விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்திற்குள் அறுவடை செய்ய உதவிடும் வகையில் விவசாயிகள் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் தனியாருக்குச் சொந்தமான 4456 நெல் அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர் பெயர், அலைபேசி எண், இயந்திரத்தின் பதிவு எண் உள்ளிட்ட விபரங்கள் மாவட்டம் வாரியாக மற்றும் வட்டாரம் வாரியாக உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்ற விபரம் தெரிவிக்கப்படுகிறது.விவசாயிகள் தங்கள் நெற்பயிரை குறித்த காலத்தில் அறுவடை செய்வதற்குப் போதுமான வேலையாட்கள் இல்லாத நிலையில் அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் செய்வதற்கும் மற்றும் குறைந்த செலவில் மேற்கொள்வதற்கும் ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரங்களின் பங்கு முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.நெல் அறுவடை காலங்களில் அந்தந்த பகுதிகளின் தேவைக்கேற்ப தனியார் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிப்பதோடு விவசாயிகள் அறுவடை இயந்திரங்களைப் பெறுவதற்காக இடைத்தரர்களை அணுக வேண்டியும், மேலும் வாடகையோடு தரகுக் கட்டணத்தையும் சேர்த்து செலுத்த வேண்டியுள்ளதால் அறுவடை இயந்திரங்களின் வாடகை அதிகரிக்கப்படுவதோடு விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் நிலையும் உள்ளது. இதனை தவிர்த்திட அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக மேற்படி உரிமையாளர்கள் விவரங்கள் உழவன் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.விருதுநகர் மாவட்டத்தில் 2025 ம் ஆண்டுக்கு தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் செய்வது தொடர்பாக விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்களுடனான ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அறுவடை செய்ய பெல்ட் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூபாய் 2600/- எனவும் டயர் வகை அறுவடை இயந்திரங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு வாடகையாக ரூபாய் 1800/- எனவும் வாடகை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. எனவே நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் பெற்று விவசாயிகளின் அறுவடை பணிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 4456 அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களின் விபரங்கள் அதாவது 3909 எண்கள் டயர் வகை அறுவடை இயந்திரங்கள் மற்றும் 547 எண்கள் செயின் வகை அறுவடை இயந்திரங்கள் விபரங்கள் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக உழவன் செயலியில் வழங்கப்பட்டுள்ளது.விருதுநகர் மாவட்டத்திலுள்ள 24 எண்கள் டயர் வகை இயந்திரங்கள் விபரங்கள் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டாரம் அல்லது அருகாமை மாவட்டத்திலுள்ள அறுவடை இயந்திரங்களின் உரிமையாளர்களை அலைபேசியில் நேரடியாகத் தொடர்பு கொண்டு அறுவடை இயந்திரங்களை வாடகை அடிப்படையில் பயன்படுத்தி அறுவடைப் பணிகளை உரிய காலத்தில் மேற்கொண்டு பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வசிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தை சார்ந்தவர்கள் தொழில் முனைவோராக ஆக வாய்ப்பு. விருதுநகர் மாவட்டத்தில் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM-ARISE) திட்டத்தின் மூலம் கீழ்க்கண்ட திட்டங்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.1. லோடு ஆட்டோ, 2. கார் 3. பயணிகள் ஆட்டோ, 4. ஜெராக்ஸ் கடை, 5. சென்ட்ரிங், 6. வெல்டிங், 7. டிபார்மென்ட் ஸ்டோர், 8. கார்மெண்ட்ஸ், 9. அரிசி கடை, 10.