறகு குறைந்தது 6 மாத இடைவெளி இருப்பது நல்லது.குடும்ப நலத் தேவைகளை பூர்த்தி செய்வதில், தற்காலிக மற்றும் நிரந்தர கருத்தடை முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், கருத்தடை உள்ளிட்ட சேவைகளை வழங்குவதில் முதன்மையான கவனம் செலுத்த வேண்டும் கருக்கலைப்பு தொடர்பான ரகசியம் பாதுகாக்கப்படும்.அதன்படி, அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும், குடும்பக் கட்டுப்பாட்டு முறைகளான, தற்காலிக குடும்ப நல சேவைகள்(ஐயுசிடி பொருத்துதல் ஊசி மூலம் கருத்தடை ), நிரந்தர குடும்ப நல சேவைகள்(பெண்களுக்கான கருத்தடை முறைகள் ஆண்களுக்கான கருத்தடை முறைகள்) ஆகிய குடும்ப நலத்திட்டமிடல் சேவைகள் வழங்குவதில் சிறப்பு கவனம் செலுத்தப்படும்.பெண்களுக்கான நிரந்தர கருத்தடை முறை (டியூபெக்டமி, லேப்ராஸ்கோபிக்) எளிமையானவை. இதற்கு பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகை வழங்கப்படும். ஆண்களுக்கான நிரந்தர கருத்தடை சி கிச்சை (நவீன வாசக்டமி ) எளிமையானது. இதற்கு பயனாளிக்கு அரசு ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.இதுபோன்ற அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மருத்துவத் துறையினரின் கடமை. எனவே ஒட்டுமொத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தான் உலக மக்கள் தொகை தினம் கொண்டாடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த பேரணியில் கலந்து கொண்ட பயிற்சி செவிலியர்கள் தங்கள் கைகளில், வளமான குடும்பம், வலிமையான குடும்பம்; வளர், இளம் பெண்களை காப்போம்;, வேண்டாம், வேண்டாம் இளம் வயது திருமணம் வேண்டாம்;, போதும் போதும் ஒரு குழந்தை போதும் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர். இந்த பேரணியானது அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் தொடங்கி முக்கிய வீதிகள் வழியாக சென்று நிறைவு பெற்றது.முன்னதாக, உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற செவிலியர் பயிற்சி பள்ளி மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கேடயங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்.மேலும், உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.ஜெயசிங் உட்பட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், மருத்துவப்பணியாளர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறை, விருதுநகர் மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக 2025-2026 ஆம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் அகவை மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த 15 கலைஞர்கள் விருதுகள் வழங்கிட தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.இவ்விருதுகளை தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலைத்திறனை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக 2021-2022 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட அரசு ஆணையிடப்பட்டுள்ளது.2025-2026 ஆம் ஆண்டுக்கான மாவட்டக் கலை விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S. அவர்கள் தலைமையில் 10.07.2026 அன்று நடைபெற்ற தெரிவுக்குழு கூட்டத்தில், திருநெல்வேலி, மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர், திரு.து.சிவப்புகழ் அவர்கள், விருதுநகர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.நாகராஜபூபதி அவர்கள், விருதுநகர் மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.நா.அன்பரசு அவர்கள், கலை சுடர்மணி திருமதி.வ.லலிதா, பரதநாட்டியக் கலைஞர், கலை வளர்மணி திரு.ரவிச்சந்திரன், நாதஸ்வரக் கலைஞர், கலை முதுமணி திரு.கோ.ஆறுமுகம், நாடகக் கலைஞர் மற்றும் கலை வளர்மணி.செல்வி.