விருதுநகர், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 16.05.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் சாத்தூரில் உள்ள S.H.N எட்வர்ட் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BAVAN, WAY 2 NEWS, RK MOTORS, ANAAMALAIS TOYOTA, IOB RESTI போன்ற 20-க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு I.T.I. டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள்.இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 16.05.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும்.இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை நேரிலோ அல்லது vnrjobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 05.05.2025 அன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பிரபலமாக உள்ள விளையாட்டுகளில் இருந்து விளையாட்டு வீரர்களை உருவாக்கும் ஸ்டார் அகாடமியின் பயன்பாட்டை தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்க மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டார் மாவட்ட குத்துச்சண்டை பயிற்சி மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் ,I A S, அவர்கள் பார்வையிட்டு, பயிற்சி பெறும் மாணவர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.
விருதுநகர் மிளகாய்வத்தல் மண்டபத்தில் (06.05.2025) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை மண்டல ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மை அறிவியல் நிலையம் இணைந்து நடத்தும் புவிசார் குறியீடு பெற்ற விருதுநகர் சம்பா மிளகாய் - உலகளாவிய சந்தைப்படுத்துதல் குறித்த கருத்தரங்கு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தலைமையில் நடைபெற்றது.நமது விருதுநகர் மாவட்டத்தில் கடந்த ஒரு நூற்றாண்டாக பல்வேறு தொழில் வளர்ச்சிகள் மேம்பட்டு இருக்கிறது. 1922 ஆம் ஆண்டு இந்த பகுதி முதன் முதலாக பட்டாசு, தீப்பெட்டி தொழிற்சாலைகள், அதற்கடுத்து அச்சுத் தொழிலும், அதை ஒட்டி விருதுநகர் உடைய வணிக வளமாக மாறி, சற்று ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் பல்வேறு சிறு, குறு, நடுத்தர தொழில்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்து கொண்டு வருகிறது.இன்று தமிழ்நாட்டில் சிறு, குறு, நடுத்தரத் தொழில்களில்; விருதுநகர் மாவட்டம் முதல் 5 இடங்களில் வர்த்தகம் செய்கிறது என்றால் இந்த பகுதியில் நடைபெற்ற தொழில் வளர்ச்சியும், அதுக்கு தகுந்தாற்போல் இந்த பகுதியில் உள்ளவர்களின் உழைப்பும் தான் அடிப்படையான காரணம்.தற்பொழுது சமீபத்தில் சம்பா மிளகாய்க்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இது மிக முக்கியமான வரலாற்று நிகழ்வு. ஏனென்றால், நமது பகுதியில் விருதுநகர், இராமநாதபுரம், தூத்துக்குடி விளாத்திகுளம் பகுதிகளில் எல்லாம் உள்ளடக்கி சற்று ஏறக்குறைய 15 ஆயிரம் ஹெக்டேர் அளவிற்கு இந்த மிளகாய் வத்தல் சாகுபடி ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்று வருகிறது.இன்று உலக அளவில் இருக்கக்கூடிய மாறி வரக்கூடிய உணவு முறைகளினால் பழைய உணவு முறைகள், பாரம்பரிய உணவு முறைகளுக்கு எல்லாம் மிகப்பெரிய ஒரு சந்தை வாய்ப்புகள் தற்பொழுது கிடைத்திருக்கிறது. உலகம் முழுவதும் பல்வேறு துரித உணவுகள் என்று சொல்லக்கூடிய பாஸ்ட் புட்டில் கூட மிளகாய் வத்தல் இருக்கக்கூடிய சில பொருட்களை எடுத்து அதற்கான உப பொருட்களாக பயன்படுத்துகிறார்கள்.எனவே இதற்கான உலக அளவில் சந்தை வாய்ப்புகள் மிகப்பெரிய அளவில் நமக்கு உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்த 15,000; ஹெக்டேர் அளவிலான சாகுபடி பரப்பை 40,000;, 50,000; அளவிற்கு நாம் உயர்த்துவோம் என்றால் நிச்சயமாக இந்த பகுதி உலக அளவில் அந்த மிளகாய் வத்தல் ஏற்றுமதியில் ஒரு நல்ல இடத்தை பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.நமது பகுதிக்கென்று விளையக்கூடிய இந்த மிளகாய் வத்தல் சுற்றுச்சூழலுக்கு எப்படி உகந்ததாக இருக்கிறது. இதை நாம் செய்யக்கூடிய நிலையில் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அதனுடைய இயற்கை சார்ந்த வேளாண்மையில் இதனுடைய தாக்கம் என்ன என்பதெல்லாம் இன்னும் தெரிந்து கொண்டால் நிச்சியமாக அதற்கு மிகபெரிய உலக அளவிலான சந்தை வாய்ப்புகள்; ஏற்படும்.