ஆவின் பாலகம், 11. எலக்ரிகல்ஸ்,12. பிரவுசிங் சென்டர்,13. பியுட்டி பார்லர் மற்றும் பிற தொழில்கள்.திட்ட மதிப்புத் தொகையில் 3.5% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவணைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6% சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் (https//newscheme.tahdco.com) தொழில் முனைவோர்களாக திருச்சுழி மற்றும் நரிக்குடி பகுதிகளில் வசிக்கும் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம்.மேலும் விபரங்களுக்கு தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தை அணுகி விவரம் பெற்று உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (17.02.2025) மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S, அவர்கள் முன்னிலையில் ஒன்றிய இணை அமைச்சர்(கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்) திரு.ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்கள் தலைமையில், முன்னேற விழையும் மாவட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்பந்தப்பட்ட அரசுத்துறை உயர் அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.மத்திய அரசு நிதி ஆயோக் அமைப்பினால் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, திறன் மேம்பாட்டு, உள்கட்டமைப்பு (அடிப்படை கட்டுமானம்), நிதி மேலாண்மை (அனைவருக்கும் வங்கி சேவை) ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் 112 மாவட்டங்கள் தேர்வு செய்யப்பட்டு, அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு துறைகளையும் ஒருங்கிணைத்து முற்றிலும் வளர்ச்சியடைந்த மாவட்டமாக மாற்றுவது தான் இத்திட்டத்தின் நோக்கமாகும்.விருதுநகர் மாவட்டத்தில் கல்வி, பொது சுகாதாரம், வேளாண்மை, ஊட்டச்சத்து, குழந்தைகள் வளர்ச்சி, திறன் வளர்ப்பு, அடிப்படை கட்டுமானம், நிதிநிலை சேர்ப்பு(அனைவருக்கும் வங்கி சேவை) ஆகிய துறைகளில் தனிக்கவனம் செலுத்தி அந்த துறைகளை முன்னேற்ற பாதையில் எடுத்து செல்வதற்கு அலுவலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், ஒன்றிய அரசினால் முன்னேற விழையும் மாவட்டங்களாக(யுளிசையவழையெட னுளைவசiஉவள) தேர்வு செய்யப்பட்டுள்ள மாவட்டங்களில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஒன்றிய, மாநில அமைச்சர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.அதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், முன்னேற விழையும் மாவட்டங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காரணிகள் மற்றும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்து, காரணிகளின் மீது தனிக்கவனம் செலுத்தி, இந்த காரணிகளின் தரத்தினை மேம்படுத்த தொடர்புடைய துறைத்தலைவர்களுக்கு மாண்புமிகு ஒன்றிய இணை அமைச்சர்(கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்) திரு.ஹர்ஷ் மல்ஹோத்ரா அவர்களால் அறிவுறுத்தப்பட்டது.முன்னதாக விருதுநகர், திருவில்லிபுத்தூர், சிவகாசி ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்று வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார்.இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மரு.தண்டபாணி, உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு.ஹிமான்சு மங்கள்,I A S, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு.இரா.மதன்குமார், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மரு.பாபுஜி, இணை இயக்குநர் (விவசாயம்) மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை ம.