25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர்தேக்கத்திற்கு நீர்வரத்து அதிகரிப்பு. >> ராஜபாளையத்தில் த.வெ.க. மருத்துவ முகாம். >> சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >>


செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் விருதுநகர் மாவட்டம்

Jun 01, 2026

அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பின் நிறைவு விழா .

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில்(27.05.2026) மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் திசை திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட அகில இந்திய நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பின் நிறைவு விழா நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில், சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான், I A S அவர்கள் மற்றும் திருவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.கார்த்திக் அவர்கள் முன்னிலையில்,  சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்கள் பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

May 28, 2026

"திசை" திட்ட நிறைவு விழா: அமைச்சர் சான்றிதழ்கள் வழங்கினார்.

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான "திசை" போட்டித் தேர்வு பயிற்சி முகாமின் நிறைவு விழா (27.05.2026) நடைபெற்றது.முக்கிய நிகழ்வுகள்:விருதுகள்: சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி கலந்து கொண்டு, பயிற்சி பெற்ற மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.கவிதைத் தொகுப்பு: மாணவர்களின் கவிதைத் தொகுப்பை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா அமைச்சரிடம் வழங்கினார்.அமைச்சர் அறிவுரை: மாணவர்கள் 12-ஆம் வகுப்பில் முழுக்கவனம் செலுத்த வேண்டும்; கைப்பேசியை கல்விக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றார்."திசை" திட்டத்தின் சாதனைகளும் விவரங்களும் (ஆட்சியர் உரை):திட்டத்தின் நோக்கம்: அரசுப் பள்ளி மாணவர்கள் JEE, NEET, CUET போன்ற தேசிய அளவிலான தேர்வுகளில் வென்று, நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் (IIT, AIIMS, NIT) பயில வழிவகை செய்தல்.பயிற்சி விவரம் (2026):முதற்கட்டம்: 12-ஆம் வகுப்பு முடித்த 310 மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் NEET / CUET பயிற்சி அளிக்கப்பட்டது.இரண்டாம்கட்டம்: தற்போது 11-ஆம் வகுப்பு முடித்த 613 மாணவர்களுக்கு (186 மாணவர்கள், 427 மாணவிகள்) மே 1 முதல் 27 வரை சிறப்பு உண்டு உறைவிடப் பயிற்சி வழங்கப்பட்டது.விண்ணப்பங்கள்: இவ்வாண்டு இத்திட்டத்தின் மூலம் 207 பேர் CUET தேர்விற்கும், 455 பேர் JEE Main தேர்விற்கும், 447 பேர் NEET தேர்விற்கும் விண்ணப்பித்துள்ளனர்.சாதனை: 15 நாட்கள் சிறப்புப் பயிற்சியின் மூலம் இதுவரை 11 அரசுப் பள்ளி மாணவர்கள் JEE Advanced தேர்வுக்குத் தகுதி பெற்றுள்ளனர்.ஆசிரியர்கள் பங்களிப்பு: மாவட்டத்தின் 605 ஆசிரியர்கள் மாணவர்களுக்குத் தன்னார்வமாக வழிகாட்ட முன்வந்துள்ளனர்.அடுத்தகட்ட நடவடிக்கை: ஜூன் 2026 முதல் கல்வியாண்டு முழுவதும் ஒவ்வொரு சனிக்கிழமையும் மாதிரித் தேர்வுகள் மற்றும் சந்தேகங்களைத் தெளிவுபடுத்தும் சிறப்பு வகுப்புகள் தொடரும்.இந்நிகழ்ச்சியில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அ.கார்த்திக், முதன்மைக் கல்வி அலுவலர் கு.அரவிந்தன் மற்றும் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

May 27, 2026

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பூங்கொத்து வழங்கி வரவேற்றார். 

