இந்தாண்டு இதுவரை 100-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகிவிட்டன. இந்நிலையில், கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்குப் பிறகு இந்த வாரம் ஜூன் 12ஆம் தேதி ஒரே நாளில் “ஆட்டி, சாருகேசி, டபுள் ஆக்குபன்சி, ஹபீபி, மூன்றாம் கண், நிழல், வள்ளுவன், வருகை பதிவேடு" ஆகிய 8 படங்கள் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் சிறிய பட்ஜெட்டில் உருவான படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவை ஸ்டூடியோக்களில் இருந்து கிராமத்து மண்வாசனைக்கு அழைத்துச் சென்ற புகழ்பெற்ற இயக்குனர் பாரதிராஜா (இயற்பெயர்: சின்னசாமி) நேற்று காலமானார். தேனி அல்லிநகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், இளையராஜா, கங்கை அமரன் ஆகியோரின் நண்பராவார். ஆரம்பத்தில் சுகாதார ஆய்வாளராகப் பணியாற்றி, சினிமா ஆசையால் சென்னை வந்து பல போராட்டங்களுக்குப் பிறகு உதவி இயக்குனராக உயர்ந்தார்.1977-ல் கமல், ரஜினி, ஸ்ரீதேவி நடிப்பில் இளையராஜா இசையில் இவர் இயக்கிய முதல் படமான '16 வயதினிலே' மாபெரும் வெற்றி பெற்று தமிழ் சினிமாவின் திருப்புமுனையாக அமைந்தது. "என் இனிய தமிழ் மக்களே..." என்ற தனது கம்பீர குரலால் ரசிகர்களை ஈர்த்த இவர், மத்திய அரசின் பத்மஸ்ரீ விருது, 'முதல் மரியாதை', 'கருத்தம்மா' உள்ளிட்ட படங்களுக்காகப் பல தேசிய மற்றும் மாநில விருதுகளையும், கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.
2026ஆம் ஆண்டு மே மாதம் வரை வெளியான தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 96-ஐத் தொட்டுள்ளது. இந்த வாரம் ஜூன் 5ஆம் தேதி, 'பரிமளா அண்ட் கோ', 'இரட்டையர்', 'சம்ஹாரம்', 'சன்னிதானம் பி.ஓ' ஆகிய 4 படங்கள் ரிலீஸாகின்றன. இவற்றுடன் சேர்த்து நடப்பு ஆண்டின் மொத்தப் படங்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டுகிறது. கடந்தாண்டு மே மாதம் வரை 110 படங்கள் ரிலீஸாகியிருந்தன. அதனுடன் ஒப்பிடுகையில் இந்தாண்டு படங்களின் எண்ணிக்கை சற்று குறைவு தான்.
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள படம் 'நூறுசாமி'. விவசாயப் பின்னணியில், தாயை மகன் போற்றும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதைக் களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களிலேயே ரிலீஸாக வேண்டிய இப்படம், தேர்தல் பரபரப்பு காரணமாகத் தள்ளிப் போனது. தற்போது ஜூன் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'பென்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளதாகவும், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் போட்டியிட உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதுபற்றி லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவு ஜூன் 11ஆம் தேதி, காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வதந்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவிக்காததால், லாரன்ஸ் அரசியலுக்கு வருவது உறுதி தான் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'டிராகன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, வெளியான 24 மணி நேரத்தில் 36.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிட சாதனை படைத்துள்ளது. 36 மில்லியன் வியூஸ்களுடன் 'டாக்சிக்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ 2-ம் இடத்தில் உள்ளது.
சேட்டன் டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ஸ்ரேயாஸ் தல்படே நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கதைகளத்தைக் கொண்டுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் நடக்கும் இப்படம் ஜூலை 24ல் இந்தி, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது.
கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப், தற்போது 'பில்லா ரங்கா பாஷா' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு ஜானர்களில் கதைகளை உருவாக்கியுள்ள அவர், அதில் ஒன்றை இயக்கவுள்ளார். கடைசியாக 2014ல் 'மாணிக்யா' படத்தை இயக்கியவர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
"தமிழக முதல்வர் விஜய் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால் தமிழகம் ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ளதால், வாக்குறுதிகளை நிறைவேற்ற அவருக்கு உதவி தேவைப்படுகிறது. நாம் ஏழை மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும்" என்று கூறி, ஏழை மக்களுக்காக ரூ. 10 கோடியை சோனு சூட் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நடிகர் பிரபாஸ் ஐதராபாத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இதன் கட்டுமான மதிப்பு மட்டுமே சுமார் ரூ.180 கோடி எனக் கூறப்படுகிறது. தியேட்டர், நீச்சல் குளம், ஜிம் எனப் பல சொகுசு வசதிகளுடன் உருவாகும் இந்த வீட்டின் மாதிரிப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.