ரெட்டியபட்டியில் (16.02.2025) பதிவுத்துறை சார்பில் புதிய சார்பதிவாளர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், பதிவுத்துறைத் தலைவர் திரு.தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,I A S, அவர்கள் முன்னிலையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் மற்றும் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு.பி.மூர்த்தி அவர்கள் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தனர்.இந்த நாள் நம்முடைய திருச்சுழி தொகுதியினுடைய வரலாற்றில் குறிப்பாக நம்முடைய ம.ரெட்டியப்பட்டி பகுதியின் உடைய வரலாற்றில் மிக மிக முக்கியமான நாளாக நான் கருதுகிறேன்.கனவு மெய்ப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில் ஒரு கனவு நினைவாகிறது என்கின்ற வகையில் ஏறத்தாழ கால் நூற்றாண்டு காலத்திற்கும் மேலாக இந்த பகுதியின் கனவாக இருந்த இந்த சார் பதிவாளர் அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது.ஒரு நீண்ட பயணம் அது. இடைப்பட்ட காலத்தில் பல்வேறு நபர்களின் கோரிக்கையாக இருந்தாலும், நிர்வாக காரணங்களால் அது தள்ளிப் போய் கொண்டு இருந்தது. உதவி தேவைப்படக்கூடிய காலத்தில் சரியான நேரத்தில் செய்யக்கூடிய அந்த உதவிதான் இந்த உலகத்தை காட்டிலும் பெரியதாக இருக்கும் என்று சொல்வதைப் போல, நம்முடைய பகுதி மக்கள் நன்மைக்காக ஒவ்வொரு முறையும் பந்தல்குடிக்கும், பெருநாழிக்கும், கமுதிக்கும் அழைந்து கொண்டிருக்கக்கூடிய அந்தக் கஷ்டத்திலிருந்து உங்களுக்கு அருகாமையிலேயே அதனை உருவாக்குவதற்கு நம்முடைய மாண்புமிகு வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டு இந்த சார் பதிவாளர் அலுவலகத்தை உருவாக்கித் தந்திருக்கிறார்கள்.இதனை சட்டமன்றத்தில் அறிவித்ததோடு தொடர் முயற்சியின் காரணமாக, இந்த கோப்பிற்கு பல்வேறு விதிவிலக்குகள் தேவை என்பதை எல்லாம் கருத்தில் கொண்டு, இந்த பகுதிக்கு தேவை என்பதை உணர்ந்து இன்றைக்கு அவற்றுக்கெல்லாம் விலக்குகளை அளித்து நமது நீண்ட கால கனவை நிறைவேற்றி இருக்கிறார்கள்.அரசுக்கு வணிகவரித் துறையின் மூலம் அதிகமான வருமானம் கிடைக்கின்றது. இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் வணிகவரிகளை, ஜிஎஸ்டி வசூலில் எல்லா மாநிலங்களை காட்டிலும் மிக அதிகமான அளவில், நம்முடைய மாநிலத்திற்கும் ஒன்றிய அரசுக்கும் வரி வருவாய் ஈட்டி தறக்கக்கூடிய பெருமை இந்த துறைக்கு உள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்த பதிவுத்துறை பெற்றிருக்கக் கூடிய வளர்ச்சி மிகப் பெரியது.தமிழக அரசு தமிழ்நாடு முழுவதும் சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு மிகப்பெரிய கட்டமைப்பு உருவாக்கி தருகிறது. தமிழ்நாட்டினுடைய பழைய கட்டிடங்களுக்கு எல்லாம் ஒரு புதுப்பொழிவை உருவாக்குகிறது. தொடர்ச்சியாக நம்முடைய பதிவுத்துறைகளில் இயங்கி கொண்டிருக்கக் கூடிய கட்டிடங்களுக்கெல்லாம் புதிய கட்டிடங்களை நவீன வசதிகளோடு செய்யப்பட்டு வருகிறது.நம்முடைய பகுதி வளர வேண்டிய பகுதி இன்னும் வளர்வதற்கும், இந்த பகுதியினுடைய பல்வேறு வளர்ச்சிக்கும், இப்பகுதியினுடைய மக்களின் நலத்திற்கும் இந்த பகுதியினுடைய சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் என்றைக்கும் கடமைப்பட்டிருக்கின்றேன் என தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டம், செவலூர் ஊராட்சியில், தமிழ்நாடு அரசு பசுமை திட்டம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் அவர்கள் முன்னிலையில் (15.02.2025) நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.