தற்பொழுது நமது பகுதியில் இந்த மிளகாய் வத்தல் ஏற்றுமதி மற்றும் விவசாயிகளெல்லாம் ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தியாளர் கூட்டமைப்பு என்ற கூட்டமைப்பை உருவாக்குவதற்கு தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் நமது மாவட்டத்தில் இரண்டு மிக முக்கியமான ஆராய்ச்சி நிலையங்கள் மூலமாக விவசாய குடிமக்களுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. அதில் ஒன்று அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் திருவில்லிபுத்தூரில் இருக்கக்கூடிய பருத்தி ஆராய்ச்சி நிலையம் மூலமாக பல்வேறு விவசாய தொழில் தொழில்நுட்பங்களை நமது விவசாய பெருங்குடி மக்களுக்கு எடுத்து சொல்லி வருகிறீர்கள்.தற்பொழுது புவிசார் குறியீடு கிடைத்ததற்கு பிறகு இன்னும் என்னென்ன விதமான வாய்ப்புகள் இருக்கிறது. அறுவடை செய்து அவற்றை பாதுகாத்து ,அதனை பதப்படுத்தி உணவு பதப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலமாக அவற்றை ஏற்றுமதி செய்வதற்கு என்னென்ன விதமான தொடர்ச்சியான பயிற்சிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டுமோ அவற்றை எல்லாம்; நமது வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலமாக தொடர்ச்சியாக அவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள்.நமது விருதுநகர் மாவட்டத்தில் வத்தல் வியாபாரிகள் சங்கம் என்பது கடந்த பத்தாண்டுகளாக தொடர்ச்சியாக இந்த வணிகத்தை மிக சிறப்பாக கட்டமைத்து இருக்கிறார்கள். இந்த வணிகத்தையும் தாண்டி, நாம் உற்பத்தியில் மிகப்பெரிய அளவில் கவனத்தை செலுத்தி இன்னும் சிறப்பாக செய்வதற்கு பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு அரசினுடைய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செய்து கொண்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் (05.05.2025) அன்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில், விருதுநகர் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான 5 புதிய நூல்களை மாண்புமிகு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் வெளியிட்டார்.பின்னர், நூல்கள் எழுதிய பேராசிரியர்களுக்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.மாவட்ட நிர்வாகத்தின் சிறந்த முன்னெடுப்பாக தான் கரிசல் இலக்கியத்திற்கென்று ஒரு மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு விழாக்கள் நடத்தினாலும், நமது மண் சார்ந்த விழாக்கள் நடத்துவதற்காக எப்படி தமிழ் இலக்கிய வரலாற்றில் கரிசல் இலக்கியத்திற்கென்று பங்களிப்பு, இடம் இருக்கின்றதோ அதை வெளிக்கொணரக் கூடிய வகையில் அது குறித்த ஒரு அருமையான அருங்காட்சியகம் உருவாக்கி அந்த களத்தில் பணியாற்றக்கூடிய தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எழுத்தாளர்களை ஒரு சேர குவித்து அங்கு கரிசல் இலக்கிய திருவிழாவும் நடத்தப்பட்டு வருகிறது.தொடர்ச்சியான அலுவல் சார்ந்து இருக்கக்கூடிய கடமைகளில் இது ஒரு முக்கியமான கடமையாக கருதி, இந்த நூல்களை பேராசிரியர்கள் உருவாக்கி இருக்கிறார்கள்.கீழடி அருங்காட்சியத்திற்கு இணையாக நம்முடைய விருதுநகர் அருங்காட்சியம் உருவாக்குகிறோம். நம்முடைய மரபுகளை பாதுகாப்பது என்பது மிகவும் முக்கியம். குடவரைக் கோவில்கள் என்றால் அது பல்லவர் காலத்;தில் இருக்கக்கூடியது என்று தான் கூறுவோம். சோழ நாட்டில் இல்லாத பெருமை நம்முடைய நாட்டில் இருக்கிறது என்றால் அது வட்டனத்தி கல்வெட்டு.இந்த கல்வெட்டு நம்முடைய பாண்டிய நாட்டுக்கென்று உருவாக்கப்பட்டது. அந்த காலத்தில் மாந்தர்கள் எப்படி வாழ்ந்தார்கள். எப்படி சிறப்பாக அமைந்திருக்கிறது என்பதை வாழ்வியல் நெறிமுறைகளையும் விளக்குவதாக இந்த கல்வெட்டுகள் அமைந்திருக்கிறது.எக்காலத்திற்கும் ஏற்ற மொழியாக இருப்பது நமது தமிழ் மொழிதான். தமிழ் மொழியின் சிறப்புகளை அறிஞர்கள் புத்தக வடிவில் தந்து இருக்கிறார்கள்.