விருதுநகர் மாவட்டத்திற்கு வருகை தந்த சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி கு.ஜெகதீஸ்வரி அவர்களை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் (26.05.2026) பூங்கொத்து வழங்கி வரவேற்றார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் என்.ஸ்ரீநாதா,இ.கா.ப., அவர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி அவர்கள் ஆகியோர் உள்ளனர். 

May 27, 2026

கல் குவாரி தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து திடீர் கள ஆய்வு.

தமிழ்நாடு முழுவதும் அரசு அனுமதி பெற்று செயல்பட்டு வரும் கல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை மீறி கனிமங்கள் வெட்டப்படுவதாகவும், பல இடங்களில் சட்டவிரோத குவாரிகள் செயல்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் பெறப்பட்டுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து குவாரிகளையும் ஆய்வு செய்து உடனடி அறிக்கை சமர்ப்பிக்குமாறு புவியியல் மற்றும் சுரங்கத்துறை மாவட்ட அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் வட்டம், மேலூர் துரைசாமிபுரம் கிராமம், அரசு புறம்போக்கு நிலம் புல எண் 328 (Part-V)-ல் செயல்பட்டு வந்த கல் குவாரி தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்கத்துறை அலுவலர்கள், வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் இணைந்து திடீர் கள ஆய்வு மேற்கொண்டனர். திருமதி கா.செல்வி என்பவருக்கு தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகள், 1959-ன் கீழ் குத்தகையாக வழங்கப்பட்டிருந்தாலும், குத்தகை ஒப்பந்த பதிவு பணிகள் முழுமையாக நிறைவு பெறுவதற்கு முன்பே குவாரி பணிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டது. மேலும், அனுமதியின்றி வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டு கல் வெட்டும் இயந்திர செயல்கள் மற்றும் வெடி வெடிப்பு பணிகள் நடைபெற்றதாகவும் தெரியவந்தது.இத்தகைய நடவடிக்கைகள் சட்டவிரோத கனிம வெட்டும் செயலாக கருதப்படுவதுடன், பொதுமக்கள் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தக்கூடிய மிகக்கடுமையான விதிமீறலாகும். இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட குவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டதுடன், ஆய்வின்போது கண்டறியப்பட்ட வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டன.மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்டப்படி மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக வெடிபொருட்கள் பயன்படுத்தி குவாரி பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிக்கவும், உரிய அனுமதியின்றி வெடிபொருட்கள் வழங்கப்படுவதை தடுக்கவும் சம்பந்தப்பட்ட வெடிபொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் யாரேனும் சட்டவிரோத கனிம வெட்டுதல், அனுமதியற்ற வெடிபொருள் பயன்பாடு அல்லது விதிமீறிய குவாரி செயல்பாடுகள் குறித்து தகவல் அறிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகம் அல்லது புவியியல் மற்றும் சுரங்கத்துறைக்கு தகவல் தெரிவிக்குமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள்  தெரிவித்துள்ளார்.

May 27, 2026

வண்டல் மண், களிமண் இலவசமாக எடுக்க விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் மாவட்ட ஆட்சியர் தகவல்.