செவலூர் ஊராட்சி சிலோன் காலனியில் உள்ள மேய்க்கால் புறம்போக்கில் சுமார் 7.26 ஹெக்டேர் பரப்பளவில் நாற்றாங்கால் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதில் பெரும்புலவர் கபிலர் நாற்றாங்கால் தொகுதி, அய்யன் திருவள்ளுவர் நாற்றாங்கால் தொகுதி, மருத்துவ பேராசான் அகத்தியர் நாற்றாங்கால் தொகுதி, தமிழ் மூதாட்டி ஓளவையார் நாற்றாங்கால் என மொத்தம் நான்கு தொகுதிகளாக பிரிக்கப்பட்டு 5.20 இலட்சத்துக்கு மேல் நாற்றாங்கால் வளர்க்கப்பட்டு வருகிறது.இதில் தேக்கு, புளி, வேம்பு, பூங்கன், தோதகத்தி, வில்வம், கருவாகை, அயல்வாகை, குமிழ், செம்மரம், ஆத்தி, நீர் மருது, சந்தனம், மகா கனி, சீத்தா, கொய்யா, கொடிக்காய் புளி, பப்பாளி, நாவல், பலா, முருங்கை, பூவரசு, பெரு நெல்லி, தூங்கு மூஞ்சி வாகை, ஈட்டி, இலவம் பஞ்சு, மஞ்சள் கடம்பூ, வேங்கை, ஆனை குன்று மலை, சரங்கொன்றை, நொச்சி, செம்மரம், மலைவேம்பு, மஞ்சள் கொன்றை, பென்சில், சவுக்கு, ஆலி, முந்திரி, மயில் கொன்றை, பேய் இலவம், கரு நொச்சி, வாகை, மல்பேரி, சரக்கொன்றை, கருங்கொன்றை, சொர்க்கம், மாதுளை, செம்பருத்தி, சிறியா நங்கை, தூதுவளை உள்ளிட்ட சுமார் 50 வகைகளுக்கு மேலான நாற்றாங்கால் இனங்கள் உள்ளது. குறிப்பாக பழம் தரும் மரக்கன்றுகள் வகைகள், நிழல் தரும் மரக்கன்று வகைகள், மருத்துவகுணம் கொண்ட மரக்கன்று வகைகள் மற்றும் பூத்துக் குலுங்கும் அழகுக்கான மரக்கன்று வகைகள் வளர்க்கப்படுகிறது.இந்த தொல்காப்பியர் பெரு நாற்றங்கால் நர்சரி பூங்காவினை இன்று நிதி சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம் தென்னரசு அவர்கள் திறந்து வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மரு.தண்டபாணி, அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி வட்டம் திருத்தங்கல் கிளை நூலகத்தில் பொது நூலகத்துறை சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தமிழ் நூலகத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள் (15.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.தமிழ்நாடு அரசு பொது நூலகத்துறையின் விருதுநகர் மாவட்ட நூலக ஆணைக்குழுவில கீழ் திருந்தங்கல் முழு நேர கிளை நூலகம் திருத்தங்கல் வடக்கு ரத வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்நூலகம் 1958 ஆம் ஆண்டு திறுக்கப்பட்டது. நூலகத்தில் 45,000 க்கு மேற்பட்ட நூல்கள் உள்ளது. மேலும் 8646 பேர் உறுப்பினராக உள்ளனர். இப்பகுதி பொது மக்களும், மாணவ மாணவிகளும் மற்றும் போட்டித்தேர்விற்கு தயாராகிவரும் இளைஞர்களும் இந்நூலகத்தை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்நூலகத்தில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக கணிப்பொறி வசதியும் இலவச வை-பை மற்றும் நகலெடுக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.சொந்த கட்டிடத்தில் செயல்படும் இந்நூலகத்திற்கு மாநிலங்களுக்கான சிறப்பு நிதி உதவித்திட்டத்தின் கீழ் ரூ.22 இலட்சத்தில் கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதில் தமிழ் நூலகத்தில் இலக்கணம், இலக்கியம், இலக்கிய வரலாறு, மொழி வரளாறு, ஆராய்ச்சிக்கட்டுரைகள், திறனாய்வு நூல்கள், சங்க இலக்கிய நூல்கள், திருக்குள்ள தொடர்பான திறனாய்வு நூல்கள், தமிழ் அகராதிகள், காப்பியங்கள், பக்தி இலக்கியங்கள் போன்ற முற்றிலும் 10000 தமிழ் நூல்களைக் கொண்ட பிரத்தியேக தமிழ் நூலகமாக அமைக்கப்பட்டுள்ளது.இந்த நூலகம் கல்லூரி மாணர்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், தமிழ் பற்றாளர்களுக்கும், தமிழ் ஆராய்ச்சியாளர்களுக்கும், தமிழ் அறிஞர்களுக்கும் மிகவும் பயன்படக்கூடிய தனித்துவமான நூலகமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதுஇந்நிகழ்ச்சியில், மாவட்ட நூலக அலுவலர் திரு.