சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுவாசிகா நடித்துள்ள படம் 'நூறுசாமி'. விவசாயப் பின்னணியில், தாயை மகன் போற்றும் வகையிலான உணர்வுப்பூர்வமான கதைக் களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களிலேயே ரிலீஸாக வேண்டிய இப்படம், தேர்தல் பரபரப்பு காரணமாகத் தள்ளிப் போனது. தற்போது ஜூன் 19ஆம் தேதி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது எனப் படக்குழு அறிவித்துள்ளது.
நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'பென்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, அவர் விரைவில் அரசியலில் குதிக்க உள்ளதாகவும், திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) சார்பில் போட்டியிட உள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. இதுபற்றி லாரன்ஸ் வெளியிட்டுள்ள பதிவில், “என் தாயின் ஆசீர்வாதங்களுடன், என் வாழ்க்கை தொடர்பான முக்கிய முடிவு ஜூன் 11ஆம் தேதி, காலை 9:30 மணிக்கு அறிவிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். இந்த வதந்திகளுக்கு அவர் மறுப்பு தெரிவிக்காததால், லாரன்ஸ் அரசியலுக்கு வருவது உறுதி தான் என்று சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் 'டிராகன்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, வெளியான 24 மணி நேரத்தில் 36.7 மில்லியன் பார்வைகளைக் கடந்து முதலிட சாதனை படைத்துள்ளது. 36 மில்லியன் வியூஸ்களுடன் 'டாக்சிக்' படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ 2-ம் இடத்தில் உள்ளது.
சேட்டன் டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ஸ்ரேயாஸ் தல்படே நடித்துள்ள 'தி இந்தியா ஸ்டோரி' திரைப்படம், பூச்சிக்கொல்லி மருந்துகளால் ஏற்படும் ஆபத்துகள் குறித்த கதைகளத்தைக் கொண்டுள்ளது. இறுதிக்கட்டப் பணிகள் நடக்கும் இப்படம் ஜூலை 24ல் இந்தி, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் வெளியாகிறது.
கன்னட முன்னணி நடிகர் கிச்சா சுதீப், தற்போது 'பில்லா ரங்கா பாஷா' படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே, ஒரே நேரத்தில் நான்கு வெவ்வேறு ஜானர்களில் கதைகளை உருவாக்கியுள்ள அவர், அதில் ஒன்றை இயக்கவுள்ளார். கடைசியாக 2014ல் 'மாணிக்யா' படத்தை இயக்கியவர், 12 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இயக்குவதால் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
"தமிழக முதல்வர் விஜய் மக்களுக்குப் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். ஆனால் தமிழகம் ஏற்கனவே கடனில் மூழ்கியுள்ளதால், வாக்குறுதிகளை நிறைவேற்ற அவருக்கு உதவி தேவைப்படுகிறது. நாம் ஏழை மக்களுக்குத் துணையாக நிற்க வேண்டும்" என்று கூறி, ஏழை மக்களுக்காக ரூ. 10 கோடியை சோனு சூட் நன்கொடையாக வழங்கியுள்ளார்.
நடிகர் பிரபாஸ் ஐதராபாத்தில் 3 ஏக்கர் நிலப்பரப்பில் பிரமாண்ட பங்களா ஒன்றை கட்டி வருகிறார். இதன் கட்டுமான மதிப்பு மட்டுமே சுமார் ரூ.180 கோடி எனக் கூறப்படுகிறது. தியேட்டர், நீச்சல் குளம், ஜிம் எனப் பல சொகுசு வசதிகளுடன் உருவாகும் இந்த வீட்டின் மாதிரிப் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் 'சிக்மா' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, ஜூலை 31ல் படம் ரிலீஸாகவுள்ளது. சந்தீப் கிஷன் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ள இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' ரிலீஸ் தேதியையும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
ஆலியா பட், ஷர்வாரி நடிப்பில் ஜூலை 10ல் வெளியாகவுள்ள 'ஆல்பா' படத்தில் பாபி தியோல் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். படம் குறித்துப் பேசிய அவர், "ஆலியா மிகக் கடின உழைப்பாளி. இதுவரை சண்டைக் காட்சிகளில் நடிக்காத அவர், இதில் ஆக்ஷன் காட்சிகளுக்காகத் தயாரான விதம் என்னை ஆச்சரியப்படுத்தியது" எனக் கூறியுள்ளார்.
“தாழ் திறவா”. பரணி சேகரன் இயக்க, ஆதவ் கண்ணதாசன், வாணி போஜன் நடித்துள்ள, திகில் மற்றும் மர்மம் கலந்த கதையில், உருவாகி வரும் படம். ஒரு கிராமத்தில் கண்டெடுக்கப்படும் பழமையான எழுத்துக்கள், அதன் பின்னணியில் மறைந்திருக்கும் மர்மமான ஆபத்துகளே படத்தின் கதை. உலகளவில் பிரபலமான கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்த படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணி நடக்கிறது.