உமாராணி, கிராமியக் கலைஞர் ஆகியோர் கலந்து கொண்டு, மாவட்ட அளவில் சிறந்த கலைஞர்களை, அகவை மற்றும் கலைப்புலமை அடிப்படையில் கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.2025-2026 ஆம் ஆண்டு மாவட்ட கலை விருதுகளில் கலை இளமணி விருதுகளுக்கு செல்வி பா.காவ்யஸ்ரீ(பரதநாட்டியம்), செல்வி செ.ஸ்ரீநிதி (பரதநாட்டியம்), செல்வி.மு.வேதசாதனா(ஓவியம்), கலை வளர்மணி விருதுகளுக்கு திரு.இர.சுரேஷ்குமார்(நாடகம்), திரு.பொ.விஸ்வநாத்(கரகாட்டம்), திரு.பெ.சிவக்குமார்(நாட்டுப்புறப் பாடல்),கலை சுடர்மணி விருதுகளுக்கு திரு.வே.சுடலைக்கனி(தவில்), திரு.கா.கருப்பசாமி(ஒயிலாட்டம்), திரு.த.தனலெட்சுமி(வில்லிசை பாடகர்), கலை நன்மணி விருதுகளுக்கு திரு.அ.கந்தவேல்(நாதஸ்வரம்), திரு.ப.மாரிராஜ்(வாய்பாட்டு), திரு.பா.வெங்கடேஸ்வரன்(சிலம்பம்), கலை முதுமணி விருதுகளுக்கு திருமதி இளவரசி சொக்கர்(ஓவியம்), திரு.எஸ்.கே.கோபால்(நாதஸ்வரம்), திரு.பே.காளியப்பன்(நாடகம்) ஆகிய 15 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களுக்கு, விருதுநகர் மாவட்டத்தில் 19.07.2026 அன்று அரசு அருங்காட்சியகத்தில் நடைபெறவுள்ள ஓவிய சிற்பக் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை நிறைவு விழாவில் விருதுக்கான பொற்கிழி, பட்டயம் மற்றும் பொன்னாடை வழங்கி கௌரவிப்படுவார்கள் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் வளர்ச்சித் துறையால் “தனித்துவத் தமிழ்நாடு எனப்பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம்நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சூலை 18ஆம் நாள் “தமிழ்நாடுநாள் விழாவாக” மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ்நாடுநாளை நினைவுகூரும் வகையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளிலும் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்குக் கட்டுரை மற்றும் பேச்சுப்போட்டிகள் 14.07.2026 அன்று விருதுநகர் கே.வி.எஸ். ஆண்கள் நடுநிலைப்பள்ளியில் (விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில்) நடத்தப்பெறும். பள்ளி மாணவர்களுக்கானக் கட்டுரை பேச்சுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.10,000 -மும் இரண்டாம் பரிசாக ரூ.7000 -மும் மூன்றாம் பரிசாக ரூ.5000 -மும் மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பெறும். தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் வெற்றி பெற்று மாநில அளவிலான கட்டுரை பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000 -மும், இரண்டாம் பரிசாக ரூ.30,000 -மும், மூன்றாம் பரிசாக ரூ.20,000 -மும், மற்றும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பெறும். முதன்மைக் கல்வி அலுவலரால் அளிக்கப்பெறும் பெயர்ப்பட்டியலில் உள்ளவர்கள் மட்டுமே போட்டிகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். கட்டுரைப் போட்டி தமிழ்நாடு நாள் கருவானது முதல் உருவானது வரை என்ற தலைப்பிலும் , பேச்சுப் போட்டி 1.நான் விரும்பும் தமிழ்நாடு 2.அன்றைய மெட்ராஸ் மாகாணம் இன்றைய நவீன தமிழ்நாடு 3.இளைஞர்களின் பார்வையில் தமிழ்நாடு 4.கல்வியில் சிறந்த தமிழ்நாடு 5. வீரம் செறிந்த தமிழ்நாடு என்ற ஐந்து தலைப்புகளில் போட்டி நாளன்று மாணவர்கள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் ஏதேனும் ஒரு தலைப்பின்கீழ் பேசவேண்டும். மேலும் போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ்வளர்ச்சி உதவி இயக்குநர் மாவட்டஆட்சியர் அலுவலக வளாகம் விருதுநகர் என்ற முகவரியிலோ அல்லது செல்பேசி 8778878443 / 8608953287 என்ற எண்ணிலோ தொடர்புகொள்ளலாம். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் இப்போட்டிகளில் பங்கேற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு. என்.ஓ.சுகபுத்ரா, I A S., தெரிவித்துள்ளார்.