இரா.சுப்பிரமணியன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், இருஞ்சிறை அரசு உயர் நிலைப்பள்ளியின் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S அவர்கள் (14.02.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, பள்ளி மாணவர்களிடம் கலந்துரையாடி குழந்தைகளின் வாசிப்புத்திறன், எழுத்தறிவு குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரம் குறித்தும் ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் வாயிலாக ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வெள்ளிக்கிழமையில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி, படித்த வேலை தேடும் இளைஞர்களுக்காக வரும் 21.02.2025 அன்று வெள்ளிக்கிழமை காலை 10.00 மணி முதல் 02.00 மணி வரை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் விருதுநகர், சூலக்கரையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.இத்தனியார் வேலைவாய்ப்பு முகாமில் ADYAR ANANDHA BHAVAN, AANAIMALAI TOYOTO, VVV & SONS EDIBLE OIL PRIVATE LIMITED, RK MOTORS, DEVENDRAN PLASTIC PRIVATE LIMITED போன்ற 20க்கும் மேற்பட்ட பிரபல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு 8ஆம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டப்படிப்பு; I.T.I .டிப்ளமோ மற்றும் பொறியியல் படிப்பு ஆகிய கல்வித் தகுதி உடைய பணியாளர்களை தெரிவு செய்யவுள்ளார்கள். இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்த விரும்பும் வேலைநாடுநர்கள் 21.02.2025 அன்று வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்வதற்கு முன்பாக www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்துவிட்டு அனைத்து கல்விச்சான்றிதழ், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது மேலும் இச்சேவையானது முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். இம்முகாமில் கலந்து கொள்ள விரும்பும் தனியார் துறை நிறுவனங்கள் .விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வருகை புரிந்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அவர்களை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். தனியார் வேலைவாய்ப்பு முகாம் மூலம் பணிநியமனம் பெற்றவர்களது வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி வட்டம், இருஞ்சிறை கண்மாயில் நீர்வளத்துறையின் சார்பில், ரூ.1.60 கோடி மதிப்பில் புனரமைக்கும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தலைமையில், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு.தங்கம்தென்னரசு அவர்கள்துவக்கி வைத்தார்.நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவம் கூறுகிறது. வானத்திலிருந்து ஒரு சொட்டு நீர் கீழே விழுந்தால் தான் கீழே இருக்கக்கூடிய பயிர்களுக்கும், இந்த உலகத்தில் இருக்கக்கூடிய உயிர்களுக்கும் உயிர் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது. எனவே தான் மழை நீர் என்பது நம்மை பொருத்தமட்டில் ஒரு உயிர் நீர் என்கின்ற வகையிலே நாம் எப்போதும் அதற்கு தலைவணங்கி மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று அதனை வணங்குகிறோம்.அப்படி வானின்று வழங்கக்கூடிய இந்த பெருமழை நீரை தேக்கி வைக்கக்கூடிய இத்தகைய கண்மாய்கள், அதற்கான பாசன வசதிகள், அதற்கான வரத்துக் கால்வாய் என்று இந்த கட்டமைப்பை பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நம்முடைய முன்னோர்கள் மிகச் சிறப்பாக வடிவமைத்திருக்கிறார்கள். நம்முடைய தொகுதி மேற்கே இருந்து கிழக்கே சாய்வாக இருக்கக்கூடிய காரணத்தினால் மழைச்சாரலில் இருந்து உருண்டு வரக்கூடிய பல இடங்களில் நீரைத்தேக்கி, அதற்கு பிறகு கடலிலே உபரி நீராக கலக்கக் கூடிய வகையில் இந்த நீர்பாசனம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.