 விருதுநகர் மாவட்டத்தில் விவசாயிகள் நீர் வளத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறையின் பராமரிப்பில் உள்ள பரிந்துரை செய்யப்பட்ட நீர் நிலைகளில் இருந்து இலவசமாக வண்டல் களிமண் எடுத்துக்கொள்ள மாவட்ட அரசிதழில் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி மேல் வைப்பாறு வடிநிலக் கோட்டம், இராஜபாளையம், வைப்பாறு வடிநிலக் கோட்டம், விருதுநகர், குண்டாறு படுகை (Gundaru Basin) மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகியவற்றின் கீழ் முறையே மொத்தம் 403 நீர்நிலைகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.உள்ளூர் விவசாயிகள், மண்பாண்ட தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் (இதர வீட்டு பயன்பாட்டிற்கு) வண்டல் மண் அல்லது களிமண் ஆகியவற்றை இலவசமாக எடுத்து செல்வதற்கு அனுமதி வழங்கப்பட உள்ளது.தகுதியுடைய பயனாளிகள் tnesevaitngov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பயனாளிகளின் வசிப்பிடம் அல்லது வேளாண் நிலம் அமைந்துள்ள கிராமம் மற்றும் வண்டல் மண் அல்லது களிமண் தூர்வாரி எடுத்து செல்லப்பட வேண்டிய நீர்நிலைகள் அமைந்துள்ள கிராமம் ஆகியவை அதே வருவாய் வட்டத்தின் எல்லை வரம்பிற்குள் அமைந்திருக்க வேண்டும்.விவசாய பயன்பாட்டிற்காக வண்டல் மண் பெற விண்ணப்பிக்கும் நபர், சொந்தமாக விவசாய நிலம் வைத்துள்ளவராக இருக்க வேண்டும். மண்பாண்ட தொழிலாளராக இருப்பின், விண்ணப்பித்த பின்பு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அதனை முறைப்படி உறுதி செய்தபிறகு அனுமதி வழங்கப்படும்.இந்த அனுமதியானது விவசாய நில மேம்பாட்டிற்காக (2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் ) நன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 75 கன மீட்டர் (ஹெக்டேருக்கு 185 கண மீட்டர்) என்ற அளவிலும், புன்செய் நிலம் எனில் ஏக்கர் ஒன்றுக்கு 90 கனமீட்டர் (ஹெக்டேருக்கு 222 கனமீட்டர்) என்ற அளவிலும், மண்பாண்ட தொழிலுக்கு 60 கன மீட்டருக்கு மிகாமலும், இதர வீட்டு பயன்பாட்டிற்கு 30 கன மீட்டர் அளவிலும் கட்டணமின்றி மண் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படும்.விண்ணப்பத்தாரரால் அளிக்கப்பட்ட தகவல்கள் விதிமுறைகளை பூர்த்தி செய்திருப்பின், சம்பந்தப்பட்ட தாசில்தாரால் 10 நாட்களுக்குள் அனுமதி ஆணை வழங்கப்படும்.தாசில்தாரால் அனுமதி ஆணை கிடைக்கப்பெற்ற பயனாளிகள், தொடர்புடைய நீர்நிலை ஆதாரங்களின் பொறுப்பு அலுவலர்களை அணுகி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் வரையறை செய்யும் பகுதியில் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மட்டும் வண்டல் மண் அல்லது களிமண் எடுத்துச்செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

May 27, 2026

பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது – 2026 க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

சுதந்திர தின விழாவின் போது,  தமிழக முதல்வர் அவர்கள் தலைமையில், பெண்களின் முன்னேற்றத்திற்காக பாடுபட்ட, சிறந்த சமூக சேவகர் மற்றும் தொண்டு நிறுவனத்திற்கு, சுதந்திர தின விருது - 2026  வழங்கப்பட உள்ளது.விருது விபரம்:சிறந்த சமூக சேவகர்: ரூ.50,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.சிறந்த தொண்டு நிறுவனம்: ரூ.1,00,000/- ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்.தகுதி மற்றும் விதிமுறைகள்:விண்ணப்பதாரர் தமிழ்நாட்டைப் பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையிலான பணிகள், மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாகப் பணிபுரிந்து, மக்களுக்குத் தொடர்ந்து தொண்டாற்றி இருக்க வேண்டும். தொண்டு நிறுவனம் அரசின் உரிய அங்கீகாரம் பெற்ற நிறுவனமாக இருத்தல் வேண்டும்.விண்ணப்பிக்கும் முறை:மேற்குறிப்பிட்ட தகுதியுடைய சமூக சேவகர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள், https://awards.tn.gov.in என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலமாக வருகிற *19.06.2026-க்குள்* விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்லைனில் விண்ணப்பித்த விவரங்களை *23.06.2026-க்குள்* மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.இது தொடர்பான விவரங்களை கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.முகவரிமாவட்ட சமூக நல அலுவலர்,மாவட்ட சமூக நல அலுவலகம்,மாவட்ட ஆட்சியரக வளாகம்,விருதுநகர் மாவட்டம் – 626002.தொலைபேசி எண்: 04562-252701

May 27, 2026

திருவில்லிபுத்தூர் நகராட்சியில் கோடைகாலத்தில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம்.

விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் (26.05.2026) கோடைகாலத்தில் பொதுமக்களுக்குத் தங்குதடையின்றிக் குடிநீர் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில், நகர்ப்புறப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் சீராக நடைபெறத் தேவையான நடவடிக்கைகள் குறித்துத் தொடர்புடைய துறை அலுவலர்களுடன் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.குடிநீர் விநியோக அட்டவணை மற்றும் அறிவுரைகள்:          திருவில்லிபுத்தூர் நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து வார்டு பொதுமக்களுக்கும் சீரான முறையில் குடிநீர் வழங்கிட வேண்டும் என்றும், ஒரு வார காலத்தில் எந்தெந்தப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் செய்யப்படவுள்ளது என்பது குறித்த விவரங்கள் அடங்கிய கால அட்டவணையை (Schedule) உடனடியாகச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.மேலும், வால்வு இயக்குபவர்கள் (Valve Operators) எவ்விதப் புகார்களுக்கு இடமளிக்காத வகையில், உரிய முறையில் குடிநீர் விநியோகப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.முன்னெச்சரிக்கை மற்றும் கடுமையான எச்சரிக்கை:          பொதுமக்களுக்கு எவ்விதக் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படாத வகையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் உத்தரவிட்டார். குடிநீர் வழங்கல் பணியில் ஏதேனும் தொய்வு ஏற்பட்டால், அதற்குப் பொறுப்பான அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் எச்சரித்தார்.இக்கூட்டத்தில் நகராட்சி ஆணையாளர், பொறியாளர், நகராட்சிப் பணியாளர்கள் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

May 26, 2026

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்  (25.05.2026) மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு, விபத்து நிவாரணம், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நலிந்தோர் நல உதவித்திட்டங்கள், விதவை உதவித்தொகை, திருமண உதவித்தொகை மற்றும் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்தான மனுக்கள் பெறப்பட்டன. மேலும், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அமருமிடத்திற்கு நேரடியாகச் சென்று, அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று பரிசீலித்தார். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இம்மனுக்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் ஒப்படைத்து, அவற்றின் மீது உரிய மற்றும் விரைவான நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி சேவைகளைப் பெறுவதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி இரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, அரசு துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