புதிய நூல்களை இயற்றக்கூடிய அதே நேரத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பல்வேறு தரப்பினருடைய கூட்டு உழைப்பில் உருவாக்கப்பட்ட நூல்கள் எல்லாம் குளத்தில் இட்ட விளக்காக இருக்கின்றதே தவிர, அதை குன்றிலிட்ட விளக்கமாக மாற வேண்டும் என்பதற்காக மாவட்ட நிர்வாகம் இப்படி ஒரு முன்னெடுப்பை செய்ய வேண்டும் என்று மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் இடத்தில் ஆலோசனைகள் கேட்டபோது, அமைச்சர் அவர்கள் பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் என்ற ஒரு தனி ஆய்வு அமைப்பில் புரவலராக இருந்து தொடர்ச்சியாக நமது பகுதிகளில் இதுவரை வெளிவராத கல்வெட்டுக்கள், வரலாற்று ஆய்வுகள் எல்லாம் அவருடைய முயற்சியால் பல ஆய்வு கட்டுரைகள், பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. இன்று வெளியிட்டுள்ள இந்த 5 புதிய நூல்களும் நிச்சயமாக அதனுடைய தொடர்ச்சியாக இருக்கும்.நமது மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளில் 15 நூல்களும் தற்போது இந்த புதிய 5 நூல்களும் என மொத்தம் 20 நூல்கள் உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.அதன்படி, வே.வ.வன்னியபெருமாள் மகளிர் கல்லூரி முன்னாள் வரலாற்றுத் துறைத்தலைவர் முனைவர் திருமதி சி.மனோராஞ்சிதமணி அவர்கள் எழுதிய “தென்தமிழ் நாட்டின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள்- ஒரு கண்ணோட்டம்“ என்ற நூலும்,அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. கல்லூரி முதுநிலை வராலாற்றுத்துறை பேராசிரியை (சுயநிதி) முனைவர் திருமதி எல்.மகேஸ்வரி அவர்கள் எழுதிய விருதுநகர் மாவட்டக் கல்வெட்டுகள் (கிபி 6-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரை)’-ஓர் ஆய்வு” என்ற நூலும்,இராஜபாளையம் இராஜுக்கள் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்(சுயநிதி) முனைவர் திரு.மு.பிரசன்னா அவர்கள் எழுதிய ‘திருக்குறள் என்றைக்குமான இலக்கியம்’ என்ற நூலும்,சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரி (தன்னாட்சி), தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ந.அருள்மொழி அவர்கள் எழுதிய "சங்க இலக்கியமும் இளையோரும் மற்றும் மக்கள் இலக்கியம் -சிலப்பதிகாரம்" என்ற நூலும்,சிவகாசி தி ஸ்டாண்டர்டு பயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), வணிகவியல் துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஜெ.ஜீவப்பிரியா அவர்கள் எழுதிய “100 ஆண்டுகளின் வணிக ஆளுமைகள்- விருதுநகர் மாவட்டம்" என்ற நூலும் என விருதுநகர் கலை, இலக்கியம், பண்பாடு மற்றும் வணிகம் தொடர்பான 5 புதிய நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.இந்த 5 நூல்களை உருவாக்கிய அனைத்து பேராசிரியர் பெருமக்களுக்கும், இதற்கு பின்புறமாக இருந்து உழைத்த வரலாற்று ஆய்வாளர்களுக்கும், சுற்றுலாத்துறை உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்களுக்கும், இதைவிட மிக முக்கியமாக இது போன்ற நூல்களை தொடர்ச்சியாக நமது மாவட்டத்தில் கொண்டு வருவதற்கு அதற்கு அனைத்து விதத்திலும் உறுதுணையாக இருக்கக்கூடிய நமது மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் பேராசிரியர்கள் தங்களின் நூல்கள் குறித்து சிறப்புரையாற்றினார்கள்.இந்நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் திருமதி உமாதேவி, விருதுநகர் நகர்மன்ற தலைவர் திரு.மாதவன், கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் மற்றும் இராஜபாளைம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் அரசின் திட்டங்கள் மற்றும் பயன்கள் தொடர்புடைய பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் விதமாக மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் (06.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு, பயனடைந்து வரும் பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்து ஆய்வு செய்தார்.அதன்படி, திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் கொத்தங்குளம் ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும்,இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், கொருக்கம்பட்டி ஊராட்சியில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார்.