அந்த வகையில் நம்முடைய இருஞ்சிறை கண்மாய் நம்முடைய விருதுநகர் மாவட்டத்தில் அமைந்திருக்ககூடிய மிகப்பெரிய கண்மாய்களிலேயே முக்கியமானது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. இது போன்ற கண்மாய்க்கு அன்றைய முதல்வராக இருந்த டாக்டர் கலைஞர் அவர்கள் கண்மாய்களை சீரமைக்கக்கூடிய திட்டத்தின் அடிப்படையில் தூர்வாரக்கூடிய பணிகள், கரைகளை பலப்படுத்தக்கூடிய பணிகள் மேற்கொள்ளப்பட்டது.அதற்கு பிறகு இத்தகைய கண்மாய்களை எல்லாம் சீரமைக்க வேண்டும், புனரமைக்க வேண்டும் என்றும், வருங்கால சமுதாயத்திற்கு நாம் விட்டு செல்லக்கூடிய இயற்கையான கட்டமைப்புகளை நாம் மேலும் பலப்படுத்த வேண்டும், மதில்களை சீரமைக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான்; நம்முடைய மாவட்டத்தில்; இத்தகைய முயற்சிகளை பெரிய அளவில் எடுத்துக்கொண்டு, ஆங்காங்கே இருக்கக்கூடிய இந்த கண்மாய்களிலேயே புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதன் மூலமாக நாம் இந்த பகுதியிலே அதிகமான மழை நீர் வருகின்ற பொழுது சேமித்து வைக்க முடியும் என்ற அடிப்படையில் இதுபோன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இருஞ்சிறை கிராமத்தில் உள்ள இருஞ்சிறை கண்மாய்க்கு கிருதுமால் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அத்திகுளம் அணைக்கட்டின் இடது பிரதான கால்வாயின் மூலம் பாசன நீர் வழங்கப்பட்டு வருகிறது.இருஞ்சிறை கண்மாயினை புனரமைக்கும் பணிக்காக தமிழக சுற்றுச்சூழல் மேலாண்மை அமைப்பு (Environment Management Agency of Tamilnadu Corporate Environment Responsibility Fund) நிதியின் கீழ், ரூ.1.60 கோடி மதிப்பில் இப்பணிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.இந்த புனரமைக்கும் பணிகளில் கண்மாய் கரை 5120 மீட்டர் நீளத்திற்கு பலப்படுத்தும் பணிகளும், மொத்தம் 6 மடைகளில் 1 மடை மறுகட்டுமானம் மற்றும் 5 மடைகள் சீரமைக்கும் பணிகளும், கலுங்கு மறுகட்டுமானம் பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.இதன் மூலம் 138 மில்லியன் கன அடி நீர்தேக்கப்பட்டு, சுமார் 509.05 ஹெக்டேர் (1258 ஏக்கர்) பாசனப்பரப்பு பயன்பெறும்.மேலும், கண்மாயின் முழு கொள்ளளவிற்கு தண்ணீர் சேமிக்கப்பட்டு, இருஞ்சிறை கிராமத்தை சுற்றியுள்ள கிராமங்களுக்கு நிலத்தடி நீர்மட்டம் உயரவும், கோடை காலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு பிரச்சனை தீர்வதுடன், இப்பகுதி கிராம மக்களின் வாழ்வாதாரம் உயர்வதுடன் கால்நடைகளின் தண்ணீர் தேவைகளும் பூர்த்தி செய்ய உறுதுணையாக இருக்கும் என நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.இன்றைய நாள் இந்த பகுதிக்கு ஒரு மிக முக்கியமான ஒரு நாள். தமிழர்களுடைய அறிவின் அடையாளமாக இருக்கும் வள்ளுவர் பெருந்தகைஒல்லும்வா யெல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்செல்லும்வாய் நோக்கிச் செயல்என்று ஒரு திருக்குறளை எழுதி இருக்கிறார். அதனுடைய பொருள் நாம் நல்ல செயல்களை செய்து கொண்டே வேண்டும். அந்த நல்ல செயல்களை செய்வதற்கு என்னென்ன வகைகளில் எல்லாம் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டுமோ, அந்த முயற்சிகளையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என அவர் குறிப்பிடுகிறார். நமது பகுதியில் அமைந்திருக்கக் கூடிய அனைத்து