May 23, 2026

விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில்(22.05.2026) விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் தலைமையில்  நடைபெற்றது.இக்கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது குறைகளை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் தெரிவித்தனர். கடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளால்வழங்கப்பட்டமனுக்கள்மீதுஎடுக்கப்பட்டநடவடிக்கைகள்குறித்துவேளாண்மைதுணைஇயக்குநர்மாவட்டஆட்சியரின்நேர்முகஉதவியாளர்(விவ)அவர்களால்எடுத்துரைக்கப்பட்டது.விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்மூட்டைகளை மழையில் நனையாமல் பாதுகாப்பாக வைக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.மக்காச்சோளத்திற்கு நல்ல விலை கிடைக்காமல் அதிக அளவு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மக்காச்சோள உற்பத்தி அதிகரித்துள்ளதால் விவசாயிகள் நல்ல விலை கிடைக்காமல் அதிக அளவு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதை தடுக்க விவசாயிகள் தற்பொழுது உற்பத்தி செய்துள்ள மக்காச்சோளத்தினை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இருப்பு வைத்து நல்ல விலை கிடைக்கும் போது விற்பனை செய்யுமாறு விவசாயிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. 2025-26ஆம் ஆண்டு பயிர் அறுவடை பரிசோதனை மூலம் மகசூல் கணக்கீடு செய்து காப்பீடு நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்திற்குள் பயிர்காப்பீட்டுத்தொகை விடுவிக்க ஏற்பாடு செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.விவசாயிகளுக்கு உழவர் பதிவேடு அட்டை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இ-சேவை மையங்கள் மூலமாக விவசாயிகளுக்கு சிறப்பு முகாம் நடத்தி பதிவு செய்யாத விவசாயிகளுக்கு விரைந்து உழவர் பதிவேடு அட்டை வழங்க வேளாண்மை இணை இயக்குநர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.ஸ்ரீவில்லிப்புத்தூர், வத்திராயிருப்பு மற்றும் ராஜபாளையம் பகுதிகளில் மா மரங்களின் பூக்கள் கருகிவிட்டதற்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அந்த பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். தோட்டக்கலைத்துறை மற்றும் வருவாய்துறை இணைந்து கூட்டாய்வு செய்து உரிய அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என  மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அறிவுறுத்தனார்கள்.அருப்புக்கோட்டை மற்றும் ராஜபாளையம் பகுதியில் பருத்தி கொள்முதல் நிலையம் அமைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், உரத்தட்டுப்பாடை குறைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் உரங்களை சிக்கனமாக பயன்படுத்த விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.உரத்தட்டுப்பாடை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உரங்களை சிக்கனமாக பயன்படுத்தவும் அனைத்து வட்டாரங்களிலும் உரிய பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என வேளாண்மை இணை இயக்குநர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது. பல்வேறு நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுத்திட நடவடிக்கை எடுக்குமாறு  விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். இக்கூட்டத்தில்  வேளாண்மை துணை இயக்குநர்/ மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(விவ.,) திருமதி அ.அம்சவேணி, வேளாண்மை இணை இயக்குநர் திரு.மோகன்தாஸ் சௌமியன், தோட்டக்கலை துணை இயக்குநர் திருமதி சுபா வாசுகி, செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல் துறை) திருமதி இந்திரா உட்பட பல துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

May 23, 2026

சீர்மரபினர் நல வாரியத்தில் நலத்திட்ட உதவிகள் பெற www.dncwb.tn.gov.in என்ற இணையதளம்  மூலம்   விண்ணப்பம் செய்து பயன்பெறலாம் .

சீர்மரபினர் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு கீழ்கண்ட நலத்திட்ட உதவிகள் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.1.      விபத்து ஈட்டுறுதி திட்டத்தின் கீழ் உதவித்தொகை2.    இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை3.    ஈமச்சடங்கு செலவிற்கான உதவித்தொகை4.    கல்வி உதவித்தொகை5.    திருமண உதவித்தொகை6.    மகப்பேறு உதவித்தொகை7.    மூக்குக்கண்ணாடி செலவுத்தொகை ஈடு செய்தல்8.    முதியோர் ஓய்வூதியம்மேற்படி நலத்திட்ட உதவிகள் பெற 1) சீர்மரபினர் இனத்தைச்  சார்ந்தவர்கள்  2) 18 வயது முதல் 60 வயது  நிறைவு பெறாதவர்கள்  3) அமைப்பு  சாரா நிறுவனங்களில் பணிபுரியும் குடும்பத்தில் ஒருவர் (அமைப்பு சாரா தொழில், நிலமற்ற விவசாய கூலி, உடலுழைப்பு தொழில் ஈடுபட்டுள்ள) இவ்வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்து நலத்திட்ட  உதவிகள் பெற தகுதி பெறுகின்றனர்.           மேற்படி, நல வாரியத்தில் உறுப்பினராக பதிவு செய்தல், நலத்திட்ட உதவிகள் பெறுதலை எளிதாக்கும் வகையில் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இனி www.dncwb.tn.gov.in என்ற இணையதளம்  மூலம்   விண்ணப்பம் செய்து, பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.மேலும் விவரங்கள் அறிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 5 வது மாடியில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 2 ... 39 40 41 42 43 44 45 ... 157 158

AD's



More News