தென்கரை ஊராட்சியில் உயிர் நீர் இயக்கத்தின் கீழ் ஊஞ்சாம்பட்டி கிராமத்தில் ரூ.16.75 இலட்சம் மதிப்பில் 30,000 லிட்டர் கொள்ளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்க தொட்டி கட்டப்பட்டுள்ளதையும்,பின்னர், இளந்திரை கொணடான் ஊராட்சியில் ஊரக வீடுகள் சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.1.50 இலட்சம் மதிப்பில் வீடுகள் சீரமைக்கப்பட்டு உள்ள பணிகளையும்,மேலூர் துரைசாமிபுரம் ஊராட்சியில் கனிம வள நிதியின் கீழ் ரூ.8.11 இலட்சம் மதிப்பில் மயான காத்திருப்புக்கூடம் மற்றும் குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் பல்வேறு திட்டங்கள், பயன்கள் குறித்து பொதுமக்களிடம் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைந்தும், தரமாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த நிகழ்வுகளில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில் (05.05.2025) தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில், புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், சாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் அவர்கள் முன்னிலையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் திரு.கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அவர்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழகத்தில் வசிக்க கூடிய பொதுமக்களின் மின்சார தேவைகளை பூர்த்தி செய்ய கூடிய வகையில், மின்சாரத்துறையின் நிர்வாக கட்டமைப்புகளை மேம்படுத்தி, அதன் மூலம் பொதுமக்களுக்கு தரமான, தங்கு தடையின்றி மின்சார சேவைகளை வழங்கும் விதமாக எண்ணற்ற அரசு நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். நமது விருதுநகர் மாவட்டம், சாத்தூர் தொகுதியில், புதிய சாத்தூர் மின் பகிர்மான கோட்டம் உருவாக்கப்படும் என சட்டமன்ற மானிய கோரிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்திருந்தார்கள்.அதன்படி, 05.05.2025 முதல் சாத்தூர் துணை மின் நிலைய அலுவலக வளாகத்தில் புதிய சாத்தூர் கோட்ட அலுவலகம் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.மேலும், புதியதாக உதயமாகியுள்ள இக்கோட்டத்தின் கீழ் சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட பிரிவு அலுவலகங்கள், N.சுப்பையாபுரம், உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட N.சுப்பையாபுரம் மற்றும் ஏழாயிரம்பண்ணை ஆகிய பிரிவு அலுவலங்கள், ஆலங்குளம் உபகோட்டம் மற்றும் அதற்குட்பட்ட ஆலங்குளம், கீழராஜகுலராமன், கல்லமநாயக்கன்பட்டி ஆகிய பிரிவு அலுவலங்கள், ஊரகம்/சிவகாசி உபகோட்டத்திற்குட்பட்ட வெம்பக்கோட்டை பிரிவு அலுவலகம் மற்றும் துணை மின் நிலையம்/இராஜபாளையம் உபகோட்டத்திற்குட்பட்ட ஆசிலாபுரம் பிரிவு அலுவலகம் ஆகியவை இணைக்கப்பட்டுள்ளன.எனவே, மேற்படி பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட மின் நுகர்வோர் தங்களது மின்சாரம் தொடர்பான செயற்பொறியாளர் அலுவலக பணிகளுக்கு புதிய சாத்தூர் கோட்ட அலுவலகத்தை அணுகி பயன்பெறுமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இந்நிகழ்வில், சாத்தூர் நகர்மன்ற தலைவர் திரு.குருசாமி, மேற்பார்வை பொறியாளர்(தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், விருதுநகர் வட்டம்) திருமதி.ப.லதா, தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியாளர்கள் திரு.எஸ்.முத்துராஜ்(ராஜபாளையம் கோட்டம்), திருமதி.பா.பத்மா(சிவகாசி கோட்டம்), திரு.அ.ஷாஜகான்(சாத்தூர் கோட்டம்) ,சாத்தூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.சிவக்குமார், தமிழ்நாடு மின் பகிர்மான கழக செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணைகள் பெற்று வீடுகள் கட்டி வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.தமிழ்நாடு அரசு பல்வேறு தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.