நீர்நிலைகளை தூர்வார வேண்டும். அதற்கு அரசினுடைய நிதிநிலை அறிக்கை உள்ளிட்ட பல்வேறு வகைகளில் நிதி வந்தாலும், அது போதாமையாக இருக்க கூடிய சூழ்நிலையில், இன்னும் எந்தெந்த வகையில் எல்லாம் இதுபோன்ற நல்ல பணிகளுக்கு நிதிகளை பெற முடியும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தொடர்ச்சியாக அறிவுறுத்தி, இது குறித்து விவாதித்து, இருக்கக்கூடிய வாய்ப்புகளை எல்லாம் கண்டறிந்து, நிறுவனங்களினுடைய சமூக பொறுப்பு நிதி என்று தனியார் நிறுவனங்கள் தாங்கள் ஈட்டக்கூடிய லாபத்தில் இரண்டு சதவீதத்தை இது போன்ற பணிகளுக்கு செலவிட வேண்டும் என்று இருக்கக்கூடிய அத்தகைய சமூக பொறுப்பு நிதிகளையும் பெற்று நமது மாவட்டத்தில் பணிகளை மேற்கொள்வதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.அதையும் தாண்டி இன்னும் நிதி தேவைப்படுகின்ற போது, குறிப்பாக நமது வறட்சியான பகுதிகளில் இருக்கக்கூடிய கண்மாய்களை தூர்வார வேண்டும். இந்தப் பகுதியில் மட்டுமே ஏறத்தாழ 2 ஒன்றியங்களை சேர்த்து 300 க்கும் மேற்பட்ட சிறு, பெரிய கண்மாய்கள் இருக்கின்றன.அதில் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாயம் செய்வதற்குரிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களிடத்தில் மேலும் வேண்டுகோளை வைத்த போது, அரசின் சார்பாக இயங்கக்கூடிய நிறுவனங்கள், அரசினுடைய நிதி நிறுவனங்கள், அரசினுடைய பல்வேறு பொதுத்துறை அமைப்புகள் போன்றவற்றில் சமூகப் பொறுப்பு நிதி இருக்குமா என்று தேடிப்பார்த்து, அப்படி ஒரு துறையில் இருந்து தான், இந்த இளஞ்சிறை கண்மாயை தூர்வாருவதற்கு ஏறக்குறைய ரூ.2 கோடி மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய பெரும் முயற்சியால் பெற்று, இப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.இப்படி தொடர்ச்சியான பல்வேறு முயற்சிகள், அரசினுடைய நிதி பட்ஜெட் நிதியை தாண்டி ஒதுக்கப்படக்கூடிய நிதி திட்டங்களுக்கும் தாண்டி இன்னும் அதிகமாக பெற்று, இந்த பகுதியினுடைய வறட்சியை போக்க வேண்டும், இந்த பகுதியினுடைய விவசாயத்தை மேம்படுத்த வேண்டும். நிலத்தடி நீரை வளப்படுத்த வேண்டும் என்பதற்காக செய்யக்கூடியது தான் இது.இந்த இளஞ்சிறை கண்மாய் மிக முக்கியமான நமது மாவட்டத்தினுடைய மூன்றாவது பெரிய கண்மாய். ஏறத்தாழ 138 மில்லியன் கன அடி அளவில் தண்ணீரை தேக்கக் கூடிய அளவிற்கு வாய்ப்பைக் கொண்டிருக்கின்றது. சுமார் 1300 ஏக்கர் நிலங்கள் நேரடியாக பாசன வசதியும், குடிநீர் வசதியும், நிலத்தடி நீரை மேம்படுத்துவதற்கு இந்த கண்மாயின் மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருக்கும்.இந்த பகுதியில் விவசாயத்தை வளப்படுத்துவதற்கும், அதுவும் குறிப்பாக கிருதுமால் நதியில் இருந்து தொடர்ச்சியாக தண்ணீரை பெறுவதற்கும், இதற்கு இடதுபுறம் இருக்கக்கூடிய கால்வாய் தொடர்ச்சியாக ஆண்டுதோறும் நீரை பெறுவதற்குரிய முயற்சிகளையும் மாண்புமிகு அமைச்சர் அவர்கள் மேற்கொண்டிருக்கிறார்கள்.நீர்வளத்துறை அலுவலர்கள் விரைந்து இந்த திட்டத்தை முடிக்க வேண்டும். அதேபோன்று எடுத்திருக்கக்கூடிய அனைத்து தூர்வாரக் கூடிய பணிகள், பலப்படுத்தக் கூடிய பணிகள், மதகுகளை புரணமைக்க கூடிய பணிகள் எல்லாம் விரைந்து முடித்து, ஒரு காலத்தில் இந்த பகுதிகள் ஒரு 400 ஆண்டுகளுக்கு முன்பாக கூடுதலாக விவசாயம் நடைபெற்ற பகுதி, அவற்றை மீண்டும் கொண்டு வந்து இந்த பகுதியினுடைய பொருளாதார வளர்ச்சிக்கு நீர்வளத்துறை இயன்ற பணிகளை எல்லாம் செய்ய வேண்டும், விரைந்து முடிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்நிகழ்ச்சியில் நீர்வளத்துறை செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடத்தப்பட்ட திருக்குறள் முற்றோதல் போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த வெற்றி பெற்ற மாணவர்கள் (24.07.2024) கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலையினை பார்வையிட்டனர். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழக மாணவர்களின் நலன் மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் விருதுநகர் மாவட்டத்தில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகத்தின் சிறப்பு முயற்சியாக, பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக பல்வேறு விழிப்புணர்வு முகாம்கள், அவர்களின் தனித்திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக கோடைகால சிறப்பு பயிற்சி வகுப்புகள், போட்டித்தேர்வுகளுக்கு தயார் படுத்துவதற்காக சிறப்பு பயிற்சி வகுப்புகள், உயர்கல்வி குறித்த புரிதல் மற்றும் உயர்கல்வி படிப்புகளில் உள்ள துறைகள் குறித்து வழிகாட்டும் நோக்கில் கல்லூரிகளுக்கு கல்விச் சுற்றுலா, உயர்கல்வி படிப்பதற்கு விரிவான வழிகாட்டுதலையும், அவர்களின் எதிர்கால கல்வி நோக்கங்கள் குறித்து தகவல் அறிந்து முடிவுகளை எடுக்க மாணவர்களுக்கு உதவிடும் வகையிலும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்று 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம், சுற்றுச்சூழல் மற்றும் வன உயிரினங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி பசுமை ஆர்வலர்களை உருவாக்கும் திட்டம், மாணவர்களுக்கு கல்வியோடு, அவர்களின் கல்வி இணை செயல்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், அறிவோம் தெளிவோம் என்ற சிறப்புத் திட்டத்தின் கீழ் பள்ளி மாணவர்கள் அருகில் உள்ள பல்வேறு அரசு அலுவலகங்களுக்கு சென்று, அங்குள்ள அலுவலக நடைமுறைகளையும், அங்கு வழங்கப்படும் சேவைகளையும் தெரிந்து கொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது.மேலும், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடர்ச்சியாக காபி வித் கலெக்டர் நிகழ்ச்சிகள் மூலம் பல்வேறு தனித்திறமைகளில் சிறந்து விளங்கும் அரசுப்பள்ளி மாணவர்களை சந்தித்தும், அரசுப்பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுடன் கலந்துரையாடி, இலக்கை நிர்ணயிப்பது, அந்த இலக்கை எவ்வாறு அடைவது, வாய்ப்புகளை பயன்படுத்துவது, தொடர்ச்சியான செயல்பாட்டினால் திறமையை வளர்த்துக் கொண்டு வாழ்வில் வெற்றி பெறுவது, தவறுகளில் இருந்து படிப்பினை கற்றுக் கொண்டு எவ்வாறு வாழ்வில் முன்னேறுவது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை கூறி, அறிவுரை மற்றும் ஆலோசனைகளுடன் கூடிய உரிய வழிகாட்டுதல்களை மாணவர்களுக்கு வழங்கி வருகிறார்கள்.கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின் 25 வது ஆண்டினை முன்னிட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு விதமான கலை நிகழ்ச்சிகள் போட்டிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக பள்ளி மாணவர்களுக்கு திருக்குறள் முற்றோதல் செய்யும் போட்டிகள் 30.12.2024 அன்று நடைபெற்றது. இப்போட்டியில் 20 நிமிடங்களில் 300 திருக்குறளுக்கு மேல் ஒப்புவித்த மாணவர்களுக்கு சிறப்பு செய்யும் விதமாக கல்வி சுற்றுலா கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வள்ளுவர் சிலைக்கு இன்று அழைத்து செல்லப்பட்டனர். இச்சுற்றுலாவில் 53 மாணவர்கள் கலந்து கொண்டு அய்யன் வள்ளுவர் சிலை நிறுவப்பட்டதன் நோக்கம் மற்றும் அமைப்பு குறித்து தெரிந்துகொண்டனர்.இந்த பயணத்தை ஏற்பாடு செய்து, எங்களை அழைத்து வந்த மாவட்ட நிர்வாகத்திற்கு நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.