கலைஞர் கனவு இல்லம் திட்டம் மக்களுக்கு சொந்த வீடற்ற நிலை எனும் சூழலை ஒழிக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் கிராமப்புறங்களில் வசிக்கும் தனிநபர்களுக்குப் பாதுகாப்பான, நிரந்தரமான கான்கிரீட் வீடுகளை அளிப்பதன் மூலம் அவர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படுகிறது.தமிழ்நாடு அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030-க்குள் 8 இலட்சம் பேருக்கு வீடுகள் கட்ட வேண்டும் என்ற இலக்கோடு திட்டங்களை வகுத்து வருகிறது.அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 2025- 26 ஆம் ஆண்டில் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 172 பயனாளிகளுக்கும், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 278 பயனாளிகளுக்கும், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 220 பயனாளிகளுக்கும், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் 159 பயனாளிகளுக்கும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 127 பயனாளிகளுக்கும், சிவகாசி ஊராட்சி ஒன்றியத்தில் 217 பயனாளிகளுக்கும், திருவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் 95 பயனாளிகளுக்கும், திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் 116 பயனாளிகளுக்கும், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 201 பயனாளிகளுக்கும், விருதுநகர் ஊராட்சி ஒன்றியத்தில் 267 பயனாளிகளுக்கும், வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றியத்தில் 48 பயனாளிகளுக்கும் என மொத்தம் 1900 பயனாளிகளுக்கு பணி நியமன அணைகள் வழங்கப்பட்டு வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இத்திட்டத்தின் கீழ் ஏறத்தாழ 360 சதுர அடி பரப்பளவில் காங்கிரீட் வீடுகள் கட்டப்படுவதற்கு ஏறத்தாழ ரூ.3.50 இலட்சம் வழங்கப்படுகிறது.அதன்படி, காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், சூரனூர் ஊராட்சி தேனூர் கிராமத்தில்கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ், வீடுகள் தலா ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்து, தங்களுக்கான வீடுகள் கட்டி வரும் பயனாளிகளிடம் இத்திட்டத்தின் பயன்கள் குறித்து கருத்துக்களை கேட்டறிந்தார்.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் (04.05.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.அதன்படி, வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், பேர்நாயக்கம்பட்டி ஊராட்சியில், கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ரூ.3.50 இலட்சம் மானியத்தில் வீடுகள் கட்டப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்து, பயனாளிகளிடம் கலந்துரையாடி கருத்துக்களை கேட்டறிந்தார். பின்னர், புலிப்பாறைப்;பட்டி ஊராட்சியில், பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.2.40 இலட்சம் மானியத்தில் குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருவதையும்;,மேலும், திருவேங்கடப்புரம் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பில்; கதிரடிக்கும் களம் அமைக்கப்பட்டுள்ளதையும்,நதிக்குடி ஊராட்சியில், ரூ.34.23 இலட்சம் மதிப்பீட்டில், புதிதாக கட்டப்பட்டுள்ள பள்ளி வகுப்பறை கட்டடங்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, அரசின் மூலம் அந்தந்த ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்ட பணிகள் மற்றும் நலத்திட்டங்கள் முறையாக மக்களை சென்றடைகிறதா என பொதுமக்கள் மற்றும் பயனாளிகளிடம் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டறிந்தார்.மேலும், நடைபெற்று வரும் பணிகளை விரைவாகவும், தரமானதாகவும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்மந்தப்பட்ட அரசு அலுவலர்களை அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின் போது வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவிப் பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் இருந்தனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-IV 12.07.2025 அன்று நடைபெறவிருக்கிறது. இத்தேர்வுக்காக தயாராகிக் கொண்டிருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு தொகுதி-IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு 07.05.2025 முதல் விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சூலக்கரையில் நடைபெறவிருக்கிறது.இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு இத்தேர்வுக்கு தேவையான பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படும். மேலும், இந்த பயிற்சி வகுப்பு மற்றும் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரடியாகவோ (அ) 04562-293613 என்ற தொலைபேசி எண் (அ) studycirclevnr@gmail.com என்ற மெயில் வாயிலாக தொடர்புகொள்ளலாம். எனவே TNPSC குரூப் 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், கீழ்செம்பூர் கிராமத்தில் கிருதுமால் ஆற்றின் குறுக்கே இராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்திலுள்ள T. புனவாசல் கண்மாய்க்கு பாசன வசதி அளிக்கும் வகையில், ரூ.9.27 கோடி மதிப்பீட்டில் புதிய அணைக்கட்டு கட்டப்பட்டு வரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S, அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். கிருதுமால் நதியின் குறுக்கே அமைந்துள்ள கீழப்பருத்தியூர் அணைக்கட்டு மற்றும் கல்லிக்குளம் அணைக்கட்டுக்கு இடையில் விவசாய பெருங்குடி மக்கள் மிகுந்த சிரமத்திற்கு இடையே மண்கரை அமைத்து வு.புனவாசல் கண்மாய்க்கு பாசன நீர் எடுத்துச் சென்று கொண்டிருந்த நிலையில் அணைக்கட்டு கட்டுமானம் அமைத்து நிரந்தரமாக எவ்வித தடங்கலின்றி T. புனவாசல் கண்மாய்க்கு பாசன நீர் எடுத்துச் செல்ல விவசாய பெருங்குடி மக்களின் நீண்டநாள் கோரிக்கையினை ஏற்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் பரிந்துரையின் பேரில் நீர்வளத்துறை மானியக் கோரிக்கையில் பாசன திட்டங்களின் கீழ் மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் அவர்களால் நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.9.27 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மாண்புமிகு நிதி மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை அமைச்சர் அவர்களால் 29.01.2025 இன்று கீழ்செம்பூர் அணைக்கட்டு கட்டுமான பணிகள் துவக்கப்பட்டு, தற்போது பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.மேலும், குண்டாற்றின் உப நதியான கிருதுமால் நதியானது துவரிமான் கண்மாய் பாசன நிலங்களின் மழைநீர் வடிகாலாக ஆரம்பித்து வழியிலுள்ள மாடக்குளம் போன்ற கண்மாய்களின் உபரி நீரோடு மழை நீரையும் சேர்த்து மதுரை மாநகரப் பகுதிகள் வழியாக ஊடுருவி சென்று சிவகங்கை மாவட்டம், விருதுநகர் மாவட்டம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் வழியாக சென்று குண்டாற்றில் கலக்கிறது.பின்னர், வைகையாற்றின் குறுக்கே அமைந்துள்ள விரகனூர் மதகு அணையின் மேற்புறம் அமைந்துள்ள வெள்ளநீர் போக்கியின் தலைமதகின் வழியே, வெள்ளக்கால்வாய் மூலம் வைகை ஆற்றின் வெள்ள நீர் கிருதுமால் ஆற்றில் பெறப்பட்டு சிவகங்கை மாவட்டத்தில் 18 கண்மாய்களும், விருதுநகர் மாவட்டத்தில் 50 கண்மாய்களும், மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் 7 கண்மாய்களும் மொத்தம் 75 கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்பட்டு அதன் மூலம் 18,775 ஏக்கர் பாசன நிலங்கள் பயன்பெற்று வருகிறது.இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் T. புனவாசல் கிராமம், கீழப்பருத்தியூர் கிராமம், கீழ்செம்பூர் கிராமம், மேல்செம்பூர் கிராமம் மற்றும் வீரசோழன் கிராமம் ஆகிய 5 கிராமங்களின் மூலம் 237.39 ஹெக்டேர் (586.35 ஏக்கர்) பாசன பரப்பு பயன்பெறுவதுடன். நிலத்தடி நீர் வெகுவாக உயர்ந்து கிணறு மற்றும் ஆழ்துளைக்கிணறு நிரம்பி பொதுமக்கள் மற்றும் கால்நடைகளின் குடிநீர் பிரச்சனை தீர்வதுடன் இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயரும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார்.இந்த ஆய்வின் போது, காரியாபட்டி உதவி செயற்பொறியாளர்கள் (நீ.வ.து) திரு. கி.முத்துசாமி, திரு